07 September, 2010

பார்த்திபன் கவிதைகள் 1

பார்த்திபனின் தலைப்பிடப்படாத கவிதை.

* * * * * * * * * * * * * * ** * * * * * * * * *

அங்குதான்
கடவுள் கொலையுண்டிருப்பதாகச் சொன்னார்கள்

பார்வைச் சுவாரஸ்யமற்றவை பிணங்கள்
எனினும்
கால்களை அங்கு இட்டுச் சென்றது
இனியொருமுறை கடவுள் கொலையுறுவாரா என்ற ஐயம்

கொலையுண்ட கடவுளின்
சுவடின்றி வீசிக்கொண்டிருந்தது காற்று

வேப்பம்பூ மணத்த மரத்தின்
இலைகள்
கிளைகளுக்கிசைந்தபடி ஆடிக்கொண்டிருந்தன

வேப்பம்பூ மணத்த மரத்தின்
பறவைகள்
இன்னும் கூட்டைந்திருக்கவில்லை

திசைகள் இருந்தன அதனதன் இடத்தில்

விரைந்து சென்ற பேருந்தின்
ஜன்னலோரக் குழந்தை
கையசைத்துப் போனது
நெஞ்சைப் பிசைந்த புன்னகை வீசி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

03 September, 2010

குறுந்தொகை

பறைபடப் பணிலமார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழர்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

--------------------------------------------------- குறுந்தொகையில் - ஔவையின் பாடலிது. பாலைத்திணை. என்னாலியன்ற ஒரு சிறிய பெயர்ப்பு.

சென்றுவிட்டாள் நன்றென்று நம்பி விடலைஅவனை

வென்றுவிட்டாள் கோசர்கள் முன் தெளிந்தமொழிபோல

நன்றுசெய்தான் மடந்தையை மாலையிட்டான் பறை அதிர சங்கூத

கொன்றுவிடு நல்தாயே பதற்றத்தை இனிதாய் வாழ்வாளுன்மகள்.

அல்லது

சென்றுவிட்டாள்
தெளிந்தமொழி போல
அவனுடன் பிடித்துப்போய்.
பறை அதிர
சங்கு ஓத
மணமுடித்தாள்
மாறாத நட்பு
கலங்காதே தாயே.

******************************

விடலை என்றால் தலைவன் என்று அர்த்தமாம்!

**********************

குறுந்தொகையில் ஔவையார் பாடிய பதினைந்து பாடல்களை இப்படி எளி-பெயர்க்க ஆசை!

*********************

01 September, 2010

மனநிலை

சகலமும் தீர்ந்துதான் போகவேண்டியிருக்கிறது நாளின் முடிவில். ஒரு இரவு அதற்காக பரிசளிக்கப்படுகிறது. புதிப்பித்துக்கொள்ள. ஆனால் தூங்கிபோய் விடுகிறேன். ஒரு புதிய காலை வெறும் சாலையில் குறுக்கிடும் கீரிப்பிள்ளை போல சரட்டென்று கடக்கையில் சகலமும் பற்றிக்கொள்கிறது மீண்டும், நீண்ட இருமுனை வாளை பின்முதுகில் செருகியவாறு. ஆக்ரோசமான ஒரு பூப்பந்தாட்டத்தில் சமயோசிதமான ஒரு இறந்த பந்து (dead baal) எதிராளியின் மொத்த சமநிலையையும் கவிழ்த்து விடுவது போல ஒரு சுவாரஷ்ய விளையாட்டைப்போலில்லாமல் இந்த நாட்கள் தினமும் இறந்த நாட்களாகவே வந்து மோதும்போது எதிர் வீச்சு வலுவிழந்து போகிறது. இதுதான் இந்த கணத்தின் மனநிலை. மறப்போம். என்பதற்காக சில பாடல்களைக் கேட்டேன். மனநிலைக்குத்தகுந்த மாதிரித்தான் கேட்கிற குரல் செவினுழைந்து வேலைசெயும்போல. ஜானகி இன்பம் பொங்க ஒரு காதல் குரலில் பாடினாலும் மனம் பொங்கி விடுகிறது. மிக லேசான சோகம் என்றால் கண்ணில் நீர். "பூவுக்குள்ள வாசம் வெச்சான்.. பாலுக்குள்ள நெய்ய வெச்சான்... கண்ணுக்குள்ள என்ன வெச்சான்.. பொங்குதடி ஏம்மனசு... " ஜானகியின் குரல் இதய நாளங்களை பொங்கச்செய்கிறது. மறுபடியும் " என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்.. " என்கிறார். கண்களில் நீர் கோர்க்கிறது. என்ன கருமம்டா என்றுவிட்டு பாடலை மாற்றினேன். வந்தது பாருங்கள் ஒரு பாட்டு. இதற்கு முன் கேட்டதில்லை. "ட்ரிங் .. ட்ரிங் .. சிக்குபுக்கு.. " என்று தொடங்கி ஒரே துள்ளல். எந்த படம் என்று தெரியவில்லை. பாடியது யார் என்று தெரியவில்லை. சரணத்தின் முடிவில் சென்னையின் இரண்டாவது பிரதான வாக்கியமான 'OK வா?' என்கிற பதத்தை (முதல் வாக்கியம் "ச்சான்சே இல்ல") அவர் உச்சரிக்கும் போது எதுக்கும் சரி என்று சொல்லிவிடலாம் போல. இவ்வைகையான துள்ளலிசை (இவ்வார்த்தை உபயம் கோடை பண்பலை) கேட்கும் போது குப்பையை கிளறிக்கொண்டிருக்கும் கோழியை நொடிகளில் வன்புணர்வு செய்யும் சேவலாய் உணர்கிறேன். என் ஆணாதிக்க மனநிலையை நண்பர்கள் மன்னிக்க வேண்டும். மொத்த மனநிலையையும் மாற்றவல்ல இப்பாடல் வரிகளை அதன் இசை நுணுக்கத்தை கண்டு பெருவியப்பு கொள்கிறேன். டி. ராஜேந்தர், ஆர்.வி. உதயக்குமார் போன்றவர்களின் பாடல் வரிகளை மனம் கடுமையாக மிஸ் பண்ணுகிறேன். "I miss you" என்கிற வாக்கியத்தை எப்படி தமிழ் படுத்துவது என்று தெரியவில்லை. வைரமுத்து தொடங்கி முத்துகுமார் வரை எல்லோரும் ஒரே மட்டைகள். இருப்பது வேறு குளம் என்கிற பெயரில் சாக்கடை. எதையோ தொடங்கி இங்கு முடிக்கிறேன்.. !