30 July, 2010
ரசமிழக்கும் கண்ணாடி 1
24 July, 2010
காமா.......
எறும்புகளுக்கும் ஈக்களுக்கும் முன்னதாய் உடம்பைத்துய்கிறாய். துவக்குடன் துவக்கும் உனதான செயல்கள் ரவையை விட வேகமானவைகள். உன்னைச்சுற்றி சிதறும் உடல்கள் மட்டும் உயிரற்றவைகள் அல்ல என்பதை நடத்திக்காட்டும் உனது வீரதீர சாகசங்களில் மயங்குகிறது குருதிமணம் கொண்டதுன் பொன்தலைமை. தீர்த்துவிடு தாகமனைத்தையும் உனதான கடைசி விருப்பம் அதுவென்றால். பின் உன்னை ஆசுவாசப்படுத்திக்கொள் என் முன் மண்டியிட்டு. என்னை ஏறிட்டுப் பார்க்காதே ஏனென்றால் அங்கு நான் என்று எவருமில்லை அல்லது எதுவுமில்லை . இருப்பது என்னவோ வெப்பம் காந்தும் பழுப்பு வண்ண பீடபூமி. யாவர்க்கும் நீ அளித்தது போல வன்மைரணம் அல்ல நான் தரப்போவது. நீ வலிஎதுமின்றி கரைந்துபோவாய் எப்போதைக்கும் மீளாதபடிக்கு. அதற்கான ஆயுதத்தை நீ உன் அழிப்புத்தொழில் மூலம் என்னிடம் விட்டிருக்கிறாய். நீ அறியாமல் செய்த செயலது. அது ஒற்றை சொல்லாய் என்னிடம் இருக்கிறது.. ஆம் வெறும் ஒற்றைச் சொல்லாய். உன் மொத்த இருப்புக்கும் ஒற்றை ஆயுதமாய்.
22 July, 2010
பூமி விருட்சம்
தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். ஒரு வெளிச்சப் புள்ளியை விட்டு. நிரந்தரமாக வானேகும் ஒரு இருட்டுகுமிழ் விட்டு. தூரத்திலடங்கும் ரயிலோசை விட்டு. துயரநிழலின் மஞ்சள் வண்ணம் விட்டு. உயிர்த்துடிப்பின் மெல்லியதுன் அன்பு விட்டு. மணல் புதைய விட்டு சென்ற காலடி தடம் விட்டு. கனவுகள் ஏந்திய பாலையின் வெப்பம் விட்டு. கடல் விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை துரோகம்.
தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். மேகம் விட்டு. மேகத்துக்குள் நமதான மென்னிணக்கம் விட்டு. மழைக்குமுன் மண் கசியும் வாசம் விட்டு. குழலுதிர்த்த ஒற்றைப்பூவின் துயரம் விட்டு. பாதம் பட்டு ரோமக்கால்கள் விரைத்த தருணமொன்றின் மோகம் விட்டு. உனதான பாடல் விட்டு. மரணம் விட்டு. அடர்பழுப்பு பூவொன்றின் சாயலொத்த மென்சருமம் திரட்டி வைத்த பரிவு விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை காதல்.
தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். மதுவுண்டு உன் வாயுமிழும் அமுதம் விட்டு. இரவெல்லாம் ரீங்கரிக்கும் சில்வண்டின் கொடுந்தனிமை விட்டு. இசை பிழிந்து தெருவெல்லாம் குமட்டித்துப்பும் ஸ்வரக்ரந்தம் விட்டு. மோனம் விட்டு. வேசைமீதாசை கொண்டலையும் பசுங்காடு விட்டு. வழியற்ற கூடடைய பனையேறும் கொம்பேரியின் கூர்பார்வை விட்டு. சுடுகாட்டின் மணம் விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை நட்பு.
என்மீதேரும் குரோதத்திற்கு முழந்தாளிடுகிறேன். மண்மீதொரு முத்தம் பதிக்கிறேன். விதையாகிறதென் முத்தம். பூமிவிருட்சம் முளைக்கிறது கரிய விசும்பில் நீலவொளி உமிழ.