30 May, 2010

களிப்பொன் நிலா



கூந்தல் வானில் மிளிர்கிறது
வட்டச்சின்ன நிலா
காக்கை எச்சம்.

பால் குடித்து களியேறி
இணையழைத்துக் கதறுகிறது தவளை
வானில் நிலா.

எதிர்த்து நீந்தி தவித்து'
தள்ளாடி பிளந்து சேர்கிறது
ஆற்றுக்குள் நிலா.

********************************
சிவகுமாரின் பதிவு கண்டதும் களிப்பொன் நிலா புத்தியில் நுழைந்து செய்த சோதனை. !
********************************

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 5

**************************

அனைத்து சமுதாயமும் தனிமனிதனுக்கு எதிரானதே. அல்லது ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு எதிரானவனே.

***************************

முதலில் நன்றி வசு. உன் தீவிரமான இந்த வெளிபடுதலுக்காக.வசு சொல்பவைகள் எல்லாம் ஒருவகையில் சரியானவைதான். வசு , முதல் பின்னூட்டக் கருத்திலேயே

//என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக, துக்கம் என்ற ஒன்றை அறியாமல் சந்தோஷத்தின் ருசியை உணரமுடியாது//

என்று அறம் என்று ஒன்று எதற்காக என்றும் அறம் என்றால் என்னவென்றும் தெளிவாக சொல்லியிருக்கிறான் . அதன் பின் வசு கூறியவை எல்லாம் எவையெல்லாம் அறம் என்பதைப் பற்றித்தான். எனது நோக்கம் அறம் என்பது யாவை என்கிறதை பற்றி அல்ல. மாறாக அறம் என்கிற ஒன்றின் ஊற்றுக்கண் என்ன அது எதன்பொருட்டு வந்தது என்பதை நான் புரிந்துகொண்டவைகளைப் பதியும் முயற்சி மட்டுமே.

அதன் அடிப்படையில்தான் புத்தனின் ஞானச்சொல்லை குறித்தேன். துக்கம் பற்றி அறியாமல் சந்தோசத்தை அறிய முடியாது என்று சொல்லியிருக்கிறாய் வசு, மிகச்சரி. அந்த துக்கம் உள்ளது என்பதை புத்தனை விட தெளிவாக சொன்னவன் யாராவது இருக்கிறார்களா. புத்தனின் ஞானமே துக்கம் உள்ளது என்பதை கண்டைந்ததுதான். துக்கம் உள்ளது. துக்கம் உள்ளது என்பதை அறியலாம். துக்கத்தை களையலாம். துக்கத்தைக் கலைக்க வழிமுறை உள்ளது. என்கிற நாற்பெரும் உண்மைகளை சொல்லிவிட்டுத்தான் அவன் துக்கத்தை களைய எட்டு வழிமுறைகளை தனதான அறமாக மொழிகிறான். அவன் கண்ட உண்மை அறமற்றது. அவனது மஜ்ஜிமா போதனைகள் அறவழிக்கொள்கைகளே.

பிறகு வசு சொல்லும் பசி, குற்றவுணர்வு, அந்தரங்கம் ஆகியவை அறம் பற்றிய சிந்தனைகளில் பிற்பாடு பேசப்படுகிற பேசுபொருள்கள். இதில் பசி என்பது ஆதியுணர்வு மற்றும் அடிப்படை இயல்பூக்க வகைமைகளில் ஒன்று. மற்றபடி அந்தரங்கமும் குற்றவுணர்வும் அறத்தின் வளர்ப்புப் பெற்றோர்கள் என்பதில் எனக்கும் சம்மதமே. அவற்றைப்பற்றி பின்னால் விவாதிக்கலாம். வசு சொல்லும் 'தனி மனிதன் என்று இங்கு யாருமே இல்லை' என்கிற கூற்றுதான் எனக்கு சற்று பிடிபடவில்லை.

பத்மா சொல்லும் கடமை ஒரு முரண்நகை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கும் அச்சம் மடம் ஓர்ப்பு கடைபிடி ஆகியவை ஆண்களுக்குமாக அறம் என்கிற குணமாக்கப்பட்ட நிகழ்வுப்போக்கின் ஒரு அலகுதான் கடமை. ஒரு மனிதன் யாராக இருக்கிறான் என்னவாக வெளிப்படுகிறான் என்பதே ஒரு அபத்தக்கேள்வி என்று தோன்றுகிறது. மனிதனின் ஒரே கடமை மனிதனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுதானே. பிரபஞ்ச அதிசயத்தின் உச்சமும் பரிணாம வளர்ச்சியின் நிகழ்உச்சமும் ஆன மனிதன் தனது இயல்பான உள்ளுணர்வுக்கும் இயல்பூக்கத்திற்கும் இணையாக பேரன்பை இருத்துவதற்கு பதிலாக இவற்றிற்கு எதிராக அறத்தை தோற்றுவித்தான் என்கிறதே எனது புரிதலாய் உள்ளது.

நிகழில் அறம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத அரசியலாக்கப்பட்டு ஊழிக்காலமாகிவிட்டது. எவையெல்லாம் அறம் என்று ஒரு பாடு குவியல்கள் மனித மனங்களில் இயற்கையிலேயே குவிந்து பத்மா சொன்னது போல ஜீனிலேயே கலந்து போய்விட்டது. அதனால் எவைஎவை அறம் எனும் புரிதலுக்கு நான் செல்லவில்லை மாறாக இவ்வகையான அறங்களை நம் மனம் இவ்வளவு அழுத்தமாக நுழைந்த செயல்பாட்டியக்கம் பற்றிய எனது புரிதல்களை எழுத்தத் தொடங்குகிறேன். அதற்காக நாம் ஒரு சொல்லை பற்றி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இணையான அச்சொல்லைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அச்சொல்: நம்பிக்கை.

**************

தொடர்கிறேன்

****************

27 May, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 4

****************************

மனிதனை செயல்பட நிர்பந்திக்கும் நெம்புகோல் இரண்டே உள்ளது. ஒன்று பயம் மற்றொன்று சுயவிருப்பம் - நெப்போலியன் போனபார்ட்.

****************************

ஜெகநாதனும் வசுபாரதியும் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். "என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக - வசு" "அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் - ஜெகன்" இப்பொழுது நெப்போலியனின் கூற்று என்னசொல்கிறது என்று பாருங்கள். எவ்வளவு துல்லியமான வரிகள். அறத்தின் தேவை இங்கு தொடங்குகிறது என படுகிறது. ஜெகன் சொல்லுவது போல அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது ஏனென்றால் அறத்தின் உற்பத்தியே இவையிரண்டிற்கும் எதிரானது என்பதாலத்தான்.

பயமும் சுயவிருப்பமும் தான் நான் புரிந்துகொண்டிருக்கும் ஆதி உள்ளுணர்வு.

//அறமென்பது குற்றவுணர்ச்சியில்லாது ஒரு செயலை செய்தல் ஆவதே என்பது என் கூற்று - வசு.
அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது என்பதே என் கருத்து. அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் என்ற மட்டில் அறத்தின் பால் காமம் கொள்கிறேன் - ஜெகன் //

இவையும் அவர்களுக்கான அறவடிவமே.

//மனித சமுதாயத்திற்கு தேவை என்று யார் கருதியது?எது தப்பு ? எது சரி? // என்று கேட்டிருக்கும் பத்மாவின் கேள்விதான் ஆதி கேள்வி. உலகமுழுவதும் இதற்கு பதில் சொல்லிச்சொல்லி மனிதர்கள் களைப்படைந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் பதில்கள் நின்ற பாடில்லை.ஏனென்றால் என்றைக்கும் நிலையான அனைத்துக்கும் உகந்த 'ஒற்றை அறம்' என்ற ஒன்றை நாம் இதுவரை கண்டதில்லை. பெரும்பான்மையான மனிதர்கள் ஒப்புக்கொள்கிற மனித எண்ணத்திற்கு சுகம் அளிக்கும் என்று நம்ப படும் அறங்களே தற்போதைய பொது அறமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்ததந்த காலங்களுக்கு தக்க அவை மாற்றம் பெறலாம். உதாரணமாக பொய் சொல்லக்கூடாது என்பது ஒரு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம். இந்த அறத்தின் மூலம் மனிதனுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது. என்முன் நிற்கும் ஒருவர் என்னிடம் பொய் சொல்லவில்லை என்று நான் நம்பினால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படி எல்லோரும் பொய் சொல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி பன்மடங்காகி பொய் சொல்லாமை என்கிற ஒரு அறத்தின் மூலம் மனிதனின் மகிழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது. நல்லதுதானே. ஆனால், அறம் என்பது பெரும்பான்மையின் குழந்தை. முதலிலேயே சொன்னேன் சமுதாயம் என்கிற பின்புலம் இல்லாத மனிதனுக்கும் அறத்திற்கும் அட்சரமும் தொடர்பில்லை. சமுதாயமற்ற தனிமனிதனிடம் இருப்பது பயமும் சுயவிருப்பும் மட்டுமே. எனவே அவன் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறான். அதற்கான காரணி அவனிடமிருந்தே ஊற்றெடுக்கிறது.

அவன் செயல்பாடுகளின் முடிவில் அந்த மொத்த பலனையும் சீர்தூக்கிப் பார்க்கும் சமுதாயம் அந்த பலன் பொதுவான மக்களுக்கு உகந்தது எனக்கருதினால் எல்லா பலனையும் மொத்தமாக சுவீகரிக்கும். இல்லையென்றால் அந்த தனிமனிதன் துண்டாடப்படுவான். இந்த கடும் இடர்பாடுகளை மீறி தனது அனுபவத்தை ஒரு மொத்த சமுதாயத்தின் அனுபவமாக மாற்றவும் புது அறங்களை உற்பத்திசெய்யவும் முடிந்த மனிதர்கள்தான் ஆன்மிகம் என்கிற சொல்லை விதையாகக்கொண்டு மதத்தினை ஏற்படுத்தினார்கள். மதம்!

இயல்பூக்கத்துடன் ஏற்படும் ஆதி உள்ளுணர்வை முன்னிறுத்தி பலவகையான முயற்சிகள் மேற்கொண்டு பல நற்பலன்களை கண்டடைந்த மனிதர்கள் அவர்கள் கண்டடைந்ததை தத்துவம்/மதம் என்கிற இரு பெரும் பிரிவுகளில் உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். இந்திய துணைக்கண்டம் இவ்வகையான சிந்தனை மரபை மதத்தின் மூலம் பெற்றுக்கொள்ளத்தொடங்கியத்தில் அதன் தோல்வி ஆதிக் காலத்திலேயே உறுதிசெய்யப்பட்டு விட்டது என தோன்றுகிறது. இவ்வகையான சிந்தனை இந்த கட்டுரைக்கானதல்ல. மதம் பற்றி இங்கு நான் பேசப்போவது இல்லை.

ஆக அறம் என்பது எதன்பொருட்டு. எல்லையில்லா மகிழ்ச்சி என்கிற ஒன்றை காண. அப்பிடினா நாம மகிழ்ச்சியா இல்லையா. அளவை இடிக்கிறது. தமிழில் வள்ளுவம் உட்பட நன்னெறி நூல்களுக்கு இன்றுவரை குறையில்லை. தமிழில் மட்டுமென்றால் உலகளவில்? எதற்கு இத்தனை அறம். அதற்கு விளக்கக்குறிப்புகள். எல்லாம் மனித மகிழ்ச்சிக்கானவை என்றால் எங்கே மகிழ்ச்சி?

மகிழ்ச்சி ஏன் இல்லை என்ற கேள்விக்கு நான் படித்தவரை ஒரே ஒரு மனிதன் தான் சரியான உணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான பதிலை அளித்துள்ளதாகப் படுகிறது. அவன் பெயர் சித்தார்த்தன். அவன் சொன்னான்: துக்கம் உள்ளது.!

அறமற்ற, இரக்கமற்ற ஒரு வாக்கியம் இது.

*********************

தொடர்கிறேன்

****************

25 May, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய் எல்லாம் செயல்

- குறள்

*****************************

இப்படி குறளை இயற்றியதாகக் கூறப்படும் வள்ளுவன் அறத்துப்பால் என்கிற தலைப்பில் அறத்தைப் பற்றி பிரித்து மேய்ந்தபின் நான் அறம் என்றால் என்ன என்று சொன்னால் எனக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் என்று நினைக்கிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே தொன்றுதொட்டு நமது அறிஞர்கள் எதுவெல்லாம் அறம் என்று சொல்லித்தொலைத் திருக்கிறார்களே தவிர அறம் என்றால் என்ன என்ற ஆராய்ச்சிக்கு ஏறக்குறைய போகவே இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் அறம் என்னும் சொல் தமிழுக்கேயானது. ஆங்கிலத்தில் இதற்கு இணையான அர்த்தச்செறிவுடன்வார்த்தை இல்லை என்கிறான் வசு.

'ethics, moral, morele etc' போன்ற பல்வேறு வாத்தைகளின் அர்த்தத்தை செறிவாய் கிரகிக்கிறது அறம் எனும் சொல். என்றாலும் பிரபஞ்சத்தில் சில நிலைகளுக்கு அல்லது நெறிமுறைகளுக்கு நிலைத்த வரையறையை அளிக்க முடியாது. அவற்றிலொன்று அறம். அறம் என்கிற வார்த்தைக்கு நிலையான பொருள் தரும் விளக்கத்தை நாம் அளித்துவிட முடியாது. அதனால் மேற்கத்திய விஞ்ஞானப் புலத்தில் அறம்(ethics) என்ற சொல்லுக்கு எப்பொழுதும் இருக்கும்படியான ஒரு தற்காலிக விளக்கத்தை உருவாக்குகிறார்கள்.

நான் வில்லியம் லில்லி என்பாரின் விளக்கத்தை இங்கு சொல்கிறேன்: "சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப்பற்றி ஆராயும் ஒருவகை விஞ்ஞானமாக - மேல்வரம்பிட்ட விஞ்ஞானமாக அறவியலை நாம் வரையறுக்கலாம்" . இதில் கூட அறவியல் என்று சொல்கிறோமே தவிர அறம் என்றால் என்னவென்று சொல்லவில்லை. அறம் என்பதை சொல்லலாம்?

இதற்கு நமது அறிஞர்கள் 'நல்லது' 'கெட்டது' 'சரி' 'தப்பு' ஆகிய நான்கு சொற்களை வைத்துக்கொண்டு விளையாடித்தீர்த்திருக்கிறார்கள். நான்கு சொற்கள் அதற்கு ஒரு களம். அதற்கொரு காரண விளைவு. மேற்சொன்ன லில்லியின் விளக்கத்தில் ஒன்றை கவனித்திருப்போம். மலையைப் பிளந்து உள்ளிருந்து எடுக்கப்பட்ட கரும்பாறைஎனவோ நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட கல் போன்றோ ஒரு வால்நட்சத்திரத்திலிருந்து வெளியேறி பாயும் எரிகல் போன்றோ ஒரு சொல்லை. 'சமுதாயம்' என்பது அச்சொல். இதன் மூலம் சமுதாயம் என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்னாள் அறம் என்கிற ஒன்று இல்லை என்று கொள்கிறேன். இதன் அர்த்தம் முதாயத்திற்குத்தேவை அறம் தனி மனிதனுக்கல்ல. ஆனால் தனி மனிதன் அறமில்லாமல் வாழ முடியாது.

சமுதாயம் தான் அந்த களம். பயன் என்பது விளைவு. சரி மற்றும் தப்பு என்பவை அறத்தின் செயல்பாடுகள். நல்லது மற்றும் கெட்டது ஆகியவை அறத்தின் விளைவுகள். சரியாக செய்தால் நல்லது நடக்கும், தப்பாக செய்தால் கெட்டது நடக்கும். எளிய விதியென தோன்றும் இவ்வடிப்படைக்கு நமது மூளைச்செயல்பாடுகள் பரிமாணத்திற்கு வந்தடைய ஆயிரக்கான வருடங்கள் மனிதர்கள் போராடியிருக்கிறார்கள். அதாவது ஆதி உள்ளுணர்வுக்கு எதிராக அடிப்படை இயல்பூக்கங்களுக்கு எதிராக நம்பிக்கையினை வளர்ப்பதன் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான அறம் என்கிற நிகழ்வுப்போக்கை நமது மனித இனம் ஈன்றெடுத்துள்ளது. ஆக அறம் எதன்பொருட்டு உருவாக்கப் பட்டது?

************************
தொடர்கிறேன்.
***********************

24 May, 2010

அக திணை

அறியிமோவொரு பரியமிழ் தடம் வான்
சொரியுமோ மோனத்தண் வீழ்மணம் குணம்
பிரியுமோ யுகந்தோறும் சேருஞ் சினம் சூழ்
புரியுமோ இடைவாளுடையுமோ - பிளிர்

களிர் ப்படைதாழுமோ துயில் வீழா கொடித்
தளிர் மேவுமோ முறைத்தொழில் தேறுமோ
குளிர் தழை சுருங்குமோ செழிப்படங்குமோ
நளிர் அடையுமோ அடைந்தொடுங்குமோ விசை

பலம் திரும்புமோ துயர் விரும்பிக் கலையுமோ
நலம் குறுகி கூவுமோ கூகை வாகை தப்புமோ
குலம் அருகுமோ பொழில் விலகுமோ உயிரின்
நிலம் வாய்க்குமோ சரியுமோ மறி கிடைக்குமோ -வென்றால்

மடை திடுமென பொழிமழை விசும்பெங்கும்
உடை திடுமென வான்கிழி கலிகொள் அலறல் விடை திடுமென சடைசடை வரியென ஞானம் கிடை திடுமென நம் நிலம் நம் நிலம் நம் நிலம்.

*******************

23 May, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை - 2

நான் உயிரோடு இருப்பது வரை இறக்கப்போவது இல்லை. நான் இறந்த பின் உயிரோடு இருக்கப்போவது இல்லை - கிருஷ்ணகுமாரின் சொற்பொழிவில் எப்பவோ கேட்டது.

*****************************

மருத்துவம் மரணத்தை எப்படி வரையறுக்கிறது: சாதாரண உடலியக்கம் நின்றுபோதல். திரும்பப்பெறவியலாத பிரக்ஞை (conciousness) மற்றும் விழிப்புணர்வு(awareness).

மரணம் நிகழ்ந்த உடன் முதலில் இதயம் இயக்கத்தை நிறுத்திவிடுகிறது. இதனால் மூச்சு விடுவது, குருதியோட்டம், வளர்சிதைமாற்றம் மற்றும் துடிப்பு ஆகியவை நிறுத்தப்படுகிறது. இதன் பிறகு உடல் ஆறு வகையான படிநிலைகளை கடந்து கூடாகிறது.

மரணம் ஏற்பட்ட பதினைந்து முதல் நூற்றி இருபது நிமிடங்களில் உடல் வெளிறி விடும். இதை pallor martis என்கிறார்கள். இந்நிலை எதற்கு ஏற்படுகிறதென்றால் உடலில் ரத்தஓட்டம் நின்று அனைத்து ரத்தமும் புவியீர்ப்பின் விதியில் உடல் எந்த நிலையில் இருக்கிறதோ அதன் அடிப்பாகத்தில் சென்று தேங்கிவிடுவதால்தான். இந்த நிலைக்கு livor martis என்று பெயர். இறந்து நூற்றி இருபது நிமிடத்திலிருந்து நூற்றி நூற்றி என்பது நிமிடத்தில் உடல் தனது சாதாரண வெப்பநிலையில் இருந்து முற்றிலும் குறைந்து உடல் சில்லிட்டுப்போகிறது. சில்லிட்ட உடம்பின் நிலையை algor martis என்கிறார்கள். பின்னான மூன்றாவது மணியிலிருந்து பனிரெண்டாவது மணிவரை உடல் தசை நார்கள் முழுவதும் விறைத்து காணப்படும் நிலையை rigor martis என்கிறார்கள். பனிரெண்டாவது மணியிலிருந்து குழைவடையத்தொடங்கும் உடல் சிதைவடயத்தொடங்குகிறது (decomposition ). இச்சமயத்தில் அழுகிய தசையின் நாற்றத்தில் ஈர்க்கப்பட்டு பூச்சிகள் தங்களது முட்டைகளை உடலின் மேல் இட்டுசெல்கின்றன. அவற்றின் முட்டைகளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான புழுக்கள்தால் maggots எனப்பெயர் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஏறக்குறைய மூன்று வாரங்களில் skelitonization என சொல்லப்படுகிற அனைத்து தசைப்பகுதிகளும் காலாவதியாகி வெற்று எலும்பு கூடாய் ஆகிவிடுகிறது உடல். எலும்புகள் சீதோசன நிலைக்கேற்ப தனது சிதைவுத்தன்மையை வருடக்கணக்கில் வைத்துக்கொள்கிறது.

ஆக ஒரு விலங்குக்கும் உலகில் மிகவும் அசாதாரணமாய் பரிணாமவளர்ச்சி பெற்று சுயம் என்ற ஒன்றை அறிந்து கொண்டதாய் நம்பும் மனிதனுக்கும் உடல் ரீதியிலான மரணம் என்பது ஒரே மாதிரிதான் நிகழ்கிறது.

விலங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே வித்தியாசம் என்வென்றால் அவை இறக்கிறோம் என்று தெரியாமல் சாகின்றன. மனிதன் இறக்கிறோம் என அறிந்தே சாகிறான். இந்த முதல் புரிதல்தான் ஒட்டுமொத்த மனித புலத்தையும் ஒரு புள்ளியில் இருத்தி வரலாற்றை தொடக்கியது. என்றாவது ஒரு நாள் நாம் இறந்தே ஆகவேண்டும் என்கிற அடுத்த புரிதல் அவனுக்கு உண்மையான பயத்தை உருவாக்குகிறது. அதுவரை நாம் விலங்குகள் போலமட்டுமே பயந்து கொண்டிருந்தோம்.

ஒரு சிறுத்தையிடமிருந்து ஒரு மான் எதற்காக பயந்து ஓடுகிறது. சிறுத்தை தன்னை கொன்றுவிடும் என்றா. இல்லை. அது உள்ளுணர்வு. உயிர்வாழ்தலின் அடிப்படை அனிச்சை. தனதான இனப்பெருக்கத்தின் பேரவா. அவ்வகையான பயம் உயரின் மூலம். அதற்கும் நாம் என்றாவது ஒருநாள் இறந்து போவோம் என்கிற பயத்திற்கும் உள்ள இடைவெளிதான் மனிதகுலமாக சமுதாயமாக தம்மை நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயமாக சமுதாய கட்டுப்பாடுகளாக தனிமனித ஒழுக்கங்களாக அந்த ஒழுக்க விழுமியங்களின் மீதான நம்பிக்கையாக இயற்கையில் இல்லாத அறமாக உருவெடுத்தது.

இந்த பயம்தான் ஆன்மாவை ஈன்றது. அவற்றின் இறவாதன்மையை சதா அரற்றி உறுதி செய்ய போராடியது. ஆன்மீகம் என்கிற மகத்தான சொல்லைக் கண்டு பிடித்தது. இயற்கையிலிருந்து சக்கரத் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த நிகழ்வுக்கு நிகரானது மனிதன் ஆன்மீகம் என்கிற சொல்லைக் கண்டுபிடித்தது.

இறப்பில் உடல் இல்லாமல் போகிறது. இல்லாத ஆன்மா மற்றவர் நினைவுகளில் வாழத்தொடங்குகிறது. காலப்போக்கில் இந்த நினைவுகள் மனிதனின் குரோமோசோம்களில் சேகரமாவதாக எனக்கு படுகிறது. இப்படியாக மனிதனின் உள்ளுணர்வு தொடர்ந்து மதிப்பு கூட்டப்படுகிறது. இதன் மூலமாக அறம் என்கிற ஸ்தூலம் நம்பிக்கை என்கிற நுண்ணிய இணைப்புகளால் பருண்மை ஆக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த அறத்தின் எடை அதிகரித்தவாறு இருக்கிறது.

தான் உருவாக்கிய அறத்தை தன்னாலே தூக்கிச்சுமக்கிற பொதிகழுதையாய் மனிதன் மாறிவிட்டான்.

இந்த அறம் என்பதை எவ்வாறு வரையறுக்கலாம்?

************************

தொடர்கிறேன்.

****************



21 May, 2010

எட்டுவதும் எட்டாததும்



"ஒற்றையிலக்கங்களில் எனக்கு பிடித்த எண் எட்டு. பிடிக்காத எண் எட்டு. எட்டு ஏன் பிடிக்கும். அது இரண்டு சுழியன்களால் ஆனது. எட்டு ஏன் பிடிக்காது. அது இரண்டு சுழியங்களை மேலும் கீழுமாய் வைத்துக்கொண்டு ஒரு ஆழமான பிம்பத்தைக்காட்டுகிறது... " என்று சொன்னான் கோபி.



சொன்ன இடம்: வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பிருந்த அடைத்த பெட்டிகடைக்கும் ஒரு செருப்புதைப்பவனுக்கும் இடையிலிருந்த ஒரு இடம்.
சொன்ன பொழுது: சூரியன் மறைந்த பிறகான மாலை. நேரம் ஏழு ஐம்பத்து ஐந்து.
அசமந்தமான மனிதர்களின் கூட்டம். மதியம் நாலு மணியிலிருந்து நாலு அம்பத்து ஐந்து வரை திகுடுதிம்பான மழையில் வினோதமான வீச்சம் காற்றில் பரவியிருந்தது. கோபிக்கு முன்னாள் நின்று அவன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இரண்டு பெண்கள். கேட்காமல் தேநீர் அருந்த போனவன் ராஜகோபாலன்.
துர்கா அவனை கொஞ்ச நேரம் உற்று பார்த்தாள். பின்பு அவளைப்பார்த்தாள். கேட்டுக்கொண்டிருந்த பாத்திமா "ஏசுவே.."என்று முனுமுனுத்தாள். அதே நேரத்தில் ராஜகோபாலன் பாதி குடித்த கின்லே பாட்டிலுடன் அங்கு வந்து சேர்ந்தான். போலாமா என்று கேட்டாள் துர்கா.



cut.


வாசகா உன்னிடம் உள்ளது ஒன்பது சட்டங்கள்.குறைந்தபட்சம் அவற்றில் நான்கையாவது உபயோகிக்கவில்லைஎனில் நீ இந்த கதையை படிக்க லாயக்கற்றவன். மன்னிக்கவும் லாயக்கற்றவர்.



சட்டம் ஒன்று:
துர்கா ஒரு ஓவியை. தூரிகைகளில் வண்ணம் குழப்பி இல்லாதவற்றை உருவாக்குவதன் மூலம் தான் இல்லாமல் போவதாக தன்னை கற்பனை செய்கிறவள். அவளுடைய மாதவிடாய் சீராக உள்ளது. பதினேழு முறை கற்பிழந்தவள். அதற்கு ராஜகோபால் மட்டுமே காரணம் அல்ல. அவளது முதல் கற்பிழப்பு பதிமூன்று வயதில் ஒரு சைக்கிளை ஓட்டும் போது ஏற்பட்டது. கன்னித்திரை கிழிந்தால் கற்பு போய்விடும் என்று அறியாத வயதில் இது நிகழ்ந்தது. பெண்களை ஒரு சைக்கிள் கூட கற்பழிக்கும் என்று தெரியாத ராஜகோபால் தனது முதல் பெண்ணான துர்காவை காதலிக்க தொடங்கியதால் அவனது பெரியம்மாவின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு அவனை அவமானம் கொள்ள செய்து அதை மறுப்பதற்காக மாலை கல்லூரியின் அரபு மொழிகற்க விண்ணப்பம் செய்து கொண்டான். பிறகு நீளமானதை இடமிருந்து படிக்கவும் வட்டமானதை பின்பக்கமிருந்தும் படிக்க கற்றுக்கொண்டான். தன்னை ஒரு சமபக்க முக்கோணமாக வெளிப்படுத்தி ராஜகோபாலை நிலைகொள்ள விடாமல் பார்த்துக்கொண்டாள். அவளது முதல் தவறு ராஜகோபாலுடன் கொடைக்கானல்செல்ல சமத்தித்தது. அதன் பலனை நீங்கள் யூகிக்கலாம். அவ்வளவு சுலபமா என்ன என்னை வீழ்த்துவது என்ற துர்காவின் நினைப்பில் மண்ணள்ளிபோட்டது காலம்.


சட்டம் இரண்டு:


ராஜகோபாலன் ஆசிரியரின் மகன். அம்மா திருமணத்துக்கு முன் கைத்தறியில் ஈடுபட்டவள். கல்லூரி முடித்தும் முடிக்காமலும் புத்தனையும் ஜென்னையும் தேடி சைக்கிளில் புறப்பட்டவன் இரண்டு வருடத்தில் மாநில படகு விடும் போட்டியில் வெற்றிபெற்று அன்றே துர்காவைப் பார்த்து புத்தனின் முகத்தில் கரி பூசிவிட்டு அவளுடன் மேத்தமெடிக்ஸ்- ல் ஈடுபட்டான். சமன்பாடுகளின் முடிவில் துர்க்கா ஒப்புக்கொண்டாள்.


சட்டம் மூன்று:


கோபி கணக்கு வாத்தியார். அன்பு ஸ்டடி சென்டர் நடத்துகிறான். இரண்டாயிரத்து ஆறாம் வருடம் மார்ச்சில் கணக்கில் தவறிய பாத்திமா அக்டோபருக்கு தேர்வு எழுத அன்பில் இணைந்தாள். அதன் பின் கோபி கணக்கு சொல்வதை விட்டுவிட்டு கணக்கு செய்வதை ஆரம்பித்தான். இரண்டு வருடங்களுக்கு பின் சென்டரை பூட்டிவிட்டு கீதலோச்சினி வித்யாலயாவில் ஓவிய ஆசிரியனாக சேர்ந்து விட்டான்.


சட்டம் நான்கு:


பாத்திமா என்கிற பார்வதி. இரண்டாயிரத்து ஆறில் படிக்கப்போனவள் இரண்டாயிரத்து எட்டில் கோபியுடன் ஓடிப்போனாள். அப்பத்தை உதரச்சொல்லி பார்வதி மணவாளன் ஆனான் கோபி.



போதும் நான்கு சட்டங்கள் என்று முடிவு செய்கிறான் கதைசொல்லி. சிவராமன் சொன்ன frame - தான் சட்டம் என்று தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தகவலாகவும் சொல்கிறான் எழுதுபவன். எழுதுபவனும் கதைசொல்லியும் ஒரே ஆளா அல்லது.... அது அவர்கள் பிரச்சனை. விட்டுவிடுவோம்.


நான்கு பேரின் சந்திப்பு தளம் கீதலோச்சினி பள்ளி. அவர்கள் இந்த கோடையில் கொடைக்கானல் செல்ல முடிவுசெய்து இப்போது வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் நிற்கிறார்கள். அப்பொழுதுதான் கோபி சொன்னான்: அவனுக்கு எட்டு பிடிக்கும் என்றும் அவனுக்கு எட்டு பிடிக்காது என்றும்.


பின்பு அவர்கள் சென்று விட்டார்கள். இனி இந்த நான்கு சட்டங்களையும் நீங்கள் என்னசெய்வீர்கள் என்று எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் பார்த்துக்கொண்டிருக்கிற சட்டம் இங்கிருக்கிறது. அதே வத்தலக்குண்டின் பேருந்து எதிர்புறத்தில், அந்த நான்கு பேரும் நின்றிருந்த இடத்திலிருந்து மூன்றடி தொலைவில் சாலையில் விழுந்துகிடந்த ஸ்கட் கருப்பன்.


நாட்டின் அசுவாரஷ்யமான காட்சி. போதை தாங்கமாட்டாமல் தெருவோரமோ சாலையோரமோ விழுந்து கிடப்பது. கதைசொல்லி இது கொடுப்பினை என்கிறான். போதையில் கூட தனைமறந்த நிலை வாய்க்கப்பெறவில்லை என பெருமூசெறிகிறான்.


விழுந்து கிடந்தவனின் காதில் விழுகிறது எட்டு பற்றிய கோபியின் விளக்கம். கருப்பன் ஒரு தொழில்முறை துரோகி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்சு பேர்வழி. கந்து கருப்பன் என்கிற பேர் அமெரிக்க ஈராக் போரில் உபயோகப்படுத்தப்பட்ட ஏவுகணையான ஸ்கட்டை உலகம் பார்த்தபின் ஸ்கட் கருப்பனாக மாறிப்போனது. அவனுக்கும் எட்டு என்கிற எண்ணை பிடிக்காது. ஆனால் எட்டு என்கிற வார்த்தையைப் பிடிக்கும். நிறையவே. வேணும் என்கிற இடத்தையோ வேண்டாம் என்று ஓடும் வாடிக்கையாளனையோ மிக எளிதில் எட்டிவிடுவான். மெல்ல தரையில் கை ஊன்றி எழுந்து நின்று நாலு எட்டு கூட நடக்க முடியாது போல என்று உரத்து சொன்னான்.


செருப்புதைக்கிற ஐந்தாம் சட்டம் அவன் வாழ்க்கையில் முதல் முறையாக அவனது ஊசியால் பெருவிரலைக் குத்திக்கொண்டான். அவன் சொன்னான்: பாத்து எட்டு வெச்சு போ மாப்ளை என்ன ஊசி குத்துனமாதிரி எதுவும் உன்ன குத்திடப்போவ்து.


ஆறாம் சட்டம்: மீண்டும் மழை.


ஏழாம் சட்டம்: ஒரு மின்னல் காவல் நிலைத்து சுற்றுசுவருக்குள் இருந்த மரத்தில் விழுந்து என்பது வைவ்வால்களை கொன்றது. மின்னல் விழுந்தா இடிவிழுந்தா என்று லாஜிக் பேசுகிறான் எழுதுபவன். எழுதுபவனுக்கு என்ன பேச்சு என்கிறான் கதைசொல்லி.



சொல்லித்தரவா.. சொல்லித்தரவா...ஆஆ... மெதுமெதுவாய் அழகே...


மொபைல் போனில் சிவராமன் அழைக்கிறார். எடுக்கிறான் எழுதுபவன். அவனுக்கெல்லாம் அமைப்பியல போய் பாடம் எடுத்தேனே.. என்ன சொல்லணும்.. தேவையா எனக்கு. அவன் எப்படி போனா எனக்கென்ன .. போய்த்தொலைங்க...


cut



பிறகு என்ன நடந்தது என்று கதைக்கு வெளியே நடந்த கதையை யூகி வாசகா. யூகி வாசகி.


ஒரே ஒரு clue மட்டும் தருகிறேன்: ஸ்கட் கருப்பனை அன்றிலிருந்து பதினேழாம் நாள் அடையாளம் தெரியாத பார்த்தால் சொல்லக்கூடிய எட்டு பேர்கள் சேர்ந்து இருபத்தியாறு இடத்தில் குத்தி கொன்றுவிட்டார்கள்.


கதைசொல்லி இதை பொய் என்கிறான். எழுதுகிறவன் வழிமொழிகிறான். சிவராமன் சிலகாலம் தொடர்பு எல்லையை துண்டிக்க விரும்பி வானத்தை பார்க்கிறார்.




20 May, 2010

சுவரில் வாழும் ஜன்னலின் தனிமை - 1

*****************

இடைவிடாத பிரசவ வேதனை உங்கள் உலகம். மரணம் மட்டுமே அதன் ஒரே மருத்துவச்சி- மிர்தாதின் புத்தகத்தில் மிகைல் நைமி.

*****************
என் முன்னாள் இரண்டு விருப்பத்தேர்வுகளை எனது கடவுள் வைத்தான். ஒன்று கொலை மற்றொன்று தற்கொலை. நான் கொலையை தேர்வு செய்த ஒவ்வொரு முறையும் எனது தற்கொலையில் முடிந்ததது, மாறாக ஒரே ஒரு முறை நான் தற்கொலையை தேர்ந்தெடுத்த போது என் கடவுள் என்னைக் கொலை செய்தான்.
******************
அழகிய குளத்தின் முன்னால் நிற்கிறேன். மெல்லிய தென்றலில் ஏற்படும் சிற்றலைப்பரவல்கள் தவிர அமைதியாக இருக்கிறது குளம். சலனமற்றிருக்கிறது என என்னை நம்பவைக்கிறது. ஏனென்றால் அதனடியில் ஒரு பூகம்பமோ அல்லது ஒரு எரிமலைக் குழம்போ இல்லையென அந்த அமைதியின் மூலம் அந்த குளம் என்னிடம் சொல்லுவதாகப்படுகிறது. தென்றலை ரசிக்கும் அமைதியான குளம். அதை எனக்குப் பிடிக்கவில்லை. ஆம், அமைதியும் அழகும் சேர்ந்த அந்த குளத்தை நான் வெறுத்தேன். எனவே நான் என்னாலியன்ற அளவு பெரிய கல்லை எடுத்து அந்த குளத்தில் எறிந்தேன். கணத்துக்குள் கல் நீரில் நுழைந்து ஆழத்தில் அடங்கியது. அதே நேரம் குளம் கலங்கத்தொடங்கிவிட்டது. கலங்கிய குளம் எவ்வளவு அழகானது. ஆதூரம் மிகுந்தது. அதன் ஒவ்வொரு துளியும் எவ்வளவு தூய்மையானது. அதன் படைப்பூக்கம் எவ்வளவு உறுதியானது. எனது மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. என் முன்னால் தெரியும் அனைத்து குளங்களிலும் கல்லைப்போட தொடங்கினேன்.

*********************

ஒரு முறை இறந்து விடுங்கள் இதைப் படிப்பதற்கு முன்னால். அப்படி இறக்க முடியவில்லைஎன்றால் இதை தொடர்வதை நிறுத்திவிட்டு வாழப்போய்விடுங்கள். ஒரு முறை இறந்தவர்களுக்கு மட்டுமே இனிவரும் வரிகளும் அதன் அர்த்தங்களும். ஒரு முறை இறக்க பயம் கொண்டவர்கள் இந்த வரிகளை காகிதத்தில் அச்செடுத்து அந்த காகிதத்தை உங்கள் கழிப்பறையில் தொங்கவிடுங்கள். நீர் கிடைக்காத சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உதவக்கூடும். மீறிப் படிப்பவர்கள் ஒரு வேளை உற்சாகத்தால் தெருவில் நிர்வாணமாக ஓட நேர்ந்தால் அது நள்ளிரவு நேரமாக இருக்கவேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.

**************************

எல்லோரும் அறிந்த ஒரு ஜென் கதையுடன் தொடங்கலாம்.

சீடன்: அந்த மலையுச்சியை அடைய எங்கிருந்து தொடங்கவேண்டும் குருவே? குரு: மலையுச்சியிலிருந்து.

சீடன்: மலையுச்சி என்றால்? குரு: மரணம்.

எனவே நான் மரணத்திலிருந்து தொடங்குகிறேன். அதற்கு முன்னால் ஒரு விஷயத்தை நான் பதிவு செய்கிறேன். நமது மூளையின் புரிதல் திறன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. இந்தியாவில் நூறு கோடிப் பேர் என்றால் நூறுவிதமான புரிதல் திறன். நான் எழுதுபவைகளை நான் புரிந்து கொண்ட வண்ணம் படிப்பவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என தெரிந்தே இருக்கிறேன். நான் நினைத்தவாறு புரிந்து கொள்ள அவசியமில்லை என்பதையும் நான் அறிவேன். அதான் எனது புரிதல்களை சொல்லும் போது உங்களுக்கு ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டால் தயவுகூர்ந்து என்னை மன்னித்து விட்டு வேறு வேலையைப் பார்க்க கிளம்புங்கள். அதுபோல இந்த கட்டுரையில் நான் விவரிக்கும் அனைத்து ஆண்களுக்கும் கிருஷ்ணன் என்ற பெயரையும் பெண்களுக்கு ராதை என்கிற பெயரையும் உபயோகப்படுத்துகிறேன். இப்பிரபஞ்சத்தில் மேற்படி பெயர் கொண்டவர்களுக்கும் இதில் வரும் ராதை - கிருஷ்ணனுக்கும் துளியும் தொடர்பில்லை.

இனி மூன்று கிருஷ்ணன்கள் இரண்டு ராதைகள் மரணத்தை பார்ப்போம் உதாரணத்திற்கு.

கிருஷ்ணன் ஒன்று: நாற்பத்தியேழு வயதில் கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில் ஒரு மரக்கூட்டத்திற்கு நடுவில் ஒரு தாழ்வான கிளையில் கையிற்றை கட்டி தனது கழுத்திலும் கட்டி குதித்ததில் குரல் வளை இறுகி இறந்து போனான்.

ஒரு கிருஷ்ணனும் ஒரு ராதையும்: கண் முன்னால் வாகனத்தில் இடிபட்டு இறந்தவனைப் பார்த்து பயத்திலும் அதிர்ச்சியிலும் மயங்கிச்சரிந்தவள் இறந்து போனாள்.

மூன்றாவது கிருஷ்ணன் வாழைப்பழமும் பாலும் குடித்து விட்டு நிறைவாக தூங்கியவன் மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் விட்டான்.

இரண்டாவது ராதையை ஒரு வன்புணர்ச்சி செய்யும்போது அவனது இயக்கத்துக்கு தோதாக அவள் கழுத்தை பிடித்துக்கொண்டான். அவனது இயக்கம் முடிவடையும் ஊழிக்கு முன்பே அவள் உயிர் விட்டிருந்தாள்.

இப்போதைக்கு வன்புணர்ச்சி செய்த கிருஷ்ணனை உயிரோடு விட்டுவிடுவோம். மற்ற மூன்று க்ரிஷ்ணன்களும் இரண்டு ராதைகளும் இப்போது உடல்கள். அவைகள் க்ருஷ்ணன்களோ ராதைகளோ அல்ல. மரணித்தவர்கள் என்கிற ஒன்றில் அவர்கள் ஒற்றுமை அடைந்து விட்டார்கள்.

மரணம் ஒரு முற்றுப்புள்ளி. எவ்வளவு அற்புதமாய் இருக்கிறது இதைக் கேட்பதற்கு. மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லை. பிறப்பதற்கு முன் மனிதனுக்கு ஒன்று இருக்கிறது. ஆதி உள்ளுணர்வு என்கிற ஒன்று. அது பற்றி பின்னால் பார்ப்போம்.

மரணத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்கிற ஒரு எளிய மகிழ்வு தரக்கூடிய உண்மையை நான் புரிந்து கொண்டேன். அது எனக்கு மகிழ்ச்சி. எப்படி இந்த தீர்மானம் எமக்குள் வந்தது. அதற்கு முதலில் உயிர் என்ற உடலியக்கத் திறன் முடிவுற்றதும் கிருஷ்ணன் மற்றும் ராதையின் உடல்கள் என்னவாகின்றன என்று சில மருத்துவ ரீதியான தரவுகளை solkiren.

***************

அடுத்த பதிவில்.

***************************************************************************

இந்த கட்டுரையின் தலைப்பு ஒரு ஹிந்தி நாவலில் இருந்து சுடப்பட்டுள்ளது.

*****************************************************************************

05 May, 2010

அற்றவை நிரம்பிய தேகம்

கற்றவை கரையும் கானுறை ஞானம்
சற்றவை மறைய களிபெறும் மோனம்
மற்றவை தேடிடா மதிவானின் போதம்
அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்

முற்றவை விலகிடா முற்றத்து வானம்
சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்
கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்
கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்

கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்
பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்
உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து
மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.

*******************

01 May, 2010

சித்திரைப் பௌர்ணமி




சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில்.
இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன்.
...................................

ஒளிரும் மரம்

கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.
அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.
முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
.

மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல.


******************
இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை.

*****************************

மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம்.

***********************