26 April, 2010

படத்தொகுப்பு


பத்து படங்கள் என்றால் எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. எனவே நான் எனது சினிமா காலத்தை மூன்றாக பிரிக்கிறேன்.

எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.

புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!

இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.

மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.

ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.

போதுமா பத்மா!
*****************************

24 April, 2010

kepela

நல்ல வெயில். மயிலாய் இருப்பதில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது இவ்வளவு நீண்ட தோகையை தூக்கி சுமப்பவனுக்குத்தான் தெரியும். களிமண் தரை கெட்டிப்பட்டு பாலம் பாலமாய் பிளவுபட்டு ஒரே வெக்கைப்பரவல். அகவினால் தொண்டை எரிகிறது. நீருக்கும் வழியில்லை என்றில்லை. உப்புக்காற்று உணர்கிறேன். எங்கோ பக்கத்தில் கடலிருக்கிறது. நீரை எவ்வளுவுதான் குடிப்பது. பசி அடங்க மாட்டேன் என்கிறது. ஒரு மண்புழுவை பிடிக்க ஒன்றரை அடி பறிக்க வேண்டியிருக்கிறது. ஒரு விரல் நகம் வேறு ஒடிந்து லேசான குருதி கசிவு. இப்போது தேவை ஒரு எலி. ஒரு இளம் பாம்பென்றால் கோடி புண்ணியம். அடிக்கிற வெயிலுக்கு கருவேல மரத்துக்குள் நுழைந்தால் குத்தும் முள் கடும் எரிச்சல். எல்லாம் அந்த கலாபத்தால் வந்தது. வாலில்லாமல் அதுகள் தான் எவ்வளவு இலகுவாக ஓடித்திரிகிறது. இதுகளை தொகை விரித்து அழகு காட்டி சரி செய்வதற்குள் தீர்ந்துவிடும் போங்கள். அந்த நேரத்தில் பசி வேறு தெரிந்து தொலையமாட்டேன் என்கிறது. இதுதான் சூழல். இனி நடப்பவைதான் என்னை பைத்தியமாகிவிட்டது. பாருங்கள் கருவேலன்கிளையில் சட்டையை உரித்துக்கொண்டிருந்ததுதான் முதலில் தெரிந்தது. இளஞ்சாரை. கொழுப்பு. கோடி புண்ணியம்தான். அதே நேரம் ஒரு வெள்ளெலி புதருக்குள் நுழைகிறது. இரட்டை மாங்காய் என்றால் இதுதானோ. இரண்டு கோடிப் புண்ணியம். வாயில் சாரை. காலில் எலி. பசித்தவனுக்கு எதற்கு பாவ புண்ணியம். அந்த கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லி தொலையவேண்டும். வந்தது வினை. எதற்கு எங்கள் இரண்டு பேரையும் உண்ண வேண்டும் என்கிற குரல் எலியா பாம்பா. இரண்டையும் தரையில் இறக்கினேன். உரையாடல் தொடங்கிற்று.

எலி: ஏன் எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் உண்ணவேண்டும்.
பாம்பு: அதானே.
நான்: பசி. வேறென்ன செய்ய.
எலி: எனக்கும் கூடத்தான் பசி. சில தானியமணிகளை தேடத்தான் வெளியே வந்தேன்.
பாம்பு: இஸ் இட்? உனக்கு பசிக்குமா என்ன? நீ நான் உண்ணும் தின்பண்டமாயிற்றே. உன்னை பார்த்துவிட்டுத்தான் பாதி சட்டையைக்கூட கழற்றாமல் கீழிறங்கினேன். அதற்குள் மயிலார் கவ்வி விட்டார்.
எலி முறைத்தது.
எலி: நானும் உயிர் கொண்டு அலைபவள்தான். எனக்கும் பசிக்கும். உன்னை விட அதிகமாக. எதையாவது விழுங்கவில்லை என்றால் கூட நாங்கள் எதையாவது கடித்துக்கொண்டிருப்போம்.
நான்: ஒ.. நீ பெண்.
எலி: பெண் என்றால் இளக்காரமா. பெண்தான் எலிஎன்றாலும்.
பாம்பு: இவள் உடம்புக்கு ஆடையுடுத்தி மறைத்தலையும் ஜந்துக்களை போல பேசுகிறாள். பசிக்காக அனைத்தையும் உண்ணும் கழிசடைகள். I never like'em.. you know.
நான்: நீ எங்கிருந்து வருகிறாய் சாரை. ஆங்கிலம் எல்லாம் தூக்குதே. சரி அது எதுக்கு எனக்கு. எனக்கு பசி.. உன் சட்டையை முழுதாக கழற்றித்தொலை.. உன் கொழுப்பு என்னை கொஞ்சம் சாந்தப்படுத்தும்.
எலி: என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
நான்: பெண் என்பதால் உன்னை கொத்திக்குதறாமல் ஒரே விழுங்கு.. சரிதானே.
பாம்பு: அவள் என்ன கேட்டாள். நீ என்ன சொல்கிறாய்.
நான்: என்னை ஒருமையில் அழைக்காதே சாரை. என் பொறுமை கரையத்தொடங்கி விட்டது.
எலி: இதோ பார். நீ எங்களை இறக்கி விட்டதும் ஓடியிருந்தால் உன்னால் எங்களை பிடித்து இருக்கமுடியாது. காட் ப்ராமிஸ்.. நாங்கள் நிற்கிறோம் என்றால் எங்கள் நேர்மையை நீ கவனி. சொல்வதைக்கேள். எங்கள் இரண்டு பேரில் ஒருவரை விட்டு விடு.
எனக்குத்தான் எத்தனைத் தொல்லை. பசித்தால் திங்க வேண்டும். அதைவிட்டு விட்டு. இப்பொழுது என் அறத்தை பற்றிய கேள்வி எழுப்பி நொம்பலப்படுத்துதுகள். இதற்கு பேசாமல் அந்த கலாபத்தை தின்னு தொலைத்திருக்கலாம். பசி வேறு கண்ணைக்கட்டிக் கொண்டு வருகிறது. நான் ஒரு மயில். எலியையோ பாம்பையோ தின்றால் என்ன பிரச்சனை. இதை இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் யாருக்குத்தான் என்ன பிரச்சனை. சனியன் வேறு யாராவது கேட்டால் பதில் சொல்லலாம். இதுகளே வந்து கேட்டால். நரன் வடிவேலுவின் கதைபோல ஆகிப்போனதே பிழைப்பு.
எலி: என்ன மயிலாரே பலமான யோசனை. ஒரு முடிவுக்கு வாரும் சீக்கிரம். எனக்கு பசி.. பாருங்கள் உங்கள் நகங்களை திங்கத்தொடங்கிவிட்டேன். என் சைசுக்கு நீங்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் மாரிக்காலம் வரை தாங்கும்.

என் விரல் நகங்களை பார்க்க குனிந்த சைக்கிள் கேப்பில் பாம்பார் எலியை லவட்டி விட்டார். எலிவால் துருத்திய வாயை அதக்கியவாறு life is very short for lies என்றார் பாம்பார். நான் அவரை இரண்டு கால்களிலும் வாகாக பிடித்துக்கொண்டு கொத்தி கொத்தி தின்னத்தொடங்கினேன். அதன் தலைப் பகுதியில் எப்பொழுதும் போல காதுகளை காணவில்லை. அதன் கண்களைக் கொத்துவதற்கு முன் அவற்றைப் பார்த்து சொன்னேன் vengence is lazy form of grief.
பாம்பாரின் கழுத்துக்கீழ் நெளிந்து கொண்டிருந்த எலியார் விழுந்த ஓட்டை வழி தவ்வி குதித்தோடினார் களிமண் தரையில் புழுதி பறக்க kepéla என்று கத்தியவாறு. நான் பசியாறினேன். இன்னொரு நாளைக்கு எலி சிக்காமலா போய்விடும்.

**************


kepéla. - lt means standing on opposite sides of the river."
this story is dedicated to nicole kidman.

***********************

இருப்பு என்கிற வெற்றிடம்


கவனப்பிசகொன்றை தூண்டிலில்
மாட்டி நீருள் எறிகிறான்
ஆழத்தில் அமிழும் வளையூசியில்
சிக்கிய மணல் துகளுடன்
மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி
மணலுடன் வீடேகும் அவனது வாணலி
கொதிப்படைய சமைத்துண்கிறான்
ஒரு துளி பசியை பின்னான பசியற்ற
பொழுதில் துளையடைத்த ஈய
வாளியுடன் செல்கிறான்
நீர் நோக்கி மீண்டும்
இம்முறை அவனது வெற்றிடம்
நிரம்புகிறது
ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.
********************

19 April, 2010

மன்னிக்கவும்

விருப்பமான விருப்பமான பெண்கள் : முட்டுவேன் கொல் என்று ஊரைப்பார்த்து கதறிய அவ்வையார். சென்றுவா மகனே என்று பாடி களித்தீர்த்த சுந்தராம்பாள். உறுதி குழையாத அன்பின் - ஆங் ஸான் ஷுகி(Aung San Suu Kyi). வலியின் ஓவியை பிரைடா காலா. வலியின் கவிஞை சில்வியா ப்ளாத். தமிழ் திரை இசை பாடலாசிரியர் தாமரை. ஆளுமை அருந்ததி ராய். அழகி நந்திதா தாஸ். பேரழகி ஜமுனா. பெரும்பேரழகி சல்மா ஹயக்.

இது பிரபலமானவர்களில் எனக்குப்பிடித்த பெண்கள். எனக்குவிருப்பமான சுற்றமும் நட்பும் பற்றி நான் குறிப்பிடப்போவதில்லை.

***************************

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன்.....மனிதன்.... மனிதம்..............மனிதா...மனி.. மனி... மனி...



மன்னிக்கவும் ரெகார்ட் கீறல் விழுந்துள்ளதால் இந்த வரியே திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது. சவுண்ட் சர்விஸ் பார்ட்டி ப்ளேயரைப் போட்டுவிட்டு விட்டு ரெண்டு இட்லி கெட்டிச் சட்டினி வைத்து சாப்பிட்டு வருவதாக சொல்லி போயிருக்கிறான்.

பொறுத்திருங்கள்.

****************************
எவ்வளவு எமாற்றுகாரர்களாய் இருக்கிறார்கள் இந்த சினிமா இயக்குனர்கள் என்பதற்கு மறுபடியும் ஒரு அத்தாச்சி 'பையா'. கொஞ்ச நாளுக்கு முன்ன 'படிக்காதவன்' என்கிற ரஜினியின் மருமான் நடிச்ச படத்த ரீ- மேக்கியிருக்கார் திருவாளர் லிங்குசாமி. அதுலயும் இந்த தமன்னா பொண்ணுதான் .... ஹையோ.. ஹையோ.
******************

நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை:

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

நீங்க சொன்னா சரிதானுங்க மாமோவ்வ்...........

**********************************

16 April, 2010

கதை


நான் யாருக்கும் பின்னூட்டம் அளிக்கவில்லைஎன்றால் யாரும் எனக்கு பின்னூட்டம் செய்யமாட்டார்கள் என்று சொல்கிறார் நேசமிதிரன். நல்லது. இன்று எனக்கு அதிகபட்ச சொடுக்காக என்பது உள்ளது. எனக்கு தெரிந்த ஐந்து பேர் பதினாறு முறை எனது வலைதளத்தை சொடுக்கினார்கள் எனக்கொள்கிறேன். நன்றி.

************************

ஒரு கதையை இனிய தங்கை அனுப்பியிருக்கிறாள்!

தந்தையும் பத்து வயது மகனும் புங்கமரத்துக்கு அடியில் அமர்திருக்கிறார்கள். அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார்.

நீ என்ன செவிடா.. அப்பா. நான் சொல்வது கேக்கவில்லையா. அல்லது நீ ஒரு குருடா.

அப்பா சொன்னார். உன் மூன்று வயதில் இதே இடத்தில் இந்த கேள்வியை நூற்றி எழுபது முறை கேட்டாய் மகனே. நான் ஒவ்வொரு முறையும் உன் முகத்தில் ஒரு இனிய முத்தமிட்டு சொன்னேன் 'அது ஒரு காக்கை' என்று.

இப்பொழுது நான் மூன்று முறை அந்த கேள்வியை கேட்டதும் நீ என்னை செவிடன்கிறாய்.

***************

பிள்ளைகளைப் பெறும் வரை நாம் பெற்றோர்களை குறை சொல்கிறோம். பிள்ளைகள் பெற்ற பின் நாம் குழந்தைகளை குறை சொல்கிறோம்.

*****************

நேசமித்திரனை இந்த பத்து பெண்களிப்பற்றிய குறிப்புகளுக்கு தொடர் பதிவை அளிக்க முதலில் அழைக்கிறேன்.

**********************

பத்து பெண்கள்






























யாரும் என்னை அழைக்கவில்லை. இதில் என்ன வெட்கப்படவேண்டியிருக்கிறது! நானும் எனக்கு பிடித்த பத்து பெண்கள் யாரென்று யோசனை செய்தபோது ...
இதில் ஒருவரே இரண்டு பேராக இருக்கிறார்.
எல்லோரையும் தெரிகிறதா?
(எனக்கு மிக மிக பிடித்த மறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின் படம் கிடைக்கவில்லை)
******************
பின்னூட்டம் அளியுங்கள் மக்களே!
********************

you know onething.. I am out of Music.


அந்த இசைக்கருவியின் தந்திக்கம்பி
ஒலியிலிருந்து விலகியோடுகிறேன்
அதிர்ந்தடங்கும் கம்பியினுள் குவிந்தடங்கும்
ஒலிப்புள்ளியாய் சூனியம் சேர்க்கிறது கணம்
எளிய வழியை உன் விழியில் வைத்திருக்கிறாய்
பொறுமையாய் உள்நுழைய எதுவாய் இருக்கிறதுன்
இதயம். நண்ப...
இசைக்கருவியின் அமைப்பியல் பருண்மை
இலகுவாக்குகிறது இசையை அது
நீ இல்லாத தருணங்களை இசைக்கிறது
குழந்தையொன்றின் கேவல் போல
மேலும் அது என்னில் காதலை தளிர்க்கிறது
நான் ஓவியம் வரைகிறேன். அனைவரும்
என்னை இசைக்கலைஞன் எனவே விளிக்கிறார்கள்
நான் சென்றுவிடவே விரும்புகிறேன்
நீ இல்லாத இடத்தில் எனக்கு
அல்லது இசைக்கு அல்லது அந்த
இசைக்கருவிக்கு இடமில்லை நான்
செல்லுகிறேன் உன்னிடமிருந்து
உன்னிடத்திற்கு விழி முன்னாள் இதை
நிகழ்த்தும் யாரோ ஒருவனின் இசையை
மரண நரம்பென்கிறேன்
எளிய இசையை ஆயுதமாக்கும் மாயக்காரனின்
விருப்பம் எனதுயிர் என்றால்
அதை உனக்கு தானமாக்குகிறேன்
எனவே..

15 April, 2010

யதார்த்த சினிமா என்றால்,

இந்தியாவில் உலகத்தரத்தில் எதுவும் இல்லை என்கிறான் பார்த்திபன். ஊழல் கூட உலகத்தரத்தில் இல்லையாம்! உலகத்தரம் என்றால் என்ன என்கிற நியாயமான கேள்வியும் இருக்கிறது. இது பற்றி நான் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.

மற்ற விசயங்களை தொடவில்லை. சினிமாவை மட்டுமே எடுத்துக்கொள்வோம். என்னைப்பொறுத்தவரை இந்தியத்தரம் இருந்தாலே போதும். பதிவர்களில் நான் படித்தவரைக்கும் அங்காடித்தெருவை கொண்டாடியே இருக்கிறார்கள். ஒரு தினசரி இதழில் வரும் செய்திகளைவிட நமக்கு யதார்த்தத்தை அள்ளிக்கொட்டும் ஊடகம் ஏதேனும் இருக்கிறதா?

செய்தித்தாள்களில் வரும் பல்வேறு செய்திகளை எடுத்து வெட்டி ஒட்டி கதை செய்து அதை திரைக்கதையாக்கி இனிமா.. மன்னிக்கவும் சினிமா செய்தால் என்னவென்று சொல்வது. யதார்த்தமற்ற கருத்துருவாக்கங்களை யதார்த்தமாக நம்மை ஊடகங்கள் நம்ப வைத்து வெகு காலமாயிற்று.

காதல் என்கிற படம் வருவதற்கு முன்னாள் இவ்வகையான படங்கள் எத்தனை வந்திருக்கும்? இதில் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் தவிர எத்தனை படங்கள் வெற்றியடைந்தன?

இவர்கள் சொல்லுகிற எதார்த்தம்தான் என்ன. சினிமா என்றாலே மிகை எதார்தம்தானே. மனித உறவுகளில் நடைமுறைச்சிக்கல், தனிமனித இயக்கம் சமுதாயத்தின் மீது கொள்ளும் உறவு, இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் மற்றும் கிடைக்காதவனுக்கும் கிடைக்கிறவனுக்கும் இடையே நிகழும் வன்முறை, நம்பிக்கையின் மேல் விழும் அடியின் வலி போன்று மிகக்கடுமையான பிரச்சனைப்பாடுகளை பற்றியெல்லாம் சொல்லி கடுப்படிக்கப் போவதில்லை.

இதெல்லாம் யதார்த்த சினிமா என்றால், வீடு (அர்ச்சனா!! ) போன்ற படங்களை கலைப்படங்கள் என்று ஒதுக்க முடியுமா? என்னுயிர்தோழன் போன்ற படங்களும் தமிழில் வந்திருக்கிறது. யதார்த்த கதாப்பாதிரங்களை உயிர்ப்புள்ள சினிமாவில் காட்டமுடியாதா.

எண்பதுகளில் வெளியான சினிமாக்களில் எத்தனை எடுத்துக்காட்டுகளை சொல்ல! திஸ் இஸ் சினிமா என்று டைட்டில் கார்டில் முழங்கிய அவள் அப்படித்தான், எந்திரனின் எங்கேயோ கேட்ட குரல்.. இன்னும் எத்தனை...

பணம் சம்பாதிக்க வேண்டும். எப்படி எடுத்தால் ஓடும். எடு அதை. அவ்வளுவுதான். நாம் பார்த்து தீர்க்கிறோம் வெட்கமில்லாமல். ஏனென்றால் இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றே நமக்குத்தெரியாது.

வங்காளம், சத்தியஜித் ரே, ஷ்யாம் பெனகல், அக்ரகாரத்தில் கழுதை என்றெல்லாம் உளறவில்லை. சமீத்தில் ஹிந்தியில் வெளியான காமினே, லாஸ்ட் லியர் பாருங்கள். லாஸ்ட் லியரில் அமிர்தாபின் உச்சகட்ட திறமையை உணருங்கள். எனக்குத்தெரிந்து தமிழில் மனித உணர்வுகளுக்கு திரைக்கதை செய்த படம் காதலுக்கு மரியாதை. அதுவும் அந்த படத்தின் நிறைவுக்காட்சி மட்டும்தான்.

பசங்க என்றொரு படம். நல்லாத்தான் இருந்தது. ஒரு பாடல் காட்சி மட்டும். ப்ளூ அம்ரெல்லா (நீலக்குடை) பாருங்கள். குழந்தைகள் படம் எப்படி இருக்க வேண்டுமென்று. இரானியப்படங்களைப் போல அற்புதங்களை எதிர்பார்க்க தேவையில்லை. குறைந்த பட்சம்...

வெண்ணிலா கபடி குழு படம் தான் என் பார்வைக்கு சற்றேறக்குறைய யதார்த்த சினிமாவாக இருக்கிறது. மொத்தத்தில் நான் சொல்லவருவது, இப்போது வரும் யதார்த்த வகைமைகளில் வரும் சினிமாவிற்கும் யதார்த்தத்திற்கும் குறைந்த பட்சம் உங்கள் இருப்பிடத்திற்கும் அதற்கு சமீபமான திரையரங்கிற்கும் இடையே உள்ள தூரம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே.

************

டிஸ்கு.

சாரு நிவேதிதாவின் வாசனை வீசுகிறது இந்த கட்டுரையில் என்று கண்டுபிடித்தவர்களுக்கு இன்னும் பதினேழு நாட்களுக்குள் சொர்கத்திலிருந்து சுஜாதா மேனகையிடமிருந்து வாங்கிய வாடா மலரொன்றை பதிவுத்தபாலில் அனுப்பி வைப்பார்.

*****************

14 April, 2010

வானேறிப் பறக்க

எங்கிருந்து தொடங்குகிறது இந்த ஒலி. எக்கணத்தில் அது மாறுகிறது உயிர்கொல்லும் இசையாய். செவிச்சவ்வுகளின் நுண்துளைகளை அது எவ்வாறு கண்டடைகிறது. அவ்வாறே நான் உன்னைக் கண்டடைந்தேன்.

நீண்ட தோள்சாயும் யாழின் தந்திக்கம்பிகளில் இருந்து வெளியேறும் ஒலியென நான் வெளியேறுகிறேன். துயரம் தோய்ந்த இசைத்துணுக்குகளாய் மாற்றிப் பரவச்செய்கிறது உன் மௌனம். ரீங்காரம் அடங்கி மௌனப்பூக்களாய் உதிர்கிறேன். அவ்வாறே நீ என்னைக் கண்டடைந்தாய்.

மௌனப்பூ நான்.

செவிகொள் இசை நீ.

பழியற்ற சொல் பாவம் நான்.

ஒளியின் ஒலி நீ.

பச்சைவாடை வீசும் மாந்தோப்பிலிருந்து வெளியேறிப் பறக்கும் கிளிகளின் அச்சமும் நாணமும் நாமறியாது. அக்கிளிகளின் சப்தம் வானறியாதது. பார். பறவைகளுக்குத்தான் சிறகு தேவை பறக்க. நமக்கு நம் சொற்கள் போதும் வானேறிப் பறக்க.

***********************

விக்ருதி

தையில் பிறந்த இந்த ஆண்டை மறுபடிக்கும் சித்திரையில் பிறக்கவைக்கிறது நடைமுறை. தவிரவும் வருடத்திற்கு ஐந்தாறு வருடப்பிறப்பை கொண்டாடுகிறது சுதந்திர இந்தியா. என் வீட்டில் தெலுங்கு பேசுகிறேன். எந்த பரம்பரையில் இருந்து வந்தேனென்று தெரியவில்லை. இருந்தாலும் தமிழன். கனவும் சிந்தனையும் தமிழில்தான் நிகழ்கிறது என்பதே நான் தமிழன் என்பதற்கு அடையாளமென கொள்கிறேன்.

எனவே,

இன்று 14.04.2010 புதன் கிழமை, காலை 06.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அம்மாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீனராசி, மேஷ லக்னத்தில் நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்ப ராசியில் புதன் ஹோரையில் வைதி ருதி நாம யோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்ச பட்சியில் மயில் துயில் கொள்ளும் நேரத்தில் புதன் தசை ராகு புத்தியில் (ங்கொய்யால ....) பிறந்ததாக சொல்லப்படும் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது விக்ருதி வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்.

இன்று தினமணி இதழில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதின் விக்ருதி பற்றி ஒரு சுவாரஷ்யமான கட்டுரை இருக்கிறது.

அனேகமாக அடுத்த விக்ருதியில் சீனா நம்மை இலங்கை போர்தளத்திளிருந்து நம்மை தாக்கலாம். தமிழ் கடற்கரை மிக நீண்ட வருடங்களுக்குப்பின் போர்கோலம் பூணலாம். நம் பேரப்பிள்ளைகள் ஜாதிகள் மறந்து தமிழன் என்கிற உணர்வுடன் வேறுவழியில்லாமல் தமது முன்னோர்களின் வீரத்தை(!) மெச்சியவண்ணம் போரில் வீரமரணம் அடையலாம். லாம்...லாம்... லாம்..ம்ம்.ம்ம்.

*************************

***********************************

11 April, 2010

grape wine..

போலந்து பிரசிடென்ட் செத்ததுக்கு ஒரு அஞ்சலி. ************************************************************************************* ஏப்ரல் பத்து. வர்த்தகம் சம்பந்தமாக இந்தியா எதோ ஒரு தினத்தை கொண்டாடியது. யாருக்கு பெருமை. நியூஸ் சானல் பார்த்தவர்களுக்கே வெளிச்சம். அது சரி, வர்த்தகம் ? ****************************************************************************** பார்த்திபன், வசந்த பாலர்கள் மேல் என்கிறான். வேட்டைக்காரன், சுறா போன்றவர்களை விட. நான் இருவர்களுக்கும் தராசில் இரண்டு தட்டுகளையும் ஒருவருக்கொன்றாய் தருகிறேன். இரண்டும் சமம் காட்டுகின்றன. ************************************************************************** ரௌத்திரம் பழகு. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். bull shit! ******************************************************************************
பிச்சை பாத்திரம். நிறைய பணம். ஒருவன் வந்தான். பிச்சைக்காரனை ஓங்கி ஒரு அப்பு. பாத்திரத்தில் இருந்த பணத்தை எடுத்து பக்கத்தில் இருந்த நான்கு பேரின் பாத்திரத்தில் பகிர்ந்து அளிக்கிறான்.

இது சரியா... தப்பா..

நாலு பேருக்கு நல்லது செஞ்சா ............. மாப்ள.. வக்காளி ஏதும் தப்பில்ல. அந்த

நாலு பேரைத் தவிர ஒரு பய உருப்படியா இருக்கக்கூடாது.

பஸ்ஸில் வரும் போது பக்கத்து சீட்டு பையன் அவன் அம்மாவிடம் சொன்ன கடி ஜோக்!

இதை நிறுவன பாடத்திட்டம் 'grape wine.. ' என்று பெயர் வைக்கிறது.

*****************************

காதலின் பொன் வீதியில்.. நானொரு பண் பாடினேன்.. பண்ணோடு ஒருத்தி வந்தாள்..

ஓவிய நண்பனுக்கு கிடைத்து விட்டாள்.. !

*************************************

இனிய நண்பன் வசு மீண்டும் தனதான கவிதைகளை எழுதத்தொடங்கி விட்டான். மகிழ்ச்சி.

இனிய முத்தம் ஒன்று.

************************************

10 April, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 11

கொட்டைப்பாக்கு வண்ணத்தில் எண்ணெய் தடவியது போல பளபளப்புடன் ஒரு ஏறும்புண்ணி சிறு புதரிலிருந்து வெளியேறி நிதானமாக நெருஞ்சிகளுக்குள் நடந்து சற்று பெரிய புதருக்குள் நுழைவதுவரை மார்கழர் அந்த புங்கன் பின்னால் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதை சற்று சிதைவுற்றிப்பதாக பட்டது. மனிதர்கள் அதிகம் உபயோகப்படுத்தாத நிலம். நல்ல கரும்பாறையொன்றின் மீது ஏறி நின்று பார்த்தேன். பெரும் நிலவெளி. குன்றுகளால் நிரம்பியிருந்தது. மார்கழர் இல்லா விட்டால் திரும்பவும் அவர் வீடு காணமுடியாது. எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நான் ஏன் என் போக்கில் போகமுடியவில்லை. இந்த மூன்று நாளாய் இந்தக்கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை. பின் தலையின் உள்ளுக்குள் ஒருவகையான சூட்டை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. உண்மையில் நான் என் திருமணத்துக்கு பயந்துதான் வெளியேறினேனா. அல்லிக்கன்னி ஞாபகம் எழும்பியது. மார்கழி அகலில் அவளைப் பார்த்தபோது நிலைமறந்த ஞாபகம். தங்கவார்ப்பு. பின் ஏன் வெளியேறினேன். ஒரு கணம் முடிவுசெய்து மேற்கு நோக்கிய பயணத்தை தொடங்க என்ன விகல்பம்.

போகலாம் சென்னி. மர்கழர் தோள் தொட்டார். அப்பாறை மீது அவர் ஏறியது எனக்கு மெல்லிய வியப்பளித்தது. அது சற்று முரடானது. உறுதியான ஊசிமுனைக் கற்களை நிரப்பியிருந்தது. என் எண்ணத்தை புரிந்து கொண்டது போல அவர் சொன்னார். பழக்கம் இளைஞா.. என் வாழ் நாளில் நாள் தொடர்ந்து பயின்று வரும் விசயங்களில் இதுவும் ஒன்று. தொடந்த பயிற்சி. இதுதான் துல்லியத்திற்கு திறவுகோல். துல்லியம் வாய்க்கப்பெற்றால் என்ன நேரும் தெரியுமா. நான் உடனடியாக பதில் சொல்லவில்லை. அறிந்த கேள்வி. தெரிந்த பதில். ஆனாலும் உடனடியாக ஏதும் சொல்லவில்லை. தொடர் பயிற்சி என்பதன் குழந்தை துல்லியம். இந்த எளிய அறிவுத்தேட்டம்தான் அனைத்திற்கும் முதல் அடி. சொல் சென்னி, துல்லியம் பெற்றவன் என்ன ஆவான். இலக்கை அடைவான் என்றேன். நன்று சொன்னாய். ஆம் துல்லியம் பெற்றவன் இலக்கு அடைவான். ஆனால் சென்னி நான் சொல்லுகிறேன். இன்று எனது முதல் பாடம் என இதைக்கொள். சென்னி, துல்லியம் பெற்றவன் இலக்கை வெறுப்பான். எனக்கு புரியவில்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வம் அந்த வாக்கியத்துக்குள் என்னை செலுத்தியது. பிறகு எதற்கு பயிற்சி. இலக்கை அடையத்தான். அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இலக்கை அடைய இலக்கின் மேல் விருப்பமோ வெறுப்போ அடையத்தேவயில்லை. அடையப்படவே இலக்குகள் உருவாகின்றது. அவ்வளவுதான். விருப்பமில்லாத இலக்கை அடைந்ந்து என்ன பயன். அந்த விருப்பத்தை பயிற்சி மட்டுப்படுத்தும். என் வினாவிற்கு இதுவல்ல பதில். இரண்டு வாக்கியங்களுக்குள் இருக்கும் தொடர்பை கண்டுகொள்வதுதான் ஒரு சாத்திரக்காரனின் ஆதாரத்தேவை.

முதல் ஜாமத்தின் மத்தியில் வெளிச்சம் மிகவும் குறைவுற்றிருந்தது. பறவைகள் கூடையும் கீச்சொலிகள். மிகத்தூரத்தில் ஒரு பிளிறல் கேட்டது. விடியலில் வீடு திரும்புவோமா என்றேன். இல்லை. நாம் வீடு வர இன்னும் பதிமூன்று நாட்களாகும். இன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் உனக்கான முதல் பௌர்ணமி. சித்திரையின் திங்கள் உன் குடுப்பினை. வளர் பிறை பதினைந்தும் நாம் பயணத்தில் இருப்போம். தேயும் பிறை பதினைந்தும் நாம் வானம் பார்ப்போம். நட சென்னி. முழு இரவும் நட. பகல் முழுதும் உறங்கு. உணவு. சேகரிப்போம். உணவு சேகரிக்கும் வித்தை மூச்சுவிடுவதுபோல இயல்பாய் கைவரச் செய்கிறேன். நிதானமாய் நட. உறுதியையும் விடாமல்.

***************************

கணமற்றதொரு கணம்: குறுமுனி பாடுராம்ப்பா.. பெரிய தாடிப்பா... தரையில கெடக்குது.. பாடுராம்ப்பா. உம்பாட்டன் கிட்ட போய் பாடு குள்ளா.. அப்பன் அதட்டியதும் அடங்கியது பாட்டு.

************************

07 April, 2010

நுண் வன்முறை


தெருவை கடக்கும்போது நாம் எவற்றையெல்லாம் கடக்கிறோம். நமது மூளையின் - அவரவர்மூளையின் - அனுபவ சேகரிப்புகளில் இருந்து அத்தெருவில் நிகழும் நிகழ்வுகளை நமது மனம் உள்வாங்கும். சில நிகழ்வுகள் நம்மை நெகிழச் செய்யும். சில நிகழ்வுகள் நம்மை அருவருக்கவைக்கும். சிலநிகழ்வுகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். சில நிகழ்வுகள் எரிச்சலுணர்வு அளிக்கும். சில நிகழ்வுகள் நமது பால்யத்தை மீட்டுக்கும். சில நிகழ்வுகள் நம்மை கோபம் கொள்ளச்செய்யும். இப்படி பல வகைமைகளுக்கு நம்மை இழுத்தடித்து விடும் ஒரு நெரிசல் மிகுந்த கடைவீதி.

அனாலும் ஒரு மனிதனுக்கு இவ்வகையான பலதரப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்படுத்த ஒரு தெரு தான் வேண்டுமென்பதில்லை. அறையில் அமர்திருக்கும் போது கேட்கக்கிடைக்கும் எதிர்பாராத ஒரு ஒலித்துணுக்கு போதும்.

வசந்தபாலனை குறைசொல்ல முடியாது. யதார்த்த சினிமா என்கிற மண்ணாங்கட்டி ட்ரெண்டில் தமிழ் சினிமா ஜந்துக்கள் ஊறித்திளையும் போது. அங்காடிதெரு அப்பிடியான ஒரு ட்ரென்டெட் சினிமா. விசு, வி.சேகர் போன்றவர்களின் படங்கள் ஞாபகம் இருக்கிறதா. அவ்வகைப்படங்களின் டிஜிடல் வண்ணம்தான் இவ்வகைப்படங்கள். தொழில்நுட்பம் கூட்டப்பட்ட, நம்பகத்தன்மை கூட்டப்பட்ட கணினி மய ஓரங்க நாடகங்கள் இவை. ஜாதகாரன் பொய் சொல்லக்கூடும். கணினி ஜாதகம் பொய் சொல்லாதது!

தெரு. நின்றுபார்த்தால் தெரிவதெல்லாம் யதார்த்தம் என்று சொல்லமுடியுமா. சரவணா ஸ்டோர்ஸ் - மன்னிக்கவும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் பற்றிய எதிர்மறையான திரைக்கத்திக்கு - மறுபடியும் மன்னிக்கவும் - திரைக்கதைக்கு அன்னாச்சிகளிடமிருந்து தனிக்கருத்து ஏதும் வரவில்லைஎன்றால், இங்கு யதார்த்தம் என்றால் என்ன என்கிற என்குழப்பம் என்னோடு போகட்டும்.

இனிய புனைவெழுத்தாளர் திரு ஜெயமோகனின் உரையாடல் யதார்த்தத்தின் உச்சம் என்று சொல்லும் நண்பர்களுக்கு, மறைந்த வசனகர்த்தா எ.எல். நாராயணனின் (பெயர் சரியா? 'வாழ்வேமாயம்' போன்ற படங்களில் எழுதியவர்) வசனங்களையும் மறையாத இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். நிச்சயம் திரு ஜெயமோகனின் வசனம் சிறப்பான ஒன்று. அகில உலகமும் மேற்சொல்லும் "யாருன்னு கேட்டா... சிரிச்சேன்" உரையாடல் எனக்கும் பிடிக்கும்.

இப்படியான நச்சென்ற வசனங்களின் பட்டியலை தொடர்பதிவாக எழுத முதலில் ஜெகன்னாதனை அழைக்கிறேன். அப்புறம் க.சீ.சிவக்குமாரையும் அழைக்கிறேன்.

எனக்கு பிடித்த மூன்று:

ஏம்மா.. ஒத்தபுள்ளையோட நிறுத்திட்டயேம்மா. (மணிரத்தினம் - தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து ஒரு பெண்)

ம்ம்ம்.. மெண்டல் னு எழுதிக்குடுங்க. (காவேரி தொடரில் பாஸ்கர் சக்தி)

ஓர்மை உண்டோ ஈமுகம் - சுரேஷ்கோபி தனது படங்களில் அடிக்கடி உபயோகிப்பார்.!

எதையோ எழுதப்போய் எங்கேயோ வந்து நிற்கிறேன்.

ஆக..
வன்முறையின் பல்வேறு வெளிப்பாடுகளில் நுண் வன்முறை என்பது ஒருவகை. கத்தியின்றி குருதி கசியச்செயும் வகை. நண்பர்கள் நல்ல சினிமா என்று நம்பிவேறு தொலைக்கிறார்கள்.நம்பிக்கையை குழைப்பது அல்ல என் பணி. எனவே யதார்த்தம் ரங்கநாதன் தெருவில் ஒவ்வொரு பின் சுவர்களிலும் துப்பப் பட்ட எச்சில் கறைகள் போல கலவையான மற்றும் ரகளையான நிறங்களில் அப்பிக்கிடக்கிறது என்பத்தை நான் நம்புகிறேன்.

மற்றபடிக்கு, மற்றுமொரு நல்ல திரைப்படத்தை தமிழ்மக்களின் பார்வைக்கு வைத்த வசந்தபாலனுக்கு நன்றிகள்.
*************************
முதல் டிஸ்கி:
எதையாவது ஒன்ன உருப்பிடியா சொல்றா கோந்துத்தலையா .. என்று கூவும் நண்பர்களே: உருப்படியாதான் ஆரம்பிச்சேன்.. ஆனா .............. ஆ ........!
**********************

06 April, 2010

உலைக்கலன்


உங்களுக்குத்தெரியுமா நாம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று. நம் சாலைகள் திருத்திய கணித சமன்பாடுகளால் துல்லியமாக விரவப்பட்டிருக்கிறதென. தினமும் கிலோரின் கலந்த நிலத்தடி நீரால் அச்சாலை தூய்மை படுத்தப்படுகிறதென. மேடுபள்ளமற்ற குறுக்கில் மலைப்பாதைஎன்றாலும் கணவாய்துளைத்து மிக நேர்த்தியாக ஜல்லிகளால் மெத்தபடுத்தப்பட்டதென. வளைவுகளை சகிக்காதாத நேர் பாதையென. குறிப்பிட்ட காலாவதிநாளைக்கொண்டதென. திரும்ப வியலாத ஒற்றைப்பாதை என. உங்களுக்குத்தெரியுமா எல்லா சாலைகளும் நமக்கு வலது புறத்தில் அமைக்கப் பட்டிருக்கிறதென.

********
உங்களுக்குத் தெரியுமா சூளைக்குள் மணல்கட்டிகளைத்தவிர உயிர்ப்பொருள்கள் வாழமுடியாதென. சுவாசிக்க ஏதுவான சூழல் அதனுள் இல்லை என. மணற்துகள் கூட்டமாய் அடைக்கப்பட்ட இடத்தில் சூளை பழுதாகுமென. நிறுத்தப்படாமல் நெருப்பேறும் சூளையில் வேகும் மண்கட்டிகள் உபயோகம் தராதென.

**************

உங்களுக்குத்தெரியுமா தலைப்பென காணப் படுபவைகளுக்குள் நிலம் நிறைத்திருக்கிறதென. அதில் மனிதர்கள் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறார்களென.
அவர்கள் தினமும் தினசரி படித்து தங்கள் அறங்களை தங்களது சுயத்தில் உரசிப்பார்த்து நிறைவுடன் வெந்து கழிக்கிறார்கள் என.

***************************
உங்களுக்குத்தெரியுமா ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு கடவுளும் ஒழுக்கத்தின் மீதிருக்கும் தனதான காதலை தங்கள் உள்ளங்கையில் பொங்கச் செய்வார்களென.

*****************************



05 April, 2010

வேட்கையின் இலக்குகள்

வரிகளில் மறைத்த பொறிகளை இலகுவாக கண்டடைகிறாய் . அவமானம் பிடிங்கித்தின்கிறது . இலக்குகள் எல்லாவற்றிற்கும் உன் சாயலை கொண்டுவந்து பூசுகிறாய். நான் எதை வீழ்த்தினாலும் நீ விழுவது தற்செயல் அல்ல என்பதை சொல்கிறது உன் நங்கூரத்திலகம். சாட்டைகளையும் குருவாள்களையும் அடுக்கிய பெருஞ்சிப்பமொன்றை சுமந்தலையும் என்னிடம் உன் நீண்ட மெல்லிய விரலின் நகங்களை பூவாக்கி கொய்யச்சொல்கிறாய். மரணம் என்பது நெடிய வாழ்வின் தடம். அன்பு தடவிய என் அம்புகளுக்கு பலியாவது இலக்குகளின் கடன்.

**********************************

யாசிப்பிற்கு பிடிபடாதது நமதான வேட்கை. பிச்சைபொருளும் அன்று. பசிய இலையொத்த பறவைகளின் அலகில் சிக்கிக்கொள்ளும் விதையுள் தவறிய பெருவிருட்சம் அது. விசும்பில் கிளைபரப்பி நினைவுகளில் வேர்கொள்ளும் ரணம். முரணாக நீயும் நானும் கேட்டலையும் அந்தக தாகத்தை கையில் பிடித்தபடிக்கு கானகம் அலையும் சில்வண்டுச்சிறுமியை பின்தொடர ஏதுவான வாகனம் ஒன்று மூன்றாம் இரவின் நிறத்தில் திரியும் எருது. நீலாற்றின் கரையில் கடைசியாய் அச்சிறுமியை கண்டடையும் போது கையில் திணித்தாள் ஒரு சுளை வெயிலை.

**********************************

01 April, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 10


வீடு வந்துவிட்டாயா. மார்கழர் கேட்ட கேள்வி எனக்கு பிடிபடவில்லை. எரிமீனின் தினவு தீரவில்லை இளைஞா.. உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. உன் பூர்வம் அப்படி. அபூர்வத்தின் கிரகச்செர்க்கை. வா என்னுடன், பேசலாம் நாம். மறுத்துப்பேச தோன்றவில்லை. ஆனாலும் பயம் தாண்டிய மனத்தூண்டல் எனக்குள் அலைக்கழித்தது. அவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார். இன்றிலிருந்து மூன்றாம் பௌர்ணமி வரை நீ என்னுடன் தங்கு. உனக்குச்சேரவேண்டியத்தை அதற்குள் நான் கொடுத்துவிடுகிறேன். உன் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா. நீ அவ்வளவு எளியவனும் இல்லை. எத்தனை நாள் ஆயிற்று. நான் அவரை பார்த்தேன். மெலிந்த தேகம். உடலுறுதி குழையத்தொடங்கியிருந்தது. நீண்ட கேசம். நரையில்லை. முகம் திருத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது. நாசிக்கு இடப்புறம் கருமிளகு அளவில் ஒரு மரு இருந்தது. நாசிக்குக் கீழிருந்த முடிக்கற்றைக்கு அது ஒரு சிறிய தலைப்பாகை போலிருந்தது. இடைக்கச்சு மட்டுமிருந்தது. உடலில் எந்த திரவியப்பூச்சும் இல்லை. உயரமான உடம்பில் நீண்டிருந்த கைகளும் கால்களும் ஆலமரவிழுதுகளை நினைவூட்டின. நிதானமான நடை என்றாலும் ஒவ்வொரு எட்டும் இரண்டரை அடிக்கு மேல் போயின. நான் அவரை பின்தொடர சற்று வேகம் காட்டவேண்டியதை தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு செருமலை வெளியேற்றினேன். சொல் எப்படி வந்தாய் மாந்தைக்கு. அதற்குமுன் உன்னை எப்படி விளிப்பது.
இந்த குரல் ஒரு கட்டளைப்போல் என்னுள் இறங்கியது. உடல் நடுக்கத்தை உடனடியாக சீராக்கியது. ஒருவித இளைப்பாறல் மனநிலையை ஏற்படுத்தியது போன்றதொரு சூழலில் நான் சொல்லத்தொடங்கினேன். எல்லாவற்றையும்.

கணமற்றதொரு கணம். வாசப்படியில் உக்காராதே என்றால் கேட்க மாட்டாயா. எத்தனைமுறை சொல்வது.

சென்னி என்று என்னை விளிப்பர். எனக்கு பூழிநாடு. அய்யன் எருது காப்போன். அம்மை திருமேனி. பால்காரி. கீழ்மலை ஒட்டிய தயாபுரி கிராமம் என்னை வளர்த்தது. கூடவே வளர்ந்தது மூவேழு எருதுகள். மணம் பேசினார்கள். பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டேன். மர்கழரின் சிரிப்பொலி கேட்டு நிறுத்தினேன். பங்குனி முதல்நாளில் உச்சியில் வெளியேறினாயாக்கும்.. சிரிப்பில் ஏலனமில்லை. துயரமிருந்தது. அவள் பெயர் என்ன. யார் பெயர். உன்னை மணம் முடிக்கப்போகும் பெண். நான் அவளை மணம் முடிக்கப்போவதில்லை. யாரை. மேருநடையாரின் புதல்வி அல்லிக்கன்னியை. ஹா..ம்ம் .. இது வெகுநீண்ட கதைதான். கேள் இன்று முதல் மூன்று திங்களுக்கு நான் உன் குரு. ஆனால் என்னக்கு நீ மட்டும்தான் மோட்சம். எனது வேள்விக்கு பதில்நீ. உவகை பொங்குகிறது. உன் விதி உன்னை வழிநடத்தும். என் பாரம் இறங்கியதும் நான் சென்று விடுவேன். இனி தூக்கிச்சுமப்பது உன் வினைப்பயன். பயம் கொல்லாதே. போகப்போக விளக்குகிறேன். அவளைப்பார்த்தாயா. இல்லை. ஆனால் அவள் உன்னைப்பார்த்தாள். இல்லை, அவள் என்னைப் பார்த்ததில்லை. இளைஞா.. சென்னி..என்றே இனி அழைக்கிறேன். நான் சொன்னது நல்லினியை. கன்னியை சிலகாலம் நீ மற. அவளை உன்னை கண்டடைவாள் ஒரு சிறு புயல் போல.

நான் மர்கழன். கூடல் என் ஊர். கூடலூர்கிழார் என்கிற கவிஞன். தொழில் வான சாஸ்த்திரம். என் கணிப்பில் இறந்தவந்தான் இன்று சிதையேறிய அத்துவன். எனது வாழ்த்து மீறி வினை வெற்றிகொண்டது அவனை. என் கணிப்பின் மிச்சம் நான் எவரிடத்திலும் சொல்லவியலாது. இவ்வுலகத்தில் அது எனக்கும் நான் சொன்னபின் நல்லினிக்கும் மட்டுமே ஆன ரகஸ்யம். ரகஷ்யத்தின் மூலப்புள்ளி நீ. சென்னி, இன்றிரவு என் இருப்பிடத்தில் வந்து ஆழ்ந்த உறக்கம் கொள். ஏனென்றால் நாளை முதல் மூன்றாம் பௌர்ணமி வரை உனக்கு இரவு தூக்கம் கிடையாது. வானத்தைக்கற்றுகொள்ள இரவுதான் மிகச்சரியான காலம்.

வான சாத்திரம் என் வித்தை. அதைத்தான் நான் உன்னுள் இறக்கப்போகிறேன்.

******************

தொடரும்..

***************

குள்ளச்சாத்தான்


UTV- world movies - ல் இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிவதற்குள் அழுகை கோபம் சிரிப்பு பொறாமை சோகம் தாபம் இன்னும் என்னென்ன உணர்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டும்? படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன? இத்தனைக்கும் படம் முழுவதும் fast farward - ல் இருக்கும். படத்தில் வசனங்கள் வேறு கிடையாது. படத்தின் விமர்சனங்களை எதையும் படிக்காதீர்கள் படம் பார்க்கும் வரை.



*************************

முட்டாள்

தினமும் சுமக்கமுடியாத அளவுக்கு முட்டாளாகிக்கொண்டிருக்கிறேன், இந்த வள்ளலில் என்னை ஒரு விட்டுபோன நண்பர் குறுஞ்செய்தி கொடுத்து முட்டாள் பட்டத்தை உறுதிசெய்தார். முட்டாளாய் இருப்பது துயரமில்லை. முட்டாள் என்று தெரிந்தே இருப்பதுதான் துயரம். வாழ்க என் துயரம். எனவே.. நானொரு முட்டாளுங்க!
******************
பசங்களுக்கு வருட முழுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் தங்களது வாரிசுகளின் சேட்டைகளை பெருமை பொங்க பதிந்து தள்ளுகிறார்கள்! நல்லதுதான். புத்திர பாசம். ஜெயமோகன் தனது மகனின் அருமைகளை ஒரு அற்புதமான தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எழுதி தள்ளுகிறார். படிக்கிறவர்கள் எம்பையனும் அல்லது எம்பொண்ணும் இருக்கே.. ஹ்ம்ம்..என்கிற அளவுக்கு காதுகளில் புகை கிளப்புகிறது அவரது ஹிப்னாடிச வரிகள். உண்மை எந்த பொந்தில் அரவங்களுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறதோ(தெரிந்தே தான் 'றை' போட்டேன் மக்கா). என் புத்திரன் விழுந்து விழுந்து அறிவியல் படித்து தேர்வுக்கூடத்துக்கு போயிருக்கிறான். வினாத்தாளில் படித்த ஒன்றையும் காணவில்லை. பத்து நிமிடம் இது அறிவியல் பாட வினாத்தாள் இல்லை என முடிவுசெய்து மேடத்தை அணுகி கேட்க. ஆங்கில இலக்கியத்துக்கு இதுதான் வினாத்தாள் என்றிருக்கிறார்கள். இன்னைக்கு என்ன பரீட்சை என்று கேட்டு விட்டு பொறுப்பை விதியின் மீது போட்டு எழுதிவிட்டு வந்திருக்கிறான்! கேட்க சந்தோசமாய் இருந்தது. எம்பையனாச்சே..! விழுந்து விழுந்து சிரித்ததை தான் என் மனைவி பொறுக்கவில்லை.
******************
சொல்லுவதெல்லாம் பொய் - ல் வேறொரு கதவை திறந்திருக்கிறேன். முழுக்க எனது ஞாபகத்துனுக்கில் கிளம்பிவரும் வரலாற்று தகவல்களையே கற்பனை செய்து தொடங்கியுள்ளேன். வரலாற்றுப்பிழை என்று ஏதேனும் தென்பட்டால் அதை பிழையின் வரலாறு எனக்கொள்ளவும். நான் சொல்லவந்தது இதில் ஏதாவது பிறமொழி வார்த்தையோ சமகால வார்த்தையோ இடைபட்டு இம்சித்தால் சுட்டவும். நான் கற்பனை செய்யும் காலம் கி பி நூற்று ஐம்பத்து ஆறாம் வருடம்!

**************************
அனைவர்க்கும் முட்டாள்தின வாழ்த்துக்கள்.
***********************