01 April, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 10


வீடு வந்துவிட்டாயா. மார்கழர் கேட்ட கேள்வி எனக்கு பிடிபடவில்லை. எரிமீனின் தினவு தீரவில்லை இளைஞா.. உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. உன் பூர்வம் அப்படி. அபூர்வத்தின் கிரகச்செர்க்கை. வா என்னுடன், பேசலாம் நாம். மறுத்துப்பேச தோன்றவில்லை. ஆனாலும் பயம் தாண்டிய மனத்தூண்டல் எனக்குள் அலைக்கழித்தது. அவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார். இன்றிலிருந்து மூன்றாம் பௌர்ணமி வரை நீ என்னுடன் தங்கு. உனக்குச்சேரவேண்டியத்தை அதற்குள் நான் கொடுத்துவிடுகிறேன். உன் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா. நீ அவ்வளவு எளியவனும் இல்லை. எத்தனை நாள் ஆயிற்று. நான் அவரை பார்த்தேன். மெலிந்த தேகம். உடலுறுதி குழையத்தொடங்கியிருந்தது. நீண்ட கேசம். நரையில்லை. முகம் திருத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது. நாசிக்கு இடப்புறம் கருமிளகு அளவில் ஒரு மரு இருந்தது. நாசிக்குக் கீழிருந்த முடிக்கற்றைக்கு அது ஒரு சிறிய தலைப்பாகை போலிருந்தது. இடைக்கச்சு மட்டுமிருந்தது. உடலில் எந்த திரவியப்பூச்சும் இல்லை. உயரமான உடம்பில் நீண்டிருந்த கைகளும் கால்களும் ஆலமரவிழுதுகளை நினைவூட்டின. நிதானமான நடை என்றாலும் ஒவ்வொரு எட்டும் இரண்டரை அடிக்கு மேல் போயின. நான் அவரை பின்தொடர சற்று வேகம் காட்டவேண்டியதை தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு செருமலை வெளியேற்றினேன். சொல் எப்படி வந்தாய் மாந்தைக்கு. அதற்குமுன் உன்னை எப்படி விளிப்பது.
இந்த குரல் ஒரு கட்டளைப்போல் என்னுள் இறங்கியது. உடல் நடுக்கத்தை உடனடியாக சீராக்கியது. ஒருவித இளைப்பாறல் மனநிலையை ஏற்படுத்தியது போன்றதொரு சூழலில் நான் சொல்லத்தொடங்கினேன். எல்லாவற்றையும்.

கணமற்றதொரு கணம். வாசப்படியில் உக்காராதே என்றால் கேட்க மாட்டாயா. எத்தனைமுறை சொல்வது.

சென்னி என்று என்னை விளிப்பர். எனக்கு பூழிநாடு. அய்யன் எருது காப்போன். அம்மை திருமேனி. பால்காரி. கீழ்மலை ஒட்டிய தயாபுரி கிராமம் என்னை வளர்த்தது. கூடவே வளர்ந்தது மூவேழு எருதுகள். மணம் பேசினார்கள். பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டேன். மர்கழரின் சிரிப்பொலி கேட்டு நிறுத்தினேன். பங்குனி முதல்நாளில் உச்சியில் வெளியேறினாயாக்கும்.. சிரிப்பில் ஏலனமில்லை. துயரமிருந்தது. அவள் பெயர் என்ன. யார் பெயர். உன்னை மணம் முடிக்கப்போகும் பெண். நான் அவளை மணம் முடிக்கப்போவதில்லை. யாரை. மேருநடையாரின் புதல்வி அல்லிக்கன்னியை. ஹா..ம்ம் .. இது வெகுநீண்ட கதைதான். கேள் இன்று முதல் மூன்று திங்களுக்கு நான் உன் குரு. ஆனால் என்னக்கு நீ மட்டும்தான் மோட்சம். எனது வேள்விக்கு பதில்நீ. உவகை பொங்குகிறது. உன் விதி உன்னை வழிநடத்தும். என் பாரம் இறங்கியதும் நான் சென்று விடுவேன். இனி தூக்கிச்சுமப்பது உன் வினைப்பயன். பயம் கொல்லாதே. போகப்போக விளக்குகிறேன். அவளைப்பார்த்தாயா. இல்லை. ஆனால் அவள் உன்னைப்பார்த்தாள். இல்லை, அவள் என்னைப் பார்த்ததில்லை. இளைஞா.. சென்னி..என்றே இனி அழைக்கிறேன். நான் சொன்னது நல்லினியை. கன்னியை சிலகாலம் நீ மற. அவளை உன்னை கண்டடைவாள் ஒரு சிறு புயல் போல.

நான் மர்கழன். கூடல் என் ஊர். கூடலூர்கிழார் என்கிற கவிஞன். தொழில் வான சாஸ்த்திரம். என் கணிப்பில் இறந்தவந்தான் இன்று சிதையேறிய அத்துவன். எனது வாழ்த்து மீறி வினை வெற்றிகொண்டது அவனை. என் கணிப்பின் மிச்சம் நான் எவரிடத்திலும் சொல்லவியலாது. இவ்வுலகத்தில் அது எனக்கும் நான் சொன்னபின் நல்லினிக்கும் மட்டுமே ஆன ரகஸ்யம். ரகஷ்யத்தின் மூலப்புள்ளி நீ. சென்னி, இன்றிரவு என் இருப்பிடத்தில் வந்து ஆழ்ந்த உறக்கம் கொள். ஏனென்றால் நாளை முதல் மூன்றாம் பௌர்ணமி வரை உனக்கு இரவு தூக்கம் கிடையாது. வானத்தைக்கற்றுகொள்ள இரவுதான் மிகச்சரியான காலம்.

வான சாத்திரம் என் வித்தை. அதைத்தான் நான் உன்னுள் இறக்கப்போகிறேன்.

******************

தொடரும்..

***************

No comments: