10 April, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 11

கொட்டைப்பாக்கு வண்ணத்தில் எண்ணெய் தடவியது போல பளபளப்புடன் ஒரு ஏறும்புண்ணி சிறு புதரிலிருந்து வெளியேறி நிதானமாக நெருஞ்சிகளுக்குள் நடந்து சற்று பெரிய புதருக்குள் நுழைவதுவரை மார்கழர் அந்த புங்கன் பின்னால் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதை சற்று சிதைவுற்றிப்பதாக பட்டது. மனிதர்கள் அதிகம் உபயோகப்படுத்தாத நிலம். நல்ல கரும்பாறையொன்றின் மீது ஏறி நின்று பார்த்தேன். பெரும் நிலவெளி. குன்றுகளால் நிரம்பியிருந்தது. மார்கழர் இல்லா விட்டால் திரும்பவும் அவர் வீடு காணமுடியாது. எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நான் ஏன் என் போக்கில் போகமுடியவில்லை. இந்த மூன்று நாளாய் இந்தக்கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை. பின் தலையின் உள்ளுக்குள் ஒருவகையான சூட்டை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. உண்மையில் நான் என் திருமணத்துக்கு பயந்துதான் வெளியேறினேனா. அல்லிக்கன்னி ஞாபகம் எழும்பியது. மார்கழி அகலில் அவளைப் பார்த்தபோது நிலைமறந்த ஞாபகம். தங்கவார்ப்பு. பின் ஏன் வெளியேறினேன். ஒரு கணம் முடிவுசெய்து மேற்கு நோக்கிய பயணத்தை தொடங்க என்ன விகல்பம்.

போகலாம் சென்னி. மர்கழர் தோள் தொட்டார். அப்பாறை மீது அவர் ஏறியது எனக்கு மெல்லிய வியப்பளித்தது. அது சற்று முரடானது. உறுதியான ஊசிமுனைக் கற்களை நிரப்பியிருந்தது. என் எண்ணத்தை புரிந்து கொண்டது போல அவர் சொன்னார். பழக்கம் இளைஞா.. என் வாழ் நாளில் நாள் தொடர்ந்து பயின்று வரும் விசயங்களில் இதுவும் ஒன்று. தொடந்த பயிற்சி. இதுதான் துல்லியத்திற்கு திறவுகோல். துல்லியம் வாய்க்கப்பெற்றால் என்ன நேரும் தெரியுமா. நான் உடனடியாக பதில் சொல்லவில்லை. அறிந்த கேள்வி. தெரிந்த பதில். ஆனாலும் உடனடியாக ஏதும் சொல்லவில்லை. தொடர் பயிற்சி என்பதன் குழந்தை துல்லியம். இந்த எளிய அறிவுத்தேட்டம்தான் அனைத்திற்கும் முதல் அடி. சொல் சென்னி, துல்லியம் பெற்றவன் என்ன ஆவான். இலக்கை அடைவான் என்றேன். நன்று சொன்னாய். ஆம் துல்லியம் பெற்றவன் இலக்கு அடைவான். ஆனால் சென்னி நான் சொல்லுகிறேன். இன்று எனது முதல் பாடம் என இதைக்கொள். சென்னி, துல்லியம் பெற்றவன் இலக்கை வெறுப்பான். எனக்கு புரியவில்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வம் அந்த வாக்கியத்துக்குள் என்னை செலுத்தியது. பிறகு எதற்கு பயிற்சி. இலக்கை அடையத்தான். அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இலக்கை அடைய இலக்கின் மேல் விருப்பமோ வெறுப்போ அடையத்தேவயில்லை. அடையப்படவே இலக்குகள் உருவாகின்றது. அவ்வளவுதான். விருப்பமில்லாத இலக்கை அடைந்ந்து என்ன பயன். அந்த விருப்பத்தை பயிற்சி மட்டுப்படுத்தும். என் வினாவிற்கு இதுவல்ல பதில். இரண்டு வாக்கியங்களுக்குள் இருக்கும் தொடர்பை கண்டுகொள்வதுதான் ஒரு சாத்திரக்காரனின் ஆதாரத்தேவை.

முதல் ஜாமத்தின் மத்தியில் வெளிச்சம் மிகவும் குறைவுற்றிருந்தது. பறவைகள் கூடையும் கீச்சொலிகள். மிகத்தூரத்தில் ஒரு பிளிறல் கேட்டது. விடியலில் வீடு திரும்புவோமா என்றேன். இல்லை. நாம் வீடு வர இன்னும் பதிமூன்று நாட்களாகும். இன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் உனக்கான முதல் பௌர்ணமி. சித்திரையின் திங்கள் உன் குடுப்பினை. வளர் பிறை பதினைந்தும் நாம் பயணத்தில் இருப்போம். தேயும் பிறை பதினைந்தும் நாம் வானம் பார்ப்போம். நட சென்னி. முழு இரவும் நட. பகல் முழுதும் உறங்கு. உணவு. சேகரிப்போம். உணவு சேகரிக்கும் வித்தை மூச்சுவிடுவதுபோல இயல்பாய் கைவரச் செய்கிறேன். நிதானமாய் நட. உறுதியையும் விடாமல்.

***************************

கணமற்றதொரு கணம்: குறுமுனி பாடுராம்ப்பா.. பெரிய தாடிப்பா... தரையில கெடக்குது.. பாடுராம்ப்பா. உம்பாட்டன் கிட்ட போய் பாடு குள்ளா.. அப்பன் அதட்டியதும் அடங்கியது பாட்டு.

************************

No comments: