கொற்றவை: // படைப்பு என்பதைப் பற்றி சில விவாதங்களை எழுப்பலாம் என்றிருக்கிறேன். எந்த உற்பத்தியும் / படைப்பும் மனிதர்களின் பயன்பாட்டுக்கு அவசியம் என்று கருதலாமா? அதுவல்லாத ஒன்று விரயமில்லையா? மேன்மைக் கலை, பொழுதுபோக்கு படைப்பு என்பதெல்லாம் யார், யாருக்காக தோற்றுவைத்தது? பணம் படைத்தவர்களுக்குத்தான் பொழுதுபோக்கு, மேன்மை ரசனை என்றவையெல்லாம் வள்ர்த்துக்கொள்ள சூழலும், பொருளாதாரமும் இருக்கிறது. பசியில் வாடுபவனுக்கு? பாட்டாளிக்கு? தொழிலாளிக்கு? சமூக புரட்சிகளுக்கு வித்திட்டு, நிலவும் சமச்சீரற்ற பொருளாதார சூழலை சரியாக சுட்டிக்காட்டியும், மாற்றுவழிகளை முன்னிறுத்தியும் சமுதாயப் பொறுப்புணர்வோடு சிந்தனையாளர்கள் பல்வித நெருக்கடிகளுக்கிடையே (உணவுக் கூட கிடைக்காமல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக கையாண்ட ஊடகம் படைப்பு/இலக்கியம்/எழுத்தென்பதாக கருதலாமா? அத்துறையை பொழுதுபோக்கிற்கும், networking ற்காகவும், அறிவைப் பறைசாற்றிக்கொள்ளவும், மொழி ஜாலங்களைக் காட்டிக் கவரவும் பயன்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்? வசீகர எழுத்தின்மூலம் கூட்டங்களை சேர்க்க நிறையப்பேர் எழுதுகிறார்கள்...அவைகளின் சமுதாயப் பயன் என்ன? கவிதை என்பதைக் கூட வெறும் மொழியியல் /அழகியல் tool ஆக கருதாமல், அதிலும் சமுதாயப் பிரச்சனைகளை எழுதியவர்களின் நோக்கம் / தேவை என்னவாக இருக்கும்? – what is the demand for creation?Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? எல்லாவற்றிலும் அறிவைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு இலைக்கியப் படைப்பு என்று நம்பி blog இல் Just like that எழுதப்படும் விஷயங்களை / கவிதைகளைப் படிப்பது நேர விரையம் ஆகாதா, அவர் ஏமாற்றத்திற்கு ’சும்மா எழுத்துக்கள்’ என்ன பதில் தரும்? //
மனிதப் பயன்பாட்டிற்கு உதவாத எதுவும் அழித்தொழிக்கப்படும் என்பதே வரலாறாக இருக்கிறது. எனவே படைப்பும் உற்பத்தியும் பயனில்லை என்றால் குப்பைக்கூடையில் கூட அதற்கு இடமில்லை. ஒன்றை நான் நம்புகிறேன். கலை என்பது படைப்பூக்கத்தின் விளைபொருள், அது படைப்பாளிக்கே உரியது. அதில் வர்க்கம் என்பது இல்லை என்பது என் நிலை. முதலாளி தொழிலாளி ஏழை பணக்காரன் பசியோடிருப்பவன் உணவை குப்பையில் போடுபவன் என்கிற மொத்த நிகழ்வுப்போக்குக்கும் கலைக்கும் இருக்கும் இடைவெளியை நான் படைப்பாற்றல் எனக்கொள்கிறேன். கலை மனிதனுக்கு ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை வழங்குவதாக படுகிறது. சமூகஅறிவியல் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளை தடங்கலின்றி கிடைக்க வழிவகை செய்யும் நோக்கோடு செயல்படுகிறது. எனவே கலை 'படைப்பு' பற்றியதாய் இருக்கிறது சமூகஅறிவியல் 'உற்பத்தி' பற்றியதாய் இருக்கிறது. இங்கு நான் 'மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான். இங்கு நீங்கள் குறிப்பிடும் சமுதாயப் பொறுப்புணர்வு என்றால் என்ன? தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம். சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, அதை செய்வது சமூகஅறிவியல். ஆனால் கலை என்பது எதிர்காலத்தேவை. படைப்பு வரலாறையும் 'இன்றை' யும் நாளைக்கு கடத்தும் ஒரு இருப்பு. எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம். // Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? // ஆம். இந்த வெளியில் ஒரு கலையைப் படைக்கமுடியாது என்பதே என் நிலை. ஆனால் இதில் சமூகஅறிவியல் பேசி விழிப்புணர்வுக்கு வழிகோலலாம். ஒருவர் சும்மா ஏதாவது எழுதட்டும். அதுதான் ஆரம்பம். அவர் வாழ்வில் ஒரு கணமேனும் அந்த விழிப்புணர்வுப் புள்ளி அவர் பார்வைக்கு கிடைத்துவிடும். அதுதான் எனது நம்பிக்கை. இதுகாறுமான அறிவுஜீவிகளுக்குமான நம்பிக்கை! // what is the demand for creation?// இது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கேள்வி. அதன் விடையும் அவ்வாறானதே.
****************************
//ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை// - இந்தக்கூற்று, தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது... தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்? நாம் வாழ்வது கூட்டுச் சமுகம் 'everything will be imbibed' இங்கு சவால் என்னவென்றால் நாம் கற்றுக்கொண்டவையும், நடைமுறைப்படுத்துவனவும் எவ்வித அரசியல், பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து நமக்கு தரப்பட்டது என்று கண்டுணர்வது. அப்பொழுது நாம் நமக்கான பார்வை என்பதை வகுத்துக்கொள்ள முடியும் என்று நிணைக்கிறேன். "We are all Social Animals". ஒரு பிரச்சனையில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் ஏன் தனிமனிதத் தேவை என்பதை விட சமூகப் பார்வையை கணக்கிலெடுக்கிறது? இன்று ஒரு தனி மனிதன் செய்யும் செயல், நாளை ஒரு குழு செய்யும், பின்பு பெருங்கூட்டம் அதைத் தொடரும்...அது வழக்கமாக மாறி..பின்பு கருத்தாக மாறி, விதியாக மாறி போய்க்கொண்டேயிருக்கும்...இல்லையா?//
//தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது// அதுதான் நோக்கமே.. தோன்றுகிற கேள்விகளிலிருந்து இணைக்கலாம் என்பது என் எண்ணம். முயலலாம். அந்த வாக்கியங்களை இணைக்க முடியுமாவென பாருங்கள்.
//தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்!
t***************************** தொடருங்கள்.