15 March, 2017

எல்லாச் சொல்லும் வேரொரு
சொல்லின் பொருள் குறித்தனவே.

கவிஞர் வெய்யிலின் ’கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ கவிதை நூல் குறித்து—ஆதிரன்



      னக்கு ஒரு கருத்து உண்டு. ஒரு வாசகர் தான் வாசிக்கும் கவிதைக்கு ஒரே அர்த்தம்தான் இருக்குமென வாசிக்கும் அவருக்கு வேண்டுமென்றால் ஒரு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் ஒரு கவிஞனுக்கு ஏறத்தாழ தனது ஒவ்வொரு கவிதையும் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற பேராசை எப்போதும் இருக்கும். எனவே நம்பிக்கைக்கும் பேராசைக்கும் இடையிலான புரிதல் அல்லது உணர்தல் நிலையினை ஒரு கவிதைத் தொகுப்பு தன்னுள் கொண்டுள்ளது என்பதுதான் அது. இங்கு நம்பிக்கை மற்றும் பேராசை ஆகிய இரண்டு சொற்கள் குறித்து எனக்கான சிறிய விளக்கம் நல்லது என்று நினைக்கிறேன். அதாவது, தனது கவிதைக்கு குறிப்பிட்ட ஒற்றைவகை அர்த்தம் இருக்க வேண்டும் என்கிற பேராசை ஒரு கவிஞருக்கு இருந்தாலும் அவற்றை தொகுப்பாக்குவதன் மூலம் தனது நம்பிக்கையைத்தான் தனது பேராசையை அல்ல ஒரு கவிஞர் வெளிப்படுத்துகிறார்.
            போலவே வாசகரிடம் ஒரு கவிதைக்கு ஒரு அர்த்தம்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை இருந்தாலும் அந்த கவிதைகளில் உதிக்கும் பல்வேறு அர்த்தங்களைக் கண்டுபிடித்து உய்க்க வேண்டும் என்கிற பேராசையினால்தான் கவிதைத் தொகுப்பை வாங்குகிறார். ஆக ஒரு கவிஞரின் நம்பிக்கை கவிதைத் தொகுப்பு வாசகரின் பேராசை என்கிற மூன்று புள்ளிகளில் கவிதைத் தொகுப்பு மையமாகக் இருந்து நம்பிக்கை அல்லது பேராசை என்கிற உணர்வுகளை முன்னும் பின்னுமாக அல்லது மேலும் கீழுமாக இயக்கம் கொள்ளச் செய்கிறது என்பது எனது புரிதல். ஆனாலும், இங்கு பேராசை என்பது சுய அடையாளம் எனவும் நம்பிக்கை என்பது தேவை எனவும் கொள்ளலாம். வைஸ் வெர்ஸா.
            இந்த நிலையில் நம்பிக்கைக்கும் பேராசைக்கும் ஊடாக ஒரு வாசகர் ஒரு கவிதைத் தொகுப்பை எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்பது, ஒரு தொகுப்பின் படைப்பாளியைத் தவிர்த்து விட்டு, வாசகர் தனது புற மற்றும் அக வழித் தடங்கள் வழியாக, அந்தத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் குறித்த தனது புரிதலை எப்படிக் கொள்கிறார் என்பதிலிருந்து இருக்கிறது. அந்த வகையில் பேராசை கொண்ட வாசகனாக எனக்கு நம்பிக்கைக்குரிய கவிஞர் வெய்யிலின் கவிதைத் தொகுப்பு அளித்த புரிதல் என்ன என்பதை தொகுத்து எழுத எண்ணம். அவ்வாறு நான் இந்த தொகுப்பை வாசித்து எனது புரிதலைத் தொகுத்தபோது இந்தத் தொகுப்பு பொதுஅரசியல், காமம், கழிவிரக்கம் மற்றும் நன்றி நவில்தல் என நான்கு வகையான உணர்வு நிலைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது என்கிற முடிவுக்கு வந்தேன். இந்த நான்கு வகைகளைப் பற்றிய எனது புரிதலை சொல்வதற்கு முன் இந்த தொகுப்பில் எனக்கு ஏற்பட்ட எதிர்மறை உணர்வுகளை முதலில் சொல்லி விடுவது நல்லது எனப்படுகிறது

ஃப்ராய்ட்

            இத்தொகுப்பில் ஃப்ராய்டின் பெயர் சொல்லி மூன்று கவிதைள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று மார்க்ஸ்-ஜென்னியின் நினைவுகளுக்கு என்றும் குறிப்புள்ளது. நல்லது இந்த மூன்று கவிதைகள் எனக்கு எதோ ஒரு வகையில் உடன்பாடற்றதாக இருக்கிறது. ஏனென்றால் இவைகள் எனக்கு கீழ்கண்ட கேள்விகளை உருவாக்குகிறது.

1.     ஃப்ராய்டிய கருத்துக்கள் வெறும் கனவுகள் சார்ந்து முடிந்து போய்விடுகின்றனவா?
2.  உறங்காத மூளை கொண்ட மார்க்ஸுக்கும் வறுமையை விரும்பித் தத்தெடுத்துக் கொண்ட ஜென்னிக்கும் உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லையா?
3.  கனவுகளைச் சாப்பிடக் கொடுக்க ஃப்ராய்டால் முடியாத போது கவிதைகளை உணவாக்க உங்களால் முடியுமா ?
4.   மனது வையுங்கள் என்று ஒரு பெண் வினவுவதாக வரும் கவிதையில் தோட்டாக்கள் எவ்வாறு பயன்படுத்தப் பட்டன; பசி என்பது எளிய நீதி எனக் கொண்டால் கவிதையின் தொனி அவற்றை தின்று விட்டதாகக் கருத இடமளிக்கிறதே அப்படியென்றால் தோட்டாக்களின் பயன்பாடு என்ன? அல்லது ஐந்து தோட்டாக்கள் ஒரு எளிய நீதிக்காக அய்ந்து உயிர்களைப் பறித்து விட்டதா? அதற்காக ஃப்ராய்ட் என்ன செய்வார்?
5.     எளிய நீதி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?
6.     நடப்பதைப் புரிந்து கொள்ளவியலாத ஃப்ராய்ட் எதற்காக மனது வைக்க வேண்டும்?
7.   ஃப்ராய்ட் 3 என்கிற கவிதை உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்பதை விளக்க  முடியுமா? (இந்த கவிதையை தொகுப்பில் தவிர்த்திருக்கலாம் என்பது என்பது எனது தனிப்பட்ட எண்ணம்)

மேலும் இவை இந்த கவிதைகள் தொட்டு எழுந்த கேள்விகள் மட்டுமே தவிர இந்த கேள்விகள் மூலம் உங்களின் ஃப்ராய்டிய கருத்துக்கள் பற்றிய ஒட்டு மொத்த விமர்சனம் அல்ல. ஏனெனில் டார்வீனிய, மார்க்ஸிய மற்றும் ஃப்ராய்டிக கருத்துக்கள் குறித்த அடிப்படை அறிவு நமக்கு  உண்டுதானே வெயில். போலவே உண்மையின் மீது பெப்பர் தூவுதல் மற்றும் வெள்ளி வீதியாரின் நாப்கின் ஆகிய இரண்டு கவிதைகள் தனது தலைப்பிலேயே கவிதையை முடித்துக் கொண்டு விட்டது என்பது எனது புரிதல். தலைப்பினைத் தாண்டி இவற்றில் கவிதைத் தன்மை இல்லை. ஏனென்றால் இவற்றில் விடுபட்ட வெளிகள் என்னைக் குழப்புகிறது. வெட்டுப்பட்ட மண்புழுக்களின் உடல்கள் மாறிப்போனது போல சிதறுண்ட அர்த்தங்களை என்னுள் நிரப்புகிறது. அது கடும் போதையில் மூளையில் தெறிக்கும் நிச்சயமற்ற காட்சிப்பிழைகள் போல அர்த்தங்களை உருவாக்கி என்னுள் ஒரு அயர்வை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை இதுதான் நீங்கள் குறிப்பிடும் புர்ர்ரென்று அரற்றும் வண்டோ என்னவோ.

இனி அந்த நான்கு உணர்வுகளைப் பற்றி எனது புரிதல்கள்:

நன்றி நவில்தல்

            மூன்று நன்றி நவிலல்கள். பொதுவாக காணிக்கை அல்லது சமர்ப்பணம் என்று சொல்வது வழமை. நான் இதை நன்றி நவிலலாகவே பார்க்கிறேன். மார்க்ஸ் ஜென்னி நினைவாக ஒரு கவிதையில் ஃப்ராய்ட் இருக்கிறார் இது பற்றி சொல்லி விட்டேன். இரண்டாவதாக இளையராஜாவின் இசைக்கு. நல்லவேளை இளையராஜாவுக்கு இல்லை என்று கொள்ளலாமா. நம்மை இளையராஜாவுக்குத் தெரியாது. ஆனால் நமக்கு இளையராஜாவைத் தெரியும். நமக்கும் இளையராஜவுக்கும் தெரிந்த ஒன்று இசை. இளையராஜா இசையை உருவாக்குவதன் மூலம் தனது அகங்காரத்தைக் கடத்துகிறார். அவரைப் பற்றி நமக்கென அக்கறை. நாமோ அவரது இசையின் வழியாக வாழ்வைக் கடக்கிறோம் அல்லவா…
            பின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் என்று ’சொற்களைக்’ கூறுபோடத் தெரிந்த நமக்கு இசையாகும் ’சொற்களை’ எப்படிக் கையாள்வது என தெரியவில்லை என்றால் சரியா வெயில். மத்தாப்பூக்களைச் சிதறும் ரயில் சக்கரம் உருளும்போதும், தவறி பெருந்திணைக்குள் நுழையும் வாகனம் இருக்கும் போதும் நாம் பியானோக் கட்டைகளின் இடுக்கில் தலையை விடுவது தவிர வேறென்ன செய்வது. ஆனாலும் பேரியற்கை என்னும் சொல் நிரடுகிறது. மூன்றாவதாக கிம் கி துக். என்னைப் பொறுத்தவரை இந்த தொகுப்பில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய மற்றொரு சொற்குவியல் இது. இவை வெறும் ஆர்வக் கோளாறாகவே எனக்குப் படுகிறது. இதற்கு காரணம் கிம் கி துக் போன்றவர்களின் போலித்தத்துவ வெளிப்பாடுகளின் மீது எனக்கு இருக்கும் எரிச்சல்தான் என்று நினைக்கிறேன். மாறாக கவிஞர் வெயிலுக்கு கிம் எதை புரியவைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம். நன்றி நவில்தல் என்பதில் உங்க பேர் என்ன சார் என்கிற கவிதையை ஃப்ராய்டுக்கு சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

கழிவிரக்கம்:

கழிவிரக்கம் என்பது அகம் மற்றும் புறம் சார்ந்து ஒரு மனிதருடைய இயலாமையின் வெளிப்பாடு எனக் கொள்ளலாம். சமுதாயத்தை உரைகல்லாகக் கொண்டு தனிமனித உறவுகளை மதிப்பிடுகையில் ஒரு வகை கழிவிரக்கம் கவிஞருக்கு வெளிப்படலாம். அல்லது தனிமனித வெளிப்பாடுகளைச் சார்ந்து விளைகிற உணர்வுகளின் உபரியாக கழிவிறக்கம் வெளிப்படலாம் என்பது எனது புரிதல். பொதுவாக எதுவும் செய்யவியலாத கோபம் கழிவிரக்கமாக மாற்றம் கொள்ளும். (இது தொடர்பான உரையாடல் எனது புரிதல்களை மேலும் செழுமைப் படுத்தலாம்).
            இத் தொகுப்பில் ஒரு பூ பூத்துச்சாம், மின்மினி விளையாட்டு, வளர்ப்புப் புறா, மீ எனும்…, தகவு, தன்னையறியாமல் பாடும் நா, கஞ்சா ஆடு ஆகிய ஏழு கவிதைகள் இவ்வகையில் அடங்குகிறது என்பது எனது துணிபு. இதில் தகவு அரசியல் பேசினாலும் அதனுள் பொதிந்து கிடக்கும் ஆதங்கத்தை காட்டிக் கொடுத்து விடுகிறது வரிகள். ஆனாலும் இவை கவிதைகளாக உருவாவதற்கு அவற்றின் வாதைகள் சார்ந்த உள்ளடக்கம் கொண்டுள்ள உலகளாவியத் தன்மைதான்.
            இவற்றில் முக்கியமானதாக நான் நினைப்பது ஒரு பூ பூத்துச்சாம் என்ற கவிதை. உண்மையில் கஞ்சா ஆடு என்கிற கவிதை போன்று வேறு பதிவுகள் நான் இதுவரை தமிழில் படித்ததில்லை. (அதாவது நான் அவ்வளவு குறைவாகத்தான் வாசித்திருக்கிறேன்) கஞ்சாவைப் பற்றி சித்தர்கள் பாடியிருக்கக் கூடும். இக்குறிப்பிட்ட கவிதையின் பின்புலம் பற்றி எனக்கு வெயில் சொல்லியிருப்பதால் இதன் வீச்சு எனது மூளையில் சற்று அதிகமாகவே உள்ளது. சூருமரப் பால், மீனுக்கு போதையளிக்குமானால் நாம் அதை ஏன் முயலக் கூடாது வெயில்?

காமம்:

பொதுவாகவே வெயிலின் காமம் அதகளமாயிருக்கும். இந்தத் தொகுப்பில் எட்டுக் கவிதைகள். சுக்கிலம் உலர்ந்து உதிரம் கசியுமளவிற்கு வெப்பு அல்லது வாடை கொண்டவை.  இவற்றின் வரிகளில் முறிகிறது மூங்கிலொலி. அதன் உராய்வில் பற்றி எரிகிறது இரவு. அவ்வாறு எரியும் இரவில் ஆண் ஆவியாகி விடுகிறான். போலவே, குளிரும் இரவில் ஆண் உறைந்து விடுகிறான். விடியலில் மீண்டும் நீராகி விடுகிறான். பெண்ணோ நீரின் நிறையானவள்.
            ஆணின் எந்த நிலையிலும் அவள் மாற்றம் கொள்வதில்லை என்றும் ஆணே கற்பிதம் செய்து கொள்கிறான். எனவே அவன் காமத்தை நோக்கி பிரார்த்தணை என்ற பெயரில் மன்றாடத் தொடங்குகிறான். வெயிலின் மன்றாடல் மொழியில் காமத்தின் வாய்க்கு அரளி வாசம். மேலும் கவிஞர் அமுதத்தின் ரெசிபியை நமக்கு விளக்குகிறார்: எருக்கம் பூ, கூவிரங்காய், அரளி விதை ஆகியவற்றை அரைத்து இவற்றுடன் பெண்ணின் தன்யம் (என்னவொரு சொல்லாடல்) சிறிது சேர்க்க வேண்டும். பின்பு மாசானத் தழலில் வாட்டினால் அமுதம் கிடைத்து விடும்.. சிறுசங்கு முலைப்பாலுடன் உண்டால் அமுதக் கரைசல். நித்தியம். அதுவும் போதவில்லையென்று பெண்ணின் வீடு எனும் போத்தலிருந்து ஒரு மிடறு மது, கூடவே அவளிடமிருந்து ஒரு கவளம் காமம். இவற்றிற்கு ஈடாக உயிரென்றால் சரி. பித்தேறிக் கிறுகிறுக்க வைக்கிறது வாசிப்பனுபவம்.
            உன் உலையில் துள்ளும் பருக்கை நான் என்கிறது ஒரு வரி. ஆண் என்பவன் பெண்ணின் ஒரு உறுப்பு அவ்வளவே என்கிற ஒரு படிமத்தை எனக்குள் உருவாக்குகிறது. எட்டுக் கவிதைகளின் உச்சம் ராச்சடங்கு எனும் கவிதை. ’செழித்த நிலத்தில் விளைந்த ராத்திரி வயலில் பருத்திகளை மேயும் இரவாடிகள் தீபங்களை ஏற்றுவதற்கு அணைத்தபடி பறக்கின்றன பழவாசனை கொண்ட காற்றின் வெளியில்’ என்கிறதாய் இக்கவிதையை நான் மீண்டும் மீண்டும் மனனம் செய்கிறேன். ஆக, கவிஞர் தனது காமத்தை ஒப்புக்கொள்ளும் போது வெளியேற்றும் சொற்களின் முன்னால் ஒரு வாசகனாக என்னிடமிருந்து பொறாமையுடன் வெளியேறுகிறது இயலாமையின் மியாவ்...!

பொது அரசியல்:

            ஒரு சொல்லின் அர்த்தத்தை எனது மறதியின் துணைக் கொண்டு ஆராய்ந்த போது இந்த கட்டுரையின் தலைப்பை நான் கண்டடைந்தேன். இந்த தொகுப்பு பின்னை-அமைப்பியலின் ஆதாரக் கூறுகள் அல்லது பின்னை-நவீனத்தின் ஆரம்பக் கூறுகள் கொண்ட தமிழின் பழமையான தொல்காப்பியத்தின் வரிகளுடன் தொடங்குகிறது. அதன் குறிப்பினூடாக நான் இந்தத் தொகுப்பை தொல்காப்பியத்தின் நீட்சியாகக் காண ஏதுவாக இருந்தாலும் இந்த குறிப்பிடப்பட்ட தொல்காப்பிய வாசகம் இத்தொகுப்பின் பொது அரசியல் சார்ந்த கவிதைகள் மூலம் மட்டும் மீட்சி செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் எனது புரிதல்.
            எல்லாச் சொற்களும் அர்த்தம் குறித்தது என்பதை விட எல்லாச் சொல்லும் அர்த்தம் பொதிந்தவை என்பது இந்த தொகுப்பில் இருக்கும் அறம் என்றொரு சொல் என்கிற வசனக்கவிதை மூலம் எனக்கு மேலும் தெரிய வருகிறது. நாகரீகமற்ற போர் நடக்குமொரு தேசம் என்கிறார் கவிஞர் வெயில். எனக்கு நாகரீகமிக்க போர் பற்றிய ஆவல் பீறிடுகிறது. அவ்வகையான போர்தான் மனித இனத்தின் பரிணாமமாக இருக்கக் கூடும் அல்லவா. போர் நடக்கிற தேசத்திலிருந்து வருகிறேன் என்றாலும் போர் நடக்கிற தேசத்திலிருந்து போகிறேன் என்றாலும் அர்த்தம் ஒன்றாகி விடும் அபத்தம் கலந்த பயங்கரமான சூழலை பூடகமான வரிகளாகக் கொண்டிருக்கும் கவிதை இது. ஆச்சர்யமான சொல்லாடல்கள்.
            இக் கவிதையில் வரும் முதியவரின் படிமம் மற்றவருக்கு எப்படியோ எனக்கு லட்சம் வருடங்களுக்கும் மூத்த நமது மொழியின் படிமம். ஊசியும் நூலும் என்பது சொல்லும் எழுத்தும். கவிஞர் சொன்னது போலவே கருப்பை என்பது வரலாறு. துளிக் கண்ணீர் என்பது கவிதை. அறம் என்பது கவிதையின் உப்பு. முதுமையில் நடுங்கும் கைகளால் நம்மை அரவணைக்கிறது மொழி. அதன் மெல்லிய மூச்சு நமக்கு எந்த வாசனையைக் கொடுக்கிறதோ அதுவே நமதான நூற்றாண்டு. உடல் துண்டுபட்ட பெண்ணின் நாசி பச்சையை நுகர்கிறது என்றும் நிலத்தில் அலையும் இளைஞர்களின் நாசியில் குருதி மணக்கிறது என்றும் நான் புரிந்து கொள்கிறேன். எனைப் பொறுத்தவரையில் இந்தத் தொகுப்பில் அரசியல் பேசும் இருபது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில், பூச்சிகளின் உபரி வரலாறு, பாட்டாளிகளின் சூதாட்டம் ஆகிய கவிதைகள் தமிழில் நான் வேறெவரிடத்திலும் படிக்கக் கிடைக்காத வடிவமும் உள்ளடக்கமும் கொண்டவை. சூல் வயிற்றுச் சித்திரம் மற்றும் பலியானவள் சரித்திரம் ஆகியவை தொன்மம் பற்றி பேசினாலும் முழுத்தொகுப்பிலும் பெரிதாகத் தொன்மம் குறித்த சிலாகிப்பு எதுவுமில்லை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான கூறாகவே காண்கிறேன்.
            கல் மிகுந்த பயன்பாடுடையது, வரலாற்றில் அதுவே நம்மை மனிதனாக்கியது என்று கற்களில் ஏற்றப்பட்டிருக்கும் தொன்மத்தை அறிவியல் கொண்டு கலைத்துப் போடும் அதே வேளையில் மனித அறிவைக் குமட்டி வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணம் வெளிப்படும் போது உணர்வின் முரண் நிலைப்பாட்டில் வெளிப்படையான கவிஞனாக தன்னை முன்வைக்கிறார் கவிஞர் எனப் புரிந்து கொள்கிறேன். முக்கியமாக, தமிழ் கவிகளுக்கு பாடமாக ஒரு கவிதையைக் குறிப்பிடச் சொன்னால் நான் வெயிலின் ’பூச்சிகளின் உபரி வரலாறு’ என்கிற கவிதையை வழிமொழிவேன். இந்தக் கவிதையின் இயங்கியல் வழி ஒரு கவிஞர் பயணிப்பாரேயானால் மனித குல வரலாறு மொத்தமும் ஓரளவுக்கு பிடிபடும் ஆற்றலலைக் இந்த கவிதை கொண்டுள்ளது என்பது புலப்படும். போலவே மற்ற அரசியல் சார் கவிதைகளும் தனக்கான பிரச்சனைப் பாடுகளை எளிமையுடனும் வசீகரப் படிமங்களுடனும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.   

முடிவாக:

தொகுப்பின் பின் அட்டை வாசகங்கள் கவிஞனின் பேராசையை, அதனடிப்படையில் எழுந்த நம்பிக்கையை துலக்கமாக எடுத்துரைக்கிறது. அந்த வகையில் கூடாரக் கவிதை, விறகுக் கவிதை, பொம்மைக் கவிதை, சாலைக் கவிதை, உணவுக் கவிதை என அனைத்துக் கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கிறது என்பது எனது வாசிப்பனுபவம். வரலாறு அரசியல் மற்றும் உளவியல் அடிப்படைகளை இயங்கியல் பின்புலத்தில் ஒரு கவிஞன் செயல்படுத்தினால் ஏற்படும் விளைவு தரமான கவிதைகள்.
            அதைத் தேர்ந்த முறையில் கைகொண்டிருக்கிறது இந்தத் தொகுப்பு. அந்தவகையில் மிக நல்ல வாசிப்பனுபவம் கொண்ட பனுவல் அளித்த வெயிலுக்கு நன்றி.  இந்தக் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டில் தேவதாஸ் அவர்கள் வெயிலுக்கு ’கவிஞர்’ என்கிற பட்டத்தை அளித்தது நடைமுறை இலக்கியச் சூழலில் மிகச் சரியான செயல்பாடு என்பது என் எண்ணம். கவிஞர் என்கிற ’பெயர்முன்’ சொல்லுக்கு மிகப் பொருத்தமானவர் வெயில். எனது வாழ்த்துக்கள். நன்றி. அன்பு.
 .........................................................
மேடை இதழ் மூன்றில் இந்த கட்டுரை இடம் பெற்றுள்ளது.