15 October, 2009

ரயில் நிலையம் - இரண்டு.

நடை சற்று நேரம் கிடைத்தது. மீதி ஐந்து ரயில் நிலைய குறிப்புகள்:



*
ஐந்து நடைமேடைகள் இருக்கின்றன

நிலையத்தில் .ஏதேனும் ஒன்றில்
தினம் பார்ப்பேன் அந்த பெண்ணை
தண்டவாள நிறத்தில் ஒரு துணியை
சுற்றியிருப்பாள் உடலில். பாதமும்
கழுத்தும் நிலகரி சாயல்
உறுப்புகள் வேறு எதுவும் தெரிய
விடமாட்டாள். இடது கையில் குச்சி
வலது கையில் நைந்த செருப்பு
குறுகி அமர்ந்து அந்த செருப்பால்
தொடர்ந்து தரையில் அடித்துக் கொண்டிருப்பாள்
உண்பது உறங்குவது
நடப்பது பேசுவது எதையும்
பார்த்ததில்லை. பாதையில் நடக்கும்
ஆண்களை கண்டதும்
செருப்பு காட்டி கண்களை வெருட்டி
பட்டினி நாயின் ஊளை போல
சத்தம் எழுப்பி மீண்டும் அடிக்க
தொடருவாள் தரையை. அவர்களின்
ஆண்மை நைந்து தெறிக்கும் அவ்வடிகளில்
பின்னான ஒரு மாலையில்
இரண்டாம் மற்றும் மூன்றாம்
நடைமேடைகள் மனிதர்களால்
நிரப்பப்பட்ட பொன் வெயிலில்
தன் ப்ருஷ்ட்டத்தை இரண்டாம் நடைமேடைக்கும்
யோனியை மூன்றாம் நடைமேடைக்கும்
காட்டியவாறு உடையை தூக்கி
மூத்திரம் பெய்தாள். சாதரணமாய்.
பின் அவள் நடந்து சென்றதை நான் பார்த்தேன்.
*
காலை ஏழு நாற்பதுக்கு
அவள் நிலையத்திற்கு வருகிறாள்
பருத்தி புடவையுடன் சுயமாய் மலரும்
ஒரு காட்டு பூ போல
கைபையில் இருக்கும் வளையல்களையும்
கடிகாரத்தையும் எடுத்து அணிந்து
நீள் இருக்கையில் சம்மணமிட்டு
அமர்கிறாள். ஏழு ஐம்பத்து ஐந்துக்கு
ஒரு முரட்டு தனமான வீம்பில்
என்னை பார்காமலேயே
நதி போல் சலசலத்து புறப்படும்
வைகையில் ஏறி செல்கிறாள் தினமும்
மறுநாள் தான் திரும்ப வருகிறாள்.
*
குஞ்சுகளுக்கு உணவிட
கூடடைந்து அமரும் கழுகை போல
நிலையத்தில் நுழைந்து
நிற்கிறது ரயில்.
*
நிலையத்தில் வந்து நிற்கும்
ரயில் என்ஜினின் முகப்பில்
அமர்த்திருந்த ஈக்கள் தண்டவாளத்திலும்
நடைமேடையிலும் பரவி அமர்கிறது
சிறிய இளைப்பாரலு க்கு பின்
மீண்டும்
தங்கள் பயணத்தை தொடர்கின்றன
அவைகள் எஞ்சின் முகப்புகளில் அமர்ந்து.
*
முது கிழவனின் சோர்வும்
சலிப்புமான மரணத்தில் பிரியும்
உயிர் போல நிலையத்திலிருந்து
மெதுவாய் வெளியேறுகிறது ரயில்.

*****





















No comments: