கூடுமானவரை தலைமுடியை நேர்த்தியாக அமைத்தான். முடியமைப்பை பற்றி அக்கறை படாதவன் போல முகபாவனையை வைத்துக்கொண்டான். பேன்ட்டினுள் சட்டையை திணித்து பட்டனை மாட்டியதும் ஆடி பிம்பத்தில் தன் தொப்பையை கண்டான். எரிச்சலடைந்தான். வயிற்றை எக்கி உள்இழுத்து ஒரு முறை குதித்தான். மூக்குக்கண்ணாடியை அணிந்தான். பாக்கெட்டில் பர்ஸ் இருப்பதை உறுதி செய்தான். வெளியேறினான்.
***
அவளது அளவு முப்பத்துநான்கு. உடல் இளக்கம் தொடங்கும் வயது. மேல்வயிற்றில் இருந்த வெள்ளை தழும்பு சற்று பெரியதாகி
இருந்தது. உடல் இளைத்திருப்பதாக பட்டது. கொக்கிகளை மாட்டி சேலையை கட்டினாள்.
சீப்பில் நின்ற தலைமுடிகளைப் பார்த்து எரிச்சலடைந்தாள். கைப்பையில் வாகன சாவி இருப்பதை உறுதி செய்தவாறு வெளியேறியவள் கதவை பூட்டும் முன் மீண்டும் உள்நுழைந்து தனது உள்ளாடையை எடுத்து அணிந்து கொண்டாள். வெளியேறினாள்.
******
தனது காரை கிளப்பும் பொது அவன் வயிற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிச்சலடைந்து மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கழிப்பறையில் பதினைந்து நிமிடம் அமர்ந்துவிட்டு பாரமிறங்கிய மனநிலையில் வெளியேறினான். காரை ஓட்டிக்கொண்டிருந்த பொது அவனுக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன: ஒன்று அவன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்து டக்இன் செய்ய மறந்தது, மற்றொன்று வீட்டின் கழிப்பறையில் மின்சாரவிளக்கை அணைக்காமல் வந்தது. அனிச்சையாக அவன் 'ஷிட்' என்றான். 'ஷிட்' என்ற ஆங்கில வார்த்தையின் நேரடி தமிழர்த்தம் அவன் மூளைக்குள் நுழைந்தபொது மீண்டும் 'ஷிட்' என்றான். அந்த வார்த்தை அவனிடமிருந்து வெளியேறி காற்றில் மிதந்த போதுஅவனது வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி பெப் வாகனத்தை இடித்தான்.
******
ஸ்கூட்டி பெப்பை ஓட்டி வந்ததவள் 'சனியனே' என்றாள்.
******
காற்றில் மிதந்த 'ஷிட்' அவளிடமிருந்து வெளியேறிய 'சனியனை' பிடித்துக்கொண்டது. அன்றிலிருந்து பதினோராவது நாள் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே நகரின் முக்கிய உணவகத்தில் வழக்கம்போல என்ன சாப்பிடலாம் என்று கேட்டுவிட்டு தேநீர் மட்டும் அருந்தலாம் என முடிவுசெய்தார்கள். அவன் தன் பெயர் 'ச' என்றும் தன்னை எல்லோரும் 'சி' என்றழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டான். அவள் தன் பெயர் 'சை' என்றும் தன்னை எல்லோரும் 'சை' என்றுதான் அழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டாள்.
******
மறுநாள் அவனிடம் பணம் பெற்றுக்கொண்ட டாடா குழுமம் அவர்களிருவருக்கும் பிரத்தியேகமான இரண்டு பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
*****
இவற்றையெல்லாம் அந்தரத்தில் ஜோடிபோட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த 'ஷிட்' டும் 'சனியன்'னும் இனி இவர்கள் என்னவாக ஆவார்கள் என்கிற சாத்தியப்பாடுகளை பட்டியலிட்டு பார்த்ததில்,
௧.
சை தன் கணவனை விட்டுவிட்டு வந்து ச வுடன் நிரந்தரமாக செட்டிலாகி விடுவது. வயதான ச தொண்டை புற்றில் இறந்ததும் சன்மார்கங்களில் அடைக்கலமாகி தூக்கத்திலேயே இறந்து போவது.
௨.
ச தன் குடும்பத்தை பிரிந்து சை இடம் தன் சொத்து முழுவதையும் இழந்து பிறகு கோவலன் மாதிரி மடத்தனமாக திருந்தி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவது. சை அவனிடமிருந்து பெற்ற சொத்துக்களை ஒரு கல்லூரி விடலைப்பையனுக்காக செலவழித்துக்கொண்டிருப்பது.
௩.
ஒரு மிதமான காதலால் இருவரும் இணைந்து, ஒரு அணுக்கியாய் வயதான ச வுக்கு ஹோமரின் இலியட் டை வாசித்துக்காண்பிப்பது.
௪.
முற்பகலில் எதிர்பாராத விதமாய் வீட்டுக்கு வந்த சை இன் கணவனிடம் உடம்பும் கையுமாய் பிடிபட்டு இடதுகாதுக்கு பக்கத்தில் ஆழமான வெட்டுக்காயம் வாங்கி சை அந்த இடத்திலேயே இறந்து போக ச ஓடிப்போய் மதிலேறி குதித்ததில் இரண்டு காலும் முறிந்து போவது.
௫.
ச வுக்கும் சையுக்கும் அழகான ஈ என்ற பெண்குழந்தை பிறந்து பிற்காலத்தில் தமிழக சட்டசபையில் போக்குவரத்துதுறை அமைச்சியாவது.
*****
சும்மா கற்பனை செய்வதை விட்டுவிட்டு நடப்பதை கவனி சனியனே என்றது ஷிட்.
*****
அப்புறம் என்ன நடந்தது என்றால், பனிக்காலம் குளிர்காலம் மற்றும் கோடைகாலம் ஆளுக்கொன்றாய் கடந்தபின்னான ஒரு இனிய வியாழனில் அதே உணவகத்தில் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே வேறுவேறு இருக்கையில் வேறுவேறு நபர்களுக்கு முன்னால் அமர்திருந்த ச வும் சையும் எதேச்சையாக ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். ச ஒரு ஷிட் டையும் சை ஒரு சனியனையும் அனிச்சையாக வெளியேற்றினார்கள்.
*****
ஏற்கனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஷிட்டும் சனியனும் காற்றில் மிதந்த புது ஜோடியை கண்டு இடிந்துபோன மறுநாள் இரண்டு நிகழ்வுகள்:
ஒன்று:
டாடா குழுமம் கட்டப்படாத பில் தொகைக்காக ச வுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இரண்டு:
ரிலையன்ஸ் குழுமம் ச விடம் பணத்தை பெற்றுக்கொண்டு ச வுக்கும் சை யுக்கும் பிரத்தியேகமான பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
********************************
3 comments:
Good one.
பின் நவினத்துவக்கதை. best humour.
thanks P and Chanraa.
Post a Comment