05 January, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 2




* * * * * * * ** * *




இடைக்குறிப்பு




சன்னாசி குடும்பத்தை பற்றிய வரைவு விளக்கம்:




ஆசிரியர் பணியை குமுதவல்லியின் புகாரால் விடநேர்ந்த சன்னாசி தற்சமயம் சென்னையில் ஒரு அரசு தத்தெடுத்த தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான். இவன் மனைவி மற்றொருவனுடன் ஓடிபோனகதை வேறு காலத்தில் வேறு அத்தியாயத்தில் வரும். இவனுடைய அக்கா அங்கயற்கண்ணி. செவுலி. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் தங்கராஜ் கௌண்டர் பெற்றோர். இப்போதைக்கு இவர்களை எனக்குத்தெரிந்த தேனிமாவட்டத்தில் தேனி அருகே இருக்கும் பழநிச்செட்டிபட்டியில் வாழ வைத்திருக்கிறேன். பூடகம் நிறைந்த அங்கயற்கண்ணியின் கதை தொன்மத்தில் வரும்.




* * * * * * * * * *









27.12.1991 வியாழன் இரவு.

00.03



ஜாதகக்காரர் மிகவும் பயமுறுத்தி விட்டார். ஆயுள் ஐந்பத்து ஐந்துதானாம். முப்பது வயது இன்றைய தேதிக்கு. இன்னும் இருபத்து ஐந்து வருடங்கள்தான். காலத்தின் வேகம் எனக்கு தெரியும் அதனால்தான் பயம். காலம்தான் எவ்வளவு வேகமானது. பயத்தில் வயிறு கலங்கி இரண்டுமுறை கழிப்பறையை சுத்தம் செய்தேன். ஜாதகக்காரர் முன்ஜென்மங்களைஎல்லாம் விவரித்துக்கொண்டிருந்தார். சோழர் காலத்தில் நான் படைவீரனாகவும் இரண்டு பொண்டாட்டி காரனாகவும் ஏக காலத்திலிருந்ததுதான்இந்த பிறவியில் நான் அடையும் துன்பத்துக்கு காரணம் என்றான். பரிகாரச்செலவு எனக்கு கட்டுபடி ஆகாததால் ஜாதகக்காரரின் சாபத்தையும் சேர்த்து வாங்கும்படி ஆயிற்று. ஆனாலும் அனுமார் கோவிலில் போய் பிரதி வியாழன் சாமி கும்பிடுவது என்கிற எளிய பரிகாரம் எனக்கு பிடித்துப்போய்விட்டது. காலையில் எழுந்து குளித்துவிட்டுத்தான் கோவிலுக்குப்போக வேண்டுமா என்ன, அதுவும் டிசம்பர் குளிரில். நேரத்தில் எழுந்திருப்பதே அதிசயம். பல்தேய்த்து முகம்கழுவியதும் உடல் நடுங்கியது. மெட்ராசில் இவ்வளவு குளிர் என்றால் தேனியில் எப்படி இருக்கும். ஒரு வருடத்திற்கு வாராவாரம் வியாழகிழமை அனுமார்கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது என்றால், அதை செய்வதில் ஒன்றும் தப்பில்லை என்றே தோன்றியது. கோவிலில் ஏற்படும் தனிமையும் ஏகாந்தமும் பிறகு அதே வியாழன்களில் வரும் கனகாம்பரம் வைத்த பெண்ணும் - இடது ஆள்காட்டி விரல் பாதி இல்லை - மிகவும் பிடித்துப்போய்விட்டது. அவள் பெயர் அனிதா என்று வைத்துக்கொண்டேன். பெயர் தெரியாத எல்லாப்பெண்களும் எனக்கு அனிதாதான். அவளுக்கு அனிதா என்கிற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. அனுமார்கோவிலுக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம். ஆனாலும் பெண்கள் அனுமார்கோவிலையும் விட்டுவைப்பதில்லை. டிசொசாவிற்கு கர்த்தரை பிடிக்கிற அளவுக்கு கிருஷ்ணனை பிடிக்கும், ராமானை சுத்தமாக பிடிக்காது. எனக்கும் கிருஷ்ணன் தான் . பெண் தெய்வம் காளி. அங்கயற்கண்ணி நீ ராமனைக் கட்டியழும் பெண்.





2 9.12.1991 சனிகிழமை இரவு





00.04





தனித்தன்மை வாய்ந்த இவ்விரவில் உனக்கு நான் எழுத வாய்ந்த தருணம் மிகவும் நெகிழ்வூட்டுவதாயும் வன்தன்மை கொண்டதாயும் உள்ளது. நமதான இத்தனைவருட நட்பில் நான் உனக்கு கடிதம் எழுதக்கூடும் என்று காலக்கடவுளுக்கு கூட தெரியாது என்கிற என் நம்பிக்கை எவ்விதத்திலும் மூடநம்பிக்கையல்ல. உன் செயல்கள் மீதான என் நம்பிக்கைஇன்மை உன்னால் எந்தவித தடங்கலும் இல்லாமல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலைத்திருட்டு தொடர்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கிறாய். வாழ்வில் முதல்முறையாக இயற்கையாக்கப்பட்ட சமூக நிஜம் உன்னை வந்தடைந்திருக்கிறது. உன் செல்லரித்த மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்ட வீராப்பு சொற்கள் எந்த பயனுமின்றி குழந்தைகள் விட்டெறிந்த பாடப்புத்தகங்கள் போல உனக்காகாக ஒதுக்கப்பட்ட தனியறையில் சிதறிக்கிடக்கக் கூடும். தனிமை சிறிதுமற்ற உன் பாதைகள் விசும்பில் அலைவுறும் கோள்களின் நிரந்தர விளையாட்டென கொண்டாய். வருத்தங்களும் ஆசீர்வாதங்களும் கொண்ட என் மனம் உன்னை தினமும் வேவு பார்த்துக்கொண்டிருக்கிறது. பனிக்குள் கசிந்து வெளியேறும் நீர்த்துளி போல என்னிடமிருந்து நழுவிச்சென்றுவிட்டாய். இப்போது உனக்கு வாய்த்திருக்கும் இத்தனிமை உனக்கான கருணைக்கடவுளால் விரும்பி அளிக்கப்பட்டது. பீடிப்புகை கிடைக்காமல் நீ மனச்சோர்வு கொள்ளக்கூடும். இது வாழ்க்கை உனக்கு ஆதரவாக அளித்த கொடைத்தருணம் . விளையாட்டாகவும் இயல்பு மாறாமலும் உன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய தருணம். இதுகாறும் நீ புணர்த்த மொத்தப் பெண்களின் மகிழ்வுவாசனை உன்னைக்காக்கும். உன் உறுதியற்ற நிலைப்பாடு எனக்கு மிகுந்த சோர்வை அளிக்கிறது ராமா.






31.12.1999
00.05
இன்று ஒரு இடத்தில் நூறு ரூபாய் திருடினேன் அங்கயற்கண்ணி. எல்லாம் உன் மகனுக்ககத்தான். குரோம்பேட்டை சிம்பொனி டெய்லர்ஸ் போயிருந்தேன். மூன்று மாதத்திற்கு முன் சௌந்தரபாண்டி இறந்தபோது போனது. நீ ஒரு தடவை அவனை பார்த்திருக்கிறாய். எனக்கு பள்ளித்தோழன். தொன்னூறில் குரோம்பேட்டைக்கு வந்தான் தையல்காரனாக. காடுமாடு போல கம்பீரமாய் இருப்பான். அவன் இறக்கும் போது முப்பத்தேழு கிலோதான் இருந்தான். ரத்தப்புற்று அவனைத்தாக்கியபோது அவனை விட நான்தான் அதிகம் பயந்து போனேன். அவனை பார்க்கவே போகவில்லை. ஐந்துமாதத்தில் இறந்து போனான். சாவுக்கு போய் மூஞ்சியைகூட பார்க்கவில்லை. அழுகைவரவில்லை. பயம். சுடுகாட்டிற்கு போகும் வழியில் பாதியிலேயே வந்துவிட்டேன். இன்றைக்கு சும்மா அந்தப்பக்கம் போயிருந்தேன். கையில் காசு இல்லை. வருசப்பிறப்பிற்குஉன் மகனுக்கு ஒரு உடை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. டெய்லர் கடையில் சண்முகம் இருப்பான் எதையாவது தைத்து வாங்கலாம் என்று போயிருந்தேன். ஆள் இல்லை. கடையில் காஜா பையன் மட்டும் இருந்தான். உட்கார்ந்து டேபிளை நோண்டிக்கொண்டிருந்தபோது தையலளவு நோட்டில் அந்த நூறு ரூபாய் தாள் இருந்ததை பார்த்தேன். அதை கொண்டுதான் தாம்பரம் பஜாரில் உன் மகனுக்கு உடை வாங்கினேன். காபி நிறத்தில் வெள்ளைப்பூ போட்ட சட்டையும் திரௌசரும். நாளைக்கு வருசப்பிறப்பு. ஆனால் நான் அடுத்த மாதம் தான் ஊருக்கு வருவேன். அதுவரைக்கும் இந்த உடையை நான் தர முடியாது. யாரிடம் கொடுத்து விடுவது. பேசாமல் நீ மெட்ராசுக்கு மாற்றலாகி வந்துவிடு அங்கயற்கண்ணி. உன் குடும்பத்திற்கு என் வீடு சரியாய் இருக்கும். என் ஒருவனுக்காக இந்த வீடு சற்று பெரியதுதான். ராமனும் நீயும் உன் மகனுடன் வசதியாய் இருக்கலாம். எனக்கும் சாப்பாட்டு பிரச்சனை இல்லை. நான் சொன்னால் டிசொசாவும் வந்து விடுவாள். டிசோசா வந்தால் எனக்கு நிம்மதி வந்துவிடும் என்று உனக்கு தெரியும்தானே. கடலலை கேட்கும் இந்த அரசுகுடியிருப்புக்கள் மாலைக்காற்றுக்கு பேர்போனது. கடலை உனக்கு எவ்வளவு பிடிக்கும். பார் நான் கடலின் முன்னூறு மீட்டர் தூரத்தில் வாழ்கிறேன். கடலைப்பார்த்து ஒருமாதத்திற்கு மேல் ஆயிற்று. தினமும் கடலை கேட்கிறேன் என்பதுதான் மிச்சம். கடல் உன்னை அதிகம் ஞாபகப்படுத்துகிறது அங்கயற்கண்ணி. நமது பால்ய நினைவுகள் என்னை பெரிய ஆயாச ஆழத்துள் அமிழ்த்துகிறது. கடலறியாத எனக்கு உன் கற்பனைச்சிப்பிகளை கொடுத்த காலங்களை நான் கடற்கரை மணல்த்துகள்களில் தேடுகிறேன். புத்தாண்டு கொண்டாட்ட கூச்சலில் கரைத்து கொண்டிருக்கிறது கடல். எனக்கு நம் குடும்ப ஞாபகம் நிலவின் பால் வெளிச்சம் போல பொங்குகிறது. அழுதால் சற்று இளைப்பாறல் கிடைக்கும். முடியவில்லை. நான் கடல் பார்க்க போகிறேன். உன்னைப்பற்றி நினைக்கவும் குமுதவல்லியை மறக்கவும் கடல் உதவுமெனப்படுகிறது.

* * * * * * * * *
தொடரும்
* * * * * * * *


No comments: