விழாக்கால நெரிசலாய் திமிர்கிறது
மூளைசெதில்களில் பிரவகிக்கும் உனக்கான
கற்பனைச்சுரபி. வழிகிறது ரணத்தின் நிணம்.
தூர நாயின் ஓலம் மரணத்தையொத்தது அல்ல
மாறாக அன்பின் அலறலது. தேவையின்
அடிப்படைகூச்சலும் கூட. பொருண்மையற்ற
நுண்ணிய தர்க்கத்தால் பிரியநேரும்
துயரத்தை என் பாதத்தில் உணர்த்துகிறாய்
சிதைவுறும் பண்பாட்டு கழிவுகளில் பற்றியெரிந்து
பிரகாசிக்கிறாய். உற்சாகக்கூப்பாட்டில்
சிவக்கிறதுன் குதம். நீர்கசியும் ஒரு முகடோ
அல்லது
பள்ளத்தாக்கின் நுனியோ போதுமானதாய்
வீழ்ந்துகிடக்கிறாய் சிறுகுழந்தையின்
விழிவெளுப்பாய். இயல்பின் இயல்பாய்
மரணம் நோக்கிய சுவாசத்துடன் விரியும்
உன்னுள் மதம்
கொண்ட விலங்கின் வன்மை புதைக்கப்படுகிறது.
உணவுக்கு
என் விதைகள் போதுமானதாய் இல்லையென
புனையபபடும் பாடத்திட்டத்தில் உன்
காலம் மெல்லிய கம்பியில் நடந்து
வித்தை காட்டும் சிறுமியின் கால்களில்
இருக்கும் செருப்பு போன்ற விநோதமும்
பயங்கரமும் கூடியது.
உன் இயக்கவியல்
தந்திரத்திலும் அதன் சமன்பாடுகளின் துல்லியத்திலும்
இற்று விழும் சவங்கள் விழிகளை
திறந்தே வைத்திருக்கின்றன பசிய
முதலையின் வாய்போல. காக்கைகளின்
உணவிற்கு குறைவற்ற
நிலத்தில் எந்நேரமும் என் தலைக்குள்
சுடுகாட்டு வாசம்.
எனக்கு உன்னைப்பற்றிய அக்கறைஎதுவும்
இல்லைஎன்பதற்காகவே சட்டைப்பையில்
சிறிது வண்டல் போட்டு ஒரு பிள்ளைப்பூச்சியை
வளர்க்கிறேன். நீ தருவதைவிட அதிக
குறுகுறுப்பை தருகிறது என் நெஞ்சில்.
சமயங்களில் அது வயிற்றுப்பகுதிக்கு தப்புகிறது
அச்சமயங்களில் நெஞ்சை விட வயிறு நிறைய
சிதைவுகளுக்கு ஆளாகிறது. அதற்கு உணவு
தயாரிப்பதினாலேயே உன் நினைவை
என்னால் கடந்துவிட முடிகிறது. மேலும்
நிலையான நீண்ட காலம் பற்றிய
நம்பிக்கை எனக்கில்லை என்கிற என்
கூடுதல் பலவீனத்தையும் நீயறிவாய்.
முழங்காலும் நெஞ்சும் உன்மீதுவிழ இருகைகள்
அறைந்து தொழுவதும் பிரவகிக்கும் கண்ணீரின்
மூலம் நெகிழும் என்மனதை சிருமதுவூற்றி
எரிப்பதும் உனக்கு பொருட்டல்ல என்பது மட்டுமே
உன்னதத்தின் கூட்டுச்சதி. மரணத்தின்
சங்கேதமாகிப்போன
உன்பற்றிய நினைவை அழிக்கவல்ல ஆயுதம்தேடி
நானலையத்தேவையான சிறகுகளை வைத்திருக்கும்
தேவதைகள் நிலமே நிலமே என கூவியூற்றுகிறார்கள்
கிரகணங்களின் திரவத்தை
நான் குடித்துக்கொண்டிருக்கிறேன்.
**********************************
No comments:
Post a Comment