13 January, 2010
காதல்
1994-1995 : இவ்வருடங்கள் நான் காதலில் உச்சக்கிறுக்கு கொண்டிருந்த நாட்கள். மகாக்கவி பாரதியின் இரண்டே பாடல்களை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருப்பேன். அவைகளை ஒரு முறைப்படித்தால் என் காதலுக்காக உடனே இரண்டு கவிதைகளை எழுதிவிடுவேன். நான் எழுதிய கவிதைகள்தான் என் கடிதங்களில் இருக்கும் பாரதியைப்பற்றி ஒரு குறிப்பும் இருக்காது! இன்றைக்கும் அவைகளைப்படித்தால் எனக்கு காதல் கவிதைகளை எழுதுவதில் எந்த சிறமமுமிருக்காது.
பாரதியின் சின்னஞ்சிறு சிறுகிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே, சுட்டு விழி சுடர்தான் ஆகிய இரண்டும்தான் அவை. முதல் கவிதையில் - அன்பு தருவதிலே உனக்குநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ -என்ற வரியும் இரண்டாவது கவிதையில் - பட்டு கருநீலப்புடவை பதித்த நல்வயிரம் நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திறங்களடி - என்ற வரியும் என்னை பித்து பிடிக்க வைத்தவை.
பாரதியின் ஒவ்வொரு அணுவும் காதல்.
அவருடைய மற்றொரு கவிதையில் என் காதலை நிறைத்துக்கொண்டேன். அது இவ்வாறு தொடர்கிறது என்று எண்ணுகிறேன்:
நெரிந்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்
திரிந்த நுரைதநிடை நின்முகங்கண்டேன்
சின்ன குமிழ்களில் நின்முகங்கண்டேன்
பிரிந்து பிரிந்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற துன் முகமின்றி பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினுள் கை விலக்கியே
திருமித்தழுவியத்தில் நின்முகங்கண்டேன்
என்ற கவிதை எவ்வளவு நிஜம். காதல் அந்த அனுபவத்தை எனக்கு வழங்கியது. என் கவிதை வரிகளின் ஆதிச் சொற்கள் மகாகவியினுடையது.
**********
அந்த நாட்களில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு கவிதையின் தழுவலாக நான் என் காதல் கடிதத்தில் எழுதிய கவிதை(!) கீழே:
*****************
முன்ஜென்மத்தில் நான் ஏதாவது
அதிசயம் புரிந்திருக்க வேண்டும்.
இந்த ஜென்மத்தில் உன்னை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்!
ஏதாவது திடுக்கிடும்படி செய்திருப்பேன்
திருக்குறளை இயற்றியிருக்கலாம்
ஒரு பவளத்தீவு மக்களுக்கு சுதந்திரம் அளித்திருக்கலாம்
அல்லது
பஞ்சாயத்து போர்ட் தேர்தலை நடத்தியிருக்கலாம்
எதற்காக உன்னை எனக்கு அனுப்பினார்கள் ?
பெரியகோவிலை கட்டியிருக்க வேண்டும்
மூட்டுவலிக்கு மருந்து கண்டுபிடித்திருக்க வேண்டும்
அல்லது
ஐஸ்கிரீம்.. தொசைசட்டி.. அதிரசம்
கண் மை .... கால்கொலுசு போன்ற
ஏதோவொன்றை கண்டுபிடித்து விட்டேனென்று தோன்றுகிறது
எதற்காக உன்னை எனக்கு அனுப்பி வைத்தார்கள்?
**************
தொன்னுத்தியாராம் வருடம் நான் எழுதிய கடித்தத்தில் இந்த கவிதையை எழுதியிருக்கிறேன். காதல்.!
*******************
பண்ணு சுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு..
*********************
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment