16 February, 2010

தினம்

தாய்மார்கள் தினம் , காதலர் தினம் போன்று ஒரு நாளை ஏதாவது ஒரு தினமாக கொண்டாடுவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. உலகத்தில் எத்தனை நாட்களை என்னவிதமான தினமாக கொண்டாடுகிறார்கள் என்று கணக்கிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் எதிர்க்கிறார்கள் என்கிற ஒரு காரணம் போதும் காதலர் தினத்தை நான் ஆதரிக்க! தமிழ் பண்பாடு போல வேறு எந்த கலாச்சாரத்திலாவது மாதம் ஒரு பண்டிகையை பார்க்க முடியுமாவென தெரியவில்லை. சித்ரா பௌர்ணமியில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகை நாள்! ஆடி மற்றும் மார்கழியில் மொத்த மாதமுமே கொண்டாட்டங்கள்தான். நான் ஏன் தினத்தை ஒரு ஏதாவது ஒரு உணர்வு நாளாய் கொண்டாட விரும்பவில்லை என்றால், அந்த ஒரு தினத்தை தவிர மற்ற நாட்களில் அந்த உணர்வு பற்றி ஒரு அக்கறை குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதனால்தான். தினக்கொண்டாட்டங்கள் என்பவை நுகர்வுக்கலாச்சரத்தில் பலியாடுகளாக்கப்படும் மக்களின் சொத்துக்களை பறிக்க ஏற்பாடு செய்யும் வியாபாரத்தந்திரம். சகோதரிகளுக்கு மஞ்சள் புடவை எடுத்துக்கொடுப்பது (இப்போது சிவப்பு புடவை) போன்ற சுவாரசியமான பயங்கரங்கள் போன்றவை இது. எனக்கு மிகவும் எரிச்சல் வரவழைக்கும் தினக்கொண்டாட்டம் எதுவென்றால் அட்சய திருதி

***********
சிவராத்திரி கொண்டாத்தன்று ஜீ தமிழ் ' அலைவரிசை பார்த்தவர்கள் ஒரு அருமையான இசை ஆன்மீகத்தை அனுபவித்திருப்பார்கள். மிகவும் ரசித்தேன். விக்கு வினாயக்கின் கடம் அதில் உச்சம். மற்றபடி மகாசிவராத்திரி என்பது எனக்கு சிறுவயது கிராமத்தில் தோழிகளுடன் சேர்ந்து சினிமா பேர்சொல்லும் விளையாட்டு விளையாடியதும் சொட்டாங்கல் விளையாட்டு விளையாடியதுமான என் பாட்டி வீட்டு திண்ணை ஞாபகம் மட்டுமே. இந்த சினிமா பேர் சொல்லும் விளையாட்டை இப்போது விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தை சொன்னால் படம் பேர் சொல்ல வேண்டும். பாட்டும் பாடுவோம். பாட்டுக்கு பாட்டு. சிலோன் ரேடியோ மாதிரி அதுவும் தொலைந்து விட்டது.

விளையாட்டு என்றதும் நான் (நாம்) விளையாடிய விளையாட்டுக்களை எண்ணிப்பார்த்தேன். கிட்டி, ஜெப்பா கல், தட்டை பெண்டில் காத்தாடி செய்வது, சினிமா பிலிம்களை சேகரிப்பது, சிகரட் அட்டைகளை சேமிப்பது, உண்டி வில்லில் கரட்டாண்டி வேட்டை, வெடி தேங்கா போடுவது, டயர் வண்டி, அம்புவில் செய்வது, கள்ளன் போலீஸ், நொண்டி, கம்மாயில் நீச்சலடிக்க போவது, எழந்த மற்றும் வழுக்கப்பழங்களை பறிப்பது, தலைவெட்டி செடி, கோவைக்காய் செடிபோன்றவைகளை தேடிப்போவது, டயரை எரித்து அந்த வெளிச்சத்தில் சோளக்கருது திருடுவது.. இன்னும் என்னென்ன...!!

**************



3 comments:

மதுரை சரவணன் said...

nallal ninaivukal. naanum sinimaa peyar solli vilayaandu irukkiren. makilchchi. nalla eluthureengka.

ஸ்ரீராம். said...

ஒரு குறிப்பிட்ட நாளை தனியாகக் கொண்டாடுவது மேல் நாட்டிலிருந்து நமக்கு வந்த பழக்கம். அந்த வகையில் நண்பர்களையோ, காதலி அல்லது மனைவியையோ விசேஷமாக ஒரு தினம் நினைப்பது என்பது நல்ல வழக்கமே...நம் ரத்தத்தில் ஊறிய பழக்கங்கள் படி, மிச்ச நாளிலும் இவற்றையெல்லாம் மறந்து விட மாட்டோம்...!
சினிமா பேர் சொல்லி விளையாடும் விளையாட்டு போன்றவை சுகமான நினைவுகள். இன்னும் எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கும்...அவரவர் வயதில் அவரவர்களுக்கு...

padma said...

போற வர பஸ் நம்பர் எழுதி வைக்கிறது ,கோலி,ஏழுகாய் ஆட்டம் ,காக்காய் முட்டை,ஒத்தையா ரெட்டையா ,கோவலன் டிராமா ,ஊஞ்சல்ல டூர் போறது ,
வீடு வீடாய் போய் வேண்டாத பொருள் சேர்த்து புதைச்சு வைக்கறது, மயில்இறகு குட்டி போட காத்திருப்பது ,பென்சில் சீவலில் ரப்பர் பண்ண பார்ப்பது ,பூத கண்ணாடியில்
தீ உண்டாகுவது அப்பப்பா இன்னும் எத்தனை இத்தனைக்கும் எப்படி நேரம் கிடைத்தது?