04 February, 2010

வினோதம்

இன்றைய தினத்தந்தி நாழிதளில் மூன்று விஷயங்கள். ஒன்று, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் என்கிற ஊரில் சுடுகாட்டுக்கு பாதை இல்லை என்பதால் இறந்தது போன நபரின் உடலை காற்றடைத்த லாரி டியூப்பில் பாடை செய்துவைத்து ஆற்றின் மேல் மிதக்க விட்டு சுடுகாட்டுக்கு இழுத்து கொண்டு சென்றிருக்கிறார்கள். பிறகு புதைத்தார்களா இல்லை எரித்தார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தின் அநேக கிராமங்களில் சுடுகாட்டு பாதைப் பிரச்சனை இருக்கிறது. இதை தொடர்ந்து கிராமங்களில் இருந்து அருகிலிருக்கும் நகரத்தில் மின்மயானத்திற்கு அவசரஊர்தி வைத்து கொண்டுவந்துவிடும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால் இது செலவு பிடிக்கும் சமாச்சாரம். போகிற போக்கில், 'உடல் தானம்' என்கிற விஷயம் புனிதசடங்காகி பிணத்தை அவர்களே வந்து எடுத்துப்போகவேண்டிய கலாச்சார சூழல் உருவாகிவிடும் போல. ஒரு வகையில் அது நல்லதுதானோ என்னவோ.
மற்ற இரண்டும் சினிமா விளம்பரங்கள். ஒன்று 'தமிழ்படம்' என்கிற சினிமா விளம்பரம். தமிழ் சினிமாவின் கேவலங்களை பற்றி படம் பண்ண அமைச்சர் குடும்பத்தில் இருந்துதான் தயாரிப்பாளர்கள் வரவேண்டியிருக்கிறது. அந்த படத்தின் விளம்பர வரிகளில் இயககுனருக்கு தொலைபேசி படத்தின் கதை என்னவென்று கேட்கக்கூடாது "தெரிந்தால் சொல்லமாட்டோமா' என்றிருக்கிறார்கள். நல்ல விளம்பரம்! இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை சினிமா டைட்டிலில் இப்படி ஒரு தொனி வரும் படியான வாசகம் பார்த்த ஞாபகம்.
இரண்டாவது, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு எம் ஜி ஆர் அடிப்பொடிகள் தோன்றி சினிமா எடுக்க கிளம்பி விடுகிறார்கள். இப்படி 'சின்னவர்' எத்தனை பேர் கிளம்புவார்கள் என்று தெரியவில்லை.இப்படத்தின் இயக்குனர் பெயர் எம் ஜி ஆர்நம்பி! தயாரிப்பு எம் ஜி ஆர் ஸ்டுடியோ ! எம் ஜி ஆர் நம்பியே இப்படத்தில் நடிப்பார் போல. 'கால பைரவி' என்பது படத்தின் பெயர்.


***********************

திருமண பந்தம் பற்றிய எனது அவதானிப்பில் வலு சேர்க்கும் மூன்று காரணங்களை கடந்த மூன்று நாட்களில் நான் அறிய நேர்ந்தது.

மெத்தப்படித்த ஆண், மாதத்திக்கு லட்சம் வரை வருமானம்! மெத்த படித்த பெரிய வேலை பார்க்கிற பெண் என்றால் தனது குடும்பத்தை புரிந்து கொண்டு நடக்கமாட்டார்கள் என்று கற்பனை செய்து, பத்தாவது படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்..மிகக்குறைந்த காலத்திலேயே மனிதர் திருமணபந்தத்தில் கடுமையான சோர்வு கொண்டுள்ளார். இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொள்ளவில்லை' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை இழக்கிறார். பெண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறார்.

எதிர்மாறாக இன்னொரு நண்பர் திருமணமாகாதவர் திருமணமாகி ஏறக்குறைய பத்துவருடங்கள் லௌகீக அனுபவம் பெற்ற பெண்ணை திருமணம் செய்கிறார். இதில் இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொண்டிருக்கிறார்' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை பெறுகிறார். பெண் பாதுகாப்பு உணர்வு அடைகிறார்.

அடுத்ததாக பத்தொன்பது வயது பெண்ண நாற்பத்தியேழு வயது திருமணமான, தினமும் குடிக்கிற ஆணை விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். காதல் என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால் அவர் தினமும் குடிக்கிறார் என்று காரணம் காட்டி பத்து வருடத்திற்கு பின் தனது மகனுடன் தனியாக வாழ்கிறார்.

மூன்று ஜோடிகளுக்கும் பொருளாதார பிரச்சனைகள் இம்மி கூட இல்லை. எனது கேள்வி என்னவென்றால்: ஆணால் பெறப்படும் நம்பிக்கை என்பது என்ன, அந்த நம்பிக்கை எதனடிப்படையில் ஆனது? பெண்ணால் பெறப்படும் பாதுகாப்பு உணர்வு என்பது எது, அந்த உணர்வு எதனடிப்படையில் ஆனது?

நான் என்ன சொல்லுகிறேன்: பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள். அல்லது சுத்தமான காதலால் எதிர்பால் எக்கேடு கெட்டாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக (காதல் என்கிற கற்பனைக்காக) தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.

நான் சொல்வது சரியா?

இது தொடர்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

*******************

2 comments:

chandra said...

காதலோ குடும்பமோ வெற்றி பெற அல்லது நிலைத்து நிற்க ஒருவர் இன்னொருவரை மிகக் கேவலமாக சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாதுக்காப்பு உணர்வு, தன்னம்பிக்கை இரண்டும் உள்ள ஆட்கள் இத்தகைய உறவுச் சிக்கலிருந்து தப்பித்துவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சமூக வாழ்க்கையில் யார் யாருக்கோ அடிபணிந்து போக வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது நம் துணையை சகித்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களும், அப்படியே வாழ்ந்து வருபவர்களும் கூட இப்படி சகித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறதே என்று உள்ளுக்குள் ஏதோ ஒரு மனச்சிக்கலில் உளன்று கொண்டிருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. சகித்துக்கொள்ளும் போது அந்த பிரஞையே இல்லாமல் இருந்தால் ஒரு வேளை உறவுச்சிக்கலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.எல்லாவற்றிர்க்கும் மேலே உண்மையாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு(தன் துணையின் விருப்பு வெறுப்புகளை அப்படியே ஏற்று) வாழ்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே. இன்னும் நிறைய எழுதுங்க..தீராதது உறவுச் சிக்கல்.

p said...

You should consider highlighting the text with some other colour than red. It is hard on the eyes.

//கதை என்னவென்று கேட்கக்கூடாது "தெரிந்தால் சொல்லமாட்டோமா'//
It is the statement Nagesh makes about the movie he supposed to make in 'காதலிக்க நேரமில்லை'.