***************
நாட்குறிப்பில் மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் சிதறலாய் கிடந்த எழுத்துக்கள். இவ்வரிகளில் சன்னாசியின் கையெழுத்து மாதிரி இல்லாத சில குறிப்புகளை ஜாதகக்காரர் எழுதியிருக்கலாம் அல்லது அங்கயர்கன்னியாக கூட இருக்கலாம்.
**********************
......... ஒரு மடையனுக்கு.... இல்லை ... ஒரு மடையனின் எழுத்துக்கள் யாருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றை அவன் எப்பொழுதும் உளறிய வண்ணம் உள்ளான். கேள் நண்பனே .. பொருளும் காமமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உச்ச இன்பமும் பணமும் அவற்றின் மீச்சிறு அலகுகள். அதிகாரம் பாலுணர்வையும் பணத்தையும் கண்ணாடித்துண்டுகளாக அரைத்து ஆசையென்னும் சாட்டையில் பூசியிருக்கிறது. வாழ்வெனும் ஒளி அந்த சாட்டையின் கண்ணாடிக்கலவையில் ஒளிர்கிறது. தொடர்ந்து அது மனித பூச்சிகளை தன்பால் இழுக்கிறது. மனிதனின் பிரக்ஞையால் உருவாகும் அதிகாரம் சூழலலால் நெய்யப்பட்டிருக்கிறது. இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது. நிகழ்தகவின் விளைவுகளையும் தற்செயல் தன்மையையும் ஆளுமை செய்யும் அளவுக்கு நாம் பயங்கரவாதிகள் ஆகிவிட்டிருக்கிறோம். நமது விஞ்ஞானகூடங்களில் இயற்கை செயற்கையாக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. .............................................
அதுசரி.. எதற்காக இப்படி எழுதுகிறேன்?
************
நிராதரவற்ற இவ்வேளையில் இருப்பு அர்த்தமற்றது என கொள்ளவேண்டாம் சன்னா. உற்றுநோக்கப்பட்ட ஒரு காட்சியாவது நேசம் மிக்கதாக இருக்கும். ஒருவேளை தனனைத்தானே முழுவதுமாக அழித்துவிடவும் கூடும். நிராதரவு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். பின் எப்போதும் உன் சுயம் குற்றவுணர்வு கொள்ளத்தொடங்கலாம். எனவே, சன்னா.. தேவையற்ற கணம் என ஒன்று கூட இல்லை. எதிர்மாறாக ஒவ்வொரு கணமும் தேவையற்றதாக இருக்கலாம். சாத்தியப்பாடுகள் பற்றி நாம் பேசத்தொடங்கினால், நாழிகை கழிவதே மீதம். மூச்சிழுத்து வெளியேற்றும் ஒவ்வொரு முறையும் நீ வாழ்கிறாய். உன் உடல் முழுதும் குருதி இளஞ்சூட்டுடன் பாய்ந்தலைகிறது. நீ பசியுணர்வாய். பசியடக்கும் ஒவ்வொரு கவளமும் உன் மனக்கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படும். உன்காமம் பசித்த வேங்கை போல குகை விட்டு வெளியேறும். இரை வேண்டி காடதிர உறுமும். அழியும் வரை காத்திருக்கப்போகிறாயா. மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது. வேறொரு இருப்புக்கு வேறு விசும்பு இது. மீண்டும் கேள்.. ஒவ்வொரு மரணத்திலும் முற்றும் முழுவதுமாக அழிந்துவிடும் இயக்கமிது. உனக்கிருப்பது இறந்தவனுக்கு இல்லை. மரணத்திற்கு நீ இருக்கிறாய். உனக்கு மரணம் இருக்கிறது. இறந்தவனுக்கிருப்பது உனக்கில்லை. பின் என் உன்னதம் மற்றும் உன்னதமின்மையைப் பற்றி போகம் கொள்கிறாய். கவனம். நான் யாரென்று உனக்குத்தெரியும். நீண்ட காலவெளியின் அனுபவம் எனக்கு உண்டு. நம்பிக்கைன்மையின் பெருந்திரள் நான். புணர்ச்சி யோகம். மெல்லிய தோல் கொண்டு என் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என் இருப்பு குற்றம். அது உன்னை கூசச்செய்யும். பேராபத்தின் குழந்தை நான். வேங்கையென உருவகிக்கும் இச்சை நான். என்னைக் கொல்ல உனது கற்கால ஆயுதம் போதாது. என்னைக்கொல்ல தந்திரமான ஆயுதம் தேடாதே. எளிமையாய் எதிர்நில். ஒரு வேளை அது உனக்குள்ளே இருக்கலாம். உபயோகிக்கத் தெரிந்தவனின் ஆயுதம் அடிமையென இயங்கும்.
*********************
மேகங்களின் அமைப்பை வரைமுறைப் படுத்தும் சாத்தியமின்மை தெரிந்தே வானம் பற்றிய குறிப்புகளை தொடங்குகிறேன். நிலக்காட்சியை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத வானம் ஒரு குட்டைநீரில் அடங்கிவிடும் என்பது வெறும் காட்சி தர்மம். புல்நுனியில் தொங்கும் ஒரு சொட்டு பனித்துளியில் நுழைந்துவிடும் மலையைப்பற்றி வானம் எப்பொழுதும் கவலை அடைவதில்லை. தன்னளவில் பெரிய வெளியை உருவாக்கி அதன் விளிம்புகளில் மேகங்களை அனுமதிக்கும் வானம் மேகத்தாலானது என சொல்வதற்கில்லை. பின் எப்படி மேகங்களின் அமைப்பை வானம் ஆளுமை கொள்ளும். இன்றைய மேகம் ஒரு ஐரோப்பிய பெண்ணாய் மருவி மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தது. அவள் கருநீல நிறத்தாலான பிரில் வைத்த அகன்ற பாவாடையும் பொழிவான வெண் சட்டையும் அணிந்திருந்தாள். தனது மிதிவண்டியில் முன்கூடையில் சில பூக்களை வைத்திருந்தாள். கணக்கரைவில் அவள் மீண்டும் வகையறியா மேகமானாள். பின்பு அவளைக் காணவில்லை. நான் மட்டுமே அங்கிருந்தேன். என் விளிம்பில் இனி அவள் வர வாய்ப்பில்லை. துக்கம் உள்ளது.
***************
கண்களை மூடி தன்னைத்தானே பலமுறை சுற்றினால் திசை மறக்கும் மீண்டும் கண் திறக்கும் போது. ஆனாலும் சொற்ப கணங்களில் மூளைஅடுக்குகள் மீட்டு விடுகிறது திசையறிவை. அவ்வளவு சுலபமாக அமைந்துவிட்டது இருப்பிடங்களின் தகவமைப்பு. பிரிதொருநாளின் கனவில் பெரும்பறவையொன்று என்னை தூக்கிப்பறந்தது. பதினோரு மலைகள், நான்கு பள்ளத்தாக்குகள், ஒரு பாலைவனம் மற்றும் முப்பத்துஏழு ஆறுகள் கடந்து ஒரு சிறிய கடலுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது என்னை. மூவுலகமும் அறிந்தது எனது நீச்சல் திறன். மேற்குலகில் வண்ணத்திப்பூச்சி வகையும் கிழக்கில் மல்லாந்த வகையும் மத்தியில் எனது மிதத்தல் வகையும் பெருமை. ஆனால் இது கடல். சமுத்திரங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டது. பாதைகள் நிரம்பியது. கடல் அப்படியல்ல. பெரும்பாலைவனம் ஒன்றின் தண்ணீர் திரிபு. திசைபற்றிய அறிவுமட்டுமே ஒரு நீச்சல்காரனின் பாதுகாப்பு. உணவு தேடும் சில சுறாக்களுக்கு என்னைப்பற்றிய அக்கறையில்லை என்பது எனக்கு பயத்தை அளித்தது. மேலும் திசையறிய ஒற்றைச் சூரியன் போதுமான பகல் அப்போது இல்லை. வெளுத்துக்கிடந்த அலையும் மீன்கள் சூரியன்படாத தகவலைச் சொல்லித்திரிந்தன. செய்வதறியாது மல்லாந்து மிதக்கத்தொடங்கினேன். நேர்பார்வையில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லச்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு விண்மீன்கள் தெரிந்தது. இவற்றில் எது என் திசை காட்டும். திசை பற்றிய அறிவு பார்வைக்கா புலனுக்கா. ஒரு சுறா என்மீது உமிழ்நீரை துப்பியது. தலைக்கனம் பிடித்த சுறாக்களின் மத்தியில் வாழ்வது இவ்வளவு சுலபமா என்ன. வெறும் உமிழ்நீரை தாங்கும் சக்தி மட்டும் போதுமா. கடல் நீரே அதை கழுவியும் சுத்தம் செய்கிறது. திசையறிய இச்சுறாக்கள் உதவுமா தெரியவில்லை. மீண்டும் விண்மீன்களை பார்த்தேன். அதிசயம். இடம் மாறியிருந்தன அவைகள். முதலில் இருந்ததும் இல்லாமல் இருந்தது. மூன்று லட்சம் விண்மீன்கள் காணாமல் போயிருந்தன. பதிலுக்கு மூன்றேமுக்கால் லட்சம் விண்மீன்கள் வேறு இடத்தில் தோன்றியிருந்தன. விளையாட்டு அற்புதமாய் இருந்தது. நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.
**************
வண்ணத்துப்பூச்சி நீச்சல் அடித்து வெளியேறினேன்.
**********************
2 comments:
இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது.
""இது குறிப்புகளாய் இருப்பதாக கூறப்படுகிறதா ? இல்லை உங்கள் கருதும் இதில் ஏற்றப்பட்டுள்ளதா? ""
மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது
சரி தான் .அதை சரி என்று உணரும் அளவு புத்தி வேண்டுமே
ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு .இதன் தொடர்ச்சி உடன் எழுதுங்கள்
நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.
தேடலும் கண்டு பிடிப்பும் எப்பொழுதும் ஆழ் மன பயமாக இருக்குமோ?
நீர் திரிபு அருமை
Post a Comment