13 August, 2010

மாறுதிசை

இதை ஜெகனின் தளத்திலிருந்து பார்த்த பிறகுதான் எழுதுகிறேன். கீழே எழுதப்பட்டிருக்கும் கதையின் கரு முன்பதிவுகளில் வந்திருந்தால் வருந்துகிறேன்.
**************************


ஓடு பாதையிலிருந்து பறக்கும் பாதைக்கு நிலை கொள்ள அவ்விமானம் எண்பத்தேழு விநாடிகளை எடுத்துக்கொண்டது. பணிப்பெண்ணின் குரலில் தங்களது இருக்கை கச்சைகளை தளர்த்தினார்கள் பயணிகள். வணிகவகுப்பில் ஹால் கிளமென்ட் தனது கைபேசியை எடுத்து எண்களை அழுத்தினான். எதிர்முனையில் தமிழ்வாணன் பதில் சொன்னான்.


"நாளை இரவு ஏழு இருபதுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.. ஹால்.. நான் உன்னை மணக்க அது தகுந்த நேரம்தான் இல்லையா.. வா இனிய பையா.. நமது எதிர்காலம் சென்னையின் கடற்கரையில் தொடங்கட்டும். என்ன தேனினிய அன்பே. இனிவரும் நாட்களில் உனக்கு தூங்க நேரமிருக்காது.. நன்றாக உறங்கிக்கொண்டு வா.. என்ன .. ஹா ... ஹா .. நாளை இரவு நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாம் இல்லை என்றால் இன்னும் இருநூற்று நாற்பத்து ஆறு வருடங்களுக்கு நம்மால் திருமணம் செய்து கொள்ள முடியாது.. உனக்குத்தான் தெரியுமே எனக்கு ஜென்மங்களின் மேல் நம்பிக்கை இல்லை என.."

விமானம் வடஅமெரிக்காவின் மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை எட்டு ஐம்பதுக்கு புறப்பட்டிருந்தது. 9219 நாட்டிகல் மைல்கள் கடந்து அது மறுநாள் காலை ஆறு ஐம்பதுக்கு சென்னை சர்வதேச முனையத்தில் தரை இறங்கும். 23 மணி நேர இடைநில்லாப்பயணம். ஹாலும் தமிழும் மூன்று வருட காதலர்கள். திருமணம் செய்ய முடிவு செய்ததும் ஹால் புளங்காகிதம் அடைந்து விட்டிருந்தான். ஒரு பாரம்பரிய திருமண முறையை அவர்கள் மேற்கொள்ள சென்னைக்கு வர முடிவு செய்து தமிழ் ஒரு மாதத்திற்கு முன்னமே சென்னை வந்து ஏற்பாடுகளை செய்யத்தொடங்கியிருந்தான். ஷாம்பைனின் இரண்டு பெரிசுகளை குடித்து விட்டு தூங்கத்தொடங்கினான் ஹால். நேரம் காலை ஒன்பது முப்பத்து ஐந்து.

அந்த நொடிக்கு சரியாய் 36 நேரங்களுக்கு முன்னாள்:

பூமியின் தேதி 19.09.2035.

பால்வீதியின் விளிம்பில் ஒரு சிறு வெடிப்பு நிகழ்ந்து இருபத்து ஏழு மைல் நீளமும், நாலு மைல் அகலமுமாய் கடும் அழுத்த அழுக்கு பாறை ஒன்று ஒன்றுமில்லாததிலிருந்து ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் விடுபட்டது. தொடர்ந்து அதன் வேகம் அதிகரித்தது. நாநோவினாடிகளில் அது ஒளியின் பதின்ம மடங்குகளை தொட்டுத் தொடர்ந்தது. அதன் இருப்பு துலக்கம் (transparant). பூமி இருப்பின் சொல்லவொண்ணா தற்செயல் போலவே வேறு எதிலும் இடித்துக்கொள்ளாமல் அது நேரடியாக வளிமண்டலத்தின் விளிம்பிலிருந்து பூமிக்கும் மேலே நிலவின் சுற்றுப்பாதையில் தாண்டி 666 மைல் தொலைவிலான ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருந்தது. பூமியினை அப்பாதையில் அந்த பாறை கடந்து சென்ற போது பூமியில் தேதி 22.09.2035. காலை ஆறு பதினைந்து. அந்த பாறையின் வேகம் மணிக்கு 786 ஒளி ஆண்டுகள்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹால் ஒரு கடுமையான உலுப்பலில் கண்விழித்தான் ஹால். விமானமே எதோ குழப்பத்தில் இருந்தது. என்ன நடந்தது என யாருக்கும் புரியவில்லை. நான்கு நிமிடங்கள் கழித்து விமானி தனது ஒலிபெருக்கியில் சொன்னார்: பயணிகளே.. நிலைமை என்னவென்று விளங்கவில்லை.. நான் இப்போது கீழே பார்ப்பது மெம்பிஷின் சர்வதேச விமான தளத்தை... அங்கு தரையிறக்க கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ள முயல்கிறேன்.. ம்ம் .. நான் நினைக்கிறேன் .. நாம் ஒரு நாளை தொலைத்து விட்டோமென்று.."

***********************

அடிக்க வராதீர்கள் சாமிகளா...

**********************

1 comment:

Aathira mullai said...

இது புதுமையான பயணம் சிறுகதையில்.. 24 மனி நேரத்தைத் தொலைத்தால் பரவாயில்லை.. 24 குரோம்சோம்களையும் தொலைக்காமல் இருந்தால் போதும் என்று ஆகியிருக்குமே.. அருமையான கதை.. முன்பு படித்தமாதிரி இல்லை..சுவையாக...