28 October, 2010

துரோகப்பறவை

குளிர்ந்த விடியலின் தேநீர் போல
பருகுகிறேன் எல்லோருக்குமான
துரோகத்தை. பகலின் வெம்பிய
வெயில் கிளையில்
துரோகப் பறவையென அமர்ந்த
என்னை பார்க்காதீர்கள்
என் திசை குரோதத்தின்
முடிவிலி. கனவுகளின் வழி
நுழையும் ஒன்றுமற்ற கற்றைமுடிகொத்து
வாசம் நான். விலகிக்கொல்லுங்கள்
என்னை அல்லது ஊளை கேட்டு
பிரகாசிக்கும் நிலவுக்கிரணம்
ஒன்றால் உங்களை சிதைத்துக்கொள்ளுங்கள்

நினைவுபடுத்துங்கள் நான்
ரணத்தை மொய்க்கும் நிணம் தோய்ந்த
ஈ என்பதை. கணந்தோறும் என் நாவு
குருதி நக்குகிறது உங்கள் வாழ்வெனும்
கையால் விரட்டி அடியுங்கள் என்னை
கவனம் ரணத்தின் மேல் பட்டு
விடக்கூடாது உங்கள் வாழ்வு.

ஒரு தேநீர் வேளையுடன்முடிந்து
போகும் சிறு ஏப்பம் நான். தாபமெனும்
மருந்துருண்டை தின்று ஜீரணித்து
விடுங்கள் என்னை. கழிவாக்கி
என்னை கொட்டிநிரப்ப இப்பிரபஞ்சம்
போதாதெனும் போது நீங்கள்
ஒரு குழந்தைக்கு குப்பைதொட்டி ஒன்றை
பரிசளியுங்கள்

பின்
எனது முன்பற்கள் தெரிய சிரிப்பதை
பார்க்காது போய் விடுங்கள்
பறந்து பறந்து ....

1 comment:

ராகவன் said...

அன்பு ஆதிரன்,

நல்லாயிருந்தது இந்த கவிதை. துரோகத்தை மறக்க கேக்கிற கவிதை, முதல் பாரா மிக அருமை... பின் வருவது வேண்டும் என்று நீட்டியது போல இருக்கிறது.

அன்புடன்
ராகவன்