30 November, 2010

மறந்தது காற்று திரும்பி வர....

நண்ப
சொல்லியவற்றை விட சொல்லாமல்போனததிகம் என திரும்ப வந்த காற்றுக்கு முன்னால் அடைத்துவிட்டிருந்தேன் கதவுகளை. கதவுகளைத்திறக்க ஒரு காதமேனும் வெளியேற வேண்டும் நான். மேலும் இனி அந்த கதவுகள் திறக்கப்படுவதற்கும் ஏற்றவையல்ல. ஒலிபுகாத மெல்லாடியால் குழைத்துப்பூசப்பட்ட அக்கதவுகள் திறக்கப்பட காற்று குடித்தாகவேண்டும் ஒரு கடல் நிறைய உப்பை. அல்லது தனது ஸ்தூல பிரதியை கொண்டிருக்கும் கதவுகளை உடைக்க துரோகத்தினாலான நீண்ட சாவியை உபயோகிக்கத்தெரிந்திருக்க வேண்டும் மீண்டும். மீண்டும் துரோகம் என்வென்று அறியாத அல்லது உப்பைக் குடிக்க முடியாத காற்றிற்கு உண்மையில் என்வசம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்பதின் துயரத்தினை அறைந்து வைத்திருக்கிறேன் எனது சமையலறைச் சுவற்றில் அன்பாலான ஆணிகொண்டு.

நண்ப

பசித்தலையும் கிடைபிரிந்த செம்மறியின் தனிமைக் கண்களுக்குள் விழுந்த என் ஏசுவின் கைகளை வெட்டிக்கொண்டு போனபின் விழிகொள் வியப்பின் விசமுறிக் கிழவி தனதான சூன்யத்தில் தோற்றுப்போனாள். ஏசுவின் காயத்திற்கு மருந்திட இடயனைத்தேடி கதறுகிற செம்மறியை தாங்கி நிற்கிறது சமவெளிப் புற்கள். ஒற்றைகுழலில் உலகைக்குடித்து உபரியாய் வெளியேறும் இடையனின் சங்கீதத்தின் மாயவொலியில் வளரும் கைகள் இரண்டையும் விரித்து வாரியணைக்கிறார் ஏசு உலகமாய் சுருங்கிப்போன செம்மறியை. பார்த்துக்கொண்டிருந்த உன்னிடம் இசைக்க கொடுத்தேன் ஊர்குருவிகளின் கிலுப்பையை. இரு கைகொண்டு நடனத்தை தொடங்குகையில் குறுக்கிட மறந்தது காற்று.

நண்ப

காற்றை அழைத்துவர நீ சென்ற வெகுநேரம் கழித்துதான் மூடினேன் என் கதவுகளை.

***************************

No comments: