21 December, 2010

வானவில்வண்ண மின்னல் 10


அசந்துறங்கிய தேஜாவை எழுப்ப மனமில்லாமல் அவளுக்கான குறிப்பை எழுதத்தொடங்கினேன்:

நான் ஆண்தான். ஆனாலும் சொல்கிற விஷயத்தை முழுதாய் கேட்டு அதிலிருக்கும் ஆணின் பார்வையைப் பற்றி கேட்டால் நன்றாய் இருக்கும் பதில் சொல்வதற்கு. சேர்ந்து வாழுதலுக்கு இந்திய தீபகற்பத்தில் சட்ட அங்கீகாரம் இருக்கிறது. அவர்கள் பிரிவதற்கும் அவர்களுக்கிடையேயான பிரச்சைனைகளுக்கும் உதவ நேரடியான சட்டம் ஏதுமில்லை என்றாலும் அனைத்து விதமான பிரச்சனைகளும் உதவ சட்டம் இருக்கிறது.

பொதுவாய் பார்த்தால் சேர்ந்து வாழ்தல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவை உள்ளடக்கியதான அனைத்து குடும்பப்பண்புகளையும் கொண்ட திருமணச்சடங்கு மற்றும் தாலி போன்ற அடையாளங்கள் மட்டும் இல்லாமல் போகிற ஒரு உறவு முறை என்று அறிந்துள்ளோம். ஆனால் உண்மை வேறு. அதன் தன்மையும் வேறு. அதைப் புரிந்துகொள்ளாமல் இவ்வுறவு முறையை ஒரு திருமண அமைப்பை போலி செய்தால் பிரச்சனை வராமல் எப்படி இருக்கும்?

என்ன ஏது என்று அறியாத, நுகர்வுக் கிறக்கத்தில் அதீத பணவரவுகளைக் கொண்ட இளையவர்களிடம் ஒரு உயர்ரக style -ஆகவே இம்மாதிரியான உறவுகள் அமையும்போது அவர்களின் உறவுக்காலங்கள் m.30 மற்றும் a.60 ஆகிப்போவது உறுதி. ஆக கடுமையான கலாச்சார ஊடுருவல், இளவயது வேலைவாய்ப்பு மற்றும் அதிகப்படியான பணவரவு போன்றவைகளால் இப்பொழுது கிளம்பத் தலைப்பட்டிருக்கும் இச்சேர்ந்து வாழும் முறை.. ஒரு திருமண முறையின் பகடி/போலி அல்லது நகல். அவற்றில் ஒரு பாதுகாப்பும் கிடையாது. இருபாலருக்கும் இது பொருந்தும். பொம்பளைக்கு என்ன பாதுகாப்பு என்கிற கேள்விக்கு சற்றும் குறைந்ததல்ல ஆம்பளைக்கு என்ன பாதுகாப்பு என்கிற கேள்வியும். இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு அவன் மேல் கற்பழிப்பு வழக்கு தொடுத்த மகராசியையும் மூன்றாவது நாளில் நண்பனை அழைத்துவந்து 'விருந்து' கொடுக்க சொன்ன மகராசனையும் ஊடகம் அறியும்.

அப்படிஎன்றால் நான் விதந்தோதும் சேர்ந்து வாழ்தல் முறை என்றால் என்ன:

அதற்கு முதலில் குடும்ப முறையை - என்கிற கருத்தாக்கத்தை மனதிலிருந்து முதலில் அகற்றவேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஆணும் (doctor) ஒரு பெண்ணும் (lawyer) காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரும் திருமணம் தேவையில்லை என்றும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழவும் முடிவு செய்கிறார்கள். வாழத்தொடங்குகிரார்கள். இருவரும் தமது பணிகளை சிறப்பாக செய்யத்தொடங்குகிரார்கள். வீட்டிற்கு இரண்டு சாவிகள். யார் முதலில் வந்தாலும் சமைக்க வேண்டும் . பணி ஆட்கள் இருந்தால் இந்த பிரச்சனையும் இல்லை. வர இயலாத நாட்களில் கடைகளில் உண்ணலாம். ஓய்வு நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் இருவரும் தமது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் இந்த இலகுவாக போருந்திபோகிற வாழ்க்கைச்சூழலில் அவர்களுக்கு மூன்றுவித சுதந்திரங்கள் வாழ்வை மேலும் இனிதாக்குகின்றன.

ஒன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சுதந்திரம். குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். குழந்தைகள் வேண்டாம் என்றால் நல்லது. குழந்தைகள் கிடைக்காத நாடா இது?

இரண்டாவதாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அதை வளர்ப்பது எப்படி என்று ஒரு வெளிப்படையான உரையாடலை நிகழ்த்தும் சுதந்திரம். இதன் சாத்தியப்பாடுகள் அளப்பரிய உணர்வு பரிமாற்றத்தை அளிக்க வல்லது.

மூன்றாவதாக உடலுறவுத் தேர்வு சுதந்திரம். இது யாரும் யாருடனும் என்கிற அடிமட்ட சிந்தனை இல்லை. மாறாக தங்களுக்கான தேவைகளை தங்களுக்குள் தேர்வு செய்து கொள்ளலாம். வேறோருவருடனான பாலுறவு என்பது தனிமனித உரிமை. தாகத்திற்கு ஒரு செம்பு தண்ணீர் குடிப்பதற்கும் சட்டரீதியாக வயதுக்கு வந்த ஆரோக்கியமான ஆணும் பெண்ணும் அவர்கள் இருக்கிற சூழலில் விருப்பட்டு உறவு வைத்துக் கொள்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அதன் செயல்முறைகள்தான் சற்று வித்தியாசமானவை!

ஆணாதிக்கம்/பெண்ணியம் போன்ற கருத்தாக்கங்களையும் இங்கு கழற்றி எரிந்து விட வேண்டும். நாம் அனைவரும் போலிகள். நமைச் சுற்றி இருப்பதும் போலியின் நகல்கள். ஆடிகளில் ஒளிக்கற்றை ஆட்டங்களின் பிரதியாக்கங்களில் வாழும் நம் கண்களின் அனுமானதூரத்தை விடவும் அனைத்தும் முன்னால் இருக்கிறது. நம்பிக்கை என்பது மிகப் பெரிய பொய். இங்கு ஒருவருக்கொருவர் தியாகம் செய்துதான் வாழ்கிறார்கள். தியாகம் என்பதற்கு இங்கு விட்டுக் கொடுத்தல் என்கிற நளினமான சொல்லை உபயோகிக்கிறோம்.

அனைத்தையும் பணம் தீர்மானித்துவிடும் . அன்பு காதல் போன்றவைகள் எல்லாம் பணத்தின் கண்ணுக்குத்தெரியா அடிமைகள். குடும்ப / சமூக கருத்தாக்கங்களின் குப்பைகளையும் நுகர்வுப்பண்பாடு என்கிற கழிசடையையும் தூக்கி வீசிவிட்டு சிந்திக்கும் ஒரு மனித மனம் இந்த தூய உறவை காதல் என்னும் கண்ணாடியில் கண்டுகொள்ளும்.

"என்ன மகி எழுதிக்கிட்டு இருக்க .." என்றவாறு வந்தாள் தேஜா.

"ஒண்ணுமில்ல .. உனக்கு சொல்லாம்முனுதான் எழுதினேன்.." என்றாவாறு எழுதிய குறிப்புக்காகிதத்தை கிழித்துப்போட்டேன்.

பின்பு நிதானமாக சொல்லத்தொடங்கினேன் எழுதியவற்றை அவளிடம்.

********************************

20 December, 2010

ஒரு குறுகிய பிணிக்காலம்

உடம்பெல்லாம் மாரியாத்தாள் உழுது போட்டிருக்கிறாள்! பார்பதற்கு நட்சத்திரங்களும் கிரகங்களும் சிதறிக்கிடக்கும் இருள் வானமாய் கிடக்கிறது. ஐந்தாம் நாள் இன்றுதான் சற்று வலியற்ற விரலசைவு சாத்தியமாகியது. இது அம்மை அல்ல வெம்மை. எனது ஊர் மார்கழி கொஞ்சம் காப்பாற்றியது. சும்மாவே நம்ம மூஞ்சி அப்பிடி இருக்கும்.. இதில் இன்ச்சுக்கு ஏழு புண்ணு.. சகிக்கவில்லை! ஆனால் வீட்டில் கிடைக்கும் கவனிப்புக்காகவே இப்படியே கிடக்கலாம் போல.

மற்றபடி இந்த வலிவரவால் எனக்கு இரண்டு நல்லதுகள்: ஒன்று பதினைந்து நாட்கள் விடுப்பு. இரண்டாவது உடலின் தொடர்வலி அனுபவம். இது ஒரு வகையான பிரக்ஞை அற்ற தத்துவப் புரிதலுக்கு வழிசெய்கிறது. பின்னிரவின் பேரமைதியில் கடும் மவுனத்தை கேட்க்கும் பயங்கர அனுபவம்..

நல்லதுக்குத்தான் எல்லாமுமே.

15 December, 2010

வானவில் வண்ண மின்னல் 9

தேஜா கேட்டாள், "மகி ஆம்பளைங்களும் பொம்பளைகளும் கல்யாணம் செய்யாம ஒண்ணா வாழுறாங்கலாமே.." . எனக்கு கௌசல்யாவின் சமீபத்திய பதிவு ஞாபகம் வந்தது. சேர்ந்து வாழும் முறைக்கு ஒரு எதிர்மறையான கண்ணோட்டம் கொண்ட பதிவு. ஆனாலும் பிரச்சனைகளை தெளிவாக சொல்ல முயன்றிருக்கிறார். (இதில் நான் சொல்லும் எனது கருத்து அவரின் பதிவுக்கு எதிர்பதிவாக இருக்கும்). என்னைப்பொருத்தவரைக்கும் இந்த முறை மிகவும் சிக்கலான காலத்தில் உருவாகி இருக்கிறது.

"எப்பயும் போல பில்ட் அப் தானா.."

"லைட்டா ..! ஆனாலும் சொல்றத கேளு.. இந்த சேர்ந்து வாழ்தல் முறை இப்போதைக்கு சதவீதப்படி இந்தியாவில ஆரம்ப நிலையில இருக்கு. சித்தாந்தப்படி (theoritically) சேர்ந்து வாழ்தல் முறை மனித உறவுகளில் மிக அற்புதமான ஒன்று. நடைமுறைக்கு வரும்போது அதன் அனைத்துக் கூறுகளும் குழைந்து போவதற்கு இன்றைய குடும்ப அமைப்பினுள் இருந்து கொண்டு இந்த முறையை ஒப்பிட்டு பார்ப்பதுதான். .."

"இரு .. இரு.. குடும்ப முறையா.. அப்படின்னா ..?"

"அதசொல்லத்தானே இந்த தொடர்பதிவு.. நம்ம நாட்டில சேர்ந்து வாழ்தல் முறைக்கு வேறொரு பாரம்பரிய அர்த்தம் இருக்கு.. கூட்டுக் குடும்ப முறை.. அறியாமை கட்டுப்பாடுகள் ஆணாதிக்க தன்மைகளோட சுருங்கிய வட்டத்தில பெருங்குடும்பமா வாழ்கிற முறை. இதில் தீமைகள் பெருமளவு இல்லையென்றாலும் நன்மைகள் மிகக் குறைவு. அதில் எனக்கு தெரிந்து ஒரு நல்ல விஷயம் பெண்களுக்கு இடையேயான நட்பும் கதைகளும்.."

"கதைகள்னா.. குடும்ப பிரச்சனைகளா..?"

"எல்லாமும்தான்.. கதைகளும் பாட்டுகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்வு முறையது..ஆனா படிப்படியா இந்த கூட்டுக் குடும்ப முறை காலாவதி ஆனதுக்கும் பெரும்பங்கு பெண்களுக்குத்தான்.. தனிக்குடித்தனம் கெட்ட வார்த்தையா இருந்த காலம் போய் வேறு வழியில்லாத நிலைக்கு வந்து விட்டது.. (மாமியார்களுக்கு இன்னமும் இது ஏமாற்ற உச்ச நிலைதான்). வரிசைக்கிரமப்படி பார்த்தால் அடுத்தது சேர்ந்து வாழ்தல் முறைக்குத்தான் மனிதகுல பாதை செல்கிறது என்று எண்ணினாலும் பிரச்சனை அத்தனை ஒன்றும் எளிதானதல்ல. அதற்கான தடைக்கற்கள் ஒரு பாடு உண்டு.. "

"பாடுனா..?"

"கிலோ கணக்குல என்று அர்த்தம் .. குறுக்க வராதடா.. ஒரு flow கெடுதில்ல.. தடைகளின் மொத்த காரணம் நான் என்ன நினைக்கிறேன்னா மனிதர்களின் மனத்திலிருக்கிற இறுகிப்போன கருத்துப் பாறைகள்தான்.. வரலாறு என்பதை அறிய வழியில்லாத அதை அறிவதற்கு முறையான வழிமுறைகள் இருந்தும அதைப்பற்றிய பிரக்ஞையை அறிய விடாத ஒரு கேடுகெட்ட சமுதாயம் உருவாகி வெகு காலமாகிவிட்டது.."

"ஏய்..என்னது இது சாதாரணமா சொல்ல வரவே வராதா உனக்கு.. ?"

"கவனமா கேளு இல்ல எழுதிவெச்சு திரும்ப திரும்ப படிச்சுப் பாரு.. புரியும்.. இன்றைய மனித மனம் கருத்துக் கற்களால் கட்டப்பட்ட வெற்றுக்கட்டிடம்.. ஒரு வாக்கியம் சொல்றேன் "குடும்ப உறவு என்பது உற்பத்தி உறவுதான்". எனக்கும் புரியாத வாக்கியமாதான் இருந்தது .. புரிஞ்சமாதிரி இருந்தப்போ நின்னுகிட்டிருந்த பூமி கழண்டுபோனது மாதிரி உணர்வு.. "

"எப்படி புரிஞ்சுக்கிட்ட.."

"மொத்தமா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லவே முடியாது.. ஆனா புரிஞ்சுகிறதுக்கு ரொம்ப தூரம் போக வேண்டியதில்ல .. புத்தகங்கள் கிடைக்கிற தூரம்தான்.. "

"books .. செம bore .. மகி.."

"யாரையாவது படிக்கச்சொல்லி கேளு.. இப்ப நான் சொல்றத கவனி .. இங்க ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் சேர்ந்து வாழறாங்க.. படிக்கிறதுக்காகவும் வேலை சூழல் காரணமாகவும்... உனக்கு எத்தின வயசு தேஜா..?"

"பதினஞ்சு முடிஞ்சு இப்பதான் இருபது நாளாகுது.. ஏன்..?"

"தப்பில்ல இங்க பதிமூணு வயசு பொம்பளைங்க குழந்த பெத்துகிற கொடுமைகள் இன்னும் மாறல.. நான் சொன்ன மாதிரி ஆணும் ஆணும் சேர்ந்தோ பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ ஒண்ணா வீட்டுல வாழுறது சட்டப்படி தப்பில்லை.. ஆனா அவர்களுக்கிடையே ஒரு பால் புணர்ச்சி உறவு இருக்கும் பட்சத்தில அத பத்தின புகாரின் பேருல அரசாங்கம் சட்ட ரீர்தியான நடவடிக்கை எடுக்கும்.. அதே சமயத்தில ஒரு ஆணும் பெண்ணும் தனியா கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழ்ந்தா சட்டப்படி தப்பு இல்ல.. வயசு மட்டும் 18 ஆகியிருக்கணும்.. யாராவது புகார் பண்ணினாலும் நடவடிக்கை எடுக்க முடியாது.. "

"சுவாரஷ்யமா இருக்கே.."

"ஆமாம்.. அதனால குடும்ப அமைப்புக்கும் சேர்ந்து வாழறதுக்கும் இருக்கிற வித்தியாம் சடங்குகளும் தாலியும் தான் அப்படின்னு பொதுவா நினைச்சுக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை இப்படி ரெண்டையும் ஒப்பிட்டு பாத்தோம்னா உண்மையான சேர்ந்து வாழ்தல் முறையோடட அற்புதத்த புரிஞ்சுக்க முடியாத போகும்.. "

"நான் ஒன்னு கேக்கவா மகி.. பெரியமனுசத்தனமா இருக்கும்.. கோச்சுக்காத.. நீ ஆம்பள இப்படித்தான் சொல்லுவ .. ".

"பின்னிட்ட போ.. இதப்பத்தி நான் தொடர்ந்து பேசுறேன்.. இப்போ நான் போகணும்.. "

"ங்கோயாள தப்பிக்கிற .. இல்ல..ஒழுக்கமா உண்மைய சொல்லு.." என்றார் தேஜா.

*********

08 December, 2010

பூனையென்பது கடலில்லை.

நண்ப

வெயிலற்ற மதியமொன்றின் அடர்வாகனச் சாலையோரம் கேட்க நேர்ந்த ஒரு பூனையின் விளிப்பு எல்லாம்வல்ல மரணத்தின் திசை மாற்றியது. நீயாக இல்லாத உன்னை பகடிசெயும் குரல் எப்படி வாய்த்தது அப்பெண் பூனைக்கு என அறிய நேர்ந்தபோது இரண்டு மதில்களுக்கு இடையில் வாலைத்தூக்கியபடி நடந்துதான் சென்றது என்னால் தொடர முடியாதொலைவை கடந்து. தரையில் நடக்கும் பூனையை மதில்மேல் நிறுத்தும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டிருக்கும் உன்னிடம் எனக்கு கேள்விகள் கிடையாது என்றாலும் என்னிடம் ஒரு சுவரை கட்டி எழுப்பும் வரைபடம் உண்டு. வெளியால் ஆன சுவர்.

நண்ப

உடலில் இருந்து மருத்துவன் ஒருவனால் கவ்வை கொண்டு வெளியே எடுக்கப்பட்ட உலோக ரவை போலதென் இருப்பு. உடனடிப் பயன் எதுவும் என்னிடமில்லை என அறிந்தே அப்பூனை அழைக்கிறது தனத்தான உயிரறுக்கும் குரலில். பூனையின் குரலென சொன்னாலும் நானும் நாம் நடக்கும் நடைபாதைப் புல்லும் கள்மரம் விலகி அமரும் புள்ளும் அறியும் அது உன் குரலென்று.

நண்ப

நீ மதிலாகிறாய் நீ பூனையாகிறாய் நீ பூனையின் குரலாகிறாய் மதிலேராமல் தரையில் நிதானமாய் நடக்கும் பூனையின் வாழ்வுமாகிறாய். என்னை சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களும் பூனைகளாய் மாறித் துரத்த சந்தில் நடக்கும் ஒற்றைப் பூனை குட்டிப் பல்சராய் மாறி ஹாரன் அடித்து விலகச்சொல்லி வழி கேட்கிறது. நான் அருகிலிருக்கும் கடலுக்குள் ஓடுகிறேன் என்னை காப்பாற்றிக்கொள்ள நீ ஒரு போதும் கடல் ஆக மாட்டாய் என அறிந்தவாறு..