சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான செம்பாலத்தின் படத்தை கொண்ட ஒரு நாள்காட்டியும் பழைய வகையான - மணிக்கொருதரம் ஒரு மரங்கொத்தி தனது அலகால் தட்டி ஒலி எழுப்புவதுபோன்ற - கடிகாரமும் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. மேசையில் ஒரு கோப்பை நிறைய பச்சை தேநீர் இருந்தது. கோப்பையை தொட்டேன். அது இன்னும் தனது உஷ்ணத்தை இழக்கவில்லை. அடுப்பில் கரி கங்குத்துண்டுகளாய் புகைந்து கொண்டிருந்தது. அறையில் இரண்டு மெத்தைகள் இருந்தன. ஒன்று அகலமாகவும் மற்றொன்று சற்று குறுகியும் இருந்தது. குறுகிய மேத்தைமேன் பூப்போட்ட பாவாடை ஒன்று கிடந்தது. மகளுடையது. நான் குறுகிய மெத்தையை தேர்ந்தெடுத்தேன். அதில் படுத்துக்கொண்டு துருபிடித்த மேல் சுவரை பார்த்தேன். கடந்த சில மணிநேரங்களை பற்றி யோசித்தேன். எதிலும் அக்கறை செலுத்த முடியாதளவுக்கு அலுப்பாய் உணர்ந்தேன். மேலும் கடும் குளிராகவும் இருந்தது.. வானத்திலிருக்கும் முறையில்லாமல் பிறந்த கடவுளே.. நான் ஈரமான மேல்சுவர் போன்ற கடும் குளிரை உணர்ந்தேன்.
ஒரு முழு மாதம் கடந்தபின்னும் யாரும் வரவில்லை. யாருமற்ற அவ்வீட்டிற்கு வருகைதரும் ஒரே ஆள் நானாகத்தான் இருந்தேன். தினமும் இரவில் செலவில்லாமல் அங்கு உறங்கினேன். மாத முடிவில் எனக்கொரு வேலையும் தங்குவதற்கு புதிய இடமும் கிடைத்தன.
இஞ்சி மலையை விட்டு வெளியேறி எனது வலது காலை வைத்தவுடன் எனது இடதுகாலும் என்னுடன் இணைந்து கொண்டது. நாலு வருஷம் ஆகிப்போனது. இந்த நாலு வருடங்களில் கிட்டங்கியின் இருள்மூலையில் மறந்து விடப்பட்ட உதிரி நாற்காலி போல இருந்தேன். பீஜிங் - ல் எனக்கு முதலில் கிடைத்த வேலை தினசரி மக்கள் விடுதியில் துப்புரவு பணி. வரண்டாவையும் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அறைகளை சுத்தம் செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை. நான்கு துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து எனக்கு ஒரு படுக்கையை ஒதுக்கியிருந்தார்கள். ஏறக்குறைய ஒரு வருடம் அந்த வேலையில் ஒட்டியிருந்தேன். பிறகு பிளாஸ்டிக் துப்பாகிகளையும் விமானங்களையும் தயாரிக்கும் அரசு பொம்மை தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் பெண்கள் பணி புந்தார்கள். அந்த கூட்டத்தில் ஏற்படும் சத்தைதையும் அறைகளில் வெளியேறும் கழிவு வாடையையும் என்னால் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான் அந்த வேலையையும் விட்டொழித்தேன். அன்றிலிருந்து பலவிதமான வேலைகள் செய்தேன். தகர பாத்திரம் செய்யும் தொழிற்சாலையில் அதன் இயந்திரத்தை கண்காணிக்கும் வேலையும் அதிலொன்றாய் இருந்தது. கடைசியாக நான் ஒரு வேலையில் சேர்ந்தேன். திரையரங்கத்தில் துப்பரவு செய்யும் பணி. 'இளம் முன்னோடிகள்' என்ற அந்த திரையரங்கில் பெயருக்கு ஏற்ற மாதிரி அல்லாமல் சீன தற்காப்புக் கலை சினிமாக்களையே ஓட்டினார்கள். துறவிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்கிற வகையான திரைப்படங்கள் அவை. படம் முடிந்த ஒவ்வொரு தடவையும் அரங்கினுள் சிதறிக்கிடக்கும் கரும்பு சக்கைகள், பாதி தின்ற கோழிக்கால்கள், நிலக்கடலை தொலிகள், பழ விதைகள் மற்றும் பலவகையான கழிவுகளை - சில நேரங்களில் வேகவைத்த தவளைகள் கூட - கூட்டி துடைக்கவேண்டும். இருந்தாலும் எனக்கு இந்த வேலை பிடிக்க தொடங்கியிருந்தது. ப்ரொஜெக்டர் அறையில் கிடந்த ஒரு உடைந்த மேசையில் படுத்துக்கொள்வேன். தினமும் சினிமா பார்ப்பதும் மக்கள் மறந்து விட்டு செல்லும் பொருட்களை வைத்துக்கொள்வதும் இந்த வேலையில் எனக்கு கிடைத்த கூடுதல் விஷயங்கள். ஒரு நாள் நான் ஆங்கில அகராதியை கண்டெடுத்தேன். கொந்தளிப்பான கண்டுபிடிப்பு அது. ஒரு ஷாங்கை மாணவன் - பெயர் நினைவில்லை - அகராதி முழுவதையும் மனப்பாடமாக ஒப்புவித்து ஹார்வர்ட் பலகலைகழகத்தில் இடம் பிடித்தது ஞாபகத்திற்கு வந்தது.. யார்கண்டது இந்த அகராதி எனக்கும் அந்த உலகத்திற்கு செல்ல வைக்கும் ஒரு கடவுச்சீட்டாக இருக்கக்கூடும்தானே.. போகட்டும் நான் அதிலிருந்து வார்த்தைகளை படிக்கத்தொடங்கினேன். சொல்கிற அளவுக்கு அதைப்படிப்பது சிரமமாக இருக்கவில்லை என்றாலும் படிப்பது எனக்கு அலுப்பை வரவழைத்தது. அதை படிப்பதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும் என்னால் அரங்கத்திற்கு வரும் வெளிநாட்டு நபர்களுடன் சில வார்த்தைகள் பேச அது எனக்கு உதவியது. எனக்கு அந்த திரையரங்கம் வாழ்வதற்கு உகந்த இடமாக பட்டது. எனக்கு கிடைத்த உபரி பணத்தைஎல்லாம் சினிமா பத்திரிக்கைகள் வாங்கவும் வேறு அரங்குகளுக்கு சென்று புதிய சினிமாக்களை பார்க்கவும் செலவு செய்தேன்.
அந்த நாட்களில் எனக்கு ஒரு முக்கிய அனுபவம் நிகழ்ந்தது. நான் ஒரு திரைப்பட உதவி இயக்குனரை சந்தித்தேன். அரங்கினுள் தொலைந்து போன குடையை கண்டுபிடிக்க உதவினேன். அவனது தோழி, ஷேன்சன் என்கிற ஊருக்கு போய்விட்டதாகவும் அவள் போகும் போது அந்த குடையை பரிசாக தந்து சென்றாள் என்றும் சொன்னான். அந்த குடை அவளது பிரிவின் பரிசு அதனால் வியப்பொன்றும் எனக்கு ஏற்படவில்லை. அவளைப்பற்றி பேசும்போது அவனது குரல் துயரத்தில் தோய்ந்திருந்தது. பென்சில் போல ஒல்லியாகவும் மிலிடரி கட் முடியலங்காரமும் சந்தையில் கிடைக்கக்கூடிய மலிவான சிவப்புநிற வி கழுத்து விவசாயிகள் அணியும் ச்வட்டரை அணிந்திருந்த அந்த சோகமான குடை மனிதனுக்கு எனது தொலைபேசி எண்ணை எதற்காககொடுத்தேன் என்று விளங்கவில்லை. அதற்காக நான் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ள வில்லை. அவன் வேலை பார்த்த படங்களின் நடிகர்களை - காங் லி, சங் எமோவ், சென் கைஜ் - எனக்கு பிடித்தமானவர்களும் கூட - பற்றி பேசிக்கொண்டிருந்தான். மேலும் அவன் பார்பதற்கு திருடனைப் போலவோ அல்லது பொய் சொல்பவனைப் போலவோ தெரியவில்லை. நான் அவனிடம் எனது அடையாள, அரங்க, கைபேசி, தொலைபேசி, எனது அடுத்தவீட்டு மனிதரின் எண்களை சொன்னேன். அதை வாங்கிக்கொண்டு ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பீஜிங் பிலிம் ஸ்டுடியோ விற்கு போகுமாறு சொன்னான்.
ஒன்றுக்கும் உதவாத பழைய குடையை அவனிடம் திரும்ப கொடுத்த ஒரு மாதத்திற்கு பிறகு நான் பீஜிங் பிலிம் ஸ்டூடியோவில் ஒரு உதிரி நடிகையாக நாளொன்றுக்கு இருபது யோன் சம்பாதிக்கத்தொடங்கினேன். ஒரு குடை எனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சாவியாக இருக்கும் என்று யார் கண்டது..?
**************