22 May, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 1

துயர் மிகுந்த நிலவொன்றை
குடிக்கிறான் ததாகன் தன் விரல்களில் முளைக்கத்தொடங்கும் வேர்களை மறைக்கவொன்னாமல். தன்னிடம்
உதிர்ந்த சொல் ஒன்று பச்சையமாய்
படரும் உடலை என்ன செய்வதென்று
அறியாமல் அவன் விழுங்கும் பாழ்
வெளிச்சம் பழுப்பேற்றுகிறது முகத்தை
சலிப்பேறிய இச்சையுடன் பத்மத்திலமரும்
அவனது ப்ருஷ்டதிலிருந்து நிலம்
துளைக்கிறது முதல் வேர். சொற்களற்ற
கணத்தில் தத்துவம் அவனை மரமாக்குகிறது
நிதானமாய் வளரத்தொடங்கிய விருட்சத்தில்
மறைகிறது பேராசை கொண்ட உடல்
காலத்தின் அடர்த்தியை சூழ் கொள்கிறது
பெருவிருட்சதின் மடி
பின் தினமந்தியில் வரும் மரங்கொத்தியை
அதன் அலகின் கொத்தலில் எழும் ஒலியை
யசோதரையின் முத்த சாயலை
துரோகமாக்கி
இடது கையில் மறைத்து
வலதுகை ஆள்காட்டி விரலை
பூமியில் புதைக்கிறான்

விளைகிறது நிழல் வண்ண ஞானம்.....

3 comments:

க. சீ. சிவக்குமார் said...

சூல் கொள்கிறது என்பதைவிடவும் நல்லா இருக்கே... சூழ் கொள்கிறது என்பது

adhiran said...

சூழ் தான் அது சூல் அல்ல சிவா..

க. சீ. சிவக்குமார் said...

ம(ரத்த)டி அல்லது மரமுழுமை மடியாக ஆகும் பொழுது பழக்கப்பட்ட சூழலியல் மனம் /சூழ்/ என்று கொள்ளாமல் சூல் எனக் கொண்டுவிட்டது.

மொழியின் ஒளி வேகத்தில் நீ கொள்ளும் பிழைகளையும் கருதி அது அவ்வாறாக இருக்குமோ என எண்ணிவிட்டேன்.

பிழையற்று எழுதி விடுவேன் என யார்தான் சூள் உரைக்க முடியும்.
(ஒரு ஆளைத் தவிர...)