03 March, 2016

சிறுகதை


சலனம் 

கண்ணாடியைப் பார்த்தவுடன் சப்பென்று போய்விட்டது நந்தினிக்கு. அந்த உணர்வை எப்படி சொல்வது என்று புரியவில்லை. பெரிசாக இல்லையென்றாலும் கடைக்கு வரும் அத்தனை ஆம்பளைகளுக்கும் பார்வை தடுமாறும்படி எடுப்பாகத்தான் இருக்கும். ”எழா.. எனக்குத்தானழா.. கடிச்சு திங்கட்டுமா.. பப்ளிமாசு.. பப்ளிமாசு..” பனிரெண்டு வருடங்களாக சிவனேசனுக்கு விருப்பமாய் இருந்த பப்ளிமாசுகளில் ஒன்றை அறுத்து எடுத்து விட்டார்கள். காயக் கட்டைப் பிரிக்க வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை நாளுக்குப் பின் குளிக்கும்போது சொம்பு நீரைத் தூக்கமுடியாத அளவுக்கு தோள்பட்டையில் வலித்தது. குனிந்து நெஞ்சுக்கூட்டைப் பார்க்கவே ஆயாசமாக இருந்தது. எதையுமே யோசிக்கமாட்டாமல் குறுக்காக விழுந்த காயத்தழும்பை மெலிதாகத் தடவினாள். சணல் சரடு ஒன்றை தொட்டுப்பார்ப்பது போல அவளது விரல்கள் ஒரு நடுக்கத்தை உணர்ந்தது. ’துணைக்கு மாயக்காளை கூப்டவா..’ என்றவனிடம் வேணாம் மாமா நானே குளிச்சுக்கிறேன்..” என்றாள்

மருந்து வாசனையுடன் நிறைய அழுக்கு வெளியேறியது. வலியைப் பொறுத்து மாத்திரைகளை போடவேண்டுமாம். இந்த வலி இப்படியே இருக்குமா.. குறையுமா கூடுமா தெரியவில்லை. மூன்று கிலோ மைதாவை முக்கால் மணி நேரத்தில் பிசைந்து உருட்டி அடுக்கிவிடுவாள். கங்கு மேல் கொதிக்கும் அகலமான இரும்பு தோசைச் சட்டியில் உருளையைக் கயிராகத் திரித்து சுருட்டி சுடச்சுட பரோட்டாவாக மாற்றி ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி சுற்றி விட்டுத் தட்டினாளென்றால் செட்டியார் தெரு முழுக்க மணம் பரவும். பதமாக எண்ணெய் ஊற்றி இரண்டு வெங்காயத்தைத் தூக்கலாக போட்டு ஒரு தக்காளியை உடைத்து முட்டையையும் சால்னாவையும் கலந்து பிச்சு போட்ட பரோட்டாவை எவர்சில்வர் டம்ளரால் கொத்தும் போது ஏற்படும் சத்ததில் ஒருவித லயத்தை உணர்வான் சிவனேசன். “ரங்கன மாஸ்டரா போட்டதுல இருந்து பெரிசா யாவாரம் இல்ல நந்தினி.. ஒன்னோட கைப்பக்குவத்துக்கு வந்துகிட்டிருந்த ஒருத்தனும் இப்போ வர்றதில்ல..” என்றவனிடம், “எல்லாம் சரியாப்போகும் மாமா..” என்று சொல்லியிருந்தாள். சிவனேசன் கடையை அடைத்து விட்டு வர இரவு பனிரெண்டுக்கு மேல் ஆகிவிடும். மகன் முத்துக்காமு ராயப்பன்பட்டி ஸ்கூல் ஹாஸ்ட்டலில் இருக்கிறான். சின்னவள் கல்யாணிக்கு ஏழு வயசாகிறது. அவளை மாயக்காள் ரெண்டு தோசையை ஊற்றி சாப்பிடவிட்டு தூங்கச் செய்திருந்தாள். ஒன்பது மணிவரை உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவள், “காலம்பர வரேனாத்தா.. “ என்றவாறு கிளம்பிப் போனதும் வீடு சத்தமற்று போனது. அவளது வலியை விட சாயங்கால நேரத்தில் இப்படி வீட்டில் ஒன்றும் செய்யாமல் தனியாய் இருப்பது அவளுக்கு பெரும் துயரமாய் இருந்தது

எவ்வளவு லேட்டாய் படுத்தாலும் ஏழரை மணிக்கு முழிப்பு தட்டிவிடும். தேவையான பலசரக்கை பதினொன்றரைக் கெல்லாம் கடையில் இறக்கிவிடுவான் சிவனேசன். பால்ராசும் தெய்வானையும் ஒத்தாசை செய்ய மூன்றரை மணிக்கெல்லாம் அய்ம்பது புரோட்டாக்களை வட்டகயில் அடுக்கி விடுவாள். ஒரு நாளைக்கு எப்படியும் நானூறுக்கு குறையாத அளவில் பரோட்டாகள் உருவாகும். கருப்புமில்லாமல் வெளுப்புமில்லாமல் தோராயமான நிறத்திலிருந்தாலும் தொட்டுப் பார்த்தால் பிசைந்து வைத்த மைதா மாவு போல மிருதுவாக இருக்கும் அவளது கைகளை சில நேரங்களில் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருப்பான். வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கும் நேரத்தில், “ந்தா.. மொறச்சுக்கிட்டு நிக்காம வேலமயிறப் பாரு..” என சிரித்துக்கொண்டே அரட்டுவாள். எடுபிடி சமயல்காரனாக ரங்கன் இருந்தாலும் வருகிற வாடிக்கையாளர்களுக்கு தோசை ஆம்லெட்டுகளைப் போடவும் தட்டிமறித்து தனியாய் இருக்கும் இடத்தில் சிவனேசனுக்கு ஒத்தாசையாக வாடிக்கையாளர்களுக்கு பிராந்தி ஊற்றிக் கொடுக்கப் போய்விடுவான். சிவனேசன் பதிமூன்று வயசில் சாராயம் விற்கத் தொடங்கியவன். அவனது தாய் மாமா ஒச்சாத் தேவன் சக்கரபட்டி சுற்றுவட்டாரத்தில் பெரும் சாராய வியாபரி. சொந்தக்காரர்களை விட சிறை வார்டன்களையும் போலீஸ்காரர்களையும் அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தார். அவரது ஒரே வாரிசாக சிவனேசனை வளர்த்து விட்டார். தொன்னூறுகள் வரை கொடிகட்டிய தொழிலை அரசாங்கம் தலையிட்டுத் முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் சாராயம் காய்ச்சுவதை விட்டுவிட்டு கட்டட தொழிக்குப் போன சிவனேசனுக்கு ஒரே பொண்ணான நந்தினியை கல்யாணம் செய்து கொடுத்து தனது ஸ்ரீநந்தினிஹோட்டலில் உட்கார வைத்து விட்டார் மாமனார் கழுவத்தேவர். உடனான வருடங்களில் மாமனார் இறந்ததும் ஊருக்குள் மேலும் மூன்று ஹோட்டலுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டதுமாய் சேர்ந்து சில சரிவுகளை சந்தித்தான்

மெல்ல  போலீஸ்களுடனான தனது பழய தொடர்பை புதிப்பித்துக் கொண்டான். உள்ளூரிலிருந்து டாஸ்மாக் அய்ந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. அதே உள்ளூரிலிந்து பாண்டிச்சேரி நானூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. டாஸ்மாக்கை விட விலைக்குறைவாகவும் வேணுகிற போதும் பாண்டிச்சேரியிலிருந்து சரக்கு கிடைக்கவும் தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் ஆள் கிடைத்தார்கள். முட்டைப் பொறியலும் சரக்குமாகச் சேர்ந்து அவனது வாழ்க்கையை - ஒரு ஓட்டுனன் தனது வாகனத்தைப் பராமரிப்பது போல- பார்த்துக் கொண்டது. தெருவில் வேறு சிலருக்கு சிலப் பிரச்சனைகள் இருந்தன. அதற்கு காரணம் சிவனேசன் தெருவுக்குள் சரக்கு விற்பதாக இருந்தது. பெட்டிசன்களும் வழக்குகளும் கிளைச்சிறையும் அவனது வாழ்க்கைய மேலும் முறைமைப் படுத்தின. அனைத்துக்கும் ஈடுகொடுத்து கூட வாழும் நந்தினியை அவன் தனது அதிஷ்ட்ட சாமியாகவே உணர்ந்திருந்தான். இந்த நிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு அந்த செட்டியார் தெருவில் பிச்சைமுத்து குடியேறிய போதுதான் அவனது பிரச்சனைஉண்மையான பிரச்சனைதொடங்கியது. பிச்சமுத்துவிடம் அந்த சிலர் பேசிய பேச்சுக்களின் மூலம்தான் குடியிருக்கும் தெருவில் ஒருவன் கள்ளத்தனமாக சாராயம் விற்கிறான்.. தனது கெளரவம் என்னாவது. விடக்கூடாது அவனை..’ என்ற அழுத்தமான  முடிவுக்கு வந்திருந்தார். பிச்சமுத்து ஒரு ஏட்டய்யாவாக இருந்தது அந்த முடிவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக இருந்தது. தோதான ஒரு நாளில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த டாஸ்மாக்-ல் நவீன பாரை நடத்தும் ஜெயராஜ் கொடுத்த அரை போத்தல் கோனிஃபியூசனும் அய்னூறு ரூபாய் பணமும் பிச்சமுத்துவின் அகங்காரத்துக்கு தீமூட்ட நேராக ஹோட்டலுக்கு வண்டியை விட்டார். ஹோட்டலில் சிவனேசன் இல்லை. நந்தினியிடம் தனது அகங்காரத்தை படர விட்டார் பிச்சைமுத்து. கடைசியில் நந்தினி எரிச்சல் பொறுக்கமாட்டாமல், “அதான் எல்லாத்துக்குஞ் சேத்து டேசனுக்கு அழுகிறோமில்ல.. பின்ன எதுக்கு இப்படி தொந்தரவு மயிர பண்றீங்க..”என்றாள். “வெளங்காத முண்ட.. யாரப்பாத்து மயிருன்ற..” ஆக்ரோசமானார் பிச்சைமுத்து. தெருவே பார்க்கும்படியாக அவளின் முடியைப் பிடித்து இழுத்து முகத்தில் ஒரு அப்பு அப்பினார். தடுமாறிப் போய் அடுப்பருகில் குவிந்துகிடந்த கடலைஉமியில் விழுந்தாள். அடுப்பிலிருந்து நீண்டு கிடந்த ஒரு கொள்ளிக் கட்டை சிதறி அவள் மேல் விழுந்தது. உமி புகைய ஆரம்பித்தது. தெய்வானையும் ரங்கனுமாய் சேர்ந்து நந்தினியை தூக்கிக்கொண்டு கடைக்குள் சென்றார்கள். பால்ராசு நீரை அள்ளி உமி மீது சேற்றினான். ”இனிமே இங்க சாரயம் விக்கிற மாதிரி தெரிஞ்சுச்சு கெடுமேடு பள்ளமாயி போயிடுமிடியோவ்..” என்றவாறு பிச்சமுத்து வீட்டை நோக்கி நடந்தார். சக்கரபட்டி வரலாறில் முதன்முதலில் தெருவில் வைத்து பொம்பளைப் புள்ளயை அடித்த போலீஸ்காரர் என்கிற பெருமை பிச்சமுத்துவிற்கு சேர்ந்தது. 

உதடு கிழிந்து, தோள்பட்டையில் தீக்காயம் பட்டு வலது பக்க அக்குலுக்குள் ஒரு கங்கு பட்டு ரவிக்கையை பொசுக்கி அய்ந்து ரூபாய் காசு அளவுக்கு பொத்துப் போய் இருந்தது நந்தினிக்கு. வலியை விட ஆங்காரத்தில் அவள் அரற்றிக் கொண்டிருந்தாள். தெய்வானை ஓடிப்போய் மாயக்காளை கூட்டிக் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் சேர்ந்து அவளை காலனியில் குடியிருக்கும் விஜயாவிடம் கூட்டிக் கொண்டு போனார்கள். விஜயா காயங்களை துடைத்துவிட்டு மருந்துகளைத் தடவி விட்டாள். ஒரு செட்டு மாத்திரையைக் கொடுத்து, ”இப்போதைக்கு மாத்திரையப் போடு நாளைக்கு காலையில ஆஸ்பத்திரிக்கு வா.. கண்டிப்பா ஊசி போடனும்..” என்று சொல்லி அனுப்பினாள். மறுநாள் தென்கரை போலீஸ் ஸ்டேசனில் சிவனேசனை தரையில் உட்கார வைத்திருந்தார்கள். “என்னதான் இருந்தாலும் போலீஸ அடிக்கப்போலாமாடா.. அவரு பாரு உம்மேல கொல கேசுக்கு எழுதிக் கொடுத்திருக்காரு..” சப்-இன்ஸ்பெக்டர் முருகபாண்டி அவன் மேலிருந்த விசுவாசத்திற்கு அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “பொண்டாட்டி மேல கைவச்சுட்டாப்புலங்கயா.. மத்தவைங்கன்னா.. பொலி போட்றுப்பேன்..” என்றான். தொடர்ந்து பஞ்சாயத்து பேசி கொலை முயற்சியிலிருந்து இறங்கி குடிபோதையில் அடித்து விட்டதாக அவன் மீது வழக்கு பதிவு செய்தார்கள். நாலு நாளில் பெயில் வாங்கிக் கொடுத்தார் வக்கீல் மூர்த்திவாசன். அய்ந்து நாளாக கடை திறக்கவில்லை. மற்ற எதுவும் கண்டுகொள்ளாமல் கடையைத் திறந்து வேலையைப் பார்ப்பது என்று புருசனும் பொண்டாட்டியும் பேசி முடிவெடுத்தார்கள். மறுநாள் காலையின் விஜயா நர்ஸம்மா ஆளனுப்பி சிவனேசனை கூட்டிவரச் சொல்லி இருந்தாள். எதற்கென்று புரியாமல் அவன் ஆஸ்பத்திரிக்கு போனான். அது உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையம். அவனை கண்டதும் விஜயா வெளியில் வந்து அருகிலிருந்த புங்க மரதடியில் கூட்டிச் சென்றாள். ”அன்னக்கி நந்தினிக்கு மருந்து போடும்போது பாத்தேன் சிவனேசு.. அவ நெஞ்சுல ஒரு கட்டி மாதிரி இருக்குது.. அவகிட்ட சொன்னேன்.. கொஞ்ச நாளா இப்படித் தான் இருக்குன்னா.. ஏதொன்னுக்கும் ஒரு மேமொகிராம் பண்ணச்சொல்லு.. பெரியாஸ்பத்திரியில சும்மாவே செஞ்சுக்கலாம்.. பின்னாடி எதுவும் எசக்குபிசக்கா ஆகிடப்போவுது..” என்றாள். ”மெமொகிராம்னா என்னக்கா..”என்றான் சிவனேசு. புலப்படாத பயம் ஒன்றை உணர்ந்தான். அடுத்த பத்தாம் நாள் அங்கயர்கன்னி டாக்டரம்மாள்  நந்தினிக்கு மார்புப் புற்று என்பதை உறுதி செய்தாள்.  நந்தினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ”மாற அறுக்கனுமாமில்ல.. என்ன எழவு சீக்கு இது.. “என்றாள். சிவனேசனுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. டாக்டரம்மா ”வேறு வழியே இல்லை.. விட்டா உடம்புலயும் பரவும்.. உயிருக்கு ஆபத்தாயிடும்..” என்று சொன்னதும் ஆடிப் போய்விட்டான். ஒரு வாரமாகியும் நந்தினி ஆப்பரேசனுக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ”மூளிச் சிறுக்கி எவளாச்சும் செய்வினய ஏவியிருப்பாய்ங்க மாமா.. கொலசாமிக்கு நேந்துக்கிட்டு பால்கொடம் ஏந்துறேன்னு வேண்டியிருக்கேன்.. எல்லாஞ் சரியாயிரும்.. “என்றாள். ”அப்படியே அந்த சக்கிலிய வீட்டு புல்லன ஒரு எட்டு பாத்து எதாவது செய்வின கிய்வின இருந்தா எடுத்துவிடச் சொல்லிட்டு வா..” என்றாள். சிவனேசனுக்கும் ஒருபக்கம் அப்படித்தான் தோன்றியது. ’நேரங்காலம் சரியில்லைனா இப்படித்தான் எதுவாச்சும் நடந்துகிட்டே இருக்கும்.. ஜோசியக்காரனப் பாக்கனும்’ என்று எண்ணிக் கொண்டான். ஒரு மாதத்தில் விஜயா நர்ஸ்சம்மா ஏழு முறை வீட்டுக்கு வந்து விட்டாள். நந்தினிக்கும் வலது தோள்பட்டையில் கடுமையான வலி பரவத் தொடங்கியிருந்தது. கடைசியாக குலசாமி கோவிலில் பூப்போட்டுப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள். சிவனாண்டம்மாள் வெள்ளைப் பூவைக் கொடுத்து ஆப்ரேசனுக்கு அனுமதி கொடுத்த்து. 

நந்தினிக்கு மருத்துவ நடைமுறைகள் தொடங்கியதும் கடையில் ரங்கனை மாஸ்டர் ஆக்கினான். ரங்கன் நல்ல சமயல்காரன். ஆனாலும் கூட்டம் ஒட்டவில்லை. இரண்டு மாதங்களாக கடையில் சாராயம் விற்பதும் நின்றிருந்தது. ஜோசியக்காரன் ’ஆறு மாசத்திற்கு நேரம் சரியில்ல.. கொஞ்சம் பொறுமையா இரு எல்லாம் சரியாகிப் போகும்’ என்று சொல்லியிருந்தான். சிவனேசனிடம் இருப்பு பணம் கொஞ்சம் இருந்தது. அவ்வப்போது சில்லறையாகக் கொடுத்த ஃபைனான்ஸ்ஸில் வட்டி பணம் கொஞ்சம் வந்து கொண்டிருந்தது. சில நாட்களில் நிறைய இளைத்துப் போனாள் நந்தினி. பொறாம பிடுச்ச சிரிக்கி மகளுக.. எவளுக்கு என்ன பாவம் பண்ணினேன்.. எவ குடிய கெடுத்தேன்.. நாசமாப்போக.. என்று காற்றில் பல சாபங்களை இறைத்தவாறு இருந்தாள். மாயக்காளும் சிவனேசனும் சேர்ந்து சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் அவளை எறிச்சல் அடையச் செய்தன. எப்போதும் எதையாவது பேசிக்கொண்டும் எல்லாவற்றையும் திட்டிக் கொண்டும் இருந்தாள். கல்யாணியை மாயக்காள் அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்று வைத்துக் கொண்டாள். நிறைய கோபம் கோபமாக வந்தது. ஆப்ரேசனுக்கு இரண்டு நாளுக்கு முன்னாள் ஒரு இறுக்கமான மன நிலைக்கு வந்தடைந்தாள். வழவழவென்று பேசியபடியே இருந்தது ஏறக்குறைய நின்றுவிட்டது. காலையில் சாப்பிட்டுவிட்டு சந்தைக்கு கிளம்பியவனை அழைத்து, ”ஒசரமா ஒரு கண்ணாடி வாங்கிட்டு வா மாமா.. “ என்றாள். ஏதுக்குபுள்ள.. என்று கேட்க நினைத்தவன் சட்டென்று நிறுத்திக் கொண்டான். தொண்டையில் ஒரு வரட்சியை உணர்ந்தான். சரிம்மா.. என்றவன் செம்பில் கொஞ்சம் தண்ணி கொடு என்று கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு கிளம்பிப் போனான். சிவனேசனின் கண்களைப் பார்த்துப் பேசுவதை சில நாட்களாகவே தவிர்த்து வந்தாள். அவனுக்கும் அது பெரிதாகப் படவில்லை. ஆனாலும் லேசான மன உறுத்தல் இருந்தது. எப்பொழுதுமே உற்சாகமாக இருக்கும் பெண். அவளது மொத்த நடத்தையும் மாறிபோனது. வாரத்தில் நான்கு நாட்களுக்கு குறையாமல் இருவரும் உறவு வைத்துக் கொள்வார்கள். சமயங்களில் எண்ணிக்கை கூடுமே தவிர இத்தனை வருடங்களில் குறைத்தே இல்லை. பிள்ளைப் பேறு காலங்களில் கூட முடிந்தளவு கசக்கிக் கொண்டு ஒன்றாகவே படுத்திருப்பார்கள். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அருகில் நெருங்கவில்லை. வலி மிகுந்த நேரத்தில் தடவி விடும்போது ஒருவருக்கொருவர் எதுவும் பேசாமல் இருந்தனர். 

ரவிக்கையக் கழற்றி உள்பாடியோடு இருக்கவைத்து தோள்பட்டையில் தைலத்தை தடவும் போது கண்களை மூடிக்கொள்கிறாள். வலியின் முனங்கலோடு கண்ணீர் முட்டி வடியும். மெதுவாகத் தடவிக்கொண்டே மூச்சுக் காற்றில் மெதுவாக ஏறி இறங்கும் முலைகளைப் பார்ப்பான். சில நாட்களில் ஒன்று இல்லாமல் போகும் என்பதை அவன் கற்பனை செய்து பார்ப்பான். அவனது மூளைக்குள் எந்த கற்பனையும் ஓடாது. எப்படி  இருக்கும் என்று அவனால் சுத்தமாக கற்பனை செய்ய முடியாது. கண்ணீர் நனைய கண்ணை மூடிக் படுத்திருக்கும் அவளுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியும். வலியின் வேதனையை விட அந்த கற்பனையே அவளது துக்கத்தை அதிகப்படுத்தியது. ’என்னை விட்டுப் போய்விடுவானோ’ என்ற நினைப்பு அவளை மேலும் சித்ரவதை செய்தது. அவளை விட்டுவிட்டு சிவனேசன் போகமாட்டான் என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அந்த எண்ணத்தை அவளால் கட்டுப் படுத்த இயலவில்லை. ‘ நான் வேணா செத்துப்போறேன் மாமா நீ வேற யாரயாச்சும் கட்டிக்க..” என்பாள். “பேசாம படு நந்தினி..” என்பான் வேறதுவும் சொல்லாமல். ஆப்பரேசன் முடித்து சினிமா நடிகை கௌதமி வரைக்கும் எடுத்துச் சொல்லி டாக்டரம்மாள் அனுப்பி வைத்தாலும் நந்தினியிடம் ஒரு விதமான அசூயை உருவாகியிருந்தது. காரணமில்லாமல் எல்லாரிடமும் பொறாமை பொங்கியது. விஜயா நர்ஸ் சிவனேசனிடம் மிகமிக பொறுமையாய் இருக்கச் சொல்லியிருந்தாள். சிவனேசனுக்கும் ஆயாசம்மாய் இருந்த்தது. இவளுக்கு புத்தி ஏன் இப்படி போகிறது.. இவளை விட்டு நான் எப்படி போவேன் என்று இவளுக்குத் தெரியாதா.. தெரிந்தே ஏன் இப்படி உயிரை வாங்குகிறாள்.. என்று பலவாறாக சிந்தனையில் கிடந்து அவதிப்பட்டான். சூழ்நிலை புரிந்து மாயக்காள் நந்தினியின் மகளை தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டாள்.  நடப்பது நடக்கட்டும் ஜோசியக் காரன் சொன்னது போல கொஞ்ச நாள் விட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து ரங்கனை அழைத்து கடையைச் சுத்தம் செய்யச் சொன்னான். சப்-இன்ஸ்பெக்டர் முருகபாண்டியின் தயவில், பழய வரும்படி இல்லையென்றாலும் வருவது பிழைக்கத் தோதாகவே இருந்தது. அவசியமான சொற்கள் தவிர சிவனேசனுக்கும் நந்தினிக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. பெரும்பாலான இரவுகளில் கடையிலேயே தூங்கிக் கிடந்தான். சில இரவுகளில் வீட்டுக்குள் போனாலும் முதுகு காட்டித் தூங்கிவிடுவாள். இவனுக்கும் உணர்வுகள் ஏதுமில்லாமலேயே ஆகிவிட்டது. சிவனேசனுடைய கெட்ட நேரத்தின் உச்சமாக முருகபாண்டிக்கு பதிலாக முஹமது ரசாக் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப் பட்டார். பெரியகுளமும் சுற்று வட்டாரமும் அல்லு வாங்கியது. எந்த நேரத்தில் எந்த தெருவில் எவன் அடி வாங்குவான் என்று அவருக்கே தெரியாது என்பதில் இடது கட்சிக்காரர்கள் கொஞ்சம் எரிச்சலடைந்திருந்தார்கள். 

நேரம் பார்த்துக் கொண்டிருந்த பிச்சமுத்து ஏட்டையாவிற்கு முகமது ரசாக் மஞ்சள்பை நிறைய நல்லநேரத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். விளைவாக பிணையில் வரவியலாத படிக்கு கஞ்சா வழக்கில் பெரியகுளம் கிளைச்சிறையில் சிவனேசன் அடைக்கப்பட்டான். இருந்தாலும் ரசாக் அவனை அடிக்காமல் சிறைக்கு அனுப்பியதில் பிச்சமுத்து கடும் வருத்தமைடைந்தார். ”ரெண்டு மாசத்துக்குள்ள பெயில் எடுத்து விட்டுற்றேம்மா.. செலவப் பத்தி கவலப் படாத.. மாப்ளைக்கு நாஞ்செய்யாம வேற யாரு செய்வா.. நாலு சாவக்கோழிகள வாங்கிவிடு.. மேஞ்சுட்டு திரியட்டும்.. மாப்ள வந்ததும் ஜக்கம்மாளுக்கு பொங்கவெச்சு படையலப் போடு..” அரைமணி நேரமாக வக்கீல் மூர்த்திவாசன் பேசிக்கொண்டிருந்த போதும்  நந்தினி ஒன்றும் பேசாமல் அமைதியாய்  உட்கார்ந்திருந்தாள். மாயக்காளிடம் ‘பாத்துக்க ஆத்தா..’ என்று சொல்லிவிட்டு கிளம்பினார் மூர்த்திவாசன். நான்கு நாட்களுக்கு மேல் சிவனேசன் சிறையில் இருந்தது இல்லை. இரண்டு மாதமாவது ஆகும் என்றதும் நந்தினிக்கு ஒன்றும் விளங்க வில்லை. கொஞ்ச நேரம் கழித்து மாயக்காள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ’இவளுக்கு ஏதாச்சும் திங்க கொடுக்குறேன்.. உனக்கும் எதாச்சும் கொண்டுவாரேன்..’ என்றவாறு கிளம்பிப் போனதும் சட்டென்று வீட்டிலிருந்து கிளம்பிய தனிமை அவளை பொளேரென்று இரு கன்னத்தையும் சேர்த்து அப்பியது.  தடுமாறி எழுந்து அறைக்குள் சென்றாள். குளியலறைக் கதவருகில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஆளுயரக் கண்ணாடியில் அவள் பிம்பம் சலனமற்று நகர்ந்தது. கண்ணாடி முன் நின்று சற்று நேரம் கூர்ந்து பார்த்தாள். ஆடி அவளுக்கு வேரொரு அறையையும் வேரொரு அவளையும் காட்டியது. நீண்ட நேரம் நின்றிருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் குளியலறைக்கு சென்று முகம்கழுவி உடைமாற்றி கிளம்பி கடைக்குச் சென்றாள். மூடிக்கிடந்த கடை இரண்டு நாளில் காலடி குப்பைகளை சேமித்திருந்தது. ரங்கனைப் போய் பார்த்தாள். அரைப் போதையில் கிடந்த ரங்கன் அவளைப் பார்த்ததும்’ஏன்க்கா.. சொல்லிவிட்டா வந்திருப்பேனில்ல..’ என்றவாறு பதறிப்போய் ஓடிவந்தான். ரங்கனிடம் பணத்தைக் கொடுத்து நாளைக்கு எப்பவும் போல கடச்சரக்க வாங்கி இறக்கிரு ரங்கா.. பால்ராசுக்கும் தெய்வானைக்கும் சொல்லிரு.. இனிமே என்னிக்கும் போல கட ஓடனும்.. என்றாள். சொன்னவாறு மறுநாள் மதியம் மூன்று மணிக்கெல்லாம் வட்டகையில் பரோட்டாக்கள் நிரம்பத் தொடங்கி விட்டன. ஊரின் பரோட்டா பிரியர்கள் ஒரு வாரத்திற்குள் கடையை ஒரு நிலைக்குள் நிறுத்தி விட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை முடிந்தளவுக்கு சிங்காரித்துக் கொண்டு நாட்டுக்கோழி குழம்பும் வைகைடேம் ஜிலேபிக்கெண்டை மீன் பொறியலுமாய் பெரியகுளம் கிளைச்சிறைக்கு சென்றாள். இதுவரை அவள் சிறைக்கு பக்கம் அவனைப் பார்க்கப் போனதில்லை. அவளைப் பார்த்ததும் சிவனேசனுக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியுமாக இருந்தாலும் ஒரு கடும் அவமானத்தை உணர்ந்தான். மேலும் சங்கடங்களால் நிரம்பியிருந்த சில மாதங்களுக்கு பின்னான நந்தினியின் சிரிப்பை அவனுக்கு எதிர்கொள்ளத்தெரியவில்லை. அமைதியாய் குழந்தையை வாங்கிக் கொண்டு உட்கார்ந்தான். பொதுவான விசாரிப்புகளுடன் சுவாரஸ்யமின்றி உணவை உண்டுகொண்டிருந்தான். இரண்டு மாதத்தில்  அதே உற்சாகத்தோடு மூன்று முறை அவனைப் போய் பார்த்துவிட்டு வந்தாள். முதல் தடவையே ’நீ இங்க வராத புள்ள..,’ என்று தடுமாறியவாறு அவன் சொல்லியதை அவள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அறுபத்தி ஏழாம் நாள் வக்கீல் தனது காரிலேயே அவனை வீட்டுக்கு அழைத்து வந்து ’பய ரொம்ப கெறக்கத்தில இருக்காம்மா எலும்புச்சூப்ப வெச்சு கொஞ்ச நாளைக்கி கொடு.. எல்லாம் சரியாப் போயிடும்..’ என்றார். சரிண்ணே.. நாம் பாத்துக்கிறேன்.. என்றவாறு மாயக்காளை கூப்பிட்டு சேவலைப் பிடித்து அறுக்கச் சொன்னாள். 

சிவனேசனிடம் இன்னும் இறுக்கம் குறையவில்லை, உண்மையில் அவனுக்குமே அது என்னவென்று தெரியவில்லை. கடைக்குப் போவதும் வீட்டுக்கு வருவதும் ஏதோ இயந்திர வேலைப் போல தோன்றியது. நந்தினிக்கு என்னவென்று தெரியாத பயம் இருந்தாலும் வரவழைக்கப்பட்ட உற்சாகதோடு ’வெளங்காத பய அந்த ஏட்டன வருச நாட்டுக்கு மாத்திட்டாய்ங்க.. பரிச்ச லீவுக்கு மகன் வந்ததும் திடியனுக்கு கொலசாமிய பாக்க போனும் மாமா.. அது .. இது என்று எதையாவது தொன தொனவென்று பேசிக்கொண்டே இருந்தாள். எது பேசினாலும் அமைதியாக இருந்தான் சிவனேசன். மறுவாரமும் நிலை இப்படியே இருந்தது. எதொவொன்றை சொல்லிக் கொண்டிருந்த போது எதையும் கவனிக்காதவன் போல வெளியில் சென்றவனைப் பார்த்து நந்தினிக்கு துக்கம் அடக்க முடியவில்லை. கடை என்றும் பாராமல் அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் அழுவாதக்கா.. எல்லாம் சரியாப்போயிடும்.. என்றான். வேலைகள் எல்லாம் முடித்து  இரவு பதினோரு மணிக்கு கடையை அடைக்கும் போது கடைக்குள் வந்தான். நீ வீட்டுக்கு போ புள்ள நான் வாரேன்.. என்று சொல்லி விட்டு ரங்கனை துணைக்கு அனுப்பினான். வீடு வரை வந்த ரங்கன், கிளப்பும் போது ‘கவலப்படாதக்கா.. இன்னைக்கு மாமனுக்கு லேசா தண்ணி விட்டு அனுப்புறேன்.. வந்ததும் மனசு விட்டு பேசுக்கா..’ என்றவாறு சென்று விட்டான். அவளுக்கும் ஏதாவது  செய்து நிலமையை சரி செய்தால் போதுமென்று பட்டது. அமைதியாய் வீட்டில் நுழைந்து பலவித குழப்பமான கற்பனைகளுடன் குளிக்க ஆரம்பித்தாள். ரங்கனைக் கண்டதும் ரெண்டு தோசையச் சுடு ரங்கா.. சாப்டு கடையில படுத்துக்கிறேன் நீ ஓவ்வீட்டுக்கு போ.. என்றான். தோசையச் சுட்டு இலையில் வைத்து கூடவே ரெண்டு முட்டை பொறியலும் போட்டு கண்ணாடி டம்ளரில் சரக்கை ஊற்றி டேபிள் மீது  வைத்தான். என்னடா இது.. என்றவனிடம் ‘ஒன்னும் பேசாத மாமா.. பேசாமக் குடி.. அப்புறம் சொல்றேன்..’ என்றான். அவனுக்கும் குடிப்பதா வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியாத மன நிலையிருந்தது. தோசையை பிச்சு இரண்டு வாய் சாப்பிட்டவன் டம்ளரை எடுத்து ஒரே வாயில் குடித்து விட்டான். ரங்கனுக்கு சந்தோசமாயிருந்தாலும் அவனைக் குடிக்க வைத்தது வேதனையாக இருந்தது. சிவனேசனுக்கு குடித்த மூன்றாவது நிமிடம் கழிவிறக்கமும் ஐந்தாவது நிமிடம் அவமான உணர்வும் எழுந்தது. அவனாக எழுந்து போய் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு வந்தான். இரண்டாவது ரவுண்டும் முட்டையும் தோசையும் முடிந்த போது அவனுக்குள் கடுமையான கோபம் எழுந்தது. மீண்டும் கொஞ்சம் குடித்தான். கோபம் அதிகமானது. என்னென்ன பாடு படுத்திட்டா.. நானென்ன குத்தஞ் செஞ்சேன்… என்கிற தொடர் மட்டும் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தத்து. முதல் தடவையாக நந்தினி மேல் கடும் கோபம் கொண்டான். ஒரு தீர்மானம் கொண்டவனாக ‘எலே ரங்கா நீ இங்கனையே படு.. நான் வீட்டுக்குப் போறேன்…’ என்றவாறு கிளாம்பி விட்டான். நினைத்த காரியம் கைகூடுமென ஏனோ ரங்கனுக்குப் பட்டது. கதவு தட்டும் போது அவனது கோபம் உள்ளங்கையில் இருந்தது. குளித்துவிட்டு தனது பழய கூரச்சேலையை உடுத்தியிருந்த நந்தினிக்கு கதவு தட்டல் சத்தம் தனது வாழ் நாளில் இல்லாத ஒரு பயத்தை அடிவயிற்றில் கிளப்பியது. கதவைத் திறந்ததும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். நுழைந்து நந்தினியைப் பார்த்தவன் உடனடியாக புறவுலகிலிருந்து அவனது பிடியை இழந்தான். கணமேனும் தாமதிக்காமல் அவளைப் பார்த்து ஓவென்று அழ ஆரம்பித்தான். திகைத்துப் போனாள் நந்தினி. ‘என்ன மன்னிச்சிடு நந்தினி…’ அவன் வாய் குழறலுடன் வெளியேறியது. திறந்த கதவைக் கூட மூடாமல் சட்டென்று அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். சில நிமிடக் கேவலுக்கு பின் வாழ்வின் மொத்த பிடிமானமும் அவனை இறுக்கிக் கொண்டிருந்தது.   
*
மஞ்சள் வெளிச்சம். “வடக்கயிறு மாதிரி கெடக்கு புள்ள… தொட்டு பாக்கட்டா… ஆர்வமாய்க் கேட்டான். ’அய்யயோ சாமி கண்ணக் குத்திடும்.. என்றாள். சட்டென்று கன்னத்தில் போட்டுக்கொண்டு ’அப்ப என்ன செய்றது..’ என்றான் அப்பாவியாய். ’கண்ணு கெட்டா பரவாயில்ல…’ என்றவளின் கண்ணில் ஆதிக் குறும்பு மின்னியது. பின்னாளில் சக்கரைப்பட்டி ’ஸ்ரீநந்தினி’ கடை பரோட்டா வாசனை வரலாறாகிப் போனது.
 *
மேடை இதழ் ஒன்றில் வெளி வந்த சிறுகதை 
...............................................................................

No comments: