எந்த ஒரு மனித இனமும், அழகு, நுண்ணறிவு மற்றும் பலத்தின் அடிப்படையில் ஏகபோகமான உரிமை கோர முடியாது. ஒவ்வொரு மனிதருக்கும் இவற்றின் அடிப்படையில் வெற்றி கொள்ள வெளி இருக்கிறது – ஐமே செசைரி (a note book of return to homeland).
குறிப்பிட்ட சமூகத்திற்கு பின்காலனீய பிரச்சனைகளை பற்றிய ஆழமான புரிதலை உருவாக்க அந்த சமூகத்தின் மொழியில் இயங்கும் ஒரு எழுத்தாளரது பங்கு மிக முக்கியமானது. அது அவசியமானதும் கூட. அவ்வகையில் ஒரு எழுத்தாளர் தான் பின்னொட்டு செல்கின்ற அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் அவரது சமூகச் சூழலில் நிகழும் செயல்பாடுகளை பதிவு செய்ய பலவகை எழுத்துக் கலைகளை உபயோகிக்கின்றனர். அப்படிபட்ட எழுத்துக் கலையில் ஒன்றான கவிதையியலில் இயங்கும் தமிழ் எழுத்தாளர்களின் சிந்தனை, தமிழ்ச் சமுதாயச் சூழலில் பின்காலனிய அடிப்படையில் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி சுருங்க ஆராய்கிறது இந்த கட்டுரை.
முன்னதாக பின்காலனீயம் என்பது பற்றிய எனது புரிதலை தொகுத்து சொல்லிவிடுவது நல்லது என நினைக்கிறேன். பொதுவாக பின்காலனியம் என்பது காலனியாக்கப் பட்ட ஒரு தேசம் அடைந்த விடுதலைக்கு பின் இயக்கங்கொள்ளும் காலகட்டம் என்று அறியப்படுகிறது. இது ஒரு மேலோட்டமான உண்மை என்பது நாம் அறிந்ததே. வேரொரு வார்த்தையில் சொல்வதென்றால், ஒரு தேசம் மற்றொரு தேசத்தை ஆதிக்கம் செலுத்தி அதிகார அரசை உருவாக்கி ஒடுக்குவது காலனியாதிக்கம் எனக்கொண்டால் பல்வேறு அரசியல் நிகழ்வுகளின் ஊடாக அந்த காலனியாக்கப்பட்ட நாடு சுயாட்சி அடைந்து விடுதலை அடையும் பட்சத்தில் உடனடியாக அது பின்காலனீய நாடாக மாறிவிடுகிறது என்பதில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது எனச்சொல்லலாம். ஏனெனில் பின்காலனியம் என்கிற சொல்லாடல் – உண்மையில் இது ஒரு பெருங்கதையாடல் – மிகவும் ஆழமான அக, புறச் சிக்கல்களைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒன்றாகும்.
அது தனிமனிதர், குழு, இனம், சமுதாயம், ஆண்-பெண் உறவுப்பிரச்சனைகள், தேசம் ஆகியவற்றின் அனைத்து நிலையிலும் தனித்து அல்லது பண்மையில் இயக்கம் கொள்ளும் ஒரு நிகழ்வுப் போக்கு எனலாம். ஒரு தனிமனிதரிடமோ அல்லது ஏதோ ஒரு சமுதாயச் சூழலுக்கோ தன்னை ஏதோவொன்று ஆதிக்கம் செய்து ஆட்டுவிக்கிறது அதை எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும் கணத்திலேயே அங்கு பின்காலனிய நிலை உருவாகிவிடுகிறது. இந்தியாவின் முக்கியமான சமூக ஆய்வாளராகிய ஆஷிஸ் நந்தி தனது ‘the intimate enemy’ என்கிற நூலில் இரண்டு வித காலனிய ஆதிக்கத்தைப் பற்றி விவரிக்கிறார்: ஒன்று பிரதேசத்தை நேரடியாக ஆதிக்கம் செய்து காலனியாக்குவது, இரண்டாவது, சிந்தனையை (mind), சுயத்தை (selves) மற்றும் பண்பாட்டை (culture) ஆகியவற்றை மறைமுகமாக காலனிப்படுத்துவது. இதனடிப்படையில் பின்காலனியம் என்கிற சொல்லில் வரும் ‘பின் அல்லது பின்னை’ என்கிற சொல்லின் காலத்தை ஒரு குறுப்பிட்ட தேசத்தின் சுதந்திர தின நாளுக்கு பின்னான காலம் என்று குறுக்கி விட முடியாது என்பது புலப்படும். காட்டாக, ஒரு ஆண் – லிங்கமையவாதச் சூழலில் – ஒரு பெண்ணிடம் மேற்கொள்ளும் அடக்கு முறைக்கு எதிராக அவள் தனது சிந்தனையை வெளிப்படுத்துவதாகக் கொண்டால் அவளும் ஒரு பின்காலனீய மனநிலையில் இயங்குகிறாள் என்பதுதான் உண்மை.
அது போலவே அடிமைபட்ட தேசம் வரையிலான அனைத்து ஆதிக்கச் சூழலிலும் உண்டாகும் ஒரு ’கலகக்குரல்’ உருவாக்கும் சூழல்தான் பின்காலனியத்தின் அடிப்படை அம்சம். போலவே பின்காலனியநிலை என்பது மூன்று வகையான கூறுகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் பின்காலனிய சிந்தனையாடலின் முன்னோடிகளில் ஒருவாரன மறைந்த மேதை ஃப்ரான்ஸ் ஃபனான். அல்ஜீரிய புரட்சியில் இயங்கிய, மருத்துவரான இவர் பின்காலனியம் என்பது ஆதிக்க நிலை, மூலஇருப்பு தேடல் மற்றும் விடுபடல் அல்லது காலனிநீக்கம் செய்தல் என்கிற மூன்று நிலைகளில் இயங்குகிறது என விவரிக்கிறார். ஆதிக்கச் சமுதாயம் தனது முதன்மை ஆயுதமாக மொழியை உபயோகிக்கும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வேற்றுமொழி கையாளுதலில் ஏற்படும் தடுமாற்றம் பரவலாக்கப்பட்டு, அந்த ஆதிக்கமொழி ஒருவருக்கு தெரியாமல் இருப்பது கூட அவமானகரமானது என்கிற சிந்தனை புகட்டப்படும். மெள்ள அந்த மொழி ஒடுக்கப்பட்ட சமூகத்தால் உள்வாங்கப்பட்ட பின் ஒருவகையான மொழிப்பிரயோகம் உருவாகும். அது ஆதிக்க மொழியின் அசலைப் பிரதிபலிக்கும். அதாவவது அசல் மொழியைப் போல ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் அதை பிரயோகிக்கத் தொடங்குவர். இதுதான் ’போலச்செய்தல்’ (mimicry) நிகழ்வுப் போக்கு.
பின்காலனியத்தின் ஆதிக்கக்நிலை கட்டத்தில் இந்த போலச் செய்தல் முக்கிய கூறாகும். இது மொழி வகைமையில் மட்டும் இல்லாமல் வாழ்வின் அனைத்து கூறுகளுக்கும் பரவலாக்கப்படும். கவிதைகள் குறித்த கட்டுரையாதலால் மற்றவைகளைப் பற்றி இங்கு நான் அக்கரை செலுத்தவில்லை. அடுத்ததாக, மார்க்ஸிய சிந்தனைகள் காலனியாதிக்கத்தை இரண்டு நிலைகளாகப் பிரிப்பதை காண முடிகிறது. ஒன்று முதலாளித்துவத்திற்கு முந்தைய காலம், அடுத்தது முதலாளித்துவக் காலனியம். மனிதகுல வரலாற்றில் அறியப்பட்டிருக்காத பல்வேறு நிகழ்வுப்போக்குகளை முதலாளித்துவம் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றைப் பற்றிய லட்சக்கணக்கான விவாதங்கள் கணந்தோரும் நிகழ்கின்றன. கவிதைகளின் அடிப்படையில் தமிழ் சூழலில் முதலாளியத்திற்கு முன்னும் பின்னும் என பிரிப்பது மிகச் சிறமமான செயல்பாடு என்பது எனது புரிதல். ஆக, இதுவரையில் பின்காலனீயம் குறித்த மூன்று வகையான சிந்தனை ஓட்டங்களை தொகுத்தால், ஒன்று ஆஷிஸ் நந்தியின் பின்காலனியம் குறித்த விளக்கம், இரண்டாவது ஃபனான் விளக்கிய பின்காலனியக் கூறுகள், மூன்றாவதாக பின்காலனியம் குறித்த மார்க்ஸிய சிந்தனையின் நிலைப்பாடு. இந்த மூன்று வகைமைகளில் தமிழ் கவிதைச் சூழல் எவ்வாறு உள்ளது என்பதை ஒவ்வொன்றாகக் காணலாம்.
காலனிய பிரதேச மீட்பு வகைமை
பிரதேசக் காலனியம் என்பது ஒரு நாட்டை அடிமைப்படுத்துவது என்கிற நேரடியான புரிதல். அவ்வகையில் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் இயங்கிய பாரதி உட்பட அனைத்துக் கவிஞர்களுமே காலனீய எதிர்ப்பு சிந்தனை வகைமைக்குள் வந்து விடுகின்றனர் என்றாலும் பின்காலனீயம் என்ற சொல்லாடலில் சுதந்திரத்திற்கு பின்னான நிகழ்வுகளில் பிரதேச மீட்பு தொடர்பான பிரச்சனைப்பாடுகளை கவிதைகளில் கையாண்டவர்கள் ஏறக்குறைய யாருமில்லை என்றே தோன்றுகிறது. மூனாறு, நீலகிரி போன்ற நிலம் சார்ந்த பிரச்சனைகளை, சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றின் சிக்கல்களை, பெருவணிகத் திட்டங்களால் கொள்முதல் செய்யப்படும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை பற்றிய பிரச்சனைகள தமிழ் கவிகள் கையாண்டதாக எனக்கு தரவுகள் கிடைக்கவில்லை. அது எனது பிழையாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அதிர்ஷ்டவசமாக தாமிரபரனி, காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நீர்நிலைப் பிரச்சனைகள் குறித்த கவிதைகளை என்னால் காணமுடிகிறது. போலவே அணு உலை, நியூட்ரினோ ஆய்வகம் பற்றிய கவிதைகளும் சிறிதளவே காணக்கிடைக்கின்றன. ’இடிந்தகரை’ என்கிற தலைப்பின் குட்டி ரேவதியின் தொகுப்பு இங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர நிலம் சார்ந்த பிரச்சனைப் பாடுகளில் ஈழக் கவிஞர்களின் பங்கு மிகவும் முதன்மையானது. எனக்கு பிடித்தமான ஈழக் கவிஞர்களான அனார், தமிழ்நதி, இளங்கோவன், மஜீத் போன்றோரிடம் இதுபோன்ற பல சிறந்த கவிதைகளைக் காணமுடிகிறது. தமிழீழச் சூழலில் புலம் பெயர் பதிவுகள் குறித்து மிகஅதிக அளவில் கவிதைகள் பேசப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தனி ஆய்வுக்குட்படவை. மிக விரிவாக பேசப் பட வேண்டியவை.
மனம் மற்றும் பண்பாட்டு மீட்பு வகைமை
என்னைப் பொறுத்தவரையில் மனம், சுயம் மற்றும் பண்பாட்டுக் காலனியாதிக்கத்தின் மீட்டுருவாக்கம் அல்லது அவற்றைப் பற்றிய சிந்தனை நிலைகள் அடிப்படையில் தமிழில் மிகச்சிறந்த கவிதைகள் காணக்கிடைக்கின்றன. சமுதாயத்தில் இயல்பாகவே ஆண்களைவிட பெண்கள் இம்மூன்று நிலையிலும் அதிகமாக ஒடுக்கம் செய்யப்படும் சூழலில், தமிழ் பெண்கவிகளின் கவிதைகள் இந்த வகைமையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் மரபு மீராமல் பாந்தமான முறையில் - அதே நேரத்தில் எந்த நேரத்திலும் தங்களுடைய தேவையை / சுதந்திரத்தை மீட்டெடுக்கும் லாவகத்துடனும் - தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை கவிதைகளாய் பதிவு செய்தவர்களாக சுகந்தி சுப்ரமனியன், சே. பிருந்தா, அ.வெண்ணிலா, உமா மகேஸ்வரி, எஸ். சுதந்திரவல்லி போன்றோரைச் சொல்லலாம். எடுத்துக்காட்டாக இங்கு மூன்று கவிதைகளை மட்டும் சொல்கிறேன். இந்தக் கவிதைகளை மட்டும் குறிப்பிடுவதால் மற்றவை நல்லவையல்ல என்று அர்த்தம் இல்லை. (இது இனி எடுத்துக்காட்டும் அனைத்து கவிதைகளுக்கும் பொருந்தும்). குட்டி ரேவதி எழுதிய ‘முலைகள்’ என்கிற ஒற்றைக் கவிதையைச் இவ்வகையில் இணைக்கலாம். அந்தக் கவிதையை ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றாலும் நான் குறிப்பிடப்போவது வேறு மூன்று கவிதகளை:
உப்பு மிளகு சேர்த்து
என் உடலை நானே ருசிக்கிறேன்
சொல்லத் தெரியாத பறவை
தன் சந்தோசத்தை
பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்
எல்லொருக்குமான உலகம்
தினசரி நிகழ்கிறது
நாமதைக் காண்பதில்லை
இது ’எந்த மரமும் என்னைத் திட்டியதில்லை’ என்று பிரகடனம் செய்த கவிஞர் சுகந்தி சுப்ரமனியணியின் கவிதை. இதை விட அற்புதமான கவிதைகளைக் கொண்ட அவரின் புதைந்துண்ட வாழ்க்கை மற்றும் மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரண்டு தொகுப்புகளை பெண் கவிஞர்களுக்குக் கட்டாய வாசிப்பாக முன்மொழிவதோடு ஆண் கவிஞர்களுக்குப் பாடமாகவும் வழிமொழிகிறேன். குறிப்பாக மீண்டெழுதலின் ரகசியம் அடங்க மறுத்து வெளியேறும் காலனியாக்கப்பட்ட சிந்தனையின் பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளது என்பது எனது புரிதல்.
‘இதொரு உயிர்சேதம் நிகழ்த்தக் கூடிய / கண்ணாமூச்சு விளையாட்டு / நீயும் நானுமே ஆட்டக்காரர்கள் / எனக்கெவ்வளவு தொலைவோ / அவ்வளவு நெருக்கமும் நீ / என் எல்லாமும் நீ / எதுவுமில்லாததும் நீ / நீயென் அன்பை வார்த்தையாக / யாசிக்கிற போதெல்லாம் / சொற்களற்று வாயடைத்துப் போன / சகிக்கமுடியாத மெளனம் பதிலாகிறது / மெல்லிய திட்டமிடலுடன் கூடிய / காத்திருப்புதான் - ஒரு பல்லியின் / வேட்டையாடலைப் போல, / உன் கவனம் முழுமையும் / என்னை நோக்கி நகர, / நானொரு கொடூர மிருகம் / நம்பினால் நம்புங்கள் / என் கூர் பல்லும் நகங்களும் / அன்பாலானது.’
உயிர் விளையாட்டு என்ற தலைப்பிட்ட இந்த கவிதை, ’சொற்களை விடவா வலிக்கப் போகிறது மரணம்’ என்று வினவும் கவிஞர் சே. பிருந்தாவுடையது. இவரின் மழை பற்றிய பகிர்தல்கள், மற்றும் வீடு முழுக்க வானம் ஆகியவை தமிழின் முக்கியத் தொகுப்புகள்.
‘எனது சால்வையால் / என்கழுத்தை நீ இறுக்கும் போதும் / குடித்து நீண்ட கால்களால் / மிதித்துத் தள்ளும் போதும்/ வழக்கத்தை விட தோள்கள் இறங்கி / நீண்டு தொங்கும் கைகளினால் / எனது புறங்கழுத்தைப் பிடித்துத் தள்ளும்போதும் / உனக்கு நான் முதல் எதிரியாய் / இருக்கிறேன் / உனது போதை சாஸகசங்களுக்கு முன் / எனது மனமும் உடலும் செயலிழந்து / கிடக்கிறது. / மினுக்கும் கத்தியுடன் / காத்திருக்கும் கொலைகாரனுடன் / இருப்பதைப் போல / இருக்கிறேன் உன்னுடன் / நடுங்கியபடி / எவனோ ஒருவன் / உன்னை அடித்து வீழ்த்தி / அம்மணமாய் நடக்கவிடும் போது / அவனை விட நானே மகிழ்ச்சி அடைகிறேன் / அவனுக்கெதிராய் நீயெடுக்கிற நடவடிக்கைகள் / எனக்கெதிராய் நீ மேற்கொள்பவை / உன்னைப் போலவே / எனக்கும் குடிக்கவேண்டும் / புகைக்க வேண்டும் / அன்பின் ஸ்பரிசத்தில் / பலருடன் புணரவேண்டும் / எல்லாம் துறந்து / எல்லாம் துறந்து / எனது மனதையும் உடலையும் / உனக்கு மட்டும் பரிசளித்திருக்கிறேன் / உனது அருகாமைக்கு வெகுதூரத்தில் / தெரியும் எனது இஷ்ட தேவதைக்காக. / தொடர்ந்து புழுவாய் என்னை / நடத்திக் கொண்டிருந்தால் / என்றாவது ஒரு நாள் / எனது விரல்களில் நகங்களுக்குப்பதிலாக
கத்திகள் முளைக்கும்.’
கவிஞர் எஸ். சுதந்திரவல்லியின் வன்மம் என்கிற தலைப்பிலான கவிதையிது. இவரின் ‘பட்டிணத்து ரயிலை கிராமத்திற்கு கொண்டு வந்தவள்’ என்கிற கவிதைத் தொகுப்பில் இது போன்ற சிறந்த கவிதைகளைக் காணமுடிகிறது. மேற்சொன்ன மூன்று கவிதைகளின் உள்முகம் ஒன்றுதான். ஆனால் சொல்விதம் வேறுவேறானவை. மூன்றும் ஆதிக்கத்திற்காட்பட்ட மனதை, அடங்கிக்கிடக்கும் சுயத்தை யதார்த்தவியல் அழகியலோடு துல்லியமாய்ச் சித்தரிக்கின்றன. இவை எழுதப்பட்ட காலகட்டத்தின் போக்கில் இவற்றின் சொல்லாடல் வளர்ச்சி ஒரு வாசகனாக எனக்கு மிகுந்த சுவாரஸ்யத்தை அளிக்கிறது. மனம் மற்றும் சுயம் ஆகியவற்றின் மீட்புகள் போலவே பண்பாட்டு மீட்பும் இத்தகய வகைமையில் இருந்தாலும் பண்பாட்டு மீட்பும் வேர் தேடலும் ஒட்டிப் பிறந்தைவகள் என்பதனால் அவற்றைப் பற்றி அடுத்த பத்திகளில் பார்க்கலாம்.
ஆதிக்கத்திற்காட்பட்ட நிலை
அடுத்ததாக, ஃபனானின் சொல்லாடல்களில் விவரிக்கப் பெறும் பின்காலனிய கூறுகளில் ஒன்றான ஆதிக்க நிலை காலகட்டத்தில், அதன் முக்கிய பண்பாக ‘போலச் செய்தல்’ முறைமையில் தமிழ் கவிதைகள் என்னவாயிருக்கின்றன எனப் பார்த்தோமானால், தமிழில் ஏறக்குறைய கவிதை எழுதுபவர்கள் அனைவருமே தனது ஆரம்ப கட்ட எழுத்துக்களில் இவ்வகையான வகைமையே கையாள்கிறார்கள் என்று தெரியவரும். பெரும்பாலும் இந்தத்தன்மை தங்களுக்குள் இருப்பதைக்கூட அவர்கள் அறிய மாட்டார்கள் என்பது திண்ணம். தொடர் வாசிப்பினாலும், அரசியலறிவுத் திரட்டலினாலும் தங்களது எழுத்துக்களை அடுத்தடுத்த கட்டங்களுக்குள் தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல சமுதாயத்தில் கவிஞர்களுக்கு எப்போதும் சாத்தியமிருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த உண்மையை ஒவ்வொரு கவிஞரும் உணர வேண்டும்.
பொதுவாக ஆதிக்கநிலை கட்டத்தில் எழுதப்படும் கவிதைகள் அனுசரனைத் தன்மையுடன் ஒரு பிரச்சனையை - யாரும் எவ்வகையிலும் புண்படாமல் - சமுதாயத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் கருத்துகளுக்கு உட்பட்டு சொல்லபட்டவையாக இருக்கும். இவ்வகையான கவிதகளுக்கு எடுத்துக்காட்டுகள் சொல்வது கடுமையான பணி. ஏனென்றால் தமிழ் சமூகத்தில், குறிப்பாக சமூக வளைத்தளங்கள் பரவலான புழக்கத்திற்கு வந்து விட்ட பின், போலசெய்தல் கவிதைகள் தமிழுலகம் முழுவதும் பொங்கிச் செழித்துக் கிடக்கின்றன. வெகுஜன பத்திரிக்கைகளில் இவ்வகையான கவிதைகள் கொண்டாட்டம் பெறுகின்றன. பிரபலமான கவிஞர்கள் கூட இந்த ஆதிக்கநிலைக் கட்டத்தை கடக்க முடியாமல் திண்டாடுகின்றனர் என்பதை காண முடியும். ஆனாலும் இந்த நிலையில் இருப்பதற்காக எந்தவொரு கவிஞரும் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இது ஒரு திணிக்கப்பட்ட நிலை. ஆனால் இந்த நிலையில் நாம் இருக்கிறோம் எனத் தெரிந்த பிறகு ஒருவர் அவ்வகையில் இயங்குவாராயின் அவரைப் கவிஞர் நிலையில் வைத்துப் பார்ப்பது பிழையாகிவிடும். மனுஷ்யபுத்திரனின் அதீதத்தின் ருசி என்கிறத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை ‘ஆதிக்க நிலைக் காலகட்ட’ கவிதைக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறேன். ‘என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது கவிதையின் தலைப்பு.
என்னைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்
இனித் தேவையில்லை
என நீங்கள் கருதுகிற வேளையிலும்
எனக்கான ஒரு சிறிய பயன்பாட்டை
கடவுள் உருவாக்கவே செய்வார்
….
பயன்படுத்திக்கொள்ளப்படாத
ஒரு மனிதன் ஒளிந்து கொள்வதற்கு
இந்த உலகில் எந்த இடமும் இல்லை
….நீங்கள் மன்னிக்கப்படும்போது
உங்கள் நரகத்திலிருந்து
உங்கள் வீட்டிற்கு வழிகாட்ட
ஒருவர் தேவைப்படலாம்
என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
02.04.2009 ம் தேதி எழுதியதாக பதியப்பட்ட இந்த கவிதை இங்கு நீளம் கருதி முழுமையாக குறிக்கப்பெற வில்லை. இக்கவிதையில் உள்ள நைச்சியம், ஆதிக்கத்திற்கு முன்னான பணிவு, கடவுள் நரகம் போன்ற கருத்தாக்கங்கள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆதிக்கநிலைக்கட்ட கவிதைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இக்கவிதை இருக்கிறது. இவ்வகையான கவிதைகள் அதிகம் கொண்ட தொகுப்பு மனுஷ்ய புத்திரனின் அதீதத்தின் ருசி. முதலில் குறிப்பிடப்பட்ட மனம் அல்லது சுயம் மீட்பு வகைமக்குள் வரும் கவிதைகளும் இந்த ஆதிக்க காலகட்டத்திற்கு உட்பட்டதாய் இருந்தாலும் அவற்றில் ‘போலச் செய்தல்’ த்னமை நீக்கப்பட்டிருக்கும் நிலையை நாம் உணரலாம். ஃபனானின் பிரபலமான வாக்கியம் (qoute) ஒன்றை இணையத்தில் வாசித்தேன்: ‘mystery of language gives remarkable power’ என்பதுதான் அது. இந்த வாக்கியம் எனக்கு இரண்டு விதமான அர்த்ததை அளிக்கிறது. ஒன்று மொழியின் புதிர்த்தன்மை குறிப்பிடும்படியான ஆற்றலைத் தருகிறது, இரண்டாவது, மொழியின் புதிர்த்தன்மை பிரமிக்கும்படியான அதிகாரத்தைத் தருகிறது என்பது. இரண்டுமே என்னைப் பொருத்தவரையில் சரியானவையே. ஏனென்றால் புதிர்த்தன்மை, கவிதைகளில் தன்னை அதிகபட்சமாக இருத்திக் கொள்கிறது அல்லது ஒருவேளை மொழியின் உச்சபட்ச சாத்தியமும் கவிதைகளில் நிகழக்கூடும் என்பது எனது புரிதல்.
வேர்த்தேடல் நிலை
பின்காலனிய நிகழ்வின் முதல் கட்டமான ஆதிக்கநிலையைத் தொடர்ந்து இரண்டாவதாக ஃபனான் விளக்குவது மூலஇருப்புத் தேடல். அதாவது தான் ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கிறோம் என அறிந்த பின் தனதான வேரை, தனது அசலான பண்பைத் தேடும் நிலை எனக் கொள்ளலாம்.. தனது தொன்மத்தை, ஆதி நிலத்தின் பண்பை, தனது பண்பாட்டைத் தேடி செல்லும் பண்புகளைக் கொண்ட கவிதைகள் என்ற வகையில் தமிழில் தலைசிறந்த கவிதைகள் எனக்குக் காணக் கிடைக்கின்றன. ஒரு கவிஞர் தனது வாழ்நாளுக்குள்ளான காலகட்டத்தில் தனது பால்யத்தை தேடும் விதத்திலும், வரலாறு, பண்பாடு தொன்மக்குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதத்திலும் இவை இரண்டு நிலைகளில் செயல்படுகின்றன. என்றாலும் சமகாலப் பிரச்சனைப் பாடுகளை முன் நிறுத்துவதில் யவனிகா ஸ்ரீராம் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்.
தொன்ம வேர்த் தேடலில் என்.டி. ராஜ்குமாரின் செயல்பாடுகள் சத்து மிக்கதாய் உள்ளது. தலித்தியம் சார்ந்த உரையாடலுக்கு சுகிர்தராணி களத்தில் நிற்கிறார். மேலும் தமிழில் இவ்வகைக் கவிஞர்கள் பலரைக் காணலாம். எனது ஞாபகத்திலிருந்து அவர்களில் சிலர்: தமிழச்சி தங்கப்பாண்டியன் தயாளன், கண்டராதித்தன், சபரி, ஹரிகிருஷ்ணன், பழமலய், கறுத்தடையான், நக்கீரன், ஸ்ரீநேசன், கரிகாலன், யாழிசைப் பச்சோந்தி,. போலவே பால்யத்தை தேடி வீர்யச் சொற்களாக்கும் கவிஞன் யூமா வாசுகியின் பல கவிதைகள். இது தரவரிசை அல்ல நினைவில் உள்ள பெயர்கள். பல விடுபடல் இருக்கலாம். கட்டுரையின் நீளம் கருதி இவர்களில் ஒரு சிலரின் கவிதைகளை இங்கு குறிப்பிட்டுச் சொல்கிறேன்:
முதலில் யவனிகாவின் சொற்கள் உறங்கும் நூலகம் தொகுப்பிலிருந்து தொடங்குகிறேன்: ஒரு பொக்கலைன் சாலையில் / ஊர்ந்து போகும்போது / அதன் கண்கள் ஆக்கிரமிப்புகளை கவனமாக உற்றுப் பார்க்கின்றன / மேலும் தரையைத் தூர்க்கும் அதன் வாய் / டினோசர்கள் போலக் குடிசைகளைக் கவ்வி / தூர எறிகிறது / ….. நாட்டு நாய்கள் பின் தொடர புன்னகையுடன் தன் மரவட்டைக் கால்களால் விரைந்து போகிறது… இந்தக்கவிதையில் பதியப்பெறும் அரசியல் பின்புலம் இதன் தன்மையை நமக்கு துல்லியமாக விளக்குகிறது. மேலும் கிராமங்களின் குறுக்கே புதிதாய் எழுப்பப்படும் முதன்மைச் சாலைகளின் பாலம் அந்த கிராமத்தை எந்தளவுக்கு மாறுபாட்டுக்குள்ளாக்கும் என்பதையும், ஆக்கிரமிப்புகள் மற்றும் புதிய கட்டமைப்புகள், சந்தைக் குளறுபடிகள் குறித்தும் கூர்மையான சொற்களுடன் கவிதை சமைக்கிறார் யவனிகா. இவரின் அனைத்து தொகுப்புகளும் பின்காலனிய உரையாடலை ஒரு வாசகனுக்குள் உருவாக்க வல்லவை. இவரின் கவிதைகள் சமகால சமுதாய இருப்பின் பின்புலத்தை அதன் இயங்கு முறைக்கான மூலத்தை ஆராய்கிறது எனலாம். இவரின் படித்துரைப் பெண்கள், ஆயுதசாலை, கோதுமையின் விலை, புதையுண்ட சுமைதாங்கிகள், ஒரு அரசாங்கம், மொழிச்சேவை போன்ற கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தொன்மத்தேடலில் தமிழின் முக்கிய கவியாக என்.டி. ராஜ்குமார் உள்ளார். ‘இப்பெல்லாம் பழைய சூரியனா உதிக்குது / பழைய மழையா பெய்யுது / பேரு தெரியாத பூச்சிகளாக்க / புதுசு புதுசா முளைக்குது…’ என்றும் எங்க குட்டிச் சாத்தான போல உருண்டோடுற பழைய மேகமே நீ விடுற இடிகளெல்லாம் / இவனுகளுக்கத் தலையில போய் விழாதா… என்றும் நோயுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன் / .. எனது உயிரெழுத்தின் குறுக்கே / யந்த காட்டாளனின் புராண நதி ஓடிக்கொண்டிருக்றது என்றும் தனது எளிய சொற்கள் மூலம் மூர்க்கமான தொன்மத் தேடலை நிகழ்த்துகிறார் இவர். இவரது ’ரத்த சந்தன பாவை’ உள்ளிட்ட அனைத்து தொகுப்புகளும் இவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.
போலவே சுகிர்தராணியின் ’ஆதித்தாயின் கைரேகை’ என்கிற கவிதை தொன்மத் தேடலிற்கான முக்கிய பதிவு. ஒளியூடல் கொண்ட அப்பிரதேசத்தில் என்பெயர் அழைக்கப்பட்டவுடன் … எனத் தொடங்கும் அந்த கவிதை, ‘கல்லாய் சமைந்து நிற்கிறது / ஆசீர்வதிக்கப்பட்ட அவ்விருட்சம் / ஆயிரமாயிரம் கால அழுத்தம் / அதன் கண்களில் வழிகிறது / உடல் முழுவதும் காலொடிந்த குகை ஓவியங்கள் / குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பும் / என் கைகளில் சிவந்த பழமொன்று / அதில் அழுத்தம் திருத்தமாய் படிந்திருக்கிறது ஆதித்தாயின் கைரேக’ என்று முடிகிறது இந்த கவிதை. சுகிர்தராணி தமிழின் தவிர்க்கமுடியாத ஒரு சிறந்த கவிஞர்.
போலவே, சங்கப் பாடல்களின் மீட்டுருவாக்கம் என்பதும் பின்காலனியச் சூழலில் ஒருவகையான வேர்த்தேடல் முறைமையே. அவ்வகையில் தமிழில் சக்திஜோதியின் கவிதகள் குறிப்பிடத்தகுந்த வகிபாகத்தை அளிக்கின்றன. அவரின் ’சொல் எனும் தானியம்’ என்கிற தொகுப்பில் ‘தட்டான்கள் பறந்து திரிகிற வானம் / இன்று / மழை வரும் என்று எதிர்பார்த்தேன் / மழை பொழிந்தது / வேறு நிலத்தில் / அதிகாலையின் வானிலை சற்று மாரிப் போய் / விட்டதாக / பின்னால் அறிந்தேன் / உண்மையிலிருந்து வேரொரு உண்மைக்கு / நகர்வது / அத்தனை எளிதல்ல / மேலும் ஒரு தனித்து நீளும் இரவு… இது ’வேறு ஒரு உண்மைக்கு நகரும் மழை’ என்ற தலைப்பிலான கவிதை. இக்கவிதை இரண்டாயிரம் வருட சங்கச் சுவையை எளிமையாக நம் கண்முன் நிறுத்துகிறது கூடவே சமகாலத்தியப் பெண்களின் ஒட்டு மொத்த வேதனையையும். மேலும் இவ்வகையில் கண்டராதித்தனின் ’சீதமண்டலம்’ கவிதைத் தொகுப்பும் தமிழச்சி தங்கப்பாண்டியனின் வனப்பேச்சி கவிதைகளும் தனித்துவம் மிக்க கவிதைகளாகக் குறிப்பிடத்தகுந்தவை. இனி பழமலயின் ஒரு கவிதையோடு இந்த பகுதியை முடிக்கலாம். இக்விதையில் உள்ளார்ந்து கிடக்கும் காலனியக் கூறுகளை பிரித்தெடுப்பது வாசகனுக்கு சிறந்த வாசிப்பு இன்பம்!
இந்த ஊரில் அன்று விளைந்த நெல்லை
இவ்வளவு என்று சொல்ல முடியாது
விதைக்கால் நெல்தான்
இடைச்சி ஒருத்தி இருந்தாள்
பாலையும் பாலால் ஆனவற்றையும்
பண்டமாற்று முறையில் விற்றாள்
காசும் பணமும் பெருகியதால்
பலவகை அணிகலன்களை வாங்கினாள்
கலன்களுக்குள் ஒன்று குறைவதைப் பற்றி
கட்டிய கணவன் அய்யப்பட்டான்
எங்கே… யார்… என்று
எடுத்த கொடுவாளுடன் துரத்தினான்
பாறையிடுக்கில் குகைக்குள் போய்
பதுங்கினாள்
இறந்துவிடத் துணிந்து
இலைகளை வைத்து நசுக்கியவள் முன்னே
எதிபட்டு நின்றாள்
நானும் பத்தினி … என் தாயும் பத்தினின்னா…
இந்த பாறையோட நான் மேலே போவனும்…
வளர்ந்த பாறையின் மேலேயும் ஏறி
வந்தவனைப் பார்த்தாள்
குதித்த காலடிச் சுவடுகள்
பாறையில் பதிந்தன
நானும் பத்தினி … என் தாயும் பத்தினின்னா…
இந்த இந்த குகைவாய் மூடிக்கனும்…
கொலைவாளோடு குதித்தவனைக் கண்டதும்
குகைவாய் மூடித்தான் கொண்டது
அதட்டினான், அழைத்தான்
தோன்றினாள்:
மகிடன் செற்ற மாயோளாய்!
அவன்தான் எருமை.
அவள்தான் மாயோள்
பத்தினி பலியாக மாட்டாள்
பலி கொள்வாள்.
முற்சொன்ன பண்பாட்டு மீட்பு என்பதும் வேர்த்தேடல் காலகட்டம்மும் ஒரே வகையானது என்பது இப்போது சற்று பிடிபடும் என்பது நிச்சயம்.
காலனி நீக்க நிலை:
ஆதிக்க மனநிலை மற்றும் வேர்த்தேடல் கட்டம் ஆகியவற்றின் அடுத்த நிலையாக ஃபனான் குறிப்பது காலனி நீக்கம் குறித்த கருத்தாக்கமாகும். ஆதிக்க நிலையை உணர்ந்து தனது அசலை தேடிய நிலையில் அல்லது தனது பூர்வாங்க நிலையைக் கண்டடைந்த நிலையில் தன் மீதான ஆதிக்கத்தை நீக்கம் செய்து கொள்ளுதல் என்பது ஒரு கால கட்டமாகும். இது ஒரு சமுதாயம் - காலனியாதிக்க விடுதலையிலிருந்து - அதன் ஆதிக்க மொழியிலிருந்து விலகுவதிலிருந்து தொடங்குகிறது. இந்த வகைமை தனது வட்டார வழக்கு மொழியை பயன்படுத்துதல் மற்றும் மறுக்கப்பட்ட சொல்லாடல்களை முதன்மைப் படுத்துதல் என இரு வகையில் செயல்படுகிறது.
முதல் வகைக்கு மு. ஹரிகிருஷ்ணன் கவிதைகள் (இவரை வேர்த்தேடல் நிலையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்), லச்சுமணின் ஒடியன் மற்றும் இ.எம்.எஸ்.கலைவாணனின் ஒரு சவரக்காரனின் மயிறுகள் ஆகியவற்றையும் அடுத்த வகைக்கு லீனா மணிமேகலையின் கவிதைகளையும் குறிப்பாகச் சொல்லலாம். மு. ஹரிகிருஷ்ணன் நிகழ்த்துகலைஞர்களின் வாழ்வியல் தொடர்பாக அவர்களது மொழிக்குள் இருந்து தனது கவிதைளைப் புனைகிறார். ‘ நீர் மேல் குமிழி நிலையற்ற காயம் / தேத்தண்ணீர் பருகுவது போலும் / புணார்ச்சி’ எனத் தத்துவம் பேசும் இவரது பெரும்பாலன கவிதைகள் கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் பற்றியது. மேலும் இவரது கவிதைகளில் இழையோடும் சொற்களின் லயம் தனித்துவமானது. அவரின் அழிபசி தொகுப்பில் ஒரு கவிதை:
படுகளத்தில் கண்ணகி சதிராட்டத்தில் மாதவிதானென்று
பறந்தாடியதில் கொண்டையமேறிய கூத்து கொடிநாட்ட
இனாம் வந்த சொணையாணை எண்ணமுடியவில்லை
மங்கலம்பாடி சம்பளம் வாங்கியும் முகமழிக்க வழியில்லை
ஊரு மூப்பன் வீடு திறந்திருக்கிறது
காசைப் பார்த்தால் ஆசை கண்ணைப் பார்த்தல் போதை
அறுப்புக் காலத்தில் பெருக்கானுக்கு ஆறேழு கூத்தி
நடுசபையை விட்டு விளக்குக் கம்பத்திற்கு பெயர்ந்தவள்
வலிய எண்ணையும் துணியும் தந்தாள்
மீனிருக்க புளியங்காய் தின்ற சாத்ரீகப் பூனையை
கட்டவிழ்த்து போ – பூஸ் – போ – பூஸ் யென்றாலது போமா
புருடன் வந்துவிட்டான் – ஓடி சோரவில்லை
இழுத்துக் களைத்த நாய் ஒழிந்தயிடமும் தாழ்வாரமுந் தேட
முழுப்பூசணி சோற்றில் மறைந்தது.
போலவே முறையே லச்சுமனனின் ஒடியன், இ.எம்.எஸ்.கலைவாணனின் ஒரு சவரக்காரனின் மயிருகள் மற்றும் ஹெச்.ஜி.ரசூலின் உம்மா கரு வண்டாய் பறந்து போகிறாள் ஆகிய தொகுப்புகளிலிருந்து மூன்று கவிதைகள் இவ்வகை கவிதைகளின் சிறந்த எடுத்துக்காட்டுகள். அந்த கவிதைகளை கீழே பார்க்கலாம்:
வீடு
…
தான் தூங்குவமே
ஓ கூரே
தாய்
ம் அஃகா
தந்தை
அமையே
தவளை
ம்கூம்
கப்பே
சொன்னதை திரும்பிச் சொல்லு
பிரம்பு பிஞ்சிடும்
…
வகுப்புக்கு வெளியே
முட்டிபோட்டு நின்னு கொண்டிருக்கோம்
நானும் எத்து மொழியும்.
- லச்சுமனன்
படிப்பு வரலைனா
உங்கப்பன் கூட
செரைக்க போக வேண்டியது
தானலேன்னு
கூரைப் பள்ளிக்கூடத்தை மொழுவ
சாணாங்கி பொறக்க
அனுப்பிவெச்ச
நடராஜ பிள்ளை வாத்தியாரை
அன்னைக்கு ஒரு நாளு
செயர்ல இருத்தி வச்சு
அப்பா ஷேவ் பண்ணுகாரு
கிருதால இருந்து
கத்தி கீழ இறங்கி
கழுத்துக்கு கிட்ட வரும்போது தோணுது
அப்படியே வச்சு
ஒரு இழுப்பு இழுத்துர மாட்டாரான்னு
தாயிளி சாவட்டும்
- இ எம் எஸ் கலைவாணன்.
எழுவானமும் நடுநடுங்க
முழங்கிக் கொண்டிருந்தனர்
உம்மத்தின் ஒற்றுமை பற்றி
புணரச் சொல்கிறாயே
குறியை அறுத்துப் போட்டுவிட்டு.
-ஹெச்.ஜி.ரசூல்
இவர்களது கவிதைகளில் வெளிப்படும் வட்டார வழக்கு பிரயோகம் மற்றும் காலனி எதிர்ப்பு நிலைகள், காலனிநீக்கக் கதையாடலுக்கு முக்கிய பிரதிகளாக திகழ்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலான தமிழ் கவிதைப் பரப்பில் மேற்குறிப்பிட்டுள்ள லச்சுமனின் கவிதை தனித்துவமானது. மேற்குறிப்பிட்ட மூன்று கவிதைகளை படித்தாலே அவற்றின் காலனி நீக்கக் கூறுகள் புரிந்துவிடும் தன்மையுடைய கவிதைகள் என்று தெரிந்துவிடும். ஆகையால் இவற்றை விளக்கிச் சொல்ல அவசியமில்லை என்று கருதுகிறேன்.
அதேபோல், மறுக்கப்பட்ட சொல்லாடல்களின் மீட்சியை ஒரு வாசகன் லீனா மணிமேகலையில் கவிதைகளில் எளிதில் காணலாம். ஒரு பெண்ணாக தனது உடல் சார்ந்த புரிதல்களை மறுக்கப்பட்ட சொற்களில் சித்தரிக்கும் போது மொழி அடிப்படையிலான காலனி நீக்கம் வலுவாக செயல்படுவதை இவரது கவிதைகளில் உணரமுடிகிறது. இவரின் ’உலகின் மிக அழகிய பெண்’ என்கிற தொகுப்பு உட்பட அனைத்து தொகுப்புகளுமே சிறந்த காலனி நீக்கச் சொல்லாடல்கள் நிறைந்த தொகுப்புகள். எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் வாசகர்களால் மறுக்கவியலாத பல கவிதைகளை எழுதியுள்ளார் லீனா மணிமேகலை. தனது உடலை - எதிர்மறையாய் மதிப்பு கூட்டப்பட்ட உறுப்புகளை - தன்னிலை மறந்து திருவிழாவாக புனைந்து கொண்டாடும் மனநிலை ஒவ்வொரு பெண்ணுக்குமான உரிமை என்பது எனது புரிதல். அவ்வகையான கொண்டாட்ட நிலையில் தன்னை வெளிப்படுத்தும் நிறைய கவிதகளையும் அளித்துள்ளார். இத்தொகுப்பில் உள்ள ’கனவு நினைவு கனவு’ என்கிற கவிதை எனக்கு அணுக்கமானது. இவரது ’தவளையின் பாடல்’ என்ற கவிதையின் ஒரு பத்தி மட்டும் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
என் யோனி
நாற்றுப் பாடல்
மழைப்பூச்சி ரீங்காராம்
காட்டிருட்டின் இசை
தாலாட்டு சத்தம்
துப்பாய்க்கியின் குழலை நுழைக்கும்வரை
நுளம்பு துளைத்து இதயம் உதிரும்வரை
வெடிப்பார்களா எரிப்பார்களா பிய்த்து எரிவார்களா
பொசுங்கிய மூளையின் புகை ஓயும்வரை
துடைப்பானின் கட்டை லத்தி சிகரெட்
முகமூடிகள் போத்தல்களையும் செலுத்தும்வரை.
முதலாளித்துவக் காலனீயம்
உலகமயமாக்களுக்குப் பின்னான அகப்/புறச் சூழல்களை மையம்கொண்டு இயங்கும் தமிழ் கவிஞர்களை இன்குலாப், சி.மணி, சுயம்புலிங்கம், ரமேஷ் பிரேதன், சி. மோகன், வசுமித்ர, வெய்யில், இளங்கோ கிருஷ்ணன் என்கிற வினோத வரிசையால் நான் புரிந்துகொண்டுள்ளேன். தமிழில் வானம்பாடிகள், ழ க்கள், துளிகள், சுவடு, கணையாழி, காலச்சுவடு போன்ற கவிதை இயக்கங்கள் எழுபதுகள் முதலான முப்பது வருடங்களில் பெரும்பாலும் பின்காலனீயச் சொல்லாடல்களுக்கு முக்கியமளிக்கவில்லை என்கிற எண்ணம் எனக்குண்டு. மிகச்சில விதிவிலக்குகள் இருக்கலாம். இரண்டாயிரத்திற்கு பின்னும் ரமேஷ்-பிரேம் தவிர தம்மை பின்காலனீய கவிஞர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் என்று யாரும் இல்லை என்றே தோன்றுகிறது.
இன்றைய உலகச் சமுதாயச்சூழல் என்பது முதலாளித்துவ காலனீயக் காலம் என்பது வெளிப்படை. அதன் எல்லைக் கோடுகள் முடிவற்றது. உலகில் ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு அணுவிலும் அது ஊடுறுவுகிறது. அதன் வீச்சை சரியான புரிதலோடு எதிர்கொண்டு தனது மொழியைக் அடையாளம் கண்டு ஒரு கவிஞர் தன்னை உருவாக்கிக் கொள்ளவேண்டும். முதலாளித்துவ காலனியாதிக்கச் சூழலில் மேற்சொன்ன கவிஞர்கள் சிறப்பாக செயல் பட்டிருக்கிறார்கள். சமகால கவிஞர்கள், இன்குலாப், சி.மணி, சுயம்புலிங்கம் போன்றோரை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்பது என் கருத்து.
இவ்வகைமைக்கு ’இதுமாதிரி நோன்புகாலத்தில்தான் / நானும் வாப்பாவும் உம்மாவும் / எங்கள் சொந்த நாடெனக் கருதியிருந்த / நிலப்பரப்பில் விலங்குகளைப் போல / சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தோம் / தடையற்ற நீரின் நடை போன்றதொரு / சுதந்திரம் உணர்ந்திருந்த காலம் / நானும் வாப்பாவும் தொழுகை / முடித்துத் திரும்பும் பொழுதில் / உம்மா தயாரித்து காத்திருக்கும் / ரொட்டியின் சுவை அலாதியானது / சலசலக்கும் எங்கள் நீரோடையின் /தனிச்சுவையை உம்மா ரொட்டிக்குள் / பொதிந்துவிட்டாளோவெனத் தோன்றும் / இப்படியான நாட்களில்தான் நாங்கள் / அவர்களின் இனமில்லை என்றார்கள் / எங்கள் நிலம் அவர்களில் தொப்புள்கொடி / என பழங்கதை சொன்னார்கள் / தொப்புள்கள் அற்ற நாங்கள் / மனம் முழுக்க குருதி கொப்பளிக்க / கூனிப்போய் குறைந்தபட்ச / உரிமைகளைக் கேட்டோம் / அவர்களின் துப்பாய்க்கிகள் / உம்மாவின் இடுப்புக் கீழே குறிபார்த்தது / வாப்பா கைகளைக் குவித்துக் குமுறினார் / துப்பாய்க்கினாலேயே / கிளம்புமாறு சைகை காட்டினர் /நாங்கள் எங்கள் நிலத்தை / விட்டு பெயர்ந்த போழுதில் தூரத்தே / பள்ளியிலிருந்து வாங்கோசை கேட்டது / நான் உம்மாவின் கைகளை உதறி / வீட்டினுள் இருக்கும் எனது / ரொட்டியை எடுக்க ஓடினேன்.’ என்கிற எளிய கவிதையை நறுமுகைதேவியின் ’சாத்தானின் அந்தப்புரம்’ என்கிற தொகுப்பிலிருந்து சொல்லலாம்.
ஆனால் உலகமயாக்கலில் உள்ள பிரச்சனைப்பாடுகளை முன்நிறுத்தி ஒரு மிகச்சிறந்த கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கவிஞர் வெய்யிலின் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ தொகுப்பிலுள்ள ’பூச்சிகளின் உபரி வரலாறு’ என்கிற கவிதையைச் சொல்லுகிறேன். முதலாளித்துவ காலனியாக்கத்தின் எதிர் குரலாக தனித்துவமான மொழியோடு சமகாலத் தமிழ்ப் பரப்பில் சிறந்த கவிஞராக வெய்யிலைப் பார்க்கிறேன். மிக நீண்ட அந்தக் கவிதையின் கடைசி பத்தி இது:
….
என் அறவுணர்ச்சியை கீறி அதில் உப்பையும் மிளகையும்
தேய்க்கிறேன்…
கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது
மாறுதல்கள் நிரந்தரமானவைதான்
இப்பொழுது ஷூக்களின் நாடாக்களை நெகிழ்த்துகையில்
எனக்கு அதிபர்களின் புன்னகை நினைவில் வருகிறது
அறவுணர்ச்சியை நான் கல்லின் கூர்மையாலேயே கீறினேன்
கல் மிகுந்த பயன்பாடுள்ளது
நண்பர்களே
வரலாற்றில் அதுவே நம்மை மனிதனாகியது.
முடிவாக, ஒட்டு மொத்தமாக பின்காலனிய நிகழ்வுப் போக்கில் ஆதிக்கதிற்காட்பட்ட நிலை, வேர்த்தேடல் செயல்பாடு, காலனி நீக்க மனோபாவம் ஆகிய நிகழ்வுகளின் ஊடே நமக்குக் கிடைப்பது ஒரு மாபெரும் பண்பாட்டு கலப்பு என்றால் மிகையில்லை என்றாலும் முறன்களின் ஊடாக வளர்ச்சிதான் இயல்பு என்பதன் அடிப்படையில் நாம் தமிழ்ச் சூழலில் கவிதையியலைக் காணவேண்டும். தமிழ் சூழலில் பின்காலனீய போக்கு என்பது வெறும் தலித் இலக்கியமாக குறுகிக் கிடக்கிறது என்பது எனது கருத்து. இது தொடர்பான விரிவான விவாதங்கள் நடத்தப் படவேண்டும். அப்படி விவாதம் பின்காலனியம் தொடர்பாக நிகழ்த்தப் படும்போது இவ்வகையான கவிதைகள் தங்கள் அர்த்தப்பாடுகளிலில் இருந்து மேலும் விரிவடைந்து பன்முகத்தன்மையை அடையும். கோட்பாட்டிற்காக மேற்குறிப்பிட்ட கவிஞர்கள் மற்றும் அவர்களின் கவிதைகளை பகுத்து இக்கட்டுரையில் விவரித்திருந்தாலும் மொத்தமாகப் பார்த்தால் இவர்கள் அனைவரும் பின்காலனிய சிந்தனையில் இயங்கும் மனிதர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவர்களின் கவிதைகள் பின்காலனிய நிலையின் அனைத்து கூறுகளிலும் இயக்கம் கொள்கிறது என்பதையும் நான் நினைவில் கொள்கிறேன்.
இக்கட்டுரையில் நான் குறிப்பிட்ட கவிஞர்களில் பெரும்பாலானோரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கும் அவற்றை ஒட்டிய அவர்களது செயல்பாடுகளுக்கும் நான் அந்நியன். தனிப்பட்ட முறையில் அவற்றில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களிடம் கேட்க எனக்கு நிறைய கேள்விகள் உண்டு. இருந்தாலும் நான் மேற்கோளிட்ட கவிஞர்களின் கவிதைகளில் பின்காலனியக் கூறுகள் இருக்கிறது என்பது எனது புரிதல். நான் ஏற்கனவே சொன்னது போல் இவ்வகையான கூறுகள் இவர்கள் அறியாமலேயே கூட இருந்திருக்கலாம். அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு அவற்றை முக்கியத்துவப் படுத்துகிறேன். ஏனெனில், பின்காலனியச் சிந்தனையின் அடிப்படையில் - குறிப்பிட்ட வகையில் - அவர்களது கவிதைச் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதை பின்காலனியச் சித்தாந்தம் உரிமையுடன் கோருகிறது. இந்த சுருக்கமான கட்டுரையை எழுதப் பணித்த நண்பர் பேராசிரியர் ரத்னகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
உதவிய நூல்கள்
- இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்கள்.
- பின் காலனியம்: ஒரு சுருக்கமான அறிமுகம் - அடையாளம்
- ஃபனான்: அல்ஜீரிய வாழ்வும் விடுதலையும் – டேவிட் மாசி
- வானம்பாடிகளுக்கு பின் புதுக்கவிதை – சுப்ரபாரதிமணியன்
- கீற்று.காம்
………………………………………………………..
No comments:
Post a Comment