30 September, 2010

வானவில்வண்ண மின்னல் 2


ரமேஷும் பத்மாவும் ஒரே கேள்வி கேட்டிருக்கிறார்கள். நல்லது. அறிமுகமில்லாத ஒரு பெண்ணும் ஆணும் அறிமுகமாவதற்கு ஒரு சூழல் தேவை. குறைந்த பட்ச நேரம் தேவை. உதாரணத்திற்கு நான் திருச்சியில் காலை ஏழு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வருகிறேன். ஒரு பையுடன் ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள். அவளுடன் பேசவேண்டிய எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. நேராக போய் உங்களிடம் பேச வேண்டும் .. ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாமா.. என்று சாதரணமாக கேட்கக்கூடிய சூழல் இங்கு இருக்கிறதா. இந்த சூழல் தேவையா என்பது வேறு விஷயம். ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இப்படி அறிமுகமில்லாத இடத்தில் அறிமுகமில்லாத நபரிடம் பேச முடிகிறதா.. அப்படி முடிந்தால், அந்த நபரின் எண்ணவோட்டம் எவ்வாறு இருக்கும்? ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேசினால்.. அந்த பெண் ஒரு பாதுகாப்பு உணர்வை அடைவது இயல்புதானே. புதிய ஆண் என்பவன் ஒரு பெண்ணுக்கு சற்றும் பாதுகாப்பில்லாதவன். அதே போல ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசினால் அந்த ஆணுக்கு அந்த பெண் மீது ஏற்படும் கண்ணோட்டம் இயல்பாகவே தவறாக இருக்கும். முதற்பார்வையில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதைத்தான் நான் சாத்தியமில்லை என்று கூறுகிறேன். ஒரு மூன்றாம் நபர் அல்லது செயல் என்பது இல்லாமல் நேரடி அறிமுக சாத்தியக்கூறு இல்லை என்றுதான் சொல்லவந்தேன். மேடம் இந்த கம்பெனியில் இருந்து வரேன்..இந்த பொருள் வாங்கிக்கொள்ள விருப்பமா.. என்கிற பொது செயல் ஒன்று தேவைப்படுகிறது.நேரடியாக சென்று 'நான் மகேந்திரன், உங்களிடம் பேச வேண்டும்' என்று சொன்னால் அந்த பெண் போலீசுக்கு போய்விட வாய்ப்பு அதிகம். அப்படி பேசுவதற்கான மனநிலை ஆண்களுக்கு எதனை சதம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? குடித்து விட்டு அலையும் ஆண்கள் தனி. காதலுக்கு topogrphy முக்கியம். வாழும் சூழல். ஒரு ஆணும் பெண்ணும் அறிமுகமில்லை என்றாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அது செயற்கையாக கூட இருக்கலாம். ஒரு நாள் ஒரு பெண்ணை பார்த்தால்.. மீண்டும் அந்த பெண்ணை திரும்பத் திரும்ப பார்க்கும் வாய்ப்பை அவன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முதல் விதி. அல்லது அவன் விதி!காதலை விடுங்கள். நட்பு? பத்மாவும் ரமேஷும் போல எனக்கும் 'அதெப்படி' என்று தோன்றியது. ஆனாலும் ஆண் பெண் நட்புக்கு திடமான ஒரு காரணி இருக்கவேண்டும். இல்லையென்றால் முடியாது. புது ஆணை ஒரு பெண் நிராகரிப்பது மட்டுமே இயல்பு. மனதளவில் அவனை பிடித்திருந்தாலும் அறிமுகத்திலேயே அவளது மனநிலையை சொல்லிவிட மாட்டாள். ஏனென்றால் அது முடியாது. சமூகம் அப்படித்தான் இருக்கிறது. ஒரே விஷயத்தை மூன்று பாராக்களில் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறேன்!

பத்துவும் ரமேஷும் தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலம் இதை ஒரு உரையாடலாக்க விரும்புகிறேன்.

*************************

ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை. - இப்படி ஒவ்வொன்றுக்கும் முரண்பாடான வாக்கியங்களின் நேரடி தொடர்புபற்றி இதில் விளக்க முயல்கிறேன். தொடர்ந்து கேள்விகள் கேட்டால் கோர்வையாக இந்த விவாதத்தை ஒருங்கிணைக்க வசதியாக இருக்கு. பத்மா,ரமேஷ், வசுபாரதி, கௌசல்யா,கொற்றவை, சுரேஷ் ஆகியவர்களிடம் கேள்விகளை எதிர்பார்க்கிறேன். தம்பிகள் பாலாவையும் பாலாசியையும் வரவேற்கிறேன்.

***************************************************

27 September, 2010

வானவில் வண்ண மின்னல் 1

ஒரு உரையாடலை கவனித்தேன். நெல்லை விரைவு ரயிலில். காலை ஆறு மணிக்கு. ஆணுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். பெண்ணுக்கு இருபதுகள். அவன் ராணுவத்தில் இருக்கலாம். அந்த பெண் தகவல் தொழில்நுட்பம். ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாதவர்கள். அந்த பெண் எதையும் கவனிக்காமல் ஜன்னல் வழி தூரலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவளின் கவனஈர்ப்பை எப்பாடு பட்டாவது பெற்றுவிடவேண்டும். லேசான உடல் நடுக்கம் தெரிந்தது அவனிடம்.
நான் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவழியாக ஆரம்பித்தான் பேசுவதற்கு.

"மேடம், உங்க செல்ல கொடுங்க ஒரு நிமிஷம்..."
"எதுக்கு.."
"ஒரு கால் பண்ணிக்கிறேன்.. ப்ளீஸ்.."
"நீங்களே ரெண்டு மூணு செல் வெச்சிருக்கீங்க.. எங்கிட்ட கேக்கிறீங்க.."
"அவுட் கோயிங் இல்ல.. அதான்.. ஹி.. ஹி.."

மொபைலை எடுத்து பார்த்தால் அதில் டவர் இல்லை.
"டவர் இல்லை.." என்கிறாள். நம்பாமல் பார்க்கிறான்.
"ஐயோ சத்தியமா டவர் இல்லை.."

ஐந்து நிமிட மௌனம். வண்டி செங்கல்பட்டை கடக்கிறது.

"என் பெயர் சரவணன்.. ஏர்போர்ஸ்.. உங்க பேரு.."
"சிவகாமி.. "
"என்ன பண்றீங்க.."
"வொர்க்"
"அதான் என்ன வொர்க்.."
"IT கம்பெனி.."
"எங்க.. "
"வேளச்சேரி.. "

மீண்டும் பத்து நிமிட மௌனம்.

"எந்த கம்பெனி.."
"சொலாரிஸ்.."
"சொலாரிஸ் தானா.."
"அது என்ன சொலாரிஸ் தானா..!?"
"இல்ல இல்ல அங்க என்னோட ரெண்டு பிரெண்ட்ஸ் வொர்க் பண்றாங்க.. இப்போ ஸ்டேட்ஸ் ல இருக்காங்க..எந்த காலேஜ்.. ?"
"ஈரோட்.... ட்ரிப்பில் ஈ.."

சில நிமிட மௌனம்.

"ஜன்னல் வழியா திரும்பி பாருங்க.. வானவில்.."

திரும்பிப் பார்க்கிறாள். அழகான வானவில். நிசமாகவே ரசிக்கத் தொடங்கி விட்டாள்.

"கேட் வாசலில் நின்று பார்த்தால் முழுசா தெரியும்.. "
"இல்ல பாதிதான் விழுந்திருக்கு.."
"உங்க மொபைல் நம்பரை தர முடியுமா.."
"எதுக்கு.. "
"பேசுறதுக்குத்தான்.. வேறெதுக்கு கேப்பாங்க.."
"தேவையில்ல.. "
"மொபைல கேட்டவுடனே தந்திட்டீங்களே.. என்னோட நம்பருக்குத்தான் அடிச்சேன்.. உங்களோட நம்பர் எனக்குத்தெரியும்.. "
"பாக்குறதுக்கு டீசன்ட்டா இருக்கீங்க.. நீ அப்படி பண்ண மாட்டீங்கன்னு நெனெச்சேன்.."
"என்னோட நம்பர் உங்க மொபைல் ல இருக்கு.. கண்டிப்பா பேசுங்க.."

மழையில் குடையை பிடித்தவாறு தாம்பரத்தில் இறங்கி சென்றுவிட்டாள். அவனும் இறங்கி மழையில் சந்தோசமாக நனைந்தபடி சென்றுவிட்டான். அவனைப்பார்த்து அவள் பாந்தமான புன்சிரித்ததுவே அவனது சந்தோசத்திற்கு காரணம்.

கேள்வி:
அறிமுகமில்லாத பெண்ணும் ஆணும் அவர்களுக்குள்ளே அறிமுகப்பட்டு நட்பு பாராட்டுவது நடைமுறையில் சாத்தியமா?
பதில்:
ஏறக்குறைய இல்லை.

பெண்ணின் அடிப்படை சுதந்திரத்தில் ஒரு ஆனால் மிகச்சுலபமாக நுழையமுடிகிறது என்று கொள்வோமானால் men are men. brutals. ஆண்கள் காமத்திலிருந்து தொடங்கி காமத்தில் போய் முடிக்க விரும்பும் அறிவிலிகள் மட்டும்தானா? இல்லை என்று எந்த ஆணாவது நிரூபியுங்கள்! அறிமுகமில்லாத பெண்ணிடம் ஒரு காபி சாப்பிட கூப்பிடும் செயல் என்பது சரியா? அந்த பெண்ணிற்கு வானவில் என்று பெயர் வைத்து நானொரு கவிதை எழுதியதை அவளிடம் சொல்லாமல் நான் வந்தது சரியா?

...... தொடர்கிறேன்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

25 September, 2010

குறுந்தொகை 4

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே

ஒல்வா ளல்லலென் றவரிகழ்ந் தனரே

ஆயிடை. இருபே ராண்மை செய்த பூசல்

நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

...................................................................................... குறுந்தொகை - அவ்வை - பாலை.

இப்பாடல் என்னைப்பொருத்தவரையில் மிகமிக முக்கியமானது. இதில் "ஆளுமை" ( personality) என்கிற பதத்தில் ஆண்மை என்கிற சொல்லை உபயோகித்திருப்பார் அவ்வை. மேலும் அக்காலத்திய புதுக்கவிதை இதுவென்று அறுதியிடலாம். அவ்வையின் மற்ற கவிதைகளைப் போலவே இதுவும் புரட்சிகரமானதே. (நண்பர்களே.. சங்கத்தில் பல அவ்வைகள் இருந்திருக்கி-றார்களென அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.)

பிரியமாட்டானென நினைத்தேன்

பிரிவதை சொன்னால்

தாங்கமாட்டாளென

நினைத்து சென்று

விட்டான் சொல்லாமல்.

நல்ல பாம்பு கடித்தது போல

அலமலக்கிறது மனம்

அவ்வேளையில்

இரண்டு ஆளுமைகளும் செய்த

பூசல் நினைத்து.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குறுந்தொகை

நல்லுரை யிகந்து புல்லுரை தா அயப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந்தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே...


.......................................................................................... குறுந்தொகை - அவ்வை - குறிஞ்சி.


மறுத்தாள் இன்றிரவு.

ஆசை கொண்டு
நல்லது கேட்டேன் இல்லது சொன்னாள்
மழைநீர் கொள்ளாத பச்சைமண் கலையம் போல
துக்கம் தாங்காத உள்ளம் கொண்டேன்
நெஞ்சே. துயர் என்பது உயரக்கிளையில்
தாவும் மந்தியின் நெஞ்சைக் கவ்வும் குட்டி போல கவ்வும்.

* * * * * * * * * * * * * * * *


வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்

மலையுடை யருஞ்சுர மென்பநம்

முலையிடை முனிநர் சென்ற வாறே..


.................................................................................. குறுந்தொகை - அவ்வை - பாலை.ஆற்றாத மனம்:


முலைகளிடையில் தலையழுந்த தூங்கியவன் பிரிந்த

பாதையென்பது வெக்கையால் சூடான

காற்று வாகைமர பொந்தில் வீசி அதன் விளைச்சலை

முடமாக்கும் மலைகளுக்கிடையேயான பாதை.

* ** * * * * * * * * * * * * * * * * ** * * * * * *

21 September, 2010

சுழலும் கண் மரம்


ரயில் நிலைய நாட்கள் மாற்றப்பட்டு விட்டது. தற்காலிக தலைநகர் வாசம். வெயிலற்ற வெக்கைச் சென்னை. கடுமையான பெருநகர பேருந்து பயணம். இருந்தாலும் நண்பர்கள் சுவாரஷ்யம். தினமும் கடல் பார்த்தல் நடக்கிறது. ஏழு வருடங்களுக்கு பின்னான மரீனா நிறைய அழுக்கு. மணலிலும் மனதிலும். இரவு எட்டுமணிக்கு மேல் காணக்கிடைக்கும் காட்சிகள் மனித அவலத்தின் சாட்சிகள். சுரேசுடனான மொட்டை மாடி நாட்கள். பேச்சு. பேச்சு ... இனிய நினைவுகளுக்கு.

நேற்று 20 - ம தேதி 83 வது கலங்கரைவிளக்க தினம். இரவில் சரவிளக்கு பொருத்தி அழகுபார்த்திருந்தார்கள். கலங்கரைவிளக்கம் வண்ண விளக்குகளுடன் நிலாவின் பின்புலத்தில் ஒரு ரம்மியமான காட்ச்சியை கொடுத்தது. என்றைக்கும் கவனித்திரா இந்த உயர்கட்டிடம் இன்று எனக்கு வினோதமான ஒரு படிமமாக தெரிகிறது. வெளிச்சம் உமிழும் சுழலும் கண் மரம். கடலை விடாமல் பார்த்துக்கொண்டிருகிறது. கடலே பயப்படுமளவுக்கு. கண்காணிப்பு என்பதன் குரூர சாட்சி. அது திசை மாறுபவர்களுக்கு உதவ அல்ல.. மாறாக திசை மாறாமல் தடுக்க. கண்காணிப்பு என்பது மரணத்தைவிட பயங்கரமானது.

ஞானியின் 'கேணி' கூட்டத்திற்கு முதன் முதலாக செல்ல நேரிட்டது ஒரு அனுபவம். சேர்ந்திசை பாடல் பற்றிய ஒரு விளக்க உரையும் - பால் அகஸ்டின் - ஒரு சேர்ந்திசைக் குழுவின் நிகழ்வும் நடந்தேறின. விவித்பாரதியில் கேட்ட வார்த்தை சேர்ந்திசை. இப்போதைக்கு மறந்துவிட்டார்கள் போல. அந்த குழு பாடிய பாரதி பாடல்கள் வித்தியாச அனுபவம். அந்த ராக அமைப்பு என்போன்றவர்களுக்கு தவிர்க்கமுடியாத கிருத்துவ மதபிரச்சார பாடல்களை நினைவுபடுத்தியது. வேறு வழியில்லை, இவ்வைகையான சேர்ந்திசை ராகங்களை அவர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவதால் வரும் வினை. அதே ராகத்தில் பகத்சிங்கையும் பாடலாம் என அந்த குழுவின் குரலுருப்பினர்கள் நிரூபித்தார்கள்.

கடந்த நாட்களில் சொர்ணலதா மரணம் எனக்கு கடும் துக்கத்தை ஏற்படுத்தியது. போனாளே ... பொன்னுத்தாயீ.. பொலபொலவென்று காண்ணீர் விட்டு.. குரலை ஒரு வாத்திய கருவி போல இசைக்க தெரிந்தவர்..
***************************************************

20 September, 2010

ஒரு துளி குருதி


சிதறிய கொலுசுமணிகள்
சுமந்த கால்களின் சொந்தக்காரி
கட்டாந்தரை காய்ந்தபுல்லில்
உருட்டிவிடப்படுகிறாள் உடையற்று
எனது சாட்டையடி பட்டு
சிவப்பாய் நைந்து கிழிகிறது
பச்சை வரியுடல்
முகடுகள் ஏறி தப்பிக்கவே முயலும்
அவள் தலையில் பாய்ச்சுகிறேன்
ஒரு தனித்த குண்டை
தலை சிதற என் துப்பாய்க்கி முனை
ஊதுகிறேன்..

துர்கனவில் அவள் என்னை
தூக்கிப் பறக்கிறாள்
மாயக்கம்பளத்தில்
கடந்து போகும் நிலக்காட்சிகளில்
தெரியும் என்னை
ஓநாய்கள் தின்னுகிறன

பார்க்கவே பார்க்க அவள்
உதடோரம்கசிகிறது
குளிர்ந்து உறையும் ஒரு துளி
குருதி.

10 September, 2010

குறுந்தொகை 2


அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே. அவர்
நன்நெடுங்குன்றம் பாடிய பாட்டே
*************************************** குறுந்தொகை 23 - அவ்வையார்.
பாடு பெண்ணே குறிசொல்லி
சங்குவெண் கூந்தல் பெண்ணே பாடு
மீண்டும் மீண்டும்
தலைவியின் பசலைக்கு
வேரானவனின் சிறப்பைக் குறித்தே
பாடு.
*****************************************


முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. ************************************************ குறுந்தொகை 28 - அவ்வையார்

காதலன் அருகிலில்லாமல்
நான் படும் வேதனையை
அறியாமல்
சுழன்று வீசும் தென்றலின் பின்
இனிதாக உறங்கும் ஊர்பயல்களை
முட்டிக் கொல்வதாஅன்றி தாக்கிக்

கொல்வதாவென அன்றிலும் ஐயோவென கத்துவதாவென.... அறியேன் நான்

*************************************************************

07 September, 2010

அப்பா .....


பள்ளி வெளியேறிய

யாமத்தில் சில்லுகள்

நள்கையில் வில்லெய்திக்

கொய்கிறேன் ஒடிந்த மின்னலை.

எரிந்து அடங்குகிறது கானகத்திமிர்.

ஏறி மிதிக்கிறது பரிதிவெளிச்சத்தை

வாங்கி உமிழும் உருண்டை.

ஒவ்வொரு செதிலாய் பிடுங்கிகொண்டு

பறக்கிறது இரவுநிற வெட்டுக்கிளி.

நான் பள்ளி மீள்கிறேன்.

கதவை திறக்கிறார் அப்பா.

தவிரவும் இல்லை தவறவும் இல்லை.

இளஞ்சூட்டுடன் உள்ளங்கை

அழுந்த பிடித்து அழைத்துச்செல்கிறார்

உள்ளே. திறந்துகொண்டே இருக்கிறது

முடிவுராக்கதவுகள் திசைகளற்ற வெளிக்குள்.

பட்டென்று வெடித்த காய்க்குள்லிருந்து

மிதக்கும் சிறுபஞ்சென உணர்கிறது நாசி.

கையை விடாதீர்கள்

ஒரே ஒரு கதவு அடைபடும் வரையேனும்...

பார்த்திபன் கவிதைகள் 1

பார்த்திபனின் தலைப்பிடப்படாத கவிதை.

* * * * * * * * * * * * * * ** * * * * * * * * *

அங்குதான்
கடவுள் கொலையுண்டிருப்பதாகச் சொன்னார்கள்

பார்வைச் சுவாரஸ்யமற்றவை பிணங்கள்
எனினும்
கால்களை அங்கு இட்டுச் சென்றது
இனியொருமுறை கடவுள் கொலையுறுவாரா என்ற ஐயம்

கொலையுண்ட கடவுளின்
சுவடின்றி வீசிக்கொண்டிருந்தது காற்று

வேப்பம்பூ மணத்த மரத்தின்
இலைகள்
கிளைகளுக்கிசைந்தபடி ஆடிக்கொண்டிருந்தன

வேப்பம்பூ மணத்த மரத்தின்
பறவைகள்
இன்னும் கூட்டைந்திருக்கவில்லை

திசைகள் இருந்தன அதனதன் இடத்தில்

விரைந்து சென்ற பேருந்தின்
ஜன்னலோரக் குழந்தை
கையசைத்துப் போனது
நெஞ்சைப் பிசைந்த புன்னகை வீசி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

03 September, 2010

குறுந்தொகை

பறைபடப் பணிலமார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழர்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

--------------------------------------------------- குறுந்தொகையில் - ஔவையின் பாடலிது. பாலைத்திணை. என்னாலியன்ற ஒரு சிறிய பெயர்ப்பு.

சென்றுவிட்டாள் நன்றென்று நம்பி விடலைஅவனை

வென்றுவிட்டாள் கோசர்கள் முன் தெளிந்தமொழிபோல

நன்றுசெய்தான் மடந்தையை மாலையிட்டான் பறை அதிர சங்கூத

கொன்றுவிடு நல்தாயே பதற்றத்தை இனிதாய் வாழ்வாளுன்மகள்.

அல்லது

சென்றுவிட்டாள்
தெளிந்தமொழி போல
அவனுடன் பிடித்துப்போய்.
பறை அதிர
சங்கு ஓத
மணமுடித்தாள்
மாறாத நட்பு
கலங்காதே தாயே.

******************************

விடலை என்றால் தலைவன் என்று அர்த்தமாம்!

**********************

குறுந்தொகையில் ஔவையார் பாடிய பதினைந்து பாடல்களை இப்படி எளி-பெயர்க்க ஆசை!

*********************

01 September, 2010

மனநிலை

சகலமும் தீர்ந்துதான் போகவேண்டியிருக்கிறது நாளின் முடிவில். ஒரு இரவு அதற்காக பரிசளிக்கப்படுகிறது. புதிப்பித்துக்கொள்ள. ஆனால் தூங்கிபோய் விடுகிறேன். ஒரு புதிய காலை வெறும் சாலையில் குறுக்கிடும் கீரிப்பிள்ளை போல சரட்டென்று கடக்கையில் சகலமும் பற்றிக்கொள்கிறது மீண்டும், நீண்ட இருமுனை வாளை பின்முதுகில் செருகியவாறு. ஆக்ரோசமான ஒரு பூப்பந்தாட்டத்தில் சமயோசிதமான ஒரு இறந்த பந்து (dead baal) எதிராளியின் மொத்த சமநிலையையும் கவிழ்த்து விடுவது போல ஒரு சுவாரஷ்ய விளையாட்டைப்போலில்லாமல் இந்த நாட்கள் தினமும் இறந்த நாட்களாகவே வந்து மோதும்போது எதிர் வீச்சு வலுவிழந்து போகிறது. இதுதான் இந்த கணத்தின் மனநிலை. மறப்போம். என்பதற்காக சில பாடல்களைக் கேட்டேன். மனநிலைக்குத்தகுந்த மாதிரித்தான் கேட்கிற குரல் செவினுழைந்து வேலைசெயும்போல. ஜானகி இன்பம் பொங்க ஒரு காதல் குரலில் பாடினாலும் மனம் பொங்கி விடுகிறது. மிக லேசான சோகம் என்றால் கண்ணில் நீர். "பூவுக்குள்ள வாசம் வெச்சான்.. பாலுக்குள்ள நெய்ய வெச்சான்... கண்ணுக்குள்ள என்ன வெச்சான்.. பொங்குதடி ஏம்மனசு... " ஜானகியின் குரல் இதய நாளங்களை பொங்கச்செய்கிறது. மறுபடியும் " என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்.. " என்கிறார். கண்களில் நீர் கோர்க்கிறது. என்ன கருமம்டா என்றுவிட்டு பாடலை மாற்றினேன். வந்தது பாருங்கள் ஒரு பாட்டு. இதற்கு முன் கேட்டதில்லை. "ட்ரிங் .. ட்ரிங் .. சிக்குபுக்கு.. " என்று தொடங்கி ஒரே துள்ளல். எந்த படம் என்று தெரியவில்லை. பாடியது யார் என்று தெரியவில்லை. சரணத்தின் முடிவில் சென்னையின் இரண்டாவது பிரதான வாக்கியமான 'OK வா?' என்கிற பதத்தை (முதல் வாக்கியம் "ச்சான்சே இல்ல") அவர் உச்சரிக்கும் போது எதுக்கும் சரி என்று சொல்லிவிடலாம் போல. இவ்வைகையான துள்ளலிசை (இவ்வார்த்தை உபயம் கோடை பண்பலை) கேட்கும் போது குப்பையை கிளறிக்கொண்டிருக்கும் கோழியை நொடிகளில் வன்புணர்வு செய்யும் சேவலாய் உணர்கிறேன். என் ஆணாதிக்க மனநிலையை நண்பர்கள் மன்னிக்க வேண்டும். மொத்த மனநிலையையும் மாற்றவல்ல இப்பாடல் வரிகளை அதன் இசை நுணுக்கத்தை கண்டு பெருவியப்பு கொள்கிறேன். டி. ராஜேந்தர், ஆர்.வி. உதயக்குமார் போன்றவர்களின் பாடல் வரிகளை மனம் கடுமையாக மிஸ் பண்ணுகிறேன். "I miss you" என்கிற வாக்கியத்தை எப்படி தமிழ் படுத்துவது என்று தெரியவில்லை. வைரமுத்து தொடங்கி முத்துகுமார் வரை எல்லோரும் ஒரே மட்டைகள். இருப்பது வேறு குளம் என்கிற பெயரில் சாக்கடை. எதையோ தொடங்கி இங்கு முடிக்கிறேன்.. !