Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

13 August, 2010

மாறுதிசை

இதை ஜெகனின் தளத்திலிருந்து பார்த்த பிறகுதான் எழுதுகிறேன். கீழே எழுதப்பட்டிருக்கும் கதையின் கரு முன்பதிவுகளில் வந்திருந்தால் வருந்துகிறேன்.
**************************


ஓடு பாதையிலிருந்து பறக்கும் பாதைக்கு நிலை கொள்ள அவ்விமானம் எண்பத்தேழு விநாடிகளை எடுத்துக்கொண்டது. பணிப்பெண்ணின் குரலில் தங்களது இருக்கை கச்சைகளை தளர்த்தினார்கள் பயணிகள். வணிகவகுப்பில் ஹால் கிளமென்ட் தனது கைபேசியை எடுத்து எண்களை அழுத்தினான். எதிர்முனையில் தமிழ்வாணன் பதில் சொன்னான்.


"நாளை இரவு ஏழு இருபதுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.. ஹால்.. நான் உன்னை மணக்க அது தகுந்த நேரம்தான் இல்லையா.. வா இனிய பையா.. நமது எதிர்காலம் சென்னையின் கடற்கரையில் தொடங்கட்டும். என்ன தேனினிய அன்பே. இனிவரும் நாட்களில் உனக்கு தூங்க நேரமிருக்காது.. நன்றாக உறங்கிக்கொண்டு வா.. என்ன .. ஹா ... ஹா .. நாளை இரவு நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாம் இல்லை என்றால் இன்னும் இருநூற்று நாற்பத்து ஆறு வருடங்களுக்கு நம்மால் திருமணம் செய்து கொள்ள முடியாது.. உனக்குத்தான் தெரியுமே எனக்கு ஜென்மங்களின் மேல் நம்பிக்கை இல்லை என.."

விமானம் வடஅமெரிக்காவின் மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை எட்டு ஐம்பதுக்கு புறப்பட்டிருந்தது. 9219 நாட்டிகல் மைல்கள் கடந்து அது மறுநாள் காலை ஆறு ஐம்பதுக்கு சென்னை சர்வதேச முனையத்தில் தரை இறங்கும். 23 மணி நேர இடைநில்லாப்பயணம். ஹாலும் தமிழும் மூன்று வருட காதலர்கள். திருமணம் செய்ய முடிவு செய்ததும் ஹால் புளங்காகிதம் அடைந்து விட்டிருந்தான். ஒரு பாரம்பரிய திருமண முறையை அவர்கள் மேற்கொள்ள சென்னைக்கு வர முடிவு செய்து தமிழ் ஒரு மாதத்திற்கு முன்னமே சென்னை வந்து ஏற்பாடுகளை செய்யத்தொடங்கியிருந்தான். ஷாம்பைனின் இரண்டு பெரிசுகளை குடித்து விட்டு தூங்கத்தொடங்கினான் ஹால். நேரம் காலை ஒன்பது முப்பத்து ஐந்து.

அந்த நொடிக்கு சரியாய் 36 நேரங்களுக்கு முன்னாள்:

பூமியின் தேதி 19.09.2035.

பால்வீதியின் விளிம்பில் ஒரு சிறு வெடிப்பு நிகழ்ந்து இருபத்து ஏழு மைல் நீளமும், நாலு மைல் அகலமுமாய் கடும் அழுத்த அழுக்கு பாறை ஒன்று ஒன்றுமில்லாததிலிருந்து ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் விடுபட்டது. தொடர்ந்து அதன் வேகம் அதிகரித்தது. நாநோவினாடிகளில் அது ஒளியின் பதின்ம மடங்குகளை தொட்டுத் தொடர்ந்தது. அதன் இருப்பு துலக்கம் (transparant). பூமி இருப்பின் சொல்லவொண்ணா தற்செயல் போலவே வேறு எதிலும் இடித்துக்கொள்ளாமல் அது நேரடியாக வளிமண்டலத்தின் விளிம்பிலிருந்து பூமிக்கும் மேலே நிலவின் சுற்றுப்பாதையில் தாண்டி 666 மைல் தொலைவிலான ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருந்தது. பூமியினை அப்பாதையில் அந்த பாறை கடந்து சென்ற போது பூமியில் தேதி 22.09.2035. காலை ஆறு பதினைந்து. அந்த பாறையின் வேகம் மணிக்கு 786 ஒளி ஆண்டுகள்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹால் ஒரு கடுமையான உலுப்பலில் கண்விழித்தான் ஹால். விமானமே எதோ குழப்பத்தில் இருந்தது. என்ன நடந்தது என யாருக்கும் புரியவில்லை. நான்கு நிமிடங்கள் கழித்து விமானி தனது ஒலிபெருக்கியில் சொன்னார்: பயணிகளே.. நிலைமை என்னவென்று விளங்கவில்லை.. நான் இப்போது கீழே பார்ப்பது மெம்பிஷின் சர்வதேச விமான தளத்தை... அங்கு தரையிறக்க கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ள முயல்கிறேன்.. ம்ம் .. நான் நினைக்கிறேன் .. நாம் ஒரு நாளை தொலைத்து விட்டோமென்று.."

***********************

அடிக்க வராதீர்கள் சாமிகளா...

**********************

26 June, 2010

ராசாவின் மனசிலே

நாகராஜன் குடிக்கச்சொன்னால் நுவக்ரானையும் குடிப்பான் வெங்கடேஸ்வரலு. வெங்கடேஸ்வரலு இனி வெங்கு. நாகி (புரியுமென்று நினைக்கிறேன்) ஒரு வியாபாரி. இணைத்தொழிலாக கதை எழுதும் அறிவுஜீவி. எல்லா கதைகளும் போல் இங்கு வெங்கியின் தங்கை மங்கி மன்னிக்கவும் மங்கையர்கரசியை டாவினான் நாகி. அனுமார் போன்றதொரு பாத்திரம் இங்கு எழவில்லைஎன்றால் கதைக்கு பங்கம். எனவே அவன் பெயர் கோபாலகிருஷ்ணன். அவனை வெளக்கெண்ணை என்றால்தான் திரும்புவான். ஆக பாத்திரமும் பிரச்சனையும் முதல் நான்கு வரிகளில் தென்பட்டால் நல்ல கதைக்கு அறிகுறி. ஆனால் ஒன்று குறைகிறது. நீங்கள் நினைப்பது சரி. நிலம். நெய்தலுக்கும் மருததிற்கும் இடையில் ஒரு எல்லைப் பிரதேசம். பதினேழு காத தூரத்தில் குறுஞ்சி வேறு. ஆனால் இது பின் நவீன காலம். கதைக்கு போகலாம்.

முற்பகல்:

வெளிப்புற படப்பிடிப்பு:

மத்தியகோணம்:

நாகியை கோவத்துடன் மன்னிக்கவும் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான் வெங்கு. சற்று நடுங்கிய நிலையில் வெளக்கெண்ணை. தெனாவெட்டாய் நாகி.

மங்கியின் நினைப்பை தொலைத்துவிடு.

இல்லையென்றால்.

நாகியை மறந்துவிடு.

இது சுலபம்.

வெளக்கெண்ணை சொலவதைக் கேளுங்கள்.

முடியாது. அவன் மறக்கவேண்டும். இல்லை மறக்கவேண்டும்.

முடியாது. மறக்க முடியாது. மறக்கவே முடியாது.

முடியும். முடியவேண்டும்.

முடியாது. முடியவே முடியாது.

மங்கியிடம் சொல்கிறேன். நாசமாய் போங்கள்.

வெயில் பற்றாமல் படப்பிடுப்பு ரத்து செய்யப்பட்டது.

**********************************************************************

உள்ளரங்கம்:

டாஸ்மாக் பெர்மிட்டேட் பார்:

தூர கோணம்(long shot)

விரும்பி அடிக்கும் கைகள் என்கிற எனது சிறுகதையைப் படித்தபின்னுமா என்னைப்பற்றி புரிந்துகொள்ளவில்லை வெங்கு. நான் ஒரு மேதை என்பதை நீ சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஆயிற்று பத்னேழு வருடங்கள். நீ சொன்ன பின் நீயே அதை வழிமொழியவில்லை. ஆனால் நான் ஒரு முழு அறிவு ஜீவி என்பதில் சந்தேகமுண்டோ.. வா கொண்ட்டாடுவோம் இந்த பதினேழாவது நினைவு நாளை: இது ஒரு கொண்டாட்டம். cheers for the women we lost and we love.

**********************************

அவன் ஒரு வியாபாரி என்று சொன்னேன். அவனுக்கு கணினி சாம்பிராணி செய்து விற்பது தொழில். கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால் சொல்வான்: கடவுள் இருக்கிறார் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் மட்டுமே இருக்கிறது. என்னவென்றால், அவர் தனக்கான கல்லறையை தொடர்ந்து வனைந்து கொண்டிருக்கிறார். try and error method - இல் அவர் புனையும் கல்லறைக்கு தற்காலிகமாக பூமி என்று பெயர் வைத்திருக்கிறார். இதைக்கேட்டு ஒருமுறை வெங்கி சொன்னான்: எருமை கழிவு. (bull shit)

*************************************

மங்கி ஒரு செவிலி. ஒருமுறை university of Madras Dictionary - இல் NURSE என்பதன் விளக்கம் பார்த்து தனது தொழிலை மறந்தாள்; அதன் விளக்கம் இவ்வாறு இருந்தது: தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுத்தாய், குழந்தகைளை பேணி காப்பவள, நோயாளியை பேணி காப்பவள், இன தாய்ச்சி, தேனீ - எறும்பு முதலிய வகையினில் மரபு காக்கும் அலியினம், இனப்பெருக்க மாறுபாடுகளையுடைய உயிர்களிடையே பால் சார்பற்ற படிநிலை, காடு வளர நிழல் தரும் மரம், வளர்ப்பு நிலம். வினைத்தொகையில்; ஊட்டுதாய்க்கு உதவு, பாலூட்டி வளர், பேணி வளர், தாதியாக செயலாற்று, நோயாளிகளை கவனித்து பேணு. நோய் நொடி கவனித்து குணப்ப்படும்படி பணிவிடை செய். செடிகொடிகளைப் பேணு. தோட்டம் பாதுகாத்து வளர். கலை முதலியவற்றைப் பேணி ஆதரி. பகைமை - கவலை முதலியவற்றை மனதில் வைத்து பேணி வளரச்செய். தளராமல் பாதுகா. பரிவோடு கவனி. குழந்தையை பரிவோடு எடுத்தணைத்து பரிவு காட்டு. தழுவிக்கொஞ்சி விளையாடு. முழந்தாளைக் கட்டி அனைத்துக் கொண்டிரு. காலைத்தடவியவாறு உறுப்புகளை மிகு ஆதரவு காட்டி போற்றிப் பேணு. மேசைக் கோர்பந்தாட்டத்தில் எளிதாக தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாய் பார்த்து வை. கணப்பருகில் அணைவாய் அமர். வாக்காளர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு. முன் உந்து உலகத்தின் தொழில் வாய்ப்பில் பங்கு பெறும் நோக்குடன் அண்டி அனைத்து நிறுத்து. பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடன்நெருங்கிச் செல்.

******************************
இப்போது மங்கியும் நாகியும் ஆளுக்கொன்றாய் ஆட்டோ ஊட்டி மன்னிக்கவும் ஓட்டி பிழைக்கிறார்கள். திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் அவர்கள் சவாரிக்கு பேரம்பேசுவதை வெங்கு சாமியாக பார்த்துக்கொண்டிருக்கிறான். நுவக்ரான் குடித்தால் சாக மாட்டானென்று வேங்கியும் நாகியும் நம்பிய பொது ஆளுக்கொரு ஓல்ட்மங் ஆப்பை குடித்திருந்தார்கள்.

*****************************

நுவக்ரான் அவனைக்கொல்லும் முன் ஒரு சைக்கிள் காரன் தட்டிவிட்டு பொட்டில் அடிபட்டு செத்துப் போனான் வெங்கி.

****************************

director touch: பிற்பாடு மங்கியின் மகளுக்கு வெங்கி என்று பேர் வைக்கலாமா என்று associate அன்புவிடம் கேட்டதற்கு..

மூடிட்டு படுறா.. என்றார்.

***********

இரண்டு வருடங்கள், மூன்று மாதங்கள், பதினாலு நாட்களுக்கு முன்பு:

அண்ட வெடிப்பு.

நான்கு வருடங்களுக்கு பின் மங்கிக்கும் ஒரு மகன் பிறந்தான். வெளக்கெண்ணை அவனுக்கு அப்பாவாக acting கொடுத்தான்.

***************

சுபம். மிச்சத்தை வெண்திரையில் காணவும்.

************

21 May, 2010

எட்டுவதும் எட்டாததும்



"ஒற்றையிலக்கங்களில் எனக்கு பிடித்த எண் எட்டு. பிடிக்காத எண் எட்டு. எட்டு ஏன் பிடிக்கும். அது இரண்டு சுழியன்களால் ஆனது. எட்டு ஏன் பிடிக்காது. அது இரண்டு சுழியங்களை மேலும் கீழுமாய் வைத்துக்கொண்டு ஒரு ஆழமான பிம்பத்தைக்காட்டுகிறது... " என்று சொன்னான் கோபி.



சொன்ன இடம்: வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பிருந்த அடைத்த பெட்டிகடைக்கும் ஒரு செருப்புதைப்பவனுக்கும் இடையிலிருந்த ஒரு இடம்.
சொன்ன பொழுது: சூரியன் மறைந்த பிறகான மாலை. நேரம் ஏழு ஐம்பத்து ஐந்து.
அசமந்தமான மனிதர்களின் கூட்டம். மதியம் நாலு மணியிலிருந்து நாலு அம்பத்து ஐந்து வரை திகுடுதிம்பான மழையில் வினோதமான வீச்சம் காற்றில் பரவியிருந்தது. கோபிக்கு முன்னாள் நின்று அவன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இரண்டு பெண்கள். கேட்காமல் தேநீர் அருந்த போனவன் ராஜகோபாலன்.
துர்கா அவனை கொஞ்ச நேரம் உற்று பார்த்தாள். பின்பு அவளைப்பார்த்தாள். கேட்டுக்கொண்டிருந்த பாத்திமா "ஏசுவே.."என்று முனுமுனுத்தாள். அதே நேரத்தில் ராஜகோபாலன் பாதி குடித்த கின்லே பாட்டிலுடன் அங்கு வந்து சேர்ந்தான். போலாமா என்று கேட்டாள் துர்கா.



cut.


வாசகா உன்னிடம் உள்ளது ஒன்பது சட்டங்கள்.குறைந்தபட்சம் அவற்றில் நான்கையாவது உபயோகிக்கவில்லைஎனில் நீ இந்த கதையை படிக்க லாயக்கற்றவன். மன்னிக்கவும் லாயக்கற்றவர்.



சட்டம் ஒன்று:
துர்கா ஒரு ஓவியை. தூரிகைகளில் வண்ணம் குழப்பி இல்லாதவற்றை உருவாக்குவதன் மூலம் தான் இல்லாமல் போவதாக தன்னை கற்பனை செய்கிறவள். அவளுடைய மாதவிடாய் சீராக உள்ளது. பதினேழு முறை கற்பிழந்தவள். அதற்கு ராஜகோபால் மட்டுமே காரணம் அல்ல. அவளது முதல் கற்பிழப்பு பதிமூன்று வயதில் ஒரு சைக்கிளை ஓட்டும் போது ஏற்பட்டது. கன்னித்திரை கிழிந்தால் கற்பு போய்விடும் என்று அறியாத வயதில் இது நிகழ்ந்தது. பெண்களை ஒரு சைக்கிள் கூட கற்பழிக்கும் என்று தெரியாத ராஜகோபால் தனது முதல் பெண்ணான துர்காவை காதலிக்க தொடங்கியதால் அவனது பெரியம்மாவின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு அவனை அவமானம் கொள்ள செய்து அதை மறுப்பதற்காக மாலை கல்லூரியின் அரபு மொழிகற்க விண்ணப்பம் செய்து கொண்டான். பிறகு நீளமானதை இடமிருந்து படிக்கவும் வட்டமானதை பின்பக்கமிருந்தும் படிக்க கற்றுக்கொண்டான். தன்னை ஒரு சமபக்க முக்கோணமாக வெளிப்படுத்தி ராஜகோபாலை நிலைகொள்ள விடாமல் பார்த்துக்கொண்டாள். அவளது முதல் தவறு ராஜகோபாலுடன் கொடைக்கானல்செல்ல சமத்தித்தது. அதன் பலனை நீங்கள் யூகிக்கலாம். அவ்வளவு சுலபமா என்ன என்னை வீழ்த்துவது என்ற துர்காவின் நினைப்பில் மண்ணள்ளிபோட்டது காலம்.


சட்டம் இரண்டு:


ராஜகோபாலன் ஆசிரியரின் மகன். அம்மா திருமணத்துக்கு முன் கைத்தறியில் ஈடுபட்டவள். கல்லூரி முடித்தும் முடிக்காமலும் புத்தனையும் ஜென்னையும் தேடி சைக்கிளில் புறப்பட்டவன் இரண்டு வருடத்தில் மாநில படகு விடும் போட்டியில் வெற்றிபெற்று அன்றே துர்காவைப் பார்த்து புத்தனின் முகத்தில் கரி பூசிவிட்டு அவளுடன் மேத்தமெடிக்ஸ்- ல் ஈடுபட்டான். சமன்பாடுகளின் முடிவில் துர்க்கா ஒப்புக்கொண்டாள்.


சட்டம் மூன்று:


கோபி கணக்கு வாத்தியார். அன்பு ஸ்டடி சென்டர் நடத்துகிறான். இரண்டாயிரத்து ஆறாம் வருடம் மார்ச்சில் கணக்கில் தவறிய பாத்திமா அக்டோபருக்கு தேர்வு எழுத அன்பில் இணைந்தாள். அதன் பின் கோபி கணக்கு சொல்வதை விட்டுவிட்டு கணக்கு செய்வதை ஆரம்பித்தான். இரண்டு வருடங்களுக்கு பின் சென்டரை பூட்டிவிட்டு கீதலோச்சினி வித்யாலயாவில் ஓவிய ஆசிரியனாக சேர்ந்து விட்டான்.


சட்டம் நான்கு:


பாத்திமா என்கிற பார்வதி. இரண்டாயிரத்து ஆறில் படிக்கப்போனவள் இரண்டாயிரத்து எட்டில் கோபியுடன் ஓடிப்போனாள். அப்பத்தை உதரச்சொல்லி பார்வதி மணவாளன் ஆனான் கோபி.



போதும் நான்கு சட்டங்கள் என்று முடிவு செய்கிறான் கதைசொல்லி. சிவராமன் சொன்ன frame - தான் சட்டம் என்று தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தகவலாகவும் சொல்கிறான் எழுதுபவன். எழுதுபவனும் கதைசொல்லியும் ஒரே ஆளா அல்லது.... அது அவர்கள் பிரச்சனை. விட்டுவிடுவோம்.


நான்கு பேரின் சந்திப்பு தளம் கீதலோச்சினி பள்ளி. அவர்கள் இந்த கோடையில் கொடைக்கானல் செல்ல முடிவுசெய்து இப்போது வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் நிற்கிறார்கள். அப்பொழுதுதான் கோபி சொன்னான்: அவனுக்கு எட்டு பிடிக்கும் என்றும் அவனுக்கு எட்டு பிடிக்காது என்றும்.


பின்பு அவர்கள் சென்று விட்டார்கள். இனி இந்த நான்கு சட்டங்களையும் நீங்கள் என்னசெய்வீர்கள் என்று எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் பார்த்துக்கொண்டிருக்கிற சட்டம் இங்கிருக்கிறது. அதே வத்தலக்குண்டின் பேருந்து எதிர்புறத்தில், அந்த நான்கு பேரும் நின்றிருந்த இடத்திலிருந்து மூன்றடி தொலைவில் சாலையில் விழுந்துகிடந்த ஸ்கட் கருப்பன்.


நாட்டின் அசுவாரஷ்யமான காட்சி. போதை தாங்கமாட்டாமல் தெருவோரமோ சாலையோரமோ விழுந்து கிடப்பது. கதைசொல்லி இது கொடுப்பினை என்கிறான். போதையில் கூட தனைமறந்த நிலை வாய்க்கப்பெறவில்லை என பெருமூசெறிகிறான்.


விழுந்து கிடந்தவனின் காதில் விழுகிறது எட்டு பற்றிய கோபியின் விளக்கம். கருப்பன் ஒரு தொழில்முறை துரோகி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்சு பேர்வழி. கந்து கருப்பன் என்கிற பேர் அமெரிக்க ஈராக் போரில் உபயோகப்படுத்தப்பட்ட ஏவுகணையான ஸ்கட்டை உலகம் பார்த்தபின் ஸ்கட் கருப்பனாக மாறிப்போனது. அவனுக்கும் எட்டு என்கிற எண்ணை பிடிக்காது. ஆனால் எட்டு என்கிற வார்த்தையைப் பிடிக்கும். நிறையவே. வேணும் என்கிற இடத்தையோ வேண்டாம் என்று ஓடும் வாடிக்கையாளனையோ மிக எளிதில் எட்டிவிடுவான். மெல்ல தரையில் கை ஊன்றி எழுந்து நின்று நாலு எட்டு கூட நடக்க முடியாது போல என்று உரத்து சொன்னான்.


செருப்புதைக்கிற ஐந்தாம் சட்டம் அவன் வாழ்க்கையில் முதல் முறையாக அவனது ஊசியால் பெருவிரலைக் குத்திக்கொண்டான். அவன் சொன்னான்: பாத்து எட்டு வெச்சு போ மாப்ளை என்ன ஊசி குத்துனமாதிரி எதுவும் உன்ன குத்திடப்போவ்து.


ஆறாம் சட்டம்: மீண்டும் மழை.


ஏழாம் சட்டம்: ஒரு மின்னல் காவல் நிலைத்து சுற்றுசுவருக்குள் இருந்த மரத்தில் விழுந்து என்பது வைவ்வால்களை கொன்றது. மின்னல் விழுந்தா இடிவிழுந்தா என்று லாஜிக் பேசுகிறான் எழுதுபவன். எழுதுபவனுக்கு என்ன பேச்சு என்கிறான் கதைசொல்லி.



சொல்லித்தரவா.. சொல்லித்தரவா...ஆஆ... மெதுமெதுவாய் அழகே...


மொபைல் போனில் சிவராமன் அழைக்கிறார். எடுக்கிறான் எழுதுபவன். அவனுக்கெல்லாம் அமைப்பியல போய் பாடம் எடுத்தேனே.. என்ன சொல்லணும்.. தேவையா எனக்கு. அவன் எப்படி போனா எனக்கென்ன .. போய்த்தொலைங்க...


cut



பிறகு என்ன நடந்தது என்று கதைக்கு வெளியே நடந்த கதையை யூகி வாசகா. யூகி வாசகி.


ஒரே ஒரு clue மட்டும் தருகிறேன்: ஸ்கட் கருப்பனை அன்றிலிருந்து பதினேழாம் நாள் அடையாளம் தெரியாத பார்த்தால் சொல்லக்கூடிய எட்டு பேர்கள் சேர்ந்து இருபத்தியாறு இடத்தில் குத்தி கொன்றுவிட்டார்கள்.


கதைசொல்லி இதை பொய் என்கிறான். எழுதுகிறவன் வழிமொழிகிறான். சிவராமன் சிலகாலம் தொடர்பு எல்லையை துண்டிக்க விரும்பி வானத்தை பார்க்கிறார்.