29 June, 2010

ஒப்புதல்

**********

நன்றி ரமேஷ் வைத்யா. என் தளத்திற்கு நீ வருகை தந்தது எனக்கு பெருமகிழ்ச்சி.

****************

நிதானமான தருணத்தில்
அச்சிறுமி என்னை அடையாளம் கண்டாள்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு அது எனக்கு பிடிக்கவேண்டும்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு மற்ற யாருக்கும் கொடுக்காததாய்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு உன்னிடம் மட்டும்தான் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு நான் பார்க்காததாய் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு எதுமற்றவையாய் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க ..
உனக்குத்தெரியுமினி என்னிடம் அதற்கு பதிலில்லை
என்ன செய்வாய் எனை நீ மறக்கவென கேட்டாள் சிறுமி
வறண்ட நிலத்தில் சிறிது நீரூற்றி
என்னை நட்டுவைப்பேன் என்றேன் நான்.

****************

26 June, 2010

ராசாவின் மனசிலே

நாகராஜன் குடிக்கச்சொன்னால் நுவக்ரானையும் குடிப்பான் வெங்கடேஸ்வரலு. வெங்கடேஸ்வரலு இனி வெங்கு. நாகி (புரியுமென்று நினைக்கிறேன்) ஒரு வியாபாரி. இணைத்தொழிலாக கதை எழுதும் அறிவுஜீவி. எல்லா கதைகளும் போல் இங்கு வெங்கியின் தங்கை மங்கி மன்னிக்கவும் மங்கையர்கரசியை டாவினான் நாகி. அனுமார் போன்றதொரு பாத்திரம் இங்கு எழவில்லைஎன்றால் கதைக்கு பங்கம். எனவே அவன் பெயர் கோபாலகிருஷ்ணன். அவனை வெளக்கெண்ணை என்றால்தான் திரும்புவான். ஆக பாத்திரமும் பிரச்சனையும் முதல் நான்கு வரிகளில் தென்பட்டால் நல்ல கதைக்கு அறிகுறி. ஆனால் ஒன்று குறைகிறது. நீங்கள் நினைப்பது சரி. நிலம். நெய்தலுக்கும் மருததிற்கும் இடையில் ஒரு எல்லைப் பிரதேசம். பதினேழு காத தூரத்தில் குறுஞ்சி வேறு. ஆனால் இது பின் நவீன காலம். கதைக்கு போகலாம்.

முற்பகல்:

வெளிப்புற படப்பிடிப்பு:

மத்தியகோணம்:

நாகியை கோவத்துடன் மன்னிக்கவும் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான் வெங்கு. சற்று நடுங்கிய நிலையில் வெளக்கெண்ணை. தெனாவெட்டாய் நாகி.

மங்கியின் நினைப்பை தொலைத்துவிடு.

இல்லையென்றால்.

நாகியை மறந்துவிடு.

இது சுலபம்.

வெளக்கெண்ணை சொலவதைக் கேளுங்கள்.

முடியாது. அவன் மறக்கவேண்டும். இல்லை மறக்கவேண்டும்.

முடியாது. மறக்க முடியாது. மறக்கவே முடியாது.

முடியும். முடியவேண்டும்.

முடியாது. முடியவே முடியாது.

மங்கியிடம் சொல்கிறேன். நாசமாய் போங்கள்.

வெயில் பற்றாமல் படப்பிடுப்பு ரத்து செய்யப்பட்டது.

**********************************************************************

உள்ளரங்கம்:

டாஸ்மாக் பெர்மிட்டேட் பார்:

தூர கோணம்(long shot)

விரும்பி அடிக்கும் கைகள் என்கிற எனது சிறுகதையைப் படித்தபின்னுமா என்னைப்பற்றி புரிந்துகொள்ளவில்லை வெங்கு. நான் ஒரு மேதை என்பதை நீ சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஆயிற்று பத்னேழு வருடங்கள். நீ சொன்ன பின் நீயே அதை வழிமொழியவில்லை. ஆனால் நான் ஒரு முழு அறிவு ஜீவி என்பதில் சந்தேகமுண்டோ.. வா கொண்ட்டாடுவோம் இந்த பதினேழாவது நினைவு நாளை: இது ஒரு கொண்டாட்டம். cheers for the women we lost and we love.

**********************************

அவன் ஒரு வியாபாரி என்று சொன்னேன். அவனுக்கு கணினி சாம்பிராணி செய்து விற்பது தொழில். கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால் சொல்வான்: கடவுள் இருக்கிறார் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் மட்டுமே இருக்கிறது. என்னவென்றால், அவர் தனக்கான கல்லறையை தொடர்ந்து வனைந்து கொண்டிருக்கிறார். try and error method - இல் அவர் புனையும் கல்லறைக்கு தற்காலிகமாக பூமி என்று பெயர் வைத்திருக்கிறார். இதைக்கேட்டு ஒருமுறை வெங்கி சொன்னான்: எருமை கழிவு. (bull shit)

*************************************

மங்கி ஒரு செவிலி. ஒருமுறை university of Madras Dictionary - இல் NURSE என்பதன் விளக்கம் பார்த்து தனது தொழிலை மறந்தாள்; அதன் விளக்கம் இவ்வாறு இருந்தது: தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுத்தாய், குழந்தகைளை பேணி காப்பவள, நோயாளியை பேணி காப்பவள், இன தாய்ச்சி, தேனீ - எறும்பு முதலிய வகையினில் மரபு காக்கும் அலியினம், இனப்பெருக்க மாறுபாடுகளையுடைய உயிர்களிடையே பால் சார்பற்ற படிநிலை, காடு வளர நிழல் தரும் மரம், வளர்ப்பு நிலம். வினைத்தொகையில்; ஊட்டுதாய்க்கு உதவு, பாலூட்டி வளர், பேணி வளர், தாதியாக செயலாற்று, நோயாளிகளை கவனித்து பேணு. நோய் நொடி கவனித்து குணப்ப்படும்படி பணிவிடை செய். செடிகொடிகளைப் பேணு. தோட்டம் பாதுகாத்து வளர். கலை முதலியவற்றைப் பேணி ஆதரி. பகைமை - கவலை முதலியவற்றை மனதில் வைத்து பேணி வளரச்செய். தளராமல் பாதுகா. பரிவோடு கவனி. குழந்தையை பரிவோடு எடுத்தணைத்து பரிவு காட்டு. தழுவிக்கொஞ்சி விளையாடு. முழந்தாளைக் கட்டி அனைத்துக் கொண்டிரு. காலைத்தடவியவாறு உறுப்புகளை மிகு ஆதரவு காட்டி போற்றிப் பேணு. மேசைக் கோர்பந்தாட்டத்தில் எளிதாக தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாய் பார்த்து வை. கணப்பருகில் அணைவாய் அமர். வாக்காளர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு. முன் உந்து உலகத்தின் தொழில் வாய்ப்பில் பங்கு பெறும் நோக்குடன் அண்டி அனைத்து நிறுத்து. பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடன்நெருங்கிச் செல்.

******************************
இப்போது மங்கியும் நாகியும் ஆளுக்கொன்றாய் ஆட்டோ ஊட்டி மன்னிக்கவும் ஓட்டி பிழைக்கிறார்கள். திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் அவர்கள் சவாரிக்கு பேரம்பேசுவதை வெங்கு சாமியாக பார்த்துக்கொண்டிருக்கிறான். நுவக்ரான் குடித்தால் சாக மாட்டானென்று வேங்கியும் நாகியும் நம்பிய பொது ஆளுக்கொரு ஓல்ட்மங் ஆப்பை குடித்திருந்தார்கள்.

*****************************

நுவக்ரான் அவனைக்கொல்லும் முன் ஒரு சைக்கிள் காரன் தட்டிவிட்டு பொட்டில் அடிபட்டு செத்துப் போனான் வெங்கி.

****************************

director touch: பிற்பாடு மங்கியின் மகளுக்கு வெங்கி என்று பேர் வைக்கலாமா என்று associate அன்புவிடம் கேட்டதற்கு..

மூடிட்டு படுறா.. என்றார்.

***********

இரண்டு வருடங்கள், மூன்று மாதங்கள், பதினாலு நாட்களுக்கு முன்பு:

அண்ட வெடிப்பு.

நான்கு வருடங்களுக்கு பின் மங்கிக்கும் ஒரு மகன் பிறந்தான். வெளக்கெண்ணை அவனுக்கு அப்பாவாக acting கொடுத்தான்.

***************

சுபம். மிச்சத்தை வெண்திரையில் காணவும்.

************

25 June, 2010

தனிமைக்குள் புகுந்த காண்டாமிருகம்நண்ப
நேசக்கரம்நீட்டுமுன் விரல்களை
ஒடித்து குருதி கொப்பழிக்க கடவாயில்
திணித்து மேல்லுகிறேன்
வலி பற்றிய பிரக்ஞை என்னிடமில்லையெனும்
பார்வையை ஒரு இறகுபோல மிதக்கவிடுகிறாய்
காற்றில்..
எனது குரோதம் நீ எப்பொழுதும்
அறிந்ததுபோல் சொற்கலாலானவை
அவற்றிக்கு ஜீவனில்லை பாவமில்லை
துளி கருணையும் உன் மேல் அது கொண்டாடாது
கேள் ..

நண்ப
மரணித்தவனின் ஜீவனுக்கும் எனக்கும்
தொடர்பில்லை மாறாக நான் ஒரு
எளிய கொலைகாரனென அறிவாய்தானே
நான் ஒரு

சொல்
செயல்
வியப்பு
அடிமை
தனிமை
தூரம்
கத்தி
நிழல்
நான்
விருப்பம்

காலமற்ற நேரமற்ற தூரமற்ற விசும்பில்
எனது கொலையாயுதத்தை உபயோகிக்கிறேன்
அது உன்னை தவிர வேறரியாது
என் இலக்கு நீ

நண்ப
சாந்தம் கொள் நிதானமாய் மரணிக்க
பழகியதுதான் துர்மரணம் உனக்கு
எனக்கும்தான்.. கபால மோட்சம்
சொல் விடுதலை.
சொல் விடுதலை.
சொல்விடு தலை.

நண்ப
விடுதலை சொல்
என் பானம் ஏற்கனவே தைத்து
விட்டது.

************

MJ

The Way She Came Into The Place
I Knew Right Then And There

There Was Something Different
About This Girl
The Way She MovedHer Hair,
Her Face, Her Lines
Divinity In Motion
As She Stalked The Room
I Could Feel The Aura
Of Her Presence
Every Head Turned
Feeling Passion And
LustThe Girl Was Persuasive
The Girl I Could Not Trust
The Girl Was Bad
The Girl Was DangerousI
Never Knew But I Was
Walking The Line
Come Go With Me
I Said I Have No Time
And Don't You Pretend We Didn't
Talk On The Phone
My Baby Cried
She Left Me Standing Alone
She's So Dangerous
The Girl Is So Dangerous
Take Away My Money
Throw Away My Time
You Can Call Me Honey
But You're No Damn Good For Me


**********************
மைக்கேலுக்கு எனது அஞ்சலி.
**********************

20 June, 2010

அந்தகம்


1
இளவனமூங்கில் பச்சையில் கசியுமுனது ஈரம் பிரிக்கிற வாசம். தனரேகை விம்மியவழியடைத்து இடைவெளி தேடித்தவிக்கிறது சுவாசம். சொட்டுச்சொட்டாக ஊசியிலைமுனைகளில் திரள்கிறது உயிர். கனியென பறித்தெடுத்துண்ணும் வாய்வழி கோரைப்பற்கள் நீள்கிறது உதடு கிழித்து. நெகிழ்நிலமாகிறது உடலமெனும் சொல் விருட்சம். சதுப்புகளில் கால்பரப்பி சிலிர்த்து பிளிறுகிறது களிர். பேயரவம் உணர்ந்து துளையூருகிற புற்றீசல்களின் ரெக்கைகள் மிதக்கின்ற ககனம் துண்டுகளாய் சிதற வெளியெங்கும் குவிகிறது பாதரசப்புழுக்கள். பொழிந்த காற்றை உறிஞ்சும் நுண்துளை சருமம். நிமிர் ரோமக்காட்டின் களிப்பிரவாகம். தகனத்தில் பூத்த நெருப்பை விழுங்கும் நாபி.
2
இருளற்றது கானகம் கொள்பட்சிகள். வெளிச்சமும் அற்றது அவைகள். உன் சருமவெளிர்மென்வெண்மை போன்றவைகள் அவற்றின் துளிர் இறகுகள். மற்றவைகள் பறக்கும். இவை மிதக்கும். அடர்கானகத்திற்கு வெளியும் இல்லை அவை உள்ளும் இல்லை. நெகிழ்ந்துகுழைவானவுன் தேகம்போல அவை மிகமிருதுவானவைகள். விழியற்றவைகளுக்கு திசையுமில்லை வழியுமில்லை. உன் பூர்வ வாசம் போதும். அவைகளுக்கு நான் என்று பேர். நித்தியவெளிச்சத்தில் உன்னை இலகுவாய் தொடரும் அன்றில் வீழ்ந்து மடியும்.

3
விழியெல்லாம் வெளிச்சம். அந்தகம் சுகம். சூன்யம்.

*************

18 June, 2010

TCP Maniya

**********************************************************
template change play maniya (TCP Maniya) என்கிற மர்மமான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளேன். மருந்து சொல்லுங்கள்.
***********************************************************
கீழே இருப்பது எனக்கு மிகப்பிடித்த கவிதைகள்: முதல் கவிதை யூமா வாசுகியால் எழுதப்பட்டது. இரண்டாவது மலையாள கவிஞர் என். ஜி. ராதாக்ருஷ்ணன் எழுதியது. மிக மிக அற்புதமான சலனங்களை ஏற்படுத்திய கவிதைகள்.

ஒரு மனிதன் முயலாக.
ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
முயல் என்ன செய்கிறது
அவளை கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்பதாக சொல்லியிருந்தேன்
முயல் சாப்பிடுகிறது
எனும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
எங்கே முயல் காட்டுபார்க்கலாம்
என்று அடுத்தநாள் வந்தால் ஆப்பிளைக் கடித்தபடி
பெரியமுயல் கடித்துவிடும் என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கு தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
என்ன செய்கிறது முயல் என்பவர்களுக்கு
பலதடவைகள் அறைக்குள் எட்டிப்பார்த்து
முயல்பற்றிய நிலவரத்தை சொன்னேன்
நாளாக
அப்படியொரு முயல் இங்கே இல்லை எனும்
உண்மை புரிந்தாலும் நான்
வீட்டை பூட்டி புறப்படும்போது
புவனா கேட்கிறாள்
முயல் எங்கே போகிறது..?

அப்பாவும் நாயும்
என்னைக்காணும் போதெல்லாம் கன்னங்களை இறுக்கிக்கொள்ளும் அப்பா
ரப்பர் பந்து பிதுங்குவது போல முகம் நெளிய புன்னகைத்து
ஒரு நாயை நேசித்திருந்தார் முன்பு.
சோற்றுருண்டை தந்தும் அவ்வப்போது உதைத்தும்.
என்னை விரும்பாத தந்தை
நாயை நேசிக்க காரணமென்னவோ
இன்று புரிகிறது எனக்கு
சோறு கொடுத்து வள்ளல் ஆகலாம்
உதைதந்து அதிகாரம் கொள்ளலாம்
நாயும் வாலாட்டும்
மனிதக்குழந்தையை வளர்ப்பது சற்று சிரமம்
வெள்ளைச் சிமிட்டிச் சுவரில்
கரியால் அவன் ஒரு படம் வரைந்து வைப்பான்.

************************************************

16 June, 2010

மீண்ட புள்

புள்ளென அமர்ந்திருக்கும் எனைக்குறித்து உன் கவண்கல்லைப் பொருத்துகிறாய் இனிய வேடா. என் கூடு வனைய போதுமான இவ்வந்தியில் உன் குறி இனிமையானது. கூடு விட்டு சென்ற பொழுதுகள் மீள்கின்றன என் பய நரம்புகளில். உன் கெண்டையின் முறுக்குகளில் அறியும் உனது அனுபவம் எனக்கு அளவற்ற கிளர்வை பிரவகிக்கிறது சிறகுகளில். சிலிர்ப்பான சிறகுகள் பறக்கத்தோதற்றவையென அறிவாய்தானே வேடா. திருகலான மதியப்போழுதுகளில் எங்கிருந்தாய். ஒரு புழுவுக்கு வக்கற்றதாய் திரியும் இந்நிலம் உண்ட வெப்ப வெயிலை உண்டு அசையமுடியா கிளைமுனையில் கொள்வாரற்று அமர்ந்திருந்தேன். இவ்வாலத்தின் அழுத்தம் என் தனிமை வேடா. குருகுகள் கலையும் பனியுமிழ் விடியலில் எங்கிருந்தாய். என் பொட்டில் சரியாக விழும் ஒரு அறைக்கு உகந்த நேரமதுவென்பதை அறியாதவனா நீ. என் பருண்மைத்தனிமையிலிருந்து தனிமையாகவே மாறிவிடுகிற பொன் வாய்ப்பை இழந்தேன் வேடா. ஆனால் இவ்வந்தியின் தொடுவானைப்பார் அது ஒரு இனிய மதுவின் வண்ணமாய் மிளிர்ந்து பரவசப்படுத்துகிறது. தேனிலிட்ட சூரியத்தீற்றல் வானம். பெருவெளி. மரவுச்சி. கிடைமட்ட அரைவட்டத்தில் என் பறத்தல் களம். ஒரு துணையின் குறிப்பு அது. அறிய கணம். வேடா. உன் கவணிலிருந்து புறப்படும் கல்லின் பயணம் திசைமாறாதது என அறிவேன். என் பொட்டில் அது பதிக்கும் முத்தம் உன்னைப்போலவே எனக்கும் இனிக்கும். அனாலும் வேடா. நானமந்திருக்கும் கிளையின் இடப்பக்கம் இரண்டு அடி எடுத்து வைக்கிறேன். எனைக்கடந்த கல்லை விழுங்கிக்கொண்டது விருட்சம். துணையின் சமிக்கைக்கு விடையளிக்கும் இத்தருணத்தில் எனை மன்னித்து போய்வா வேடா. மீண்டும் வா ஒரு திருகலான மதியபோழுதிலோ பனியுமிழும் விடியலிலோ நான் தனிமையுற்று கிடக்கும்பொழுது.

****************

13 June, 2010

ஜாக்கி .....பார்த்திபன் மன்னிக்கவேண்டும் !!!!

*************************

எனது புகைப்படங்களுக்கு என தனியான பதிவு வலையை அமைத்துள்ளேன். http://sirumiadhira.blogspot.com/
வாருங்கள். நன்றி.


*************************

சினிமா இருக்கும் நாடுகளனைத்திலும் தெரிந்த ஒரு கதாநாயகனாய் இருப்பவர் ஜாக்கி சான். அவரது இரண்டு படங்களை சமீபத்தில் பார்த்தேன்.

shinjuku incident
karate kid


இரண்டு படங்களும் எனக்கு நிறைய கேள்விகளை எழுப்பின. ஜாக்கி சண்டை பட நாயகன். அவரது நகைச்சுவையுணர்வுடன் கூடிய சண்டைக்காட்சிகளுக்கும் கையில் கிடைக்கும் சாதாரண பொருட்களை அசாதாரணமான ஆயுதமாக மாற்றி உபயோகிக்கும் திறமையும் அவரது தனிச்சிறப்புகள். அவரது ஆளுமை எத்தகையது என்பது அவரது வலைமனையிலும் விக்கிபீடியாவிலும் தெரிந்து கொள்ளலாம். மிக பரவசம் தரக்கூடிய ஆளுமை.

அவர் ஆளுமைக்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் தன்னை அவர் வெளிப்படுத்திக்கொள்கிறார் எனலாம். ஷிஞ்சுகு இன்சிடென்ட் படத்தில் ஒரு சீன அகதியாக ஜப்பானுக்குள் நுழைந்து பிழைப்பு தேடும் பாத்திரத்தில் நடிக்கிறார், ஒரு நாயைப் போல துரத்தி துரத்தி அடித்து கொல்கிறார்கள் அவரை. தனது பிழைப்பிற்காகவும் நண்பர்களுக்காகவும் இளமைக்கால காதலிக்காகவும் தன்னை மாய்த்துக்கொள்ளும் அகதியாக அவரது நடிப்பு மிக நுணுக்கமானது. சீனாவையும் ஜப்பானையும் அதனது அரசியல் செயல்பாடுகளையும் தீர்மானமாக கேள்விக்குள்ளாகும் இந்த படம். தமிழ்நாட்டில் ஒருவாரத்திற்கு மேல் ஓடாமல் போனது. காரணம் அறியக்கூடியதே. முறைத்துக்கொண்டும், எதிர்த்து அடிக்காமலும் அடிபட்டே சாகும் ஜாக்கியை யாருக்கு பிடிக்கும்? ரஜினி அடிபட்டு செத்தால் படம் ஓடுமா. அதுபோலதான். ரஜினி அதுபோல நடிக்கமாட்டார். ஜாக்கி நடித்திருக்கிறார். கலாச்சார பிரதிபலிப்பாக மனித அவலங்களின் பதிவுத்தர்மமாகவும் தனது கேள்விகளின் ஊடகமாகவும் சினிமாவை ஜாக்கி எடுத்துக் கொள்கிறார் எனநினைக்கிறேன்.

மாறாக கராத்தே கிட் - டில்அவர் ஏற்றிருப்பது மனைவி மகளை இழந்த வயதான எலக்ட்ரிசியன் வேடம். பிரபல அமெரிக்க கறுப்பின நடிகர் வில் ஸ்மித் இன் மகன் ஜேடன்ஸ்மித் தான் கராத்தே கிட். கறுப்பின அம்மாவும் மகனும் சீனாவுக்குள் நுழைந்து அற்புதமாக வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்பதுதான் இப்படத்தின் மொத்த அரசியல். சீனா அனைவருக்கும் கதவை திறக்கிறது என்பதுதான் மெசேஜ். எண்பதுகளில் வந்த கராத்தே கிட் - இன் ரீ மேக் இதற்காத்தான் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆசிய ஐக்கான் ஜாக்கி நடிக்க வைக்கப்படிருக்கிறார்.

இந்த வகையான நாடுகள்-தொடர்பான கலாச்சார விளம்பரங்களை நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொண்டு படமெடுத்து பீப்பி ஊதும் நாடுகளில் அமெரிக்கா எப்பொழுதும் முதலிடத்தில் இருக்கிறது.

நமது நாட்டுப்படங்கள் பொதுவாக 'musical' என்று உலக நாடுகளில் அர்த்தப்படுத்த படுகிறது. இவற்றில் தொண்ணூறு சதம் ஹிந்தி படங்கள். சுப்ரமணியபுரம் போல பத்தாண்டுகளுக்கொருமுறை நமது தமிழ் படங்கள் உலக அரங்கில் மேடையோரத்தில் அமர்ந்துவிட்டு வருகின்றன.

நமக்கு ஆஸ்கார் கிடைக்க பிரிட்டிஷ் காரனிடம் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது!

09 June, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 6நம்பிக்கை என்பது விடுவிக்கப்பட்ட ஆயுதம். இருந்தால் எதிராளியைக் கொல்லும் இல்லையென்றால் தன்னைக் கொல்லும்.
*****************************
நம்பிக்கை: இந்த சொல்லின் அர்த்தப்பாடுகள் இல்லாத வாழ்வுவெளி இங்கில்லை. சந்தேகப்படுதல், கேள்விகேட்டல், அறியமுற்படுதல், விளக்கமுற்படுதல் என எல்லாவற்றிற்குமான அடிப்படைக் காரணி 'நம்பிக்கை' என கொள்கிறேன். இதுகாறும் இருக்கும் ஒரு நிலையை ஒருவர் சந்தேகம் கொள்ள நேர்வது நம்பிக்கை இழப்பின் பின்னே தான் சாத்தியம். மதம்,கடவுள் போன்றவைகளின் நம்பிக்கை போன்ற வேலைக்குதவாத பெருங்கதையாடல்களை நான் தவிர்க்கிறேன். நான் புரிந்து கொண்டிருக்கிற நம்பிக்கை இவையிரண்டையும் விட பயங்கரமானது. அது மனிதர்களாகிய நமது கூட்டு மனங்களில் ரசனையான அழகியலோடு நுண்கிருமிகளைப்போல ஊடுருவி மிகப்பிரமாண்டமான ஒரு புற்றை கட்டுகிறது. நம்பிக்கையின் வேலை என்ன என்று பார்த்தோமானால் ஒரு தனிமனித கருத்தையோ அல்லது ஒரு கூட்டுமன கருத்தையோ பொது அறமாக மாற்றுவது எனத் தோன்றுகிறது.
நம்பிக்கைக்கு உதாரணமாக இங்கு எதையாவது சொல்லலாம் என்றால் நினைக்கிற அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையால்தான் என்று எண்ணும்போது எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்வாகவும் உள்ளது. மரணம் மற்றும் அறத்திற்கும் இடையிலான இணைப்பாகவும் (nexus ) ஊடுபாகாவும் ( knit ) நம்பிக்கை செயல்படுகிறது. அது அன்றாட நிகழ்வுகளில் இருளுக்குள் மறைந்த நிழல் போல படர்ந்திருக்கிறது. நான் நம்பிக்கையை ஒரு தோதுக்காக மூன்று வகையாக பிரிக்கிறேன். சுயநம்பிக்கை, செயல்பாட்டு நம்பிக்கை, அறநம்பிக்கை என. தன்னம்பிக்கைக்கும் நான் சொல்லும் சுய நம்பிக்கைக்கும் வேறுபாடு உள்ளது.
தன்னம்பிக்கை என்பது ஒரு செயலை செய்துவிடுவேன் என்கிற வாக்கியத்தின் அடிப்படையில் வருவது. சுய நம்பிக்கை என்றால் ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்கு எது உகந்தது என நம்புகிறானோ அதை நம்புவது. உதாரணத்திற்கு நன் மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பது முதல் என் மனைவி பத்தினி என்பதுவரை நூற்றுக்கணக்கில் சொல்லலாம். இரண்டாவதாக செயல்பாட்டு நம்பிக்கை என்பது ஒரு குடும்பம் சார்ந்த செயல்பாடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்களும் அவற்றின் வழித்தோன்றல்களால் விதைக்கப்படும் நம்பிக்கைத்தூவல்களால் உருவாகும் நம்பிக்கைகள். சோப்பை மாத்தினா சொறி வரும் என்று தொடங்கி கக்கத்தில செனட்டை அடித்தால் எல்லா பொண்ணுகளும் படுக்க வருவாங்க என்பதுவரையிலான விளம்பர கழிசடைகளால் உருவாகப்படுவைகள் இவ்வகையான செயல்பாட்டு வகைகள். மூன்றாவதாக அற நம்பிக்கை நாம் அறிந்ததே. பொய் சொன்னா போஜனம் லேதுவில் தொடங்கி எனக்குத்தெரிந்து ஒருகோடியே எழுபத்து மூணு லட்சத்து நாற்பத்தேழாயிரத்து முன்னூத்து பதினேழரை அற நம்பிக்கைகள் இருக்கின்றன!

இதில் மூட நம்பிக்கை, நல்ல நம்பிக்கை, தீய நம்பிக்கை என்று அறம் பிரித்து மன்னிக்கவும் தரம் பிரித்து வைத்திருக்கிறோம். இதிலும் நம்பிக்கை என்பதிலேயே நம்பிக்கை இல்லை எனும் நம்பிக்கை சற்று சுவாரஸ்யமானது.

ஒருவன் தனது நம்பிக்கையின் மூலத்தை ஆராயத்தொடங்கினால் நம்பிக்கையின் ஒரே விளைவு ஆதாயம் என்று தெரிந்துவிடும். ஒரு நம்பிக்கையை அளிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாகவோ ஏதேனும் ஒரு ஆதாயம் இல்லையென்றால் அந்த நம்பிக்கை பயனற்றுப் போய்விடும். ஆக ஆதாயமற்ற நம்பிக்கை என்று ஒன்று இல்லை. அப்படி ஆதாயமற்ற ஒரு நம்பிக்கையை ஒருவர் வைத்திருந்தார் என்றால் அவர் மனித உருவில் உலாவும் வெள்ளாடாகவோ அல்லது கடவுளாகவோ இருக்கக்கூடும்.

ஆயிற்றா,
இந்த தொடர் பதிவில் மரணம், அறம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மீது எனக்கிருக்கும் புரிதல் பற்றி மிக மிக மிக சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இடையிலே எந்த தொடர்பும் இல்லாதது போல தோன்றினாலும் இவைதான் என்னைப்பொருத்தவரையில் மனித வாழ்வின் அடிப்படை. மற்ற அனைத்தும் இவைகளின் இருப்பு இல்லாமல் இல்லை என்பது என் துணிபு.

இவற்றை கொண்டு குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களின் உளவியலை அறிஞர்கள் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அவற்றில் நான் மேய்ந்தவைகளை தொடர்ந்து எழுதுகிறேன்.

ஒரு வகையில் கொற்றவையும், கௌசல்யாவும் தமது பதிவுகளில் ஒரு வகையான உளவியல் சிக்கல்களை எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

*******************
தொடர்கிறேன்..
******************

கண மாறுதல்கள்.

கடந்த பதிவு மதிமயங்கிய ஒரு பொழுதின் தானறியா வெளிப்பாடு. வருந்துகிறேன். unconcious mind - ல் இவ்வளவு கோர்வையாய் வார்த்தைகள் எனக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. போகட்டும். அதன் அர்த்தங்கள் விளங்கா மர்மமாகவே தொடரட்டும்.
***************
வெளிச்சூழலில் வேலை நிமித்தமாக ஏற்படும் மனஅழுத்தம் என்னை கடந்த சில நாட்களாக இம்சித்தது. சுயஉற்சாகம் கொள்ளத்தேவையான சூழலை நானாக ஏற்படுத்திக்கொள்கிற தேவை மிக கடுமையான போராட்டமாக அமைந்து விட்டது. விட்டேத்தியான உணர்வுப்பகிர்வுக்கு தகுந்த தோழமை அருகில் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம். போகட்டும். இப்போது நினைக்கையில் 'சின்னப்புள்ளத்தனமா' இருந்தாலும் மரணம் சுகம் என்கிற அளவுக்கு போயிருந்தது மனது. மொத்தமாக நான் அப்போது ஒரு வித உறவு முறைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நட்பின் படிநிலைகளில் ஒரு உச்சபட்ச நிகழ்வுப்போக்கு அது.
'Intimacy' என்கிற வார்த்தைக்கு நேரடியான தமிழ் வார்த்தை இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை. ஒரு உறவில் இன்டிமசி என்கிற நிலைக்கு வருவது என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு கொடுப்பினை. நட்பாகட்டும், மற்ற எந்தவகையான உறவுமுறையாகட்டும் - இன்டிமசி என்பதற்கு அன்யோன்யம் என்று சொல்லலாமா? -
ஒருவருக்கொருவர் கழுத்தை அறுத்துக்கொள்கிற அளவுக்கு சண்டை போடுவார்கள் சில மணித்துளிகளின் இரண்டுபேரும் பிணைந்து கொண்டிருப்பார்கள். ஒரு குற்றவுணர்வும் இருக்காது. வன்மம் மனசளவில் துளி கூட இருக்காது. வருடங்களாக பார்க்காமல் கூட இருப்பார்கள். பார்க்கும் போது பரபரப்பற்ற அன்பு பிரவகிக்கும். அவர்களின் சிறிய அசைவில் கூட ப்ரியம் வழிந்தோடும்.
நாட்கணக்கில் பேசாமல் இருப்பதும் அதற்காக சண்டைபோடுவதும் எல்லாம் துளிநேர இன்பங்களாக மாறிப்போகும். அறிவுரைகளை மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். அதை பின்பற்றுவதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம். நான் சொல்லி ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி மூளையிலேயே தோன்றாது. இப்படி நிறைய குணாதிசயங்களை வைத்திருக்கும் இந்த அன்யோன்ய உறவு அனைவருக்கும் வாய்க்குமா என்ன. இந்த உறவுமுறையில் கணவன் மனைவி இருந்துவிட்டால் இன்பமே
*************************
இந்த வகையான நட்பினை அடிப்படையாக வைத்து "clerks" என்றொரு ஆங்கிலப்படம் வந்திருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்ப காலப் படமது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று பாகங்கள் வந்து சக்கை போடு போட்டது. முடிந்தால் பாருங்கள். இந்த படத்தை நானும் சுரேஷும் சேர்ந்து பார்த்து அனுபவித்த தருணங்கள் இனிமையானவை.
*************************

03 June, 2010

காணாப் போனோம் கண் விழித்தோம்.

சாணி போடுற யானை காணோம் தினம்

கோணி தைக்கிற ஆணை காணோம் தினம்

கேணி இறைக்கிற பெண்ணை காணோம் தினம்

வாணி கொடுக்கிற அன்னம் காணோம் - அதி

வானம் தெரிகிற பூமி காணோம் வழி

பானம் கேட்டிடும் ஞானம் காணோம் வழி

மோனம் தேடும் வேழம் காணோம் வழி

தானம் கேட்கும் தாளம் காணோம் - வழி

சோளம் விளைக்கும் மூலம் காணோம்

மேளம் முழங்கும் பானம் காணோம்

தாளம் இழந்த விந்தம் காணோம்

கூளம் குவியும் சாலை காணோம் - தினம்

அன்றில் என்றொரு பறத்தல் காணோம் அவை

குன்றில் அலைந்திடும் நேரம் காணோம் சில

முன்றில் நிலைத்திடும் வீரம் காணோம் கணம்

அன்றில் முளைத்திடும் விண்ணைக் காணோம் - பகை ஆக

புன்னை என்றொரு சுரத்தை கண்டோம்

தென்னை என்றொரு மரத்தையும் கண்டோம்

புன்னை என்றொரு நிலத்தையும் கண்டோம்

தொன்னை என்பதை கேவலம் என்றோம் - அன்றில்

நன்றென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

புன்னை நிலமென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

தென்னை மரமென்று நாமத்தை தூற்றிடுவோ மோ

பொன்னை தரமென்று அனைத்தும் அளந்திடுவோ மோ.

**********************************************

நான் எனது நிலையை இழக்க தேவையான அளவு குழம்பிவிட்டேன்.மேற்கண்ட கவிதையை தெளிவான பொருள்கொள்ளும் மனங்களை நான் வணங்குகிறேன். பொருள் கூற விளம்புகிறேன்.

****************************************************************

02 June, 2010

பால்வீதி புணருமொரு தனிமை


துயர் தரும் திரவம் உறிஞ்சி வளர்கிறது உயிர் பயிர். அதன் மொத்த சாரமும் ஈர்த்து உப்பிப் பருக்கிறது பயிர்முனையில் குரோதக் கனி. அதன் ருசி துரோகம். இலைகள் வன்மம். அதன் வண்ணம் கரும் ஊதா. தண்டு போதம். வேர்கள் விருப்பம். ஒவ்வொரு விடியலிலும் ஒரு கனியாகாத இருள் பூ மௌனத்துடன் உதிர்கிறது அதனிடமிருந்து. அது ஒரு மெல்லிய நிழலை வெளியெங்கும் படர விடுகிறது. உதிர்வதற்கு வினாடிகளின் முன்பு தனிமையெனும் மகரந்தத்தை அடிவயிற்றில் ஏந்திய மொனார்க்குகள் தூவிச்செல்கிறது வெளியெங்கும் படர்ந்த நிழலில். கிரணங்களின் முதல் ஸ்பரிசத்தில் புணர்வுச்சம் பெற்று கருக்கொள்கிறது பால்வீதி.
*****************************
திருமொழி வாய்வழி தருமொரு மறுப்பொலி மறுவிழி சிமிட்டொளி குறுகிய கனைப்பொலி பொழிவிலி விழிவழி பிழிந்தது நீர்த்துளி இரங்கினள் துவண்டனள் மிரண்டனள் மருண்டனள் மகிழ்ந்தனன் முகிழ்ந்தனன் மழைத்தது மழைத்தது மழைத்தது.
*****************************
தனிமை புலம்பல் வெறுமை அரற்றல் சகலம் துறத்தல் அகிலம் மறத்தல் பறித்தல் மரித்தல் பிறத்தல் அழித்தல் கழித்தல் களித்தல் சுகித்தல் விளம்பல் விழித்தல் பார்த்தல் கேட்டல் மறைத்தல் சேர்த்தல் தூர்த்தல் வீழ்த்தல் விரிநீர் நுழைதல் அமிழ்துள் நோக்கல் . அழுதல் தொழுதல் மொழிதல் விலகல் .

********************************

அடங்குடா.

*********************************