26 June, 2010

ராசாவின் மனசிலே

நாகராஜன் குடிக்கச்சொன்னால் நுவக்ரானையும் குடிப்பான் வெங்கடேஸ்வரலு. வெங்கடேஸ்வரலு இனி வெங்கு. நாகி (புரியுமென்று நினைக்கிறேன்) ஒரு வியாபாரி. இணைத்தொழிலாக கதை எழுதும் அறிவுஜீவி. எல்லா கதைகளும் போல் இங்கு வெங்கியின் தங்கை மங்கி மன்னிக்கவும் மங்கையர்கரசியை டாவினான் நாகி. அனுமார் போன்றதொரு பாத்திரம் இங்கு எழவில்லைஎன்றால் கதைக்கு பங்கம். எனவே அவன் பெயர் கோபாலகிருஷ்ணன். அவனை வெளக்கெண்ணை என்றால்தான் திரும்புவான். ஆக பாத்திரமும் பிரச்சனையும் முதல் நான்கு வரிகளில் தென்பட்டால் நல்ல கதைக்கு அறிகுறி. ஆனால் ஒன்று குறைகிறது. நீங்கள் நினைப்பது சரி. நிலம். நெய்தலுக்கும் மருததிற்கும் இடையில் ஒரு எல்லைப் பிரதேசம். பதினேழு காத தூரத்தில் குறுஞ்சி வேறு. ஆனால் இது பின் நவீன காலம். கதைக்கு போகலாம்.

முற்பகல்:

வெளிப்புற படப்பிடிப்பு:

மத்தியகோணம்:

நாகியை கோவத்துடன் மன்னிக்கவும் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான் வெங்கு. சற்று நடுங்கிய நிலையில் வெளக்கெண்ணை. தெனாவெட்டாய் நாகி.

மங்கியின் நினைப்பை தொலைத்துவிடு.

இல்லையென்றால்.

நாகியை மறந்துவிடு.

இது சுலபம்.

வெளக்கெண்ணை சொலவதைக் கேளுங்கள்.

முடியாது. அவன் மறக்கவேண்டும். இல்லை மறக்கவேண்டும்.

முடியாது. மறக்க முடியாது. மறக்கவே முடியாது.

முடியும். முடியவேண்டும்.

முடியாது. முடியவே முடியாது.

மங்கியிடம் சொல்கிறேன். நாசமாய் போங்கள்.

வெயில் பற்றாமல் படப்பிடுப்பு ரத்து செய்யப்பட்டது.

**********************************************************************

உள்ளரங்கம்:

டாஸ்மாக் பெர்மிட்டேட் பார்:

தூர கோணம்(long shot)

விரும்பி அடிக்கும் கைகள் என்கிற எனது சிறுகதையைப் படித்தபின்னுமா என்னைப்பற்றி புரிந்துகொள்ளவில்லை வெங்கு. நான் ஒரு மேதை என்பதை நீ சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஆயிற்று பத்னேழு வருடங்கள். நீ சொன்ன பின் நீயே அதை வழிமொழியவில்லை. ஆனால் நான் ஒரு முழு அறிவு ஜீவி என்பதில் சந்தேகமுண்டோ.. வா கொண்ட்டாடுவோம் இந்த பதினேழாவது நினைவு நாளை: இது ஒரு கொண்டாட்டம். cheers for the women we lost and we love.

**********************************

அவன் ஒரு வியாபாரி என்று சொன்னேன். அவனுக்கு கணினி சாம்பிராணி செய்து விற்பது தொழில். கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால் சொல்வான்: கடவுள் இருக்கிறார் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் மட்டுமே இருக்கிறது. என்னவென்றால், அவர் தனக்கான கல்லறையை தொடர்ந்து வனைந்து கொண்டிருக்கிறார். try and error method - இல் அவர் புனையும் கல்லறைக்கு தற்காலிகமாக பூமி என்று பெயர் வைத்திருக்கிறார். இதைக்கேட்டு ஒருமுறை வெங்கி சொன்னான்: எருமை கழிவு. (bull shit)

*************************************

மங்கி ஒரு செவிலி. ஒருமுறை university of Madras Dictionary - இல் NURSE என்பதன் விளக்கம் பார்த்து தனது தொழிலை மறந்தாள்; அதன் விளக்கம் இவ்வாறு இருந்தது: தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுத்தாய், குழந்தகைளை பேணி காப்பவள, நோயாளியை பேணி காப்பவள், இன தாய்ச்சி, தேனீ - எறும்பு முதலிய வகையினில் மரபு காக்கும் அலியினம், இனப்பெருக்க மாறுபாடுகளையுடைய உயிர்களிடையே பால் சார்பற்ற படிநிலை, காடு வளர நிழல் தரும் மரம், வளர்ப்பு நிலம். வினைத்தொகையில்; ஊட்டுதாய்க்கு உதவு, பாலூட்டி வளர், பேணி வளர், தாதியாக செயலாற்று, நோயாளிகளை கவனித்து பேணு. நோய் நொடி கவனித்து குணப்ப்படும்படி பணிவிடை செய். செடிகொடிகளைப் பேணு. தோட்டம் பாதுகாத்து வளர். கலை முதலியவற்றைப் பேணி ஆதரி. பகைமை - கவலை முதலியவற்றை மனதில் வைத்து பேணி வளரச்செய். தளராமல் பாதுகா. பரிவோடு கவனி. குழந்தையை பரிவோடு எடுத்தணைத்து பரிவு காட்டு. தழுவிக்கொஞ்சி விளையாடு. முழந்தாளைக் கட்டி அனைத்துக் கொண்டிரு. காலைத்தடவியவாறு உறுப்புகளை மிகு ஆதரவு காட்டி போற்றிப் பேணு. மேசைக் கோர்பந்தாட்டத்தில் எளிதாக தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாய் பார்த்து வை. கணப்பருகில் அணைவாய் அமர். வாக்காளர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு. முன் உந்து உலகத்தின் தொழில் வாய்ப்பில் பங்கு பெறும் நோக்குடன் அண்டி அனைத்து நிறுத்து. பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடன்நெருங்கிச் செல்.

******************************
இப்போது மங்கியும் நாகியும் ஆளுக்கொன்றாய் ஆட்டோ ஊட்டி மன்னிக்கவும் ஓட்டி பிழைக்கிறார்கள். திருச்சி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் அவர்கள் சவாரிக்கு பேரம்பேசுவதை வெங்கு சாமியாக பார்த்துக்கொண்டிருக்கிறான். நுவக்ரான் குடித்தால் சாக மாட்டானென்று வேங்கியும் நாகியும் நம்பிய பொது ஆளுக்கொரு ஓல்ட்மங் ஆப்பை குடித்திருந்தார்கள்.

*****************************

நுவக்ரான் அவனைக்கொல்லும் முன் ஒரு சைக்கிள் காரன் தட்டிவிட்டு பொட்டில் அடிபட்டு செத்துப் போனான் வெங்கி.

****************************

director touch: பிற்பாடு மங்கியின் மகளுக்கு வெங்கி என்று பேர் வைக்கலாமா என்று associate அன்புவிடம் கேட்டதற்கு..

மூடிட்டு படுறா.. என்றார்.

***********

இரண்டு வருடங்கள், மூன்று மாதங்கள், பதினாலு நாட்களுக்கு முன்பு:

அண்ட வெடிப்பு.

நான்கு வருடங்களுக்கு பின் மங்கிக்கும் ஒரு மகன் பிறந்தான். வெளக்கெண்ணை அவனுக்கு அப்பாவாக acting கொடுத்தான்.

***************

சுபம். மிச்சத்தை வெண்திரையில் காணவும்.

************

No comments: