Showing posts with label தீதும் நன்றும். Show all posts
Showing posts with label தீதும் நன்றும். Show all posts

28 March, 2012

வவ்வால் கூட்டம்.



குறைந்தது மூன்று மன்னிப்பு கோரல்கள் இருக்கிறது. இறுதியில் கேட்டுக் கொள்கிறேன். லக்ஷ்மியுடன் சேர்ந்து ஒரு இலக்கிய நிகழ்வை - குறிப்பிட்ட பெயரும் எவ்வித அமைப்பும் சாராமல் - தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் வவ்வால் பூத்த மர நிழலில் நடத்தினோம். (24.03.2012 -25.03.2012). பத்தாண்டு கால நாவல் மற்றும் சிறுகதைகள் சிலவற்றைப் பற்றிய விமர்சன அரங்கமாக அமர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முழு சிந்தனையும் லக்ஷ்மி உடையது. அரங்கில் விவாதிக்கும் புத்தகங்களின் பட்டியல் தயாரிப்பில் கூட நான் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஏனென்றால் லக்ஷ்மியின் பட்டியல் ஓரளவுக்கு சரியாகவே இருப்பதாக பட்டது. நான் காமுத்துரையின் சிறுகதை தொகுப்பை மட்டுமே இணைத்துக்கொண்டேன். சிவகாமியின் தலைமையிலும் கோணங்கியின் தலைமையிலுமாக நடந்த அமர்வுகளில் ஒரு வாசகனாக எனக்கேற்பட்ட அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விருப்பம். (வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும்)

எவ்வித பின்புலமும் இல்லாத நட்பு பாராட்டும் இனிய ஒன்றுசேரலால் ஆன நிறைவான அமர்வுகளாய் இருந்தாலும் எனக்குள் எழுந்த முக்கியமான கவலை பெரும்பாலான எழுத்தாளர்களின் careless தனம். பொறுப்பற்றதனம் என்றால் அது எதிர்மறையான அர்த்தத்தை அளிக்கும். ஒருவித இளகிய சூழலில் பேச்சும் நடவடிக்கைகளும் இலகுவாக இருக்கலாம்.. விமர்சன கட்டுரையாக இருக்கும் போது - அது  பதிவாய் மாறும்போது - மிகுந்த கவனம் கொள்ளவேண்டியது அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

ரமேஷ், கோணங்கி, ப. வெங்கடேசன், சிவகாமி, விஜயலட்சுமி ஆகியவர்களிடம் இந்த பொறுப்புதன்மையை உணரமுடிந்தது. மற்றவர்களிடம் இல்லை என்று  சொல்லவில்லை நான் ஒருவேளை கவனிக்கத் தவறியிருக்கலாம்.  நான் பெயர் குறிப்பிட்ட நண்பர்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவர்களது ஆழமான பொறுப்புணர்வு என்பது வெளிப்படையானது என்றே நினைக்கிறேன். எனது மனதிற்கினிய நண்பர் (காதலர்)  யவனிகாவை careless   தனத்தின் உச்ச  எடுத்துக்காட்டாக  சொல்வேன். அவரது கூர்மையான அரசியல் அவதானிப்புகளின் - அதனூடாக அவர் எழுதும் கவிதைகளின் - ரசிகன் நான். (தொன்னூறுகளில் அவரது கவிதை ஒன்றை  கடித்ததில் எழுதி எனது காதலியை அசத்தியது நினைவுக்கு வருகிறது ..! ). ஒரு எழுத்தாளர் தனது நிலைப்பாட்டை மது போதையில் இருக்கும் போதும் இல்லாதபோதும் ஆணித்தரமாக எடுத்துரைக்க தெரிந்திருக்க வேண்டும். போதை அற்ற நேரத்தில் அமைதியாக சொல்லுவதை போதை ஏறியவுடன் வெறித்தனமான கருத்துத் திணிப்பாக மாற்றினால் மனதில் வருத்தம் மட்டுமே மிஞ்சும். மானிடவியல் கருத்தாக்கங்களில் யவனிகாவின் நிலைபாடுகள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை. மதுவற்ற உரையாடல் ஒன்று அமைந்தால் எனக்கு பேச நிறைய இருக்கிறது. யவனிகாவை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே இங்கு குறிக்கிறேன். இவ்வகையான ஆளுமைகள் பலர் உண்டு. அவர்கள் அனைவரையும் நான் மதிப்பதால் மட்டுமே இதை ஒரு விமர்சனமாக முன்வைக்கிறேன்.

வாசிக்கப்பட்ட சில கட்டுரைகள் வெறும் கதை கூறல் மட்டுமே என்பது இந்த 'கேர்லெஸ்' தனத்தின் மற்றொரு பிரச்சனை. தொகுப்பாக ஆகும் பட்சத்தில் இவ்விதமான கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களுடன் ஆழமான விவாதம் செய்து செம்மைப்படுத்தி இணைக்க எண்ணம். லக்ஷ்மியிடம்  இதுபற்றி பேச வேண்டும்.

நடந்த இரண்டு நாள் அமர்வுகளில் எனக்கு சில நட்புகள் புதிப்பிக்கவும் சில நட்புகள் உருவாகவும் சந்தர்பம் வாய்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம்.

இனி மன்னிப்பு கோரல்கள்:

ஒன்று: மிக கவனமாகவும் பொறுப்புடனும் நடத்தப்படவேண்டிய இம்மாதிரியான நிகழ்வில் சற்று  அசட்டையாக நடந்து கொண்ட எனது பொறுப்பற்ற தனத்திற்காக வந்திருந்த அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பை கோருகிறேன். (குறைந்தது  உணவு நேரத்தையாவது சரியாக தீர்மானித்திருக்க வேண்டும்).

இரண்டு:

நிகழ்வுக்கு நான் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் மூன்று பேரை நான் அழைக்க கடமைப்பட்டிருந்தும் மூளைக்குள் உரைக்காமல் போனது எனது துரதிர்ஷ்டம். அவர்கள்: சைதன்யா, மு.ஹரிக்ருஷ்ணன், பாஸ்கர் சக்தி மாமா. இதில் ஹரியின் குறும்படத்தை திரையிடலாம் என்று வேறு நானே அவரிடம் கூறியிருந்தேன்.

மூன்று:

மறந்து விட்டது ஞாபகம் வரும்போது கேட்டுக்கொள்கிறேன்.


மன்னிச்ச்சு........ !


அனைவருக்கும் நன்றி.




01 February, 2012

தொலைந்து போன... சுகம்




பயணம் மனிதனை குரூரமாக வேவுபார்க்கும் ஒரு சூனியக்கிழவி. திசையற்ற பூமிப்பந்தின் வரையறுக்கப்பட்ட நிலத்துக்குள் கழிந்த காலம் எனக்கு அளித்த  வகையான வகையான உணர்வுகளை நிதானமாக உற்றுப்பார்த்தால்  ஏதுமற்று இலையுதிர்ந்து பட்டுப்போன ஒருமரத்தினைப் உணர்கிறேன். போகிற இடமெல்லாம் மீள்சம்பவங்களாக உணர்ந்து சலிக்கும் வலிமனது வாய்க்கப் பெற்றது ஊழ்வினை என்றால் நம்பிவிடுவேன். சட்டிஸ்கர் ஒரு ஆதிவாசிகளின் மாநிலம். நான் சென்றது துர்க் எனும் ஒரு மாவட்ட தலைநகரம். நாமனைவரும் பார்க்கும் ஒரு சிறு இந்திய நகரத்திற்கு துளியும் மாற்றமில்லாமல் இருந்த லேசான அழுக்கு பிடித்த நகரம். அங்கு ஒரு மசூதியில் யுனானி மருத்துவர் ஒருவரால் அளிக்கப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்தினை (வேப்பம்புண்ணாக்கு ருசியில் ஒரு கவளம் தவுட்டை பசும்பாலில் கலந்து 
கொடுத்தார்கள்) குடித்து விட்டு இரவு துர்க் - ல் இருந்து கிளம்பி கட்னி என்கிற மற்றொரு மாவட்ட தலைநகரில் இறங்கியது அதிகாலை 4 மணி. (19.01.2012) அக்கணத்திலிருந்து பயணம் என்கிற சூனியக்காரி என்னுடனேயே ரயிலை விட்டு கீழிறங்கி எனது வெடவெடத்த கழுத்தில் மப்ளர் என சுற்றிக்கொண்டாள்.

கட்னியிலிருந்து மத்தியப்பிரதேச மாவட்டமான ரேவா வில் இறங்கி இனிப்பு அவல் உருளை சமோசா காலையுணவினை முடித்து சத்னா மாவட்டத்தைக் கடந்து பண்ணா தேசிய புலிகள் சரணாலயம் வழியாக சத்தர்பூர் செல்லும் வழியில் கஜுரஹோவிற்கு பத்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இறக்கிவிடப்பட்டோம். கட்னியிலிருந்து சத்தர்பூர் வரையிலான தொலைவு இருநூறு கிலோமீடர்களாக இருக்கலாம்.. ஐந்து மாவட்டங்கள் கடந்ததான அந்த பேருந்து பயணம் இனிவரும் எனது காலத்தின் எனதான  behaviour change - கு ஒரு ஆரம்ப அறிகுறியென அப்போது உணரவில்லை. கஜுராஹோ தங்குமிடத்தில் மாலை ஆறுமணிக்கு சென்றோம். மறுநாள் மாலை ஏழுமணிவரை கஜுராஹோ. ஒன்றுமில்லை சமணக்கோயிலை தவிர. ஆண் பெண்ணகளின் சிற்பங்கள். கூர்மையான மனித கலை ஆளுமைகளின் வெளிப்பாட்டுடன் காவிவண்ண கல்சிற்ப கோபுரங்கள். மொத்தத்தில் மூன்றரை சத ஆலிங்கன சிலைகள். ஊடக உதவியால் பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்திருக்கும் ஒரே இந்திய கிராமம் கஜுரஹோ. இவ்வகை கலவிசிற்பங்கள் காணக்கிடைக்கும் மதுரை அழகர்கோயில் கோபுரமும் சளைத்ததல்ல. மற்றபடி கஜுரஹோ  கிராம மக்கள் வரட்டி தட்டி பிழைக்கிறார்கள்.  மொத்த கிராமத்திற்கும் அவ்வளவு பெரிய பன்னாட்டு சுற்றுலாத்தலதிற்கும் ஒரே ஒரு மதுபான கடை. பார் வசதி இல்லை. 


பயணம் தனது கூர் பல்லை அன்றிரவின் பேருந்தில் இருத்திக்கொண்டது. 
கஜுரஹொவிலிருந்து ஜபல்பூருக்கான இரவுபயணம் அது. ஒரு மனிதனின் உடலை ஒரு பேருந்து துவைத்து காயப்போடும் என்று உறுதிபடுத்திய பயணம். வனம்புகும் கருநாகமென சாலையற்றதோர் சாலையில் அவ்வோட்டுனனின் சாகசம் தினம் நிகழ்கிறதை பார்க்கையில் இனிய சாத்தானையும் கேடுகெட்ட கடவுளையும் நம்பியே தொலைக்கவேண்டும் போல.

முன்னால் கஜுரஹோவிற்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் யமுனையில் இணையப் பாயும் கென் நதியின் பாறைப்பிளவுகள் மட்டுமே என் 
மொத்தபயணத்தையும் ஜீவனுள்ளதாக்கியது. கிரன்கள் அலையும் வனமூடே 
கிழித்து குதித்தோடும் கென் நதியின் பாதை இந்தியாவின் ஒரே எரிமலை 
லார்வாக்காளால் ஆனவை. வார்த்தைகள் இல்லை. காண வேண்டும் அவ்வளவுதான்.

ஊர்திரும்பும் ரயில்பயணம். கூட இருந்தது நான்கு புத்தகங்கள். ஆறாவலி,
அழகம்மா, நித்ரா, ச்சே கோபெர, இரண்டு இதழ்: மற்றைமை, மணல்வீடு.

ஆறாவலி:

மூன்று இடங்கள்/காலங்கள். இங்கு, அங்கு, உங்கு. அப்பொழுது, இப்பொழுது, எப்பொழுது. சொல்லிமாளா துயர் புலம் பெயர் கதை வெளி. சில விவரணைகள் கொரில்லாவை ஞாபகப்படுத்தினாலும் அரசியல் மிக குறைவு. வலி என்பது இதில் ரொமாண்டிசைஸ் படுத்தபடுகிறது. தெளிவான நடை அதை சமன் படுத்துவது போல் நடிக்கவேண்டியிருக்கிறது. கோரத்தின் அல்ல குரூரத்தின் அழகியல். மாறாக ஆசிரியரின் செவ்வி இவரின் நாவலைவிட நன்றாக இருந்தது. எதில் படித்தேன்?

அழகம்மா:

சந்திராவின் எட்டு கதைகள். நிதானமாக பின்னப்பட்டவை. மனம் என்பதில் பால்பேதமில்லை என்பதில் எனக்கிருக்கும் உறுதிக்கு இவரின் சில கதைகள் எனக்கு வலுவான சாட்சிகள். தொலைவதே புனிதம் என்கிற கதை அதிலொன்று. (தலைப்பு சரியா). மனிதனின் புரிதலுக்கு / அனுபவத்திற்கு ஏற்பதான் மன அமைப்பு. ஆண் மற்றும் பெண் என்கிற பதமே மொழிக்கட்டமைப்பு என்று சொல்லப்படும் காலத்தில் மனம் எந்த இடத்தில பால் பேதமாகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. உடல் சார்ந்த புரிதலில் விளையும் மனம் பால்சார்ந்தது எனில் நண்பனின் சித்தியை கொலை செய்யும் ஒரு இளம் ஆணின் மனம் எழுத்தாளருக்கு எப்படி வாய்க்கிறது. முலைக்காம்பும் யோனியும் பெண் என்றால் வெறும் காம்பும் கம்பும் ஆணென்றால் (யோனிக்கு நிகரான எதிர்பதம் சங்கத்தில் கூட இல்லையாமே.. உண்மையா) இரண்டும் இணைந்திருக்கிற அல்லது இல்லாதிருக்கிறதை அரவான்/அரவாணி (இண் என்று ஏனில்லை ?) என்றோ கட்டமைப்பது வெறும் உடலைத்தானே. மனம் ? எளிய விளக்கம் எதிர்பதம் இல்லாமல் ஒன்றை மனத்தால் புரிந்து கொள்ளமுடியாது என்று என்னால் விலகிசெல்லமுடியவில்லை. பார்க்கலாம். புருஷனை நம்பி செத்துபோகும் எத்தனை அழகம்மாக்கள் வாழ்ந்த நிலம் இது.. அதிலொருத்தி ஆவிபடிந்த விடியல் மணமாய் சந்திராவின் கதைவெளியில் வார்த்தைகளாகி சிதறியிருக்கிறாள் வெம்மை கலந்த அரளிப்பூ வாசனையோடு.

நித்ராவும் ச்சேவும்:

எழுதப்பட்ட வாக்கியங்கள் கவிதையாய் வார்த்துவிடுகிறது நித்ராவின் காதல் மாறாக கவிதை உக்கிரமான அநாதை வார்த்தைகளாய் கைவிடுகிறது ச்சேவை...

மற்றமை இளங்கலை முதல் செமஸ்டர் பாடநூல் (மிகசுருக்கிய வடிவம்). மணல்வீடு சுயமுனேற்றம்.

பயணம் இனிதே முடிந்தது. தொலைந்து.. போனதுதான் மிச்சம். குதூகலம், அபத்தம் மற்றும் குரூரம் இம்மூன்றையும் அடைய இரண்டு வழிகள்: ஒன்று பயணம் மற்றது மரணம்.




..............................................



18 December, 2011

கூடலூர்.. !


ஒரு அற்புதமான மனித உறவுமுறை, பண்பாட்டு கலாசார வளர்ச்சி மற்றும் பொருளாதார பரிமாற்றம் புன்னகைததும்பும் காதல் என பலவற்றையும் அரசியல் செயல்பாடுகளில் சிதிலமடைய செய்வதற்கான பொறியை கேரளா அ-வாதிகள் உருவாக்கி விட்டார்கள். அறியாமை கொண்ட ஆட்டு மந்தைகள் போல ஊர்கூடி போருக்கு அழைக்கிறார்கள் இரு மாநில மக்களும். ஆரம்பத்தில் தன்னெழுச்சியான போராட்டம் இப்பொழுது சுய அடையாளத்தை நிறுவும் குழு நிகழ்வாக மாறத் தொடங்கியிருக்கிறது. கட்சி பேனர் தவிர்த்து அனைத்து மத ஜாதி தொழிற் சங்கங்களின் போஸ்டர்களை அடித்து பிரஸ் வியாபாரம் கடுமையாய் கொழித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மைக்கு 'உன்மை' என்றும் இறைவனின் பெயரால் இடுக்கியை மீட்போம் என்றும் வந்த போஸ்டர்கள் இன்றைய சுவாரஷ்யம்.


இப்படி ஒரு கலவையான மனித அனுபவத்தை நான் எங்கும் அனுபவித்ததில்லை. அது எனக்கு கடந்த 6 நாட்களாக கூடலூரில் வாய்த்தது. எத்தனை விதமான மனிதர்கள் ! அவர்களது பேச்சுக்கள் ! அசந்துபோனேன்.

எழுபதுகளில் முல்லைப்பெரியார் அணையில் கொத்தனாராக பணி செய்த ராமர் போயன் மகன் பாண்டிய போயனை பார்த்து பேசியது ஒரு அனுபவம்.

கி. பி 640  களில் பாண்டியன் குலசேகர பெருமாளும் சேரன் புலியூத்தி மகாராஜாவும் இணைந்து கட்டியதாக சொல்லப்படும் கூடலழக பெருமாள் கோவிலில் பரம்பரை பட்டரால் செழுமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அக்கோவிலில் இருக்கும் பாண்டிய சேர இலச்சினை உருவமும் சேர பாண்டிய பெண்களின் சிலைகளும் கலாச்சார பொக்கிசங்கள்.


 பெருமாள் கோவிலில் குலசேகரனின் நில தான கல்வெட்டு இன்னும் உள்ளது. தானம் செய்யப்பட்ட நிலம்தான் இப்போது எவரெவர் கையில் இருக்கிறது என்று தெரியவில்லை.


சேர பாண்டியர்கள் பெண் கொடுத்து பெண் எடுப்பதை சிலர் நினைவு கூர்கிறார்கள். மேற்கண்ட சிலைகளில் சேரத்தி யார் பாண்டியத்தி யார் என்பதை கேட்டால் அவர்கள் அணிந்திருக்கும் காதணிகளின் வித்தியாசத்தை காட்டுகிர்ரர்கள். வட்டம் சேரம். நீளம் பாண்டியம்.

பெருமாள் இப்படி கொழித்திருக்க அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஈஸ்வரன் பாழடைந்து கொண்டிருக்கிறான். இரண்டும் சம காலங்களில் கட்டப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால் அற்புதமான சில கோபுர சிலைகளை கொண்ட இந்த சிறிய கோயில் பராமரிப்பற்று பார்த்தீனியம் சூழ  நாசமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கென வழங்கப்பட்ட பதினைந்து கலம் நிலம் போன இடம் தெரியவில்லை. அழகானதொரு தாமரைக் குளம் இப்போது தூர்த்துப் போய்விட்டதாம்.


இதன் கோபுரத்தில் நான் கண்ட சிலைகளில் இருக்கும் புன்னகையும் ஒரு உன்மத்த அல்லது வெற்றி கழிப்போ.. அல்லது வேதனையின் வெளிப்பாடோ என அறியமுடியாத மகோன்னதச்சிரிப்பை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டின் சிரிப்பு அது..





கேட்பாரற்று கிடக்கும் இந்த வரலாற்றுச் சின்னத்தின் மற்றொரு அற்புதமான படம் இங்கே..

எனது ஆட்டோ போகஸ் கேமராவில் இன்னும் நிறையப்படங்கள் எடுத்திருக்கிறேன்.

தொடரும்...

19 October, 2011

கடவுளின் வினை.




அவன் அமர்ந்திருந்தான்
மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை
ஆனால் மற்றவர்கள் அனைவரும்
அவனுக்காக அலைந்துகொண்டிருப்பதாக ...
அதாவது சிலர் நாட்டை ஆண்டுகொண்டிருந்தார்கள்
அவனுக்காக. சிலர் ஒரு பெரிய பண்ணையில்
சுவை மிகுந்த பன்றிகளை வளர்தெடுத்தர்கள்
அவனுக்காக சிலர் உணவு தேடும் மனிதர்களை
காரி உமிழ்ந்தார்கள் சிலர் காடுகளிடையே
பயணம் செய்து பசிதீர்க்கும் பூச்சிகளை
சேகரித்து பதப்படுத்தினார்கள் சிலர்
குதிரைகளுடனும் பசுமாடுகளுடனும்
சல்லாபத்தில் ஈடுபட்டார்கள்... ஒருவன்
குடிக்கவும் மற்றொருவன் ஈட்டியால்
மீன்களை வேட்டையாடவும் வேறொருவன்
சுயமைதூனம் செய்யவும் கூட இருந்தவன்
தானியங்களை பறவைகளுக்கு வீசவும்
மற்றும்
அனைவரும் அவனுக்காக
எதையாவது ஒன்றை செய்தவண்ணம்
இருந்தார்கள் ....

அவன் அமர்திருக்கிறான்
அவர்கள் செய்வதெல்லாம் எளிய
கேள்விகளாய் மாறி அவனது
கூர்மையான நாசித்துவாரத்தில்
கவுச்சியின் வாசமென நுழைகிறது...

மனிதர்கள் அயர்வுருகிரார்கள்
மனிதர்கள் உற்சாகமடைகிரார்கள்
மனிதர்கள் வாங்குகிறார்கள் எதையாவது
மனிதர்கள் நுகர்கிறார்கள் வாங்கியவற்றை
மனிதர்கள் திருப்தி அடைகிறார்கள்

அவன் அமர்ந்திருக்கிறான்
புதிய சீருடையுடன் ஒரு இளம் ஆண்
அவனை பார்க்கிறான்.. அவனை எங்கோ
பார்த்த ஞாபகத்தை பொருட்படுத்தவில்லை
அவனது மூளை ஏற்கனவே
சொல்லப்பட்டது..

தன்னிடமிருக்கும் ஒரு சிவந்த
மெல்லிய மொட்டுகளை கொண்ட
ருசியரியும் நாவை சுழற்றி சொல்லாக்குகிறான்..
வார்த்தையின் முடிவில் வளைந்து நிற்கிறது
கேள்விக்குறி ..

மௌனம் மறுக்கப்பட்ட புதிய
சூழலில் பதிலறியாத அவன்
ஒரு பாறையின் மீது அமர்திருக்கிறான்
மக்களிடம் கூவுகிறான் அவ்விளைஞன்
அவனை கண்டுபிடித்து விட்டதாக.
கூடிய மனிதர்கள் ஆராவாரத்துடன்
அழைத்துச் சென்றார்கள் பாறையை

பிருஷ்டம் கிழிய நின்றிருந்தவனின்
குதத்தில் கழி செருகி தொண்டை கனைத்து
தொடங்குகிறான் கனிவான முகம் கொண்ட
அதி ஆண் காரணம் வேண்டிய
முதல் கேள்வியை.

அவன்
பிறகு
எல்லாவற்றையும்
ஒப்புக்கொண்டு
மற்றவர்களைப் போலவே
அவனுக்காக
எதயாவது
செய்ய தொடங்கினான்
ஆசீர்வதிக்கும் கடவுலொன்றின்
நாமத்தை ஜெபித்தவாறு.

எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருந்த நான்
நீங்களான வினோதம்
என்பது
புதிர்

எல்லாம் அந்த கேடுகெட்ட.


14 October, 2011

sad jobs

இறந்த மனிதனை பற்றி அவதூறு பேசுவது தவறு - மனித அறங்களில் ஒன்று. இருந்தாலும் சற்று அறத்தை மறந்து ஒரு இறந்த மனிதனை பற்றிய ஒரு பதிவினூடாக சில சந்தேகங்கள்.

இறந்தவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

 எழுபத்து நாலிலிருந்து இந்த ஆண்டு வரை களத்தில் இயங்கி உடல் புற்றின் காரணமாக காலமாகிய அவருக்காக கார்பொரேட் உலகம் கதறிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் முக்குக்கு முப்பது பேர் நிமிசத்துக்கு செத்துக்கொண்டிருந்தாலும் இவர் செத்தது சற்று வருத்தம்தான். அதற்கான இரண்டு வலுவான காரணங்கள் இரண்டு எனக்குண்டு. ஒன்று அவர் புத்தனை தழுவியவர். இரண்டாவது அவரது போதைக்கான பரிசோதனை. இதற்காக அவர் இந்தியாவைத் தேர்தெடுத்தார். அவரது தந்தை ஒரு முசல்மான். அவரை தத்தெடுத்தவர் கிருத்துவர். வீணாய்ப்போன பால்யமாய் இருக்கலாம்.. ஆனால் நிர்வாகத்திறனும் சிக்கலானவற்றை எளிமைப்படுத்தும் கற்பனைத்திறனும் அவரை கார்பொரேட் அரசர்களில் ஒருவராக்கியது.

அவரது மரணம் துக்ககரமானது.

சரி சந்தேகம் ? அவரை பற்றி அல்ல. மூன்று சமீபத்திய செய்திகளை பற்றியது.

1 . சவரக்கடையில் நுழைந்து சிரைத்துக்கொண்டிருந்த எட்டுபேரை ஒருவன் சுட்டு கொன்றுவிட்டான். செத்த எட்டுபேர் எதற்காக செத்தார்கள்.. (அமெரிக்கா).

2 . நாங்கள் வாழ்க்கையை போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டோம் என்கிற 
குறிப்புக்கடிதத்தொடு 39 வயதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கம்ப்யூடர் வேலை செய்யும் தம்பதியினரின் அழுகிய உடலை அவர்களது பெற்றோர்கள் வாங்க மறுத்த காரணம் என்ன.. அப்படி அவர்கள் என்னதான் அனுபவித்தார்கள்.. (இந்தியா).

3 . சில கிலோகிராம்கள் எடை கொண்ட வெடிகுண்டை காரில் கண்டெடுத்து சில நூறு உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள் ..அப்படி காப்பாற்றப்பட்ட அந்த சில நூறு மனிதர்கள் எப்படி/என்னவாய்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

மேலும்..

4 . ஸ்டீவ் ஜாப் - ன் iPad தொழிற்சாலையில் (சீனாவில் இருக்கிறது !) மூன்று மாதத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்துகொண்டார்களே அவர்கள் யார்.. எதற்காக ஒரு புத்தம்  தழுவிய மனிதன் நிர்வகிக்கும்  நிறுவனத்தில் வேலை செய்யும் போது தம்மை மாய்த்துக்கொண்டார்கள் ...


திஸ் இஸ் நாட் iSad ,    பட் இட் இஸ் my Sad  !      

02 September, 2011

இரண்டு வியாபார அறிமுகங்கள்



தேனும் இளநீரும் குடித்து இனிய உண்ணாநோன்பை முடித்துக்கொண்ட முதியவர்  தனது வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டு ஊர் போய் சேர்ந்திருக்கிறார் இன்று. தொடர்ந்து பல ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் இனி அவர் முதலீடு செய்வார். லாபம் கொழிக்கும் சிறந்த வியாபாரமாக அதை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.  ஹசாரே தலைமையிலான (அப்படித்தான் நினைக்கிறேன்) இயக்கம் ஒரு முதலீடற்ற தொழில்முறையை நமது தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி ஜெயம் அடைந்திருக்கிறது. அவரது தொப்பியை நமது மக்கள் பயன்படுத்தும் விதத்தை பார்க்க எனக்கு நமக்கு மிகவும் தெரிந்த குரங்கு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மரத்தின் மீது மன்னிக்கவும் மேடையின் மீது நின்று கொண்டு அவர் தனது தொப்பியை அசைக்கிறார்.. நமது மக்கள்.. அசைகிறார்கள். ஆனாலும் இவ்வளவு பெரிய மக்கள் ஒருங்கிணைப்பை நாம் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் ஒட்டு மொத்த உளவியலை புரிந்து கொள்ள கடுமையான விவாதங்களை கிளப்பிவிட வேண்டும். ஏற்கனவே பல விவாதங்கள் பல சிந்தனையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது... அதன் அழுத்தமான பதிவாக அவுட் லுக்கில் வந்த சந்தீப் அட்வார்யு வரைந்த இந்த கார்டூனை பார்கிறேன்.


*********************
ஒரு சீன நாட்டு matrimonial  விளம்பரம் பற்றிய செய்தியொன்றை படித்தேன். சீன ஆண்கள் 40000 வரை பணம் கொடுத்தால் வியட்நாமிய பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் உத்திரவாதம்: பெண்ணின் கன்னித்தன்மை, அனைத்து அரசு செலவினங்கள் மற்றும் ஒருவருட உத்திரவாதம். அதென்ன ஒருவருட உத்திரவாதம் என்றால் ஒருவேளை ஒருவருடத்திற்குள் அந்த பெண் ஓடிப்போய்விட்டால் வேறு ஒரு பெண் இலவசமாக  தரப்படும் என்பதுதான் அது. திருமணம் செய்து கொண்டு வரப்படும் பெண்கள்  ஓடிபோயவிடுவது அதிகமாகி உள்ளது என்று சீன அரசு கூறியுள்ளது. உண்மையில் இவர்கள் காணாமல் ஆக்கபடுகிரார்கள். அதாவது அவர்கள் வாங்கிய விலையை விட அதிக அளவுக்கு உள்ளூர் ஆண்களிடம் விற்று விடுகிறார்கள்.
பெண் குழந்தைகைக் கூட விற்கும் நமது நாட்டு மக்களுக்கு இது ஒன்றும் அதிர்வு தரக்கூடிய விசயமில்லைதான்.

அது சரி ஊழலை ஒழிக்க என்னதான் வழி. என்னை பொறுத்த வரையில் அதற்கு ஒரு வழியும் இல்லை. கடைசி மனிதனும் வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வான். ஒழிக்க முடியாது. அறங்களை போதித்து குறைக்க வேண்டுமானால் செய்யலாம்..

 நண்பர்களே நாம் எத்தனை பேர் நமது கணினிகளில் ஒரிஜினல் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் ?

*********************

05 August, 2011

தனிமம்


சிற்றிதழ் தொடங்குகிறேன். அக்டோபர் நான்காம் வாரம் வெளியிட எண்ணம். விரும்புகிறவர்கள் கட்டுரைகள் மட்டும் அனுப்பலாம். விளம்பரம் கிடையாது. சந்தா கிடையாது. வருடத்திற்கு மூன்று இதழ்கள். 'கிரந்த'  போன்று தரமான புத்தகமாக வெளியிட எண்ணம். பேராசைதான். என்ன செய்வது. உயர்வுள்ளல்!  ஆதரவு கோருகிறேன். நன்றி. 

**************

கடந்த மூன்று வாரங்களாக கழுத்து - முதுகெலும்பில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலி உணர்வை சமாளித்து வருகிறேன். உடம்பில் கூடவே இருக்கும் வலி என்பது வினோதமான ஒரு ஆன்மீக பயணமாக இருக்கிறது. சில நேரங்களில் அது ஒருவித போதை நிலையை அளிக்கிறது.மேலும் வாழ்நாளில் இல்லாத அளவிற்கு தூக்கத்தில் கனவுகள். நேற்று மதியம் தூக்கத்தில்  ஒரு முழு திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். பழங்குடி கிராமம் ஒன்றில் பேசும் காட்டெருதுகள் நுழைந்து துவசம் செய்கிறது. அதன் தலைவனை மர ஈட்டியால் குத்தி கொல்கிறான் கிராமத்தின் தலைவன். என்னாமா எடுத்திருக்காங்க படத்த ! மருத்துவர்கள் என்னை நான்கு விசயங்களுக்கு தடை செய்திருக்கிறார்கள். 1. இரு சக்கர வாகனம் ஓட்ட கூடாது. 2. பயணம் செய்ய கூடாது 3. கணினி பக்கம் போகக்கூடாது 4. படிக்கக்கூடாது. என்ன வாழ்க்க சார் இது ?!


இன்றுடன் 19 நாட்கள் ஆகிவிட்டது. கூடவே இருந்த ஒரு இனிய காவலாளி இன்று பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். மேட்டரை தட்டி விட்டேன் ! 

**********


24 May, 2011

மற்றொரு கல்.




நகம் கடித்துகொண்டிருந்தவனிடம்


அரும்பியது காதல்


காம்பின் குறுகுறுப்பை மறைக்க


உதடு கடிக்கையில் உணர்ந்தேன்


குருதியின் முதல் சுவையை


அடுக்கி வைக்கப்பட்ட


நேர்த்தியான புத்தகங்களில்


அற்ற சொற்களை உடலெங்கும்


ஊரசெய்தான்


விடியலின் தூரத்தில் வெடித்த


வெடிகளின் சத்தத்தில்


உடம்பில் பூத்தன நீலம்..





குளமென மாறிய எனதுள்

அவன் எறிந்தது மரணத்துக்கான ...




17 February, 2011

towards f word...

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவும் மினர்வா @ பிரியா தம்பியின் பதிவும் ஒரே நேரத்தில் படித்தது எனக்கு இருவிதமான மனவுணர்வுகளைஏற்படுத்தின.. முதலாவது கையாலாகாத்தனத்தின் கழிவிரக்கச் சோர்வு நிலை.. இரண்டாவது பாலைவெயில்தரும் எரிச்சல்.. (பிரியாவின் 'ஷோபா மற்றும் ம க இ க பற்றிய குறிப்புகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அது நல்ல பதிவாக அறியபட்டிருக்க வாய்ப்புண்டு..!). முகப்புத்தகம் எனக்கு ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் சாயலை அளித்துக்கொண்டிருந்தது அனால் இப்போது மெகா சீரியல் போல தெரிகிறது.. ஆண்களும் பெண்களும் மாற்றி மாற்றி கருத்துகளையும் விமர்சனங்களையும் எழுதிக்குவித்து கொண்டிருக்கிறோம்.. "எதுக்காக...... எல்லாம் எதுக்காக.. உடலும் உடலும் ஒட்டியிருக்கணும் அதுக்காக .." என்று சந்திரபாபுவின் குரலில் பாடவேண்டும் போல இருக்கிறது.. சமுதாயப்பணி, களசேவை, ஆழ உரையாடல்கள், உடல்மொழி, தேசம், சர்வதேசம், ஆணாதிக்கம், பெண்ணியம், அரசு, வக்கிர செயல்பாடுகள், உலகமயம், உலகாய்தம், தனிமனித சுதந்திரம், பால் நிலை கடந்த அன்பு இன்னும் .. இன்னும் எத்தைனையோ மனித விருப்பங்கள்.. எல்லாம் ........ எதுக்காக கண்ணே எதுக்காக ... to fuck off or to be fuked up..?