Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

13 February, 2012

புணர்ச்சி நாற்பது - 3




பாதுகாப்பின்மை யுணர்ந்த
கணத்தில் உண்ணக்கிடைத்ததொரு
பச்சை ஆப்பிள்

இளம் அடர் பச்சைகள்
வழுவழுத்த தோலின் மணம்
கோளத்தில் கடித்த இடத்தில்
விழுந்தது எறிகல்லின் பள்ளம்

வெண்சதைகள் குழறச்செய்தது
நானுணியை. பின் பரவியது
உடல்முழுதும் துவர்ப்பின் சுவை
விண்டு விழுங்கி முடிந்தபோது

தவறி உடன் நுழைந்துவிட்ட
விதை நொடியில் பரப்புகிறது
வன்மத்தின் வேர்களை வயிறு
முழுவதும் ஆப்பிளின் பசியாய்

குவியமிழந்த பார்வையின்
வழியே  தெரிந்ததெல்லாம்
பச்சையமற்ற வெண்ணிற
ஆப்பிள் அளித்ததொரு சாபம்

இச்சைத்தீரா தொரு பச்சைத்தவளை
ஆவாய் என

நீரிலும் நிலத்திலும் தேடித்திரிகிறேன்
அந்திமம் கடத்தும் ஒற்றை பழத்தை
புணர்சிக்கழைக்கும் ஆதிக்கிழத்தியின்
சூல்நீர் வாசனையுடன்.

---------

01 February, 2012

வவ்வால் கவிதைகள் 2



பசிய நிசி
நிலவின் கொள்குள
மீன்தாவ
விரல் கொக்கியில்
பற்றி யிழுக்கிறது
புள் வடிவ பாலூட்டி

நிதானம்
கடவுளின் ருசி
தெறிக்கிற நீர்த்துளிகளின்
முனையில்
வளர்ந்து
நீள்கிறது
சாத்தானின் நகம்

பிரதி
பலிக்கிற
பிம்பம்
வவ்வாலின் வாலினை
மென்சுக்கானாக்குகிறது

பிறகான
தவிப்புடன்
பறக்கத்தொடங்குகிறது
மீன் 

வவ்வாலின் திசையில். 




29 December, 2011

புணர்ச்சி நாற்பது - 2




அதரம் இற்றுப்போகும்

விடிகாலைப் பனியில்

விரியிதழ் குவித்தூதி உடைக்கிறது

வெறிகொண்ட தனிமையை..

ஊறிய வெம்மையில்

வெளியேறும் ஆவி

வெண்மையாக்குகிறது சூரியனை.

நிதானமாய் கவிகிற ஒளியை

புணர்ந்து மலர்த்துகிறது

புல்வெளி

மஞ்சள் வண்ண நெருஞ்சிகளை


நினைவெங்கும். பின்

வீழ்ந்து கிடக்கும் மேகத்தில்

கரையுமென் முத்தம்

கொத்திச் செல்லும்

நிதானமிழந்த பால் பறவை

ஒலியுதிர்த்து பகிர்கிறது

முடிந்த கலவியை

வெட்கமுற்று.



22 December, 2011

வௌவ்வால் கவிதைகள் - 1







கரும்பழம் சிறகு
விரிக்கிறது
பால்வெளிச்ச
நதிகலக்கும் விசும்புக்கடலில்
கவிதையின்  பிரதான சொல் அர்த்தமிழக்கிறது...

இறகற்ற சிறகின் ஏழ்நுனிகள்
கவ்வி பறக்கிறது துயர தேவதையின்
இரண்டு பால்சுரப்பிகளை
இடைவிடாத குருதிக் கசிவுடன்
கவிதையின் தாளம் உடைந்து தெறிக்கிறது..

விடியும் வரை தூக்கிப்பாய்ந்த
கணம் தாங்காமல் தளரும்
புள்ளி   உடைகிற வானம்
திரும்பிப் பார்க்கையில்
தகித்து பழுத்து மலர்கிறது வெண்சாம்பல் காலம்..

பொருளற்ற
கவிதையின்
சுயமரணம்
மூலம்
நிர்மூலம் தொடங்குகிறது உயிர் கதிர் கசிவில்.



.

03 November, 2011

புணர்ச்சி நாற்பது - 01







வேர் பிணைக்கும் முறுக்குடல்
நிலையில் வீழும் துளிநீரில்
நிறைகிறது நாவல் மணம்.
மென்துவர்ப்பு வண்ணத்தில்  
ஒளிர்கிறது நொதித்திராட்சை.
தனதான சைதன்யத்தை 
உதிர்த்து துவள்கிறது 
மயிர்நுனி. கோப்பையின் ரசம்
ஆடிகளில் தெறிக்க ஒளிபட்டு
கிழிகிறது இதழ்வரி. வடிகிற
குருதியுண்ணும்
நகங்களை காதலிக்க தொடங்கும்
அற்றுப்போனதோர்
அகாலத்தில் பிறந்து தொலைகிறது
பெருவெளியில்  
அழுத்தம் மிகுந்த கருந்துளை.

04 October, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 2








  
கவனமாய் தன் நித்திரையை
தவிர்கிறான் செவ்விழி ததாகன்
சிறுபிசகில் மூடிய விழித்திரையில்
தொங்கும் நெடும்கூந்தல் விரைந்து
நீள்கிறது அவனுள்ளிருக்கும் சிறுமலர்
நோக்கி. தாழம்பூ திரிந்த வாசனையில்
நாசி நடுங்க தரை பிராண்டுகிறான்.
தோல்கிழிந்து நகம் வழி கசியும்
குருதி ருசியை நுகர்கையில்
விறைக்கும் ஞானம் புணர்கிறது
ஞாபகத்தின் செதிலை. உதிரத் தொடங்கும்
காலம் வெளியெங்கும் ஏந்திச்
செல்கிறது ஒளிபொருந்திய
தத்துவத்தை.

விடிந்ததும்
இழந்தைதை எப்படி பெறுவது
என்று தெரியாமல் கிடைத்தை
பார்க்க கிடைத்த முதல்
மனிதனிடம் கைமாற்றுகிறான்

ததாகன்

பின் ஒருபோதும்
கூந்தல் நீண்டு பெண்ணாகிப்போன 
அவனை பார்க்கவில்லை

* * * * * *  

07 August, 2011

வெம்பும் பாழ்


நிரூபிக்க ஏலாமல் போகிறபோது என்னை 
அன்பரே உங்கள் முன் தாழ் பணிகிறேன் 
நீங்கள் உங்கள் துர்காரணிகளை நம்பினீர் 
செவிகளில் களிமண் பூச்சொன்று பூதகாலம் 
அறைந்துவிடதாக நிலையாக கூறினீர் 
எனக்குள் வீசுகிறதோ வண்டலின் வாசனை 
சொல்லுதற்குக் கூசும் சொற்களென 
மறுத்தளித்தீர். ஆயினும் உயிரைத்தின்னும் 
உடல் நானென்பதை அடிக்குறிப்பு செய்து 
வைக்கிறேன் உங்கள் முன் அதனுள் 
கசிகிறது நானான வன்குறிப்புகள்: 
வன்மம் குடித்து உணர்வாகிடு முடல்
நான் கற்றாழை மணக்கும் பெண்சதை 
நுகரும் விரிநாசி யுடல் நான் 
திகைப்படையும் மரணத்தின் தொழு 
பய நிழ லுடல் நான் சுகிக்க முகங் 
கோணாது உம்மை காட்டிக்கொடுக்கும் 
காட்டேறியின் மூலபொரு ளுடல் நான் 
வெளி காணும் கனவில் நுழையமுடியாத 
கனவில் முரண்பட்டு நீரில் குதிக்கும் 
பச்சைத் திரு தவளை உடல் நான். புலனற்ற 
பார்வையில் புறம் தள்ளினீர் நிகழ் வெப்பம் 
உள்நுழைய தொலைகிறேன் கேளீர் 


நிரூபிக்கபடாதவனின் 
வெதும்பிய சுக்கிலமென்பது
அரூப சர்ப்பமூறும் 
பாழ் பிரதி .

***************************

22 May, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 1

துயர் மிகுந்த நிலவொன்றை
குடிக்கிறான் ததாகன் தன் விரல்களில் முளைக்கத்தொடங்கும் வேர்களை மறைக்கவொன்னாமல். தன்னிடம்
உதிர்ந்த சொல் ஒன்று பச்சையமாய்
படரும் உடலை என்ன செய்வதென்று
அறியாமல் அவன் விழுங்கும் பாழ்
வெளிச்சம் பழுப்பேற்றுகிறது முகத்தை
சலிப்பேறிய இச்சையுடன் பத்மத்திலமரும்
அவனது ப்ருஷ்டதிலிருந்து நிலம்
துளைக்கிறது முதல் வேர். சொற்களற்ற
கணத்தில் தத்துவம் அவனை மரமாக்குகிறது
நிதானமாய் வளரத்தொடங்கிய விருட்சத்தில்
மறைகிறது பேராசை கொண்ட உடல்
காலத்தின் அடர்த்தியை சூழ் கொள்கிறது
பெருவிருட்சதின் மடி
பின் தினமந்தியில் வரும் மரங்கொத்தியை
அதன் அலகின் கொத்தலில் எழும் ஒலியை
யசோதரையின் முத்த சாயலை
துரோகமாக்கி
இடது கையில் மறைத்து
வலதுகை ஆள்காட்டி விரலை
பூமியில் புதைக்கிறான்

விளைகிறது நிழல் வண்ண ஞானம்.....

05 April, 2011

எப்போதும் குறையுள்ள வெளிச்சம்.

அவன்

குடிக்கிறான்


கூர்மையடைகிறது


அறிவு


அவள்


குடிக்கிறாள்


இளகுகிறது.


உடல்.


மேலும்


உடலுக்கு


எதிரானது


அறிவு


கொடுபவரின் நேர்மை அறிய


பெறுபவரின் ஒற்றை துரோகம்


போதும்


அவன்


திமிருடன்


வளர்ந்த


பெருமரம்


அவள்


அக்கிளைகளில்


பூக்கும்


தண்மீன்கள்



மேலும்


பறிப்பவர் நேர்மை அறிய


உண்பவர் முகபாவம் போதும்


அவன்


அவளை


சாட்டையால்


அடிக்கிறான்


அவள்


அவனுக்கு


வலியை


கொடுக்கிறாள்


மேலும்


திகைப்படைபவர் வாழ்விழக்கின்றனர்


பார்வையாளர்கள் காயடிக்கப்படுகின்றனர்


அவன்


அவள்


நெடுஞ்சாலை


முடிவுறும்


வனத்தில்


பசிய


இலைகளுக்கிடையே


இளம்பரிதி


மரத்தினை


காண்கிறார்கள்


வெளியெங்கும்


வீசுகிறது


மாம்சம்


பச்சை


வண்ணமாய்



அவன்


அவள்


மாயகணத்தில்


பொய்யாகி


மீள்கிறார்கள்


தெருசாலைகளில்


ஊளையிடும்


நாயின்


ஒலிவடிவில்


மெழுகு தீர்ந்த


திரி கருகும்


ஓசையில்


பிறக்கிறது ...





.............. மீசைக்காரன் நீட்ஷே நினைவில்.

21 February, 2011

தீர்க்கிற தனிமை

வேனிலில் நிகழ்ந்தது வாதை

வானம் புத்தனைப் பொழிவது போல

மண்கீறி இருஇலைநீட்டிவெளியேறும் துரோகம்

போல. ஒரு சட்டத்தில் அடைக்கப்பட்ட

மலையடிப்புணலில் மிதக்கும் ஏழாம் நிலா போல

ஒன்றுமறியா குழந்தைபோல புன்னகைக்கும் தனிமைபோல ...

வாதை உருவாக்குகிறது ஒரு சொல்லை

மென்மயிர் பெண்ணின் குழிநாபி போல. மேய்ந்துறங்கும்

குதிரையின் மடுவீச்சம் போல. தொலைந்தலையும்

கிடைக்குட்டியின் தேடல் போல. சாவின்

கருணை நிறைந்த விழியீரம் போல..

சொல்லிலிருந்து பிறக்கிறது ஏதுமற்ற

மற்றொரு சொல். அர்த்தமில்லாமல்.

சொல்.

பிறகு அர்த்தமில்லாமல் போய்விடும்போது

பறவை கூடைகிறது சில தானிய மணிகளுடன் ...

தனிமை தன்தீரா பசிக்கு யாசிக்கிறது சொல்லை

அதற்காக நிலத்தில் அது தனது பாதத்தை

இருத்துகிறது. தனது நிழலை எனக்கு

திண்ணக்குடுக்கிறது.

பசியற்றுப்போய் விடுகிற துரோகத்தை

துணைக்கழைக்கிறேன்..எக்காளத்துடன்

குதூகலித்து என்னிடத்தில் அளிக்கிறது

நீண்ட நாளாய் மறைத்து வைத்திருந்த

குறுவாளை.

நான் குறுவாளை உபயோகிக்கிறேன். பீய்ச்சி

வழிகிறது சொற்கள்.

தின்று தீர்கிறது தனிமை.

**************

26 January, 2011

கனவு தின்பவன்

எல்லாம் கிடைத்துவிடுகிறது
நொடிகளுக்குள்

ஒரு தீவு
பசிய ஒளியுடன் ஆம்பர் மணக்கும்
குளிர் மரங்கள்

ஆழ்கடல் கூட்டிச்செல்லும்
குட்டிதிமிங்கலம் பேசும்
நீலச்சுடர் கடல் கதைகள்

நிகழ்த்திய சாகசங்களுக்கு கிடைக்கும்
முடிவுறா கன்னி முத்தம்

ஒரு நாடு அல்லது இருக்கும் நாட்டின்
நிரந்தர அமைதியும் இனிய மாலை
ரோஜாக்காடுகளுக்குள் புணர்ந்து கொழிக்கும்
மனிதர்களும் தடைச்சான்றுகளை
கூளங்கலாக்கி எரித்துகுளிர்காய
மக்கள்களை அழைக்கும் மென்னரசு


எதைக்கேட்டாலும் தரும்
சக்தி கொண்ட
ஒரு கடவுள் அதனிடம்
ஒன்றும் வேண்டாம் என
அடம்பிடிக்கும் குழந்தை

புகையிலை மணக்கும் ஈரப்பெண்
நட்சத்திரங்களை கடக்கும்
அவளுடனான நீண்ட பயணம்

இன்னும்
இன்னும்

நிறைய கிடைக்கும் நொடிகளில்
நிறுத்தத்தில் எரியும் சிவப்பு விளக்கு
மாறும் வரை.

28 October, 2010

என் பெண்ணே




சர்ப்பத்தீண்டல் நீ என் பெண்ணே ஏறும் விஷம் நான்


தூறல் நிமித்தம் நீ என் பெண்ணே மழையுண்ணும் இல்லாப்பறவை நான்


கானல் அற்ற நீள்சாலை நீ என் பெண்ணே வாழும் அபத்தம் நான்


விரி கை மாரி நீ பெண்ணே தீ மிதிக்கும் பக்தன் நான்



சொல் துறந்த வன பட்சி நீ என் பெண்ணே சிறுகாற்று மென்தூசி நான்


வான் புகுந்த கருநீலம் நீ என் பெண்ணே ஒற்றைச் சுடர் பெற்ற திரிமெழுகு நான்


திசையற்ற மாகாளி நீ என் பெண்ணே கலி கொள்ளும் சிறு தெய்வம் நான்


வலியற்ற மென்தும்பை நீ என் பெண்ணே விழிபிழியும் ஒரு துளி நான்



நீ பெற்றது காதல் என்றாலும் என் பெண்ணே காதல் என்றில்லைஎன்றாலும் காதல்


காதல் வழி நான் பெற்றது என் பெண்ணே காதல் வளி காதல் வலி



பெரும் பாலை நீ என் பெண்ணே சிறுமணல் நான்


பெருங்காதல் நீ என் பெண்ணே சிறு காமம் நான்


பெருங்களிப்பு நீ என் பெண்ணே சிறு கேவல் நான்


பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான்



பாரதி நீ என் பெண்ணே அவன் மீசை நான்


சாரதி நீ என் பெண்ணே அச்சாணி இல்லா சக்கரம் நான்


நீ ரதி நீ என் பெண்ணே அம்பெய்தும் பெருங்காமன் நான்


காதலி நீ என் பெண்ணே காதலன் ...



*********************************





துரோகப்பறவை

குளிர்ந்த விடியலின் தேநீர் போல
பருகுகிறேன் எல்லோருக்குமான
துரோகத்தை. பகலின் வெம்பிய
வெயில் கிளையில்
துரோகப் பறவையென அமர்ந்த
என்னை பார்க்காதீர்கள்
என் திசை குரோதத்தின்
முடிவிலி. கனவுகளின் வழி
நுழையும் ஒன்றுமற்ற கற்றைமுடிகொத்து
வாசம் நான். விலகிக்கொல்லுங்கள்
என்னை அல்லது ஊளை கேட்டு
பிரகாசிக்கும் நிலவுக்கிரணம்
ஒன்றால் உங்களை சிதைத்துக்கொள்ளுங்கள்

நினைவுபடுத்துங்கள் நான்
ரணத்தை மொய்க்கும் நிணம் தோய்ந்த
ஈ என்பதை. கணந்தோறும் என் நாவு
குருதி நக்குகிறது உங்கள் வாழ்வெனும்
கையால் விரட்டி அடியுங்கள் என்னை
கவனம் ரணத்தின் மேல் பட்டு
விடக்கூடாது உங்கள் வாழ்வு.

ஒரு தேநீர் வேளையுடன்முடிந்து
போகும் சிறு ஏப்பம் நான். தாபமெனும்
மருந்துருண்டை தின்று ஜீரணித்து
விடுங்கள் என்னை. கழிவாக்கி
என்னை கொட்டிநிரப்ப இப்பிரபஞ்சம்
போதாதெனும் போது நீங்கள்
ஒரு குழந்தைக்கு குப்பைதொட்டி ஒன்றை
பரிசளியுங்கள்

பின்
எனது முன்பற்கள் தெரிய சிரிப்பதை
பார்க்காது போய் விடுங்கள்
பறந்து பறந்து ....

02 October, 2010

புள்ளி வனம்


ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

மொத்தமாய் என்னை உதிர்கிறது

ஒரு பன்னீர் மரத்தின்

பால்வெண்மை பூ வாசம்

போல. நெகிழ்வினை இழக்கும்

அலைகளில் இருந்து வெளியேறும்

காற்றென திசைகளை குருடாக்குகிறது

சங்கொலி தேங்கும் தீநடனமொத்த

உன் உடல் மொழி. வறள்நாக்கின்

நுனிவீழ்கிறதுன் ஒற்றைத்துளி அமிலம்.

பூக்கிறது சாக்காடு உடலிதழாய்

ஒவ்வொரு இதழிலும் மகரந்தம்

சேகரிக்கிறது உயிர்வாசம். துகள்

துகளாய் இளகுகிறது எல்லாம்

ஒரு இனிய தழுவலில் முற்றும்

தொலைக்கிற என் ஆண்மையை தேடி

என் வெண்புள்ளி ஆணவம் கதறி

அலைகிறது. இல்லாத வானத்தில் நீலம்

போலவே இல்லாத ஆண்மைக்கு

ஆணவம் எனக் கெக்களிக்கிறதுன் அன்பு.

நீலம் பாரிக்கிறது உயிர். உன் ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

நட்சத்திரங்களை விழுங்குமொரு

கருந்துளை போல.

***************************

20 September, 2010

ஒரு துளி குருதி


சிதறிய கொலுசுமணிகள்
சுமந்த கால்களின் சொந்தக்காரி
கட்டாந்தரை காய்ந்தபுல்லில்
உருட்டிவிடப்படுகிறாள் உடையற்று
எனது சாட்டையடி பட்டு
சிவப்பாய் நைந்து கிழிகிறது
பச்சை வரியுடல்
முகடுகள் ஏறி தப்பிக்கவே முயலும்
அவள் தலையில் பாய்ச்சுகிறேன்
ஒரு தனித்த குண்டை
தலை சிதற என் துப்பாய்க்கி முனை
ஊதுகிறேன்..

துர்கனவில் அவள் என்னை
தூக்கிப் பறக்கிறாள்
மாயக்கம்பளத்தில்
கடந்து போகும் நிலக்காட்சிகளில்
தெரியும் என்னை
ஓநாய்கள் தின்னுகிறன

பார்க்கவே பார்க்க அவள்
உதடோரம்கசிகிறது
குளிர்ந்து உறையும் ஒரு துளி
குருதி.

07 September, 2010

அப்பா .....


பள்ளி வெளியேறிய

யாமத்தில் சில்லுகள்

நள்கையில் வில்லெய்திக்

கொய்கிறேன் ஒடிந்த மின்னலை.

எரிந்து அடங்குகிறது கானகத்திமிர்.

ஏறி மிதிக்கிறது பரிதிவெளிச்சத்தை

வாங்கி உமிழும் உருண்டை.

ஒவ்வொரு செதிலாய் பிடுங்கிகொண்டு

பறக்கிறது இரவுநிற வெட்டுக்கிளி.

நான் பள்ளி மீள்கிறேன்.

கதவை திறக்கிறார் அப்பா.

தவிரவும் இல்லை தவறவும் இல்லை.

இளஞ்சூட்டுடன் உள்ளங்கை

அழுந்த பிடித்து அழைத்துச்செல்கிறார்

உள்ளே. திறந்துகொண்டே இருக்கிறது

முடிவுராக்கதவுகள் திசைகளற்ற வெளிக்குள்.

பட்டென்று வெடித்த காய்க்குள்லிருந்து

மிதக்கும் சிறுபஞ்சென உணர்கிறது நாசி.

கையை விடாதீர்கள்

ஒரே ஒரு கதவு அடைபடும் வரையேனும்...

29 June, 2010

ஒப்புதல்

**********

நன்றி ரமேஷ் வைத்யா. என் தளத்திற்கு நீ வருகை தந்தது எனக்கு பெருமகிழ்ச்சி.

****************

நிதானமான தருணத்தில்
அச்சிறுமி என்னை அடையாளம் கண்டாள்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு அது எனக்கு பிடிக்கவேண்டும்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு மற்ற யாருக்கும் கொடுக்காததாய்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு உன்னிடம் மட்டும்தான் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு நான் பார்க்காததாய் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு எதுமற்றவையாய் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க ..
உனக்குத்தெரியுமினி என்னிடம் அதற்கு பதிலில்லை
என்ன செய்வாய் எனை நீ மறக்கவென கேட்டாள் சிறுமி
வறண்ட நிலத்தில் சிறிது நீரூற்றி
என்னை நட்டுவைப்பேன் என்றேன் நான்.

****************

25 June, 2010

தனிமைக்குள் புகுந்த காண்டாமிருகம்



நண்ப
நேசக்கரம்நீட்டுமுன் விரல்களை
ஒடித்து குருதி கொப்பழிக்க கடவாயில்
திணித்து மேல்லுகிறேன்
வலி பற்றிய பிரக்ஞை என்னிடமில்லையெனும்
பார்வையை ஒரு இறகுபோல மிதக்கவிடுகிறாய்
காற்றில்..
எனது குரோதம் நீ எப்பொழுதும்
அறிந்ததுபோல் சொற்கலாலானவை
அவற்றிக்கு ஜீவனில்லை பாவமில்லை
துளி கருணையும் உன் மேல் அது கொண்டாடாது
கேள் ..

நண்ப
மரணித்தவனின் ஜீவனுக்கும் எனக்கும்
தொடர்பில்லை மாறாக நான் ஒரு
எளிய கொலைகாரனென அறிவாய்தானே
நான் ஒரு

சொல்
செயல்
வியப்பு
அடிமை
தனிமை
தூரம்
கத்தி
நிழல்
நான்
விருப்பம்

காலமற்ற நேரமற்ற தூரமற்ற விசும்பில்
எனது கொலையாயுதத்தை உபயோகிக்கிறேன்
அது உன்னை தவிர வேறரியாது
என் இலக்கு நீ

நண்ப
சாந்தம் கொள் நிதானமாய் மரணிக்க
பழகியதுதான் துர்மரணம் உனக்கு
எனக்கும்தான்.. கபால மோட்சம்
சொல் விடுதலை.
சொல் விடுதலை.
சொல்விடு தலை.

நண்ப
விடுதலை சொல்
என் பானம் ஏற்கனவே தைத்து
விட்டது.

************

03 June, 2010

காணாப் போனோம் கண் விழித்தோம்.

சாணி போடுற யானை காணோம் தினம்

கோணி தைக்கிற ஆணை காணோம் தினம்

கேணி இறைக்கிற பெண்ணை காணோம் தினம்

வாணி கொடுக்கிற அன்னம் காணோம் - அதி

வானம் தெரிகிற பூமி காணோம் வழி

பானம் கேட்டிடும் ஞானம் காணோம் வழி

மோனம் தேடும் வேழம் காணோம் வழி

தானம் கேட்கும் தாளம் காணோம் - வழி

சோளம் விளைக்கும் மூலம் காணோம்

மேளம் முழங்கும் பானம் காணோம்

தாளம் இழந்த விந்தம் காணோம்

கூளம் குவியும் சாலை காணோம் - தினம்

அன்றில் என்றொரு பறத்தல் காணோம் அவை

குன்றில் அலைந்திடும் நேரம் காணோம் சில

முன்றில் நிலைத்திடும் வீரம் காணோம் கணம்

அன்றில் முளைத்திடும் விண்ணைக் காணோம் - பகை ஆக

புன்னை என்றொரு சுரத்தை கண்டோம்

தென்னை என்றொரு மரத்தையும் கண்டோம்

புன்னை என்றொரு நிலத்தையும் கண்டோம்

தொன்னை என்பதை கேவலம் என்றோம் - அன்றில்

நன்றென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

புன்னை நிலமென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

தென்னை மரமென்று நாமத்தை தூற்றிடுவோ மோ

பொன்னை தரமென்று அனைத்தும் அளந்திடுவோ மோ.

**********************************************

நான் எனது நிலையை இழக்க தேவையான அளவு குழம்பிவிட்டேன்.மேற்கண்ட கவிதையை தெளிவான பொருள்கொள்ளும் மனங்களை நான் வணங்குகிறேன். பொருள் கூற விளம்புகிறேன்.

****************************************************************

30 May, 2010

களிப்பொன் நிலா



கூந்தல் வானில் மிளிர்கிறது
வட்டச்சின்ன நிலா
காக்கை எச்சம்.

பால் குடித்து களியேறி
இணையழைத்துக் கதறுகிறது தவளை
வானில் நிலா.

எதிர்த்து நீந்தி தவித்து'
தள்ளாடி பிளந்து சேர்கிறது
ஆற்றுக்குள் நிலா.

********************************
சிவகுமாரின் பதிவு கண்டதும் களிப்பொன் நிலா புத்தியில் நுழைந்து செய்த சோதனை. !
********************************