13 February, 2012

புணர்ச்சி நாற்பது - 3
பாதுகாப்பின்மை யுணர்ந்த
கணத்தில் உண்ணக்கிடைத்ததொரு
பச்சை ஆப்பிள்

இளம் அடர் பச்சைகள்
வழுவழுத்த தோலின் மணம்
கோளத்தில் கடித்த இடத்தில்
விழுந்தது எறிகல்லின் பள்ளம்

வெண்சதைகள் குழறச்செய்தது
நானுணியை. பின் பரவியது
உடல்முழுதும் துவர்ப்பின் சுவை
விண்டு விழுங்கி முடிந்தபோது

தவறி உடன் நுழைந்துவிட்ட
விதை நொடியில் பரப்புகிறது
வன்மத்தின் வேர்களை வயிறு
முழுவதும் ஆப்பிளின் பசியாய்

குவியமிழந்த பார்வையின்
வழியே  தெரிந்ததெல்லாம்
பச்சையமற்ற வெண்ணிற
ஆப்பிள் அளித்ததொரு சாபம்

இச்சைத்தீரா தொரு பச்சைத்தவளை
ஆவாய் என

நீரிலும் நிலத்திலும் தேடித்திரிகிறேன்
அந்திமம் கடத்தும் ஒற்றை பழத்தை
புணர்சிக்கழைக்கும் ஆதிக்கிழத்தியின்
சூல்நீர் வாசனையுடன்.

---------

01 February, 2012

தொலைந்து போன... சுகம்
பயணம் மனிதனை குரூரமாக வேவுபார்க்கும் ஒரு சூனியக்கிழவி. திசையற்ற பூமிப்பந்தின் வரையறுக்கப்பட்ட நிலத்துக்குள் கழிந்த காலம் எனக்கு அளித்த  வகையான வகையான உணர்வுகளை நிதானமாக உற்றுப்பார்த்தால்  ஏதுமற்று இலையுதிர்ந்து பட்டுப்போன ஒருமரத்தினைப் உணர்கிறேன். போகிற இடமெல்லாம் மீள்சம்பவங்களாக உணர்ந்து சலிக்கும் வலிமனது வாய்க்கப் பெற்றது ஊழ்வினை என்றால் நம்பிவிடுவேன். சட்டிஸ்கர் ஒரு ஆதிவாசிகளின் மாநிலம். நான் சென்றது துர்க் எனும் ஒரு மாவட்ட தலைநகரம். நாமனைவரும் பார்க்கும் ஒரு சிறு இந்திய நகரத்திற்கு துளியும் மாற்றமில்லாமல் இருந்த லேசான அழுக்கு பிடித்த நகரம். அங்கு ஒரு மசூதியில் யுனானி மருத்துவர் ஒருவரால் அளிக்கப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்தினை (வேப்பம்புண்ணாக்கு ருசியில் ஒரு கவளம் தவுட்டை பசும்பாலில் கலந்து 
கொடுத்தார்கள்) குடித்து விட்டு இரவு துர்க் - ல் இருந்து கிளம்பி கட்னி என்கிற மற்றொரு மாவட்ட தலைநகரில் இறங்கியது அதிகாலை 4 மணி. (19.01.2012) அக்கணத்திலிருந்து பயணம் என்கிற சூனியக்காரி என்னுடனேயே ரயிலை விட்டு கீழிறங்கி எனது வெடவெடத்த கழுத்தில் மப்ளர் என சுற்றிக்கொண்டாள்.

கட்னியிலிருந்து மத்தியப்பிரதேச மாவட்டமான ரேவா வில் இறங்கி இனிப்பு அவல் உருளை சமோசா காலையுணவினை முடித்து சத்னா மாவட்டத்தைக் கடந்து பண்ணா தேசிய புலிகள் சரணாலயம் வழியாக சத்தர்பூர் செல்லும் வழியில் கஜுரஹோவிற்கு பத்து கிலோ மீட்டர்கள் தொலைவில் இறக்கிவிடப்பட்டோம். கட்னியிலிருந்து சத்தர்பூர் வரையிலான தொலைவு இருநூறு கிலோமீடர்களாக இருக்கலாம்.. ஐந்து மாவட்டங்கள் கடந்ததான அந்த பேருந்து பயணம் இனிவரும் எனது காலத்தின் எனதான  behaviour change - கு ஒரு ஆரம்ப அறிகுறியென அப்போது உணரவில்லை. கஜுராஹோ தங்குமிடத்தில் மாலை ஆறுமணிக்கு சென்றோம். மறுநாள் மாலை ஏழுமணிவரை கஜுராஹோ. ஒன்றுமில்லை சமணக்கோயிலை தவிர. ஆண் பெண்ணகளின் சிற்பங்கள். கூர்மையான மனித கலை ஆளுமைகளின் வெளிப்பாட்டுடன் காவிவண்ண கல்சிற்ப கோபுரங்கள். மொத்தத்தில் மூன்றரை சத ஆலிங்கன சிலைகள். ஊடக உதவியால் பன்னாட்டு விமான நிலையத்தை அடைந்திருக்கும் ஒரே இந்திய கிராமம் கஜுரஹோ. இவ்வகை கலவிசிற்பங்கள் காணக்கிடைக்கும் மதுரை அழகர்கோயில் கோபுரமும் சளைத்ததல்ல. மற்றபடி கஜுரஹோ  கிராம மக்கள் வரட்டி தட்டி பிழைக்கிறார்கள்.  மொத்த கிராமத்திற்கும் அவ்வளவு பெரிய பன்னாட்டு சுற்றுலாத்தலதிற்கும் ஒரே ஒரு மதுபான கடை. பார் வசதி இல்லை. 


பயணம் தனது கூர் பல்லை அன்றிரவின் பேருந்தில் இருத்திக்கொண்டது. 
கஜுரஹொவிலிருந்து ஜபல்பூருக்கான இரவுபயணம் அது. ஒரு மனிதனின் உடலை ஒரு பேருந்து துவைத்து காயப்போடும் என்று உறுதிபடுத்திய பயணம். வனம்புகும் கருநாகமென சாலையற்றதோர் சாலையில் அவ்வோட்டுனனின் சாகசம் தினம் நிகழ்கிறதை பார்க்கையில் இனிய சாத்தானையும் கேடுகெட்ட கடவுளையும் நம்பியே தொலைக்கவேண்டும் போல.

முன்னால் கஜுரஹோவிற்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் யமுனையில் இணையப் பாயும் கென் நதியின் பாறைப்பிளவுகள் மட்டுமே என் 
மொத்தபயணத்தையும் ஜீவனுள்ளதாக்கியது. கிரன்கள் அலையும் வனமூடே 
கிழித்து குதித்தோடும் கென் நதியின் பாதை இந்தியாவின் ஒரே எரிமலை 
லார்வாக்காளால் ஆனவை. வார்த்தைகள் இல்லை. காண வேண்டும் அவ்வளவுதான்.

ஊர்திரும்பும் ரயில்பயணம். கூட இருந்தது நான்கு புத்தகங்கள். ஆறாவலி,
அழகம்மா, நித்ரா, ச்சே கோபெர, இரண்டு இதழ்: மற்றைமை, மணல்வீடு.

ஆறாவலி:

மூன்று இடங்கள்/காலங்கள். இங்கு, அங்கு, உங்கு. அப்பொழுது, இப்பொழுது, எப்பொழுது. சொல்லிமாளா துயர் புலம் பெயர் கதை வெளி. சில விவரணைகள் கொரில்லாவை ஞாபகப்படுத்தினாலும் அரசியல் மிக குறைவு. வலி என்பது இதில் ரொமாண்டிசைஸ் படுத்தபடுகிறது. தெளிவான நடை அதை சமன் படுத்துவது போல் நடிக்கவேண்டியிருக்கிறது. கோரத்தின் அல்ல குரூரத்தின் அழகியல். மாறாக ஆசிரியரின் செவ்வி இவரின் நாவலைவிட நன்றாக இருந்தது. எதில் படித்தேன்?

அழகம்மா:

சந்திராவின் எட்டு கதைகள். நிதானமாக பின்னப்பட்டவை. மனம் என்பதில் பால்பேதமில்லை என்பதில் எனக்கிருக்கும் உறுதிக்கு இவரின் சில கதைகள் எனக்கு வலுவான சாட்சிகள். தொலைவதே புனிதம் என்கிற கதை அதிலொன்று. (தலைப்பு சரியா). மனிதனின் புரிதலுக்கு / அனுபவத்திற்கு ஏற்பதான் மன அமைப்பு. ஆண் மற்றும் பெண் என்கிற பதமே மொழிக்கட்டமைப்பு என்று சொல்லப்படும் காலத்தில் மனம் எந்த இடத்தில பால் பேதமாகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. உடல் சார்ந்த புரிதலில் விளையும் மனம் பால்சார்ந்தது எனில் நண்பனின் சித்தியை கொலை செய்யும் ஒரு இளம் ஆணின் மனம் எழுத்தாளருக்கு எப்படி வாய்க்கிறது. முலைக்காம்பும் யோனியும் பெண் என்றால் வெறும் காம்பும் கம்பும் ஆணென்றால் (யோனிக்கு நிகரான எதிர்பதம் சங்கத்தில் கூட இல்லையாமே.. உண்மையா) இரண்டும் இணைந்திருக்கிற அல்லது இல்லாதிருக்கிறதை அரவான்/அரவாணி (இண் என்று ஏனில்லை ?) என்றோ கட்டமைப்பது வெறும் உடலைத்தானே. மனம் ? எளிய விளக்கம் எதிர்பதம் இல்லாமல் ஒன்றை மனத்தால் புரிந்து கொள்ளமுடியாது என்று என்னால் விலகிசெல்லமுடியவில்லை. பார்க்கலாம். புருஷனை நம்பி செத்துபோகும் எத்தனை அழகம்மாக்கள் வாழ்ந்த நிலம் இது.. அதிலொருத்தி ஆவிபடிந்த விடியல் மணமாய் சந்திராவின் கதைவெளியில் வார்த்தைகளாகி சிதறியிருக்கிறாள் வெம்மை கலந்த அரளிப்பூ வாசனையோடு.

நித்ராவும் ச்சேவும்:

எழுதப்பட்ட வாக்கியங்கள் கவிதையாய் வார்த்துவிடுகிறது நித்ராவின் காதல் மாறாக கவிதை உக்கிரமான அநாதை வார்த்தைகளாய் கைவிடுகிறது ச்சேவை...

மற்றமை இளங்கலை முதல் செமஸ்டர் பாடநூல் (மிகசுருக்கிய வடிவம்). மணல்வீடு சுயமுனேற்றம்.

பயணம் இனிதே முடிந்தது. தொலைந்து.. போனதுதான் மிச்சம். குதூகலம், அபத்தம் மற்றும் குரூரம் இம்மூன்றையும் அடைய இரண்டு வழிகள்: ஒன்று பயணம் மற்றது மரணம்.
..............................................வவ்வால் கவிதைகள் 2பசிய நிசி
நிலவின் கொள்குள
மீன்தாவ
விரல் கொக்கியில்
பற்றி யிழுக்கிறது
புள் வடிவ பாலூட்டி

நிதானம்
கடவுளின் ருசி
தெறிக்கிற நீர்த்துளிகளின்
முனையில்
வளர்ந்து
நீள்கிறது
சாத்தானின் நகம்

பிரதி
பலிக்கிற
பிம்பம்
வவ்வாலின் வாலினை
மென்சுக்கானாக்குகிறது

பிறகான
தவிப்புடன்
பறக்கத்தொடங்குகிறது
மீன் 

வவ்வாலின் திசையில்.