Showing posts with label சங்கம். Show all posts
Showing posts with label சங்கம். Show all posts

25 September, 2010

குறுந்தொகை 4

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே

ஒல்வா ளல்லலென் றவரிகழ்ந் தனரே

ஆயிடை. இருபே ராண்மை செய்த பூசல்

நல்லராக் கதுவி யாங்கென்

அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

...................................................................................... குறுந்தொகை - அவ்வை - பாலை.

இப்பாடல் என்னைப்பொருத்தவரையில் மிகமிக முக்கியமானது. இதில் "ஆளுமை" ( personality) என்கிற பதத்தில் ஆண்மை என்கிற சொல்லை உபயோகித்திருப்பார் அவ்வை. மேலும் அக்காலத்திய புதுக்கவிதை இதுவென்று அறுதியிடலாம். அவ்வையின் மற்ற கவிதைகளைப் போலவே இதுவும் புரட்சிகரமானதே. (நண்பர்களே.. சங்கத்தில் பல அவ்வைகள் இருந்திருக்கி-றார்களென அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.)

பிரியமாட்டானென நினைத்தேன்

பிரிவதை சொன்னால்

தாங்கமாட்டாளென

நினைத்து சென்று

விட்டான் சொல்லாமல்.

நல்ல பாம்பு கடித்தது போல

அலமலக்கிறது மனம்

அவ்வேளையில்

இரண்டு ஆளுமைகளும் செய்த

பூசல் நினைத்து.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குறுந்தொகை

நல்லுரை யிகந்து புல்லுரை தா அயப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந்தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே...


.......................................................................................... குறுந்தொகை - அவ்வை - குறிஞ்சி.


மறுத்தாள் இன்றிரவு.

ஆசை கொண்டு
நல்லது கேட்டேன் இல்லது சொன்னாள்
மழைநீர் கொள்ளாத பச்சைமண் கலையம் போல
துக்கம் தாங்காத உள்ளம் கொண்டேன்
நெஞ்சே. துயர் என்பது உயரக்கிளையில்
தாவும் மந்தியின் நெஞ்சைக் கவ்வும் குட்டி போல கவ்வும்.

* * * * * * * * * * * * * * * *


வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்

மலையுடை யருஞ்சுர மென்பநம்

முலையிடை முனிநர் சென்ற வாறே..


.................................................................................. குறுந்தொகை - அவ்வை - பாலை.



ஆற்றாத மனம்:


முலைகளிடையில் தலையழுந்த தூங்கியவன் பிரிந்த

பாதையென்பது வெக்கையால் சூடான

காற்று வாகைமர பொந்தில் வீசி அதன் விளைச்சலை

முடமாக்கும் மலைகளுக்கிடையேயான பாதை.

* ** * * * * * * * * * * * * * * * * ** * * * * * *

10 September, 2010

குறுந்தொகை 2


அகவன் மகளே யகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங்கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே. அவர்
நன்நெடுங்குன்றம் பாடிய பாட்டே
*************************************** குறுந்தொகை 23 - அவ்வையார்.
பாடு பெண்ணே குறிசொல்லி
சங்குவெண் கூந்தல் பெண்ணே பாடு
மீண்டும் மீண்டும்
தலைவியின் பசலைக்கு
வேரானவனின் சிறப்பைக் குறித்தே
பாடு.
*****************************************


முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. ************************************************ குறுந்தொகை 28 - அவ்வையார்

காதலன் அருகிலில்லாமல்
நான் படும் வேதனையை
அறியாமல்
சுழன்று வீசும் தென்றலின் பின்
இனிதாக உறங்கும் ஊர்பயல்களை
முட்டிக் கொல்வதாஅன்றி தாக்கிக்

கொல்வதாவென அன்றிலும் ஐயோவென கத்துவதாவென.... அறியேன் நான்

*************************************************************

03 September, 2010

குறுந்தொகை

பறைபடப் பணிலமார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழர்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

--------------------------------------------------- குறுந்தொகையில் - ஔவையின் பாடலிது. பாலைத்திணை. என்னாலியன்ற ஒரு சிறிய பெயர்ப்பு.

சென்றுவிட்டாள் நன்றென்று நம்பி விடலைஅவனை

வென்றுவிட்டாள் கோசர்கள் முன் தெளிந்தமொழிபோல

நன்றுசெய்தான் மடந்தையை மாலையிட்டான் பறை அதிர சங்கூத

கொன்றுவிடு நல்தாயே பதற்றத்தை இனிதாய் வாழ்வாளுன்மகள்.

அல்லது

சென்றுவிட்டாள்
தெளிந்தமொழி போல
அவனுடன் பிடித்துப்போய்.
பறை அதிர
சங்கு ஓத
மணமுடித்தாள்
மாறாத நட்பு
கலங்காதே தாயே.

******************************

விடலை என்றால் தலைவன் என்று அர்த்தமாம்!

**********************

குறுந்தொகையில் ஔவையார் பாடிய பதினைந்து பாடல்களை இப்படி எளி-பெயர்க்க ஆசை!

*********************