09 June, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 6நம்பிக்கை என்பது விடுவிக்கப்பட்ட ஆயுதம். இருந்தால் எதிராளியைக் கொல்லும் இல்லையென்றால் தன்னைக் கொல்லும்.
*****************************
நம்பிக்கை: இந்த சொல்லின் அர்த்தப்பாடுகள் இல்லாத வாழ்வுவெளி இங்கில்லை. சந்தேகப்படுதல், கேள்விகேட்டல், அறியமுற்படுதல், விளக்கமுற்படுதல் என எல்லாவற்றிற்குமான அடிப்படைக் காரணி 'நம்பிக்கை' என கொள்கிறேன். இதுகாறும் இருக்கும் ஒரு நிலையை ஒருவர் சந்தேகம் கொள்ள நேர்வது நம்பிக்கை இழப்பின் பின்னே தான் சாத்தியம். மதம்,கடவுள் போன்றவைகளின் நம்பிக்கை போன்ற வேலைக்குதவாத பெருங்கதையாடல்களை நான் தவிர்க்கிறேன். நான் புரிந்து கொண்டிருக்கிற நம்பிக்கை இவையிரண்டையும் விட பயங்கரமானது. அது மனிதர்களாகிய நமது கூட்டு மனங்களில் ரசனையான அழகியலோடு நுண்கிருமிகளைப்போல ஊடுருவி மிகப்பிரமாண்டமான ஒரு புற்றை கட்டுகிறது. நம்பிக்கையின் வேலை என்ன என்று பார்த்தோமானால் ஒரு தனிமனித கருத்தையோ அல்லது ஒரு கூட்டுமன கருத்தையோ பொது அறமாக மாற்றுவது எனத் தோன்றுகிறது.
நம்பிக்கைக்கு உதாரணமாக இங்கு எதையாவது சொல்லலாம் என்றால் நினைக்கிற அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையால்தான் என்று எண்ணும்போது எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்வாகவும் உள்ளது. மரணம் மற்றும் அறத்திற்கும் இடையிலான இணைப்பாகவும் (nexus ) ஊடுபாகாவும் ( knit ) நம்பிக்கை செயல்படுகிறது. அது அன்றாட நிகழ்வுகளில் இருளுக்குள் மறைந்த நிழல் போல படர்ந்திருக்கிறது. நான் நம்பிக்கையை ஒரு தோதுக்காக மூன்று வகையாக பிரிக்கிறேன். சுயநம்பிக்கை, செயல்பாட்டு நம்பிக்கை, அறநம்பிக்கை என. தன்னம்பிக்கைக்கும் நான் சொல்லும் சுய நம்பிக்கைக்கும் வேறுபாடு உள்ளது.
தன்னம்பிக்கை என்பது ஒரு செயலை செய்துவிடுவேன் என்கிற வாக்கியத்தின் அடிப்படையில் வருவது. சுய நம்பிக்கை என்றால் ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்கு எது உகந்தது என நம்புகிறானோ அதை நம்புவது. உதாரணத்திற்கு நன் மழையில் நனைந்தால் சளி பிடிக்கும் என்பது முதல் என் மனைவி பத்தினி என்பதுவரை நூற்றுக்கணக்கில் சொல்லலாம். இரண்டாவதாக செயல்பாட்டு நம்பிக்கை என்பது ஒரு குடும்பம் சார்ந்த செயல்பாடுகளில் உபயோகிக்கப்படும் பொருட்களும் அவற்றின் வழித்தோன்றல்களால் விதைக்கப்படும் நம்பிக்கைத்தூவல்களால் உருவாகும் நம்பிக்கைகள். சோப்பை மாத்தினா சொறி வரும் என்று தொடங்கி கக்கத்தில செனட்டை அடித்தால் எல்லா பொண்ணுகளும் படுக்க வருவாங்க என்பதுவரையிலான விளம்பர கழிசடைகளால் உருவாகப்படுவைகள் இவ்வகையான செயல்பாட்டு வகைகள். மூன்றாவதாக அற நம்பிக்கை நாம் அறிந்ததே. பொய் சொன்னா போஜனம் லேதுவில் தொடங்கி எனக்குத்தெரிந்து ஒருகோடியே எழுபத்து மூணு லட்சத்து நாற்பத்தேழாயிரத்து முன்னூத்து பதினேழரை அற நம்பிக்கைகள் இருக்கின்றன!

இதில் மூட நம்பிக்கை, நல்ல நம்பிக்கை, தீய நம்பிக்கை என்று அறம் பிரித்து மன்னிக்கவும் தரம் பிரித்து வைத்திருக்கிறோம். இதிலும் நம்பிக்கை என்பதிலேயே நம்பிக்கை இல்லை எனும் நம்பிக்கை சற்று சுவாரஸ்யமானது.

ஒருவன் தனது நம்பிக்கையின் மூலத்தை ஆராயத்தொடங்கினால் நம்பிக்கையின் ஒரே விளைவு ஆதாயம் என்று தெரிந்துவிடும். ஒரு நம்பிக்கையை அளிப்பதன் மூலமாகவோ அல்லது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாகவோ ஏதேனும் ஒரு ஆதாயம் இல்லையென்றால் அந்த நம்பிக்கை பயனற்றுப் போய்விடும். ஆக ஆதாயமற்ற நம்பிக்கை என்று ஒன்று இல்லை. அப்படி ஆதாயமற்ற ஒரு நம்பிக்கையை ஒருவர் வைத்திருந்தார் என்றால் அவர் மனித உருவில் உலாவும் வெள்ளாடாகவோ அல்லது கடவுளாகவோ இருக்கக்கூடும்.

ஆயிற்றா,
இந்த தொடர் பதிவில் மரணம், அறம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மீது எனக்கிருக்கும் புரிதல் பற்றி மிக மிக மிக சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் இடையிலே எந்த தொடர்பும் இல்லாதது போல தோன்றினாலும் இவைதான் என்னைப்பொருத்தவரையில் மனித வாழ்வின் அடிப்படை. மற்ற அனைத்தும் இவைகளின் இருப்பு இல்லாமல் இல்லை என்பது என் துணிபு.

இவற்றை கொண்டு குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களின் உளவியலை அறிஞர்கள் அக்குவேறு ஆணிவேராய் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அவற்றில் நான் மேய்ந்தவைகளை தொடர்ந்து எழுதுகிறேன்.

ஒரு வகையில் கொற்றவையும், கௌசல்யாவும் தமது பதிவுகளில் ஒரு வகையான உளவியல் சிக்கல்களை எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

*******************
தொடர்கிறேன்..
******************

5 comments:

Kousalya Raj said...

நம்பிக்கை பற்றி இவ்வளவு உணர்வுகளா? ஆச்சரிமாக இருக்கிறது , உங்களின் தேடல்..!! தொடரட்டும் உங்கள் பணி!!! என் பெயரை உங்கள் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி.

வசுமித்ர said...

வாதைக்கான வெளியில் அலைகிறீர்கள் என்றெண்ணுகிறேன். நன்று.நம்பிக்கைகளை சந்தேகப்படுவதில்தான் என் அறம் குடிகொண்டுள்ளதாக நான் நினைக்கிறேன். உங்களுக்கு வரும் வெற்று அல்லது வெற்றிட மனநிலை மனநலம் பிறழ்ந்தவர்களுக்கும் உண்டு என நினைக்கும் போது....கடவுளே தற்கொலை செய்யத் தோன்றுகிறதெனக்கு.

எல்லாக் கைகளும் பிச்சைகேட்டுத்தான் வெளியில்
ஏந்தி நிற்கின்றன..
அதில்
எல்லாக் கைகளும்
பிச்சையிட்டுச் செல்கின்றன
பெருங்கருணையால்
கண்ணுக்குத் தெரியாத உதடுகள் என்றேனும் முத்தமிட்டுச்
செல்லக்கூடும்
என்ற
நம்பிக்கையில்தான்
எல்லாக் கைகளும் ஏந்தியலைகின்றன.

மகி எதிர்பார்ப்பில்லாது கிடைக்கும் வாதை கூட அற்புதம்தான்.
ஆமென்.
....அதே அன்புடன்.

நேசமித்ரன் said...

//எதிர்பார்ப்பில்லாது கிடைக்கும் வாதை கூட அற்புதம்தான்.//

மெய்யென்று தோன்றுகிறது

பத்மா said...

நீங்கள் சொல்லியது போல நம்பிக்கைமேல் நம்பிக்கை இல்லை என்ற நம்பிக்கொண்டிருகிறேன் நான் .அது புறம் இருக்க ,எதாவது ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும் வைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.இது இரு பக்கமும் கூர் உடைய கத்தி போல ,நம்பிக்கை பொய்க்கும் பொது நம்பிக்கையின்மையில் நம்பிக்கையும் ,அது பொய்க்காத போது ஒரு நம்பிக்கையும் வரும் .

ஆதாயமில்லா நம்பிக்கை தான் மிகவும் சிந்திக்க வைக்கிறது .இதை கொஞ்சம் விவரித்து எழுதினால் பேசலாம் .


வசுமித்ரா கூறிய
"எதிர்பாராது கிடைக்கும் வாதை கூட அற்புதம் தான்." அப்படியா ஆதிரன்?

adhiran said...

thanks kousalya, vasu, nesamithran, padma.

I will try to my opinions in my posts. thanks.