04 February, 2010

வினோதம்

இன்றைய தினத்தந்தி நாழிதளில் மூன்று விஷயங்கள். ஒன்று, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் என்கிற ஊரில் சுடுகாட்டுக்கு பாதை இல்லை என்பதால் இறந்தது போன நபரின் உடலை காற்றடைத்த லாரி டியூப்பில் பாடை செய்துவைத்து ஆற்றின் மேல் மிதக்க விட்டு சுடுகாட்டுக்கு இழுத்து கொண்டு சென்றிருக்கிறார்கள். பிறகு புதைத்தார்களா இல்லை எரித்தார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தின் அநேக கிராமங்களில் சுடுகாட்டு பாதைப் பிரச்சனை இருக்கிறது. இதை தொடர்ந்து கிராமங்களில் இருந்து அருகிலிருக்கும் நகரத்தில் மின்மயானத்திற்கு அவசரஊர்தி வைத்து கொண்டுவந்துவிடும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால் இது செலவு பிடிக்கும் சமாச்சாரம். போகிற போக்கில், 'உடல் தானம்' என்கிற விஷயம் புனிதசடங்காகி பிணத்தை அவர்களே வந்து எடுத்துப்போகவேண்டிய கலாச்சார சூழல் உருவாகிவிடும் போல. ஒரு வகையில் அது நல்லதுதானோ என்னவோ.
மற்ற இரண்டும் சினிமா விளம்பரங்கள். ஒன்று 'தமிழ்படம்' என்கிற சினிமா விளம்பரம். தமிழ் சினிமாவின் கேவலங்களை பற்றி படம் பண்ண அமைச்சர் குடும்பத்தில் இருந்துதான் தயாரிப்பாளர்கள் வரவேண்டியிருக்கிறது. அந்த படத்தின் விளம்பர வரிகளில் இயககுனருக்கு தொலைபேசி படத்தின் கதை என்னவென்று கேட்கக்கூடாது "தெரிந்தால் சொல்லமாட்டோமா' என்றிருக்கிறார்கள். நல்ல விளம்பரம்! இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை சினிமா டைட்டிலில் இப்படி ஒரு தொனி வரும் படியான வாசகம் பார்த்த ஞாபகம்.
இரண்டாவது, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு எம் ஜி ஆர் அடிப்பொடிகள் தோன்றி சினிமா எடுக்க கிளம்பி விடுகிறார்கள். இப்படி 'சின்னவர்' எத்தனை பேர் கிளம்புவார்கள் என்று தெரியவில்லை.இப்படத்தின் இயக்குனர் பெயர் எம் ஜி ஆர்நம்பி! தயாரிப்பு எம் ஜி ஆர் ஸ்டுடியோ ! எம் ஜி ஆர் நம்பியே இப்படத்தில் நடிப்பார் போல. 'கால பைரவி' என்பது படத்தின் பெயர்.


***********************

திருமண பந்தம் பற்றிய எனது அவதானிப்பில் வலு சேர்க்கும் மூன்று காரணங்களை கடந்த மூன்று நாட்களில் நான் அறிய நேர்ந்தது.

மெத்தப்படித்த ஆண், மாதத்திக்கு லட்சம் வரை வருமானம்! மெத்த படித்த பெரிய வேலை பார்க்கிற பெண் என்றால் தனது குடும்பத்தை புரிந்து கொண்டு நடக்கமாட்டார்கள் என்று கற்பனை செய்து, பத்தாவது படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்..மிகக்குறைந்த காலத்திலேயே மனிதர் திருமணபந்தத்தில் கடுமையான சோர்வு கொண்டுள்ளார். இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொள்ளவில்லை' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை இழக்கிறார். பெண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறார்.

எதிர்மாறாக இன்னொரு நண்பர் திருமணமாகாதவர் திருமணமாகி ஏறக்குறைய பத்துவருடங்கள் லௌகீக அனுபவம் பெற்ற பெண்ணை திருமணம் செய்கிறார். இதில் இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொண்டிருக்கிறார்' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை பெறுகிறார். பெண் பாதுகாப்பு உணர்வு அடைகிறார்.

அடுத்ததாக பத்தொன்பது வயது பெண்ண நாற்பத்தியேழு வயது திருமணமான, தினமும் குடிக்கிற ஆணை விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். காதல் என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால் அவர் தினமும் குடிக்கிறார் என்று காரணம் காட்டி பத்து வருடத்திற்கு பின் தனது மகனுடன் தனியாக வாழ்கிறார்.

மூன்று ஜோடிகளுக்கும் பொருளாதார பிரச்சனைகள் இம்மி கூட இல்லை. எனது கேள்வி என்னவென்றால்: ஆணால் பெறப்படும் நம்பிக்கை என்பது என்ன, அந்த நம்பிக்கை எதனடிப்படையில் ஆனது? பெண்ணால் பெறப்படும் பாதுகாப்பு உணர்வு என்பது எது, அந்த உணர்வு எதனடிப்படையில் ஆனது?

நான் என்ன சொல்லுகிறேன்: பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள். அல்லது சுத்தமான காதலால் எதிர்பால் எக்கேடு கெட்டாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக (காதல் என்கிற கற்பனைக்காக) தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.

நான் சொல்வது சரியா?

இது தொடர்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

*******************

01 February, 2010

என்றொரு ஆதிப்பெண் 5

*******************************


காமா..

ஒவ்வொரு துளியும் தீயென்னும் அச்சக்காடு
ககனத்தில் ஓங்கிய பெருவிருட்சம்
சாக்காடு எனும் முத்தத் திமிங்கலம்
தசை அறுந்து வடியும் குருதிச்சுவை
நாணம் விழுங்கும் வளையறுக்கும் வாள்
ஓங்காரம் ஒன்றின் ஒலிவடிவம்
நீ

திசைக்கொன்றாய் கூந்தல் நுனிகள்
அவற்றிலிருந்து வெளியேறும் நீர்ப்பறவை
மரகுறுக்கின் வரிகொள் வடிவம்
நிறமிழக்கும் யாழிசைக்குறிப்பு
நீ

தாவரங்கள் பரிமாறும் மகரந்த வாசம்
பலி கொள்ளும் அரவத்தின் கூர்நாக்கு
திறந்தவுடன் நிறைந்துவிடும் அகல்விளக்கு
சுயம் கொல்லும் காமத்தின் உடலுறுப்பு
நீ

தெருவோரம் தேங்கும் மழைநீர்புழுவின்
அழுகிய இருப்பு
நான்..

நிலவொளியில் ஊளையிடும் ஓநாயின்
வாயொழுகும் உமிழ்நீர் சுவை
அது.

முடிக்கத்தெரியா கவிதை நீ

முடிக்கமுடியா வெற்றிடம் நான்

கவிதை அது.

*******************************

இக்கவிதை முடிவுக்கு வருகிறது.

**********************************

அன்பு, நட்பு, கனவு.

****************

அன்பு.

" அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்; உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது" (deepaneha.blogspot.com) .மகளைப்பற்றி எழுதும் போது இவ்வரிகளை இவர் எழுதியிருக்கிறார். மகள் என்பதை எடுத்து விட்டு பார்த்தோமானால், காதலை அல்லது அன்பை இதைவிட அழுத்தமாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். எனது விருப்பப்பட்டியலில் இவர் "சிதறல்கள்" என்ற வலைப்பதிவை இணைத்து இருக்கிறேன்.

**********************

நட்பு.

இந்த உறவுமுறைக்கு மனிதர்கள் எவ்வளவு தெளிவுரைகளை எழுதிவிட்டார்கள்.! ஆனாலும் சில நேரங்களில் எவற்றிற்கும் அடங்காமல் தனித்து நிற்கிறது இவ்வுறவு. வாழ்வின் பெருந்துயரங்களில் ஒன்று நட்புமுறிவு. எனக்கு வாழ்வில் ஒருமுறை இது நடந்திருக்கிறது. ஒரேமுறை..! கல்லூரி காலத்தோழனவன். இன்றுவரை அது ஒரு கடுமையான கனவாக என் தூக்கத்தில் விழித்தெழுகிறது. சம்பவங்கள், அதற்கான காரணிகள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எல்லாம் கலவையாக கனவில் பரிமானங்களை வெல்லுகின்றன. நேற்றிரவு கனவில் நடந்த பயங்கரம் என்னவென்றால் ஒரு காரணம் இடமாக எனக்கு காட்சியளித்தது. அதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை.. ஒரு காரணம் எனக்கு சம்பவ இடமாக தெரிந்தது. சம்பவ இடம் அங்கில்லை. இப்பொழுது கனவில் வந்த எந்த முகமும் நினைவில் இல்லை.. சமீபத்தில் இறந்து போன எனது தாத்தா மற்றும் நடிகர் கவுண்டமணியைத்தவிர ! மறுபடியும் எனக்கொரு நட்பு முறிவுக்கான அறிகுறிகள் தெரிகிறது. இம்முறை தவறு என்னுடையதாகவே இருக்க விருப்பம்.

******************************

கனவு.

கனவு பற்றியும் நிறைய படித்தும் எழுதியும் இருக்கிறார்கள். என் நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இந்த உலகமே நான் காணும் கனவாய் இருத்தால் எப்படி இருக்கும் என்றார். "கனவில் பட்டுப்பூச்சியை கண்டேன். விழித்ததும் அதைக்காணவில்லை, இது நான் கண்ட கனவா அல்லது பட்டுப்பூச்சியின் கனவில் நான் விழித்திருக்கிறேனா" என்று எப்போதோ ஒரு வரி படித்த ஞாபகம். யார் சொன்னது என்று தெரியவில்லை. இந்த உலகத்தை நான் கனவு கண்டால் நன்று. என்னை யாரோ ஒருவர் கனவு கண்டுகொண்டிருந்தால்... அய்யோ.

************************