09 June, 2010

கண மாறுதல்கள்.

கடந்த பதிவு மதிமயங்கிய ஒரு பொழுதின் தானறியா வெளிப்பாடு. வருந்துகிறேன். unconcious mind - ல் இவ்வளவு கோர்வையாய் வார்த்தைகள் எனக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. போகட்டும். அதன் அர்த்தங்கள் விளங்கா மர்மமாகவே தொடரட்டும்.
***************
வெளிச்சூழலில் வேலை நிமித்தமாக ஏற்படும் மனஅழுத்தம் என்னை கடந்த சில நாட்களாக இம்சித்தது. சுயஉற்சாகம் கொள்ளத்தேவையான சூழலை நானாக ஏற்படுத்திக்கொள்கிற தேவை மிக கடுமையான போராட்டமாக அமைந்து விட்டது. விட்டேத்தியான உணர்வுப்பகிர்வுக்கு தகுந்த தோழமை அருகில் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டம். போகட்டும். இப்போது நினைக்கையில் 'சின்னப்புள்ளத்தனமா' இருந்தாலும் மரணம் சுகம் என்கிற அளவுக்கு போயிருந்தது மனது. மொத்தமாக நான் அப்போது ஒரு வித உறவு முறைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நட்பின் படிநிலைகளில் ஒரு உச்சபட்ச நிகழ்வுப்போக்கு அது.
'Intimacy' என்கிற வார்த்தைக்கு நேரடியான தமிழ் வார்த்தை இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை. ஒரு உறவில் இன்டிமசி என்கிற நிலைக்கு வருவது என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு கொடுப்பினை. நட்பாகட்டும், மற்ற எந்தவகையான உறவுமுறையாகட்டும் - இன்டிமசி என்பதற்கு அன்யோன்யம் என்று சொல்லலாமா? -
ஒருவருக்கொருவர் கழுத்தை அறுத்துக்கொள்கிற அளவுக்கு சண்டை போடுவார்கள் சில மணித்துளிகளின் இரண்டுபேரும் பிணைந்து கொண்டிருப்பார்கள். ஒரு குற்றவுணர்வும் இருக்காது. வன்மம் மனசளவில் துளி கூட இருக்காது. வருடங்களாக பார்க்காமல் கூட இருப்பார்கள். பார்க்கும் போது பரபரப்பற்ற அன்பு பிரவகிக்கும். அவர்களின் சிறிய அசைவில் கூட ப்ரியம் வழிந்தோடும்.
நாட்கணக்கில் பேசாமல் இருப்பதும் அதற்காக சண்டைபோடுவதும் எல்லாம் துளிநேர இன்பங்களாக மாறிப்போகும். அறிவுரைகளை மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். அதை பின்பற்றுவதும் விட்டுவிடுவதும் அவரவர் விருப்பம். நான் சொல்லி ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி மூளையிலேயே தோன்றாது. இப்படி நிறைய குணாதிசயங்களை வைத்திருக்கும் இந்த அன்யோன்ய உறவு அனைவருக்கும் வாய்க்குமா என்ன. இந்த உறவுமுறையில் கணவன் மனைவி இருந்துவிட்டால் இன்பமே
*************************
இந்த வகையான நட்பினை அடிப்படையாக வைத்து "clerks" என்றொரு ஆங்கிலப்படம் வந்திருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்ப காலப் படமது. தொடர்ச்சியாக இரண்டு மூன்று பாகங்கள் வந்து சக்கை போடு போட்டது. முடிந்தால் பாருங்கள். இந்த படத்தை நானும் சுரேஷும் சேர்ந்து பார்த்து அனுபவித்த தருணங்கள் இனிமையானவை.
*************************

03 June, 2010

காணாப் போனோம் கண் விழித்தோம்.

சாணி போடுற யானை காணோம் தினம்

கோணி தைக்கிற ஆணை காணோம் தினம்

கேணி இறைக்கிற பெண்ணை காணோம் தினம்

வாணி கொடுக்கிற அன்னம் காணோம் - அதி

வானம் தெரிகிற பூமி காணோம் வழி

பானம் கேட்டிடும் ஞானம் காணோம் வழி

மோனம் தேடும் வேழம் காணோம் வழி

தானம் கேட்கும் தாளம் காணோம் - வழி

சோளம் விளைக்கும் மூலம் காணோம்

மேளம் முழங்கும் பானம் காணோம்

தாளம் இழந்த விந்தம் காணோம்

கூளம் குவியும் சாலை காணோம் - தினம்

அன்றில் என்றொரு பறத்தல் காணோம் அவை

குன்றில் அலைந்திடும் நேரம் காணோம் சில

முன்றில் நிலைத்திடும் வீரம் காணோம் கணம்

அன்றில் முளைத்திடும் விண்ணைக் காணோம் - பகை ஆக

புன்னை என்றொரு சுரத்தை கண்டோம்

தென்னை என்றொரு மரத்தையும் கண்டோம்

புன்னை என்றொரு நிலத்தையும் கண்டோம்

தொன்னை என்பதை கேவலம் என்றோம் - அன்றில்

நன்றென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

புன்னை நிலமென்று நாமத்தை வணங்கிடுவோ மோ

தென்னை மரமென்று நாமத்தை தூற்றிடுவோ மோ

பொன்னை தரமென்று அனைத்தும் அளந்திடுவோ மோ.

**********************************************

நான் எனது நிலையை இழக்க தேவையான அளவு குழம்பிவிட்டேன்.மேற்கண்ட கவிதையை தெளிவான பொருள்கொள்ளும் மனங்களை நான் வணங்குகிறேன். பொருள் கூற விளம்புகிறேன்.

****************************************************************

02 June, 2010

பால்வீதி புணருமொரு தனிமை


துயர் தரும் திரவம் உறிஞ்சி வளர்கிறது உயிர் பயிர். அதன் மொத்த சாரமும் ஈர்த்து உப்பிப் பருக்கிறது பயிர்முனையில் குரோதக் கனி. அதன் ருசி துரோகம். இலைகள் வன்மம். அதன் வண்ணம் கரும் ஊதா. தண்டு போதம். வேர்கள் விருப்பம். ஒவ்வொரு விடியலிலும் ஒரு கனியாகாத இருள் பூ மௌனத்துடன் உதிர்கிறது அதனிடமிருந்து. அது ஒரு மெல்லிய நிழலை வெளியெங்கும் படர விடுகிறது. உதிர்வதற்கு வினாடிகளின் முன்பு தனிமையெனும் மகரந்தத்தை அடிவயிற்றில் ஏந்திய மொனார்க்குகள் தூவிச்செல்கிறது வெளியெங்கும் படர்ந்த நிழலில். கிரணங்களின் முதல் ஸ்பரிசத்தில் புணர்வுச்சம் பெற்று கருக்கொள்கிறது பால்வீதி.
*****************************
திருமொழி வாய்வழி தருமொரு மறுப்பொலி மறுவிழி சிமிட்டொளி குறுகிய கனைப்பொலி பொழிவிலி விழிவழி பிழிந்தது நீர்த்துளி இரங்கினள் துவண்டனள் மிரண்டனள் மருண்டனள் மகிழ்ந்தனன் முகிழ்ந்தனன் மழைத்தது மழைத்தது மழைத்தது.
*****************************
தனிமை புலம்பல் வெறுமை அரற்றல் சகலம் துறத்தல் அகிலம் மறத்தல் பறித்தல் மரித்தல் பிறத்தல் அழித்தல் கழித்தல் களித்தல் சுகித்தல் விளம்பல் விழித்தல் பார்த்தல் கேட்டல் மறைத்தல் சேர்த்தல் தூர்த்தல் வீழ்த்தல் விரிநீர் நுழைதல் அமிழ்துள் நோக்கல் . அழுதல் தொழுதல் மொழிதல் விலகல் .

********************************

அடங்குடா.

*********************************