ஒரு விசயத்தை (matter) அல்லது பிரச்சனைப்பாடை (fact) பேசுபொருளாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றி ஏதாவது ஒரு வகைமையில் பதிவது என்பதை சொல்முறையின் (presentation) ஒரு அலகாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு நபர் தனக்குண்டான அனுபவத்தை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது மொழியின் துணை தேவைப்படுகிறது. அவர் தனது மொழியறிவின் மூலம் தனது அனுபவத்தை ஒரு எழுத்து வடிவமாக கட்டமைக்கிறார்.
எனவே எந்த ஒரு எழுத்து வடிவுக்கும் ஒரு கட்டமைப்பு (structure) இருக்கிறது. அவ்வெழுத்து வகைமையை எப்படி மாற்றியும் முன்னுக்குப்பின் முரணாக (nonlenior) நேரடியாகவும் (lenior) எழுதினாலும் அது ஏதாவது ஒரு கட்டமைப்புக்குள் அடங்கி விடும் என்பது அடிப்படை. சொல்முறையில் கட்டமைப்பு என்பது தவிர்க்கமுடியாத அலகு.
அதே சமயத்தில் எழுத முனைபவர்களின் அனுபவம், மொழியறிவு, எழுதும்போதைய மனநிலை, எழுது பொருள்கள் (tools), அனுபவத்தை மீள்ஞாபகப் படுத்தும் திறன், அனுபவத்தை எழுதுவதற்குத் தேவையான உந்தம் (urge) போன்ற பல்வேறுபட்ட காரணிகள் கட்டமைப்பின் மீது ஆதிக்கம் செய்கிறது. இதன் மூலம் ஒரு கட்டமைப்பு என்பது நுணுக்கமாக நபருக்கு நபர் வேறுபடும். தொடர்ந்து வாசிப்பனுபவம் பெறுவோர் 'இது இவரின் எழுத்து' என படிக்கும்போதே கண்டைவது இந்த வேறுவைகைப்பட்ட கட்டமைப்பால்தான்.
கட்டமைப்பு என்பது ஒரு வெளிச்சுற்றாகவும் துலக்கமாகவும் (transperant) ஒரே நேரத்தில் இயங்குகிறது. கட்டமைப்பு என்பது ஒரு இயங்குநிலை. அது எழுதுகிற ஒவ்வொரு முறையும் மற்றும் படிக்கிற ஒவ்வொரு முறையும் தன்னளவில் மாறுபட்டுக் கொண்டிருக்கும். அனைத்து விசயங்களையும் கட்டமைப்புக்குள் கொண்டுவந்து விடமுடியும். இது ஒரு மொழியை பேசவும் எழுதவும் தெரியும் ஒரு மனிதனுக்கு இயற்கை (default). ஆனால் ஒரு விசயத்தை கட்டமைப்புக்குள் இருந்து வெளியேற்றுவது என்பதில் இருக்கிறது ஒரு மனிதனுடைய பாண்டித்தனம்.
கட்டமைப்பிலிருந்து ஒரு விசயத்தை வெளியேற்றுவதற்கான உபகரணங்களாக சட்டம் (frame) மற்றும் பார்வைக் கோணம் (point of view ) செயல்படுகிறது. இங்கு கட்டமைப்பு என்பது தருவிக்கப்பட்ட அல்லது செயலாக்கப்பட்ட இயற்கை. சட்டம் மற்றும் பார்வைக்கோணம் என்பது நுட்ப உபகரணங்கள் (tools). கட்டமைப்பு, சட்டம் மற்றும் பார்வைக்கோணம் ஆகியவைகள் வல்லூருப்பார்வையில் ஒரேமாதிரி தோன்றினாலும் ஒவ்வொன்றும் தன்னளவில் வெவ்வேறானவை.
உதாரணத்திற்கு வருகிறேன்:
(1) நகரத்தில் அன்று மழை பெய்யாமல் இருந்திருக்கலாம். மிதிவண்டியின் பின்புறத்தில் கூடை நிறைய மல்லிகைப்பூக்களை கொண்டுசென்றவன் என்னைக்கடக்காமல் இருந்திருக்கலாம். அப்பூவின் வாசம் எனக்கு உடல் சூட்டை ஏற்படுத்தியது.
(2) மழைப்பெயதலில் நனைந்துவிட்டேன். அதே நேரத்தில் பூக்காரன் மிதிவண்டியில் கடக்கும்போது கடந்த மல்லிகை வாசம் எனக்கு இச்சையை தூண்டியது.
(3) மாலை ஏழு மணிக்கு மதுரை ஒப்பன்னகார வீதி மாரியம்மன் கோவிலிலிருந்து வடக்கில் நாலாவது கட்டிடம் தாண்டி ராசப்பனாயக்கர் பழகமிசன் மண்டியை கடையை கடந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்தபோது பெய்யத்தொடங்கிய மழையில் நனைந்த நேரத்தில் எதிரில் மிதிவண்டி பூக்காரன் கடந்தபோது ஏற்பட்ட பூவாசத்தில் எனக்கு உடம்புக்குள் எதோ செய்தது.
(4) மாலை. மாரியம்மன் கோவில் சுவரில் முளைத்த ஒரு சிறு ஆலம். மிளிரும் இளம்பச்சை இலை. சட்டென்ற தூறல். நனைதலின் சுகம். காற்றில் மல்லிகை வாசம். தொப்புளில் குண்டூசியை யாரோ நுழைத்தது போல உடல் முறுக்கியது.
(5) மழையில் நனையும்போது மல்லிகைவாசம் வந்தது. கட்டுக்கடங்காத காமம்.
என இவ்வகையில் ஒரு விசயத்தை பலபேர்கள் பலவாறாக எழுதக்கூடும். இந்த ஐந்து உதாரணமும் காமம் என்கிற ஒன்றைப் பற்றிய வர்ணனை. எனவே இங்கு காமம் என்பது சட்டமாக (frame) முன்னிறுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான அனுபவக்கோணம் (point of view ). இதன் துலக்கமாக இருப்பது மொழிவகைமையால் ஏற்படும் கட்டமைப்பு (structure).
கட்டமைப்பு, சட்டம், பார்வைக்கோணம் ஆகிய மூன்றையும் எழுதுபவரின் அனுபவமும் மொழிவளமும் ஆளுமைசெய்யும். ஒரு விசயத்தையோ அல்லது பிரச்சனைப்பாடையோ மொழி அடிப்படையிலான கட்டமைப்பில் ஒரு சட்டமாக மனதளவில் உருவாக்குவதும், அனுபவரீதியிலான பார்வைக்கோணத்தில் அந்த சட்டத்தை விவரிப்பதிலும் ஏற்படும் அமைப்பை எழுதுபவரின் அனுபவ மனநிலையே தீர்மானிக்கிறது. அந்த உருவாக்கப்பட்ட பிரதி பிறகு எழுதுபவனின் அனுபவத்தை இழந்து விடுகிறது. படிப்பவர்கள் அந்த பிரதியை தனதான அனுபவமாக மட்டுமே ஒரு பிரதியை வாசிக்க முடியும். அப்படி வாசிக்கும் போது தனக்கான உகந்த அனுபவ நிலையை உணர முடியவில்லை என்றால் அந்த அனுபவத்தை தேடிய பயணத்தை படிப்பவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதை எழுதுபவரின் அனுபவத்தில் தேடினால் அநேக சமயங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.
*******************