05 April, 2011

எப்போதும் குறையுள்ள வெளிச்சம்.

அவன்

குடிக்கிறான்


கூர்மையடைகிறது


அறிவு


அவள்


குடிக்கிறாள்


இளகுகிறது.


உடல்.


மேலும்


உடலுக்கு


எதிரானது


அறிவு


கொடுபவரின் நேர்மை அறிய


பெறுபவரின் ஒற்றை துரோகம்


போதும்


அவன்


திமிருடன்


வளர்ந்த


பெருமரம்


அவள்


அக்கிளைகளில்


பூக்கும்


தண்மீன்கள்



மேலும்


பறிப்பவர் நேர்மை அறிய


உண்பவர் முகபாவம் போதும்


அவன்


அவளை


சாட்டையால்


அடிக்கிறான்


அவள்


அவனுக்கு


வலியை


கொடுக்கிறாள்


மேலும்


திகைப்படைபவர் வாழ்விழக்கின்றனர்


பார்வையாளர்கள் காயடிக்கப்படுகின்றனர்


அவன்


அவள்


நெடுஞ்சாலை


முடிவுறும்


வனத்தில்


பசிய


இலைகளுக்கிடையே


இளம்பரிதி


மரத்தினை


காண்கிறார்கள்


வெளியெங்கும்


வீசுகிறது


மாம்சம்


பச்சை


வண்ணமாய்



அவன்


அவள்


மாயகணத்தில்


பொய்யாகி


மீள்கிறார்கள்


தெருசாலைகளில்


ஊளையிடும்


நாயின்


ஒலிவடிவில்


மெழுகு தீர்ந்த


திரி கருகும்


ஓசையில்


பிறக்கிறது ...





.............. மீசைக்காரன் நீட்ஷே நினைவில்.

04 April, 2011

சொற்களின் நதி..

நதி ... அமைதியற்று தவிக்கிறது. அதன் தேவைகளை தீர்மானித்த பின்னே தனது பாதைகளை தீர்மானிக்கிறது. பாதைகளின் திசையறிவு குரூரமானது அது நினைவுகளை நொதிக்கசெய்து விடுகிறது. போதம். நதியின் பாதைகள் பிளவுபடுகிறது. நதி ... பிளவுபட்ட பாதைகண்டு குதூகலிக்கிறது தனதான ஆயிரமாயியிரம் நீண்ட விரல்கால் திசைகளை உண்கிறது. தீர்ந்து போன திசைவெளியில் தானே திசையென தன்னையே தொடர்கிறது. மோகம். அதன் ஒலிவாங்கும் சவ்வில் சிறு வெடிப்பு. நிதானம் மாற்றுகிறது. நதி... பாதையற்ற சமவெளியில் பரவுகிறது. காவு கொள்கிறது வெளியலையும் உயிர்மரங்களை. நீரின்றியமையாத அவைகள் நீரை சபிக்கின்றன. அதன் வேர்களை கற்களாய் உருட்டி நதியின் பாதைகளில் உருட்டுகின்றன நிரம்பிபரவுகிறது கூலாங்கற்கள் .. நதி .. ஒவ்வொரு கல்லின் உருலளிலும் சமனிழக்கிறது தொடர்ந்து.. நதி ஆனந்த கூத்தாடுகிறது.



......................................................................... நண்பன் வசுவுக்கு.



28 March, 2011

சாயலற்றுபோகலாம்...


ஒரு வேளை நாளை எனது பயணத்தை தொடங்கிவிடலாம். கிழக்கின் தூர நிலத்தின் கதகதப்பான அமைதி தேடி. காலைபனி கசியும் மிருதுவான நிலத்தில் சில கிழங்குகள் எனக்கு கிடைக்கலாம். ஒரு பகலின் ஏகாந்தம் புல்முனையில் வெளியேறும் காற்றின் ஒலியால் கிடைக்கலாம். வெயிலின் மஞ்சளில் எனது முகம் உருகி சில சொட்டுகள் ஆவியாகலாம். களைப்பற்ற மாலையில் கரும்பாறை சூட்டில் என் நிர்வாணம் குளிர் காயலாம்.


அல்லது


ஒரு இரவு என்னில் நுழையலாம். ஒற்றைக்கரு தானியமாய் சிறகு நீண்ட இளமஞ்சள் கழுத்து நிற பறவையின் அலகில் கவ்வப்பட்டு அதன் இருள்வயிர் சேரலாம். அதன் உதிரம் கலந்து பழுப்பு கழிவாய் அரண்மனை சுவரில் விதைபடலாம். பெருமரமாய் நீண்டு அரண்மனைகதவுகளை பிளக்கலாம். வெட்டுண்டு மரதுண்டுகளாய் மிதக்கலாம் தலைகீழாய் ஓடும் நதியொன்றில்.


அல்லது


ஒரு வேளை நாளை நானொரு பதில் சொல்ல நேரலாம். அதன் விளைவால் எனது நேரங்கள் பறிக்கப்பட்டு எனதுடல் ஒரு பெண்டுலமாய் நடமாட தொடங்கலாம். பனிமூச்செரியும் ஓநாயின் நாவுகள் எனது பாதங்களை சுவைக்கலாம். அதன் சுவை புணரப்பட்ட பிணத்திற்கு உயிர் ஊட்டலாம்.


அன்பே


அதற்குமுன் உனது சாயலை என்னிடமிருந்து எடுத்துவிடு. அது என்னை சாஸ்வதமாகுகிறது. சுயசாயலற்ற உயிரின் காலமாய் வெடிக்கசெய்கிறது. வெளியெங்கும் நிரம்பும் ஒளிதுகலாக்குகிறது. என்னையும் மற்றமையையும் ஒன்றாக்குகிறது. தாங்கவொண்ணா குதூகலத்தின் நீர்துளியாகின்றது. ஆம் அன்பே ... உன் சாயல் ...என்னை மகாவெடிப்பின் காரணியாக்குகிறது..


அன்பே


இன்று மாலை போதுமெனக்கு. ஒரு வேளை நாளை நான்.....


**********************