07 August, 2011

வெம்பும் பாழ்


நிரூபிக்க ஏலாமல் போகிறபோது என்னை 
அன்பரே உங்கள் முன் தாழ் பணிகிறேன் 
நீங்கள் உங்கள் துர்காரணிகளை நம்பினீர் 
செவிகளில் களிமண் பூச்சொன்று பூதகாலம் 
அறைந்துவிடதாக நிலையாக கூறினீர் 
எனக்குள் வீசுகிறதோ வண்டலின் வாசனை 
சொல்லுதற்குக் கூசும் சொற்களென 
மறுத்தளித்தீர். ஆயினும் உயிரைத்தின்னும் 
உடல் நானென்பதை அடிக்குறிப்பு செய்து 
வைக்கிறேன் உங்கள் முன் அதனுள் 
கசிகிறது நானான வன்குறிப்புகள்: 
வன்மம் குடித்து உணர்வாகிடு முடல்
நான் கற்றாழை மணக்கும் பெண்சதை 
நுகரும் விரிநாசி யுடல் நான் 
திகைப்படையும் மரணத்தின் தொழு 
பய நிழ லுடல் நான் சுகிக்க முகங் 
கோணாது உம்மை காட்டிக்கொடுக்கும் 
காட்டேறியின் மூலபொரு ளுடல் நான் 
வெளி காணும் கனவில் நுழையமுடியாத 
கனவில் முரண்பட்டு நீரில் குதிக்கும் 
பச்சைத் திரு தவளை உடல் நான். புலனற்ற 
பார்வையில் புறம் தள்ளினீர் நிகழ் வெப்பம் 
உள்நுழைய தொலைகிறேன் கேளீர் 


நிரூபிக்கபடாதவனின் 
வெதும்பிய சுக்கிலமென்பது
அரூப சர்ப்பமூறும் 
பாழ் பிரதி .

***************************

05 August, 2011

தனிமம்


சிற்றிதழ் தொடங்குகிறேன். அக்டோபர் நான்காம் வாரம் வெளியிட எண்ணம். விரும்புகிறவர்கள் கட்டுரைகள் மட்டும் அனுப்பலாம். விளம்பரம் கிடையாது. சந்தா கிடையாது. வருடத்திற்கு மூன்று இதழ்கள். 'கிரந்த'  போன்று தரமான புத்தகமாக வெளியிட எண்ணம். பேராசைதான். என்ன செய்வது. உயர்வுள்ளல்!  ஆதரவு கோருகிறேன். நன்றி. 

**************

கடந்த மூன்று வாரங்களாக கழுத்து - முதுகெலும்பில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலி உணர்வை சமாளித்து வருகிறேன். உடம்பில் கூடவே இருக்கும் வலி என்பது வினோதமான ஒரு ஆன்மீக பயணமாக இருக்கிறது. சில நேரங்களில் அது ஒருவித போதை நிலையை அளிக்கிறது.மேலும் வாழ்நாளில் இல்லாத அளவிற்கு தூக்கத்தில் கனவுகள். நேற்று மதியம் தூக்கத்தில்  ஒரு முழு திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். பழங்குடி கிராமம் ஒன்றில் பேசும் காட்டெருதுகள் நுழைந்து துவசம் செய்கிறது. அதன் தலைவனை மர ஈட்டியால் குத்தி கொல்கிறான் கிராமத்தின் தலைவன். என்னாமா எடுத்திருக்காங்க படத்த ! மருத்துவர்கள் என்னை நான்கு விசயங்களுக்கு தடை செய்திருக்கிறார்கள். 1. இரு சக்கர வாகனம் ஓட்ட கூடாது. 2. பயணம் செய்ய கூடாது 3. கணினி பக்கம் போகக்கூடாது 4. படிக்கக்கூடாது. என்ன வாழ்க்க சார் இது ?!


இன்றுடன் 19 நாட்கள் ஆகிவிட்டது. கூடவே இருந்த ஒரு இனிய காவலாளி இன்று பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். மேட்டரை தட்டி விட்டேன் ! 

**********


01 July, 2011

கருப்பு நகைச்சுவை



கூலிக்கு வேலை செய்ய ஆட்கள் அருகிப்போனார்கள், முக்கியமாக விவசாயக்கூலிகள் என்று ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார். மனிதர்கள் மலிந்த இந்தியத்திருநாட்டில் அனைவரும் முதலாளிகள் ஆகிவிடிருக்கக்கூடும் என்று சொல்லி சிரித்தேன். நான் மிக சிறந்த கருப்பு நகைச்சுவை கூறியதாக நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அவருக்கு எங்கிருந்து வந்ததோ கோபம்.. சகட்டுமேனிக்கு மனிதர்களின் பரம்பரையை சொற்களால் குதறத் தொடங்கிவிட்டார். பேச்சு திசைதிரும்பியதும் அவர் கேட்டது என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. "சாலையோரக்கடையிலிருந்து மெகா மார்ட் வரையிலும் தெருத்தெருவாய் பரவிக்கிடக்குது ஒவ்வொரு சுவத்துக்கும் இடையில ரெண்டு செல் போன் கட திறக்குராய்ங்க.. எல்லாத்திலையும் ஏவாரம் நடந்துகிட்டுதான் இருக்கு எங்கிட்டிருந்து இவங்களுக்கு ரூவா கெடைக்கிதுன்னு தெரியலை.." இவ்விதமான பொருளாதார பிரச்னையை புரிந்து கொள்ள குறைந்தது அமர்தியா சென் வரைக்கும் படிக்க வேண்டும் போல.. ஆனால் என் பார்வையில் வேறொன்றை காண்கிறேன்.. தமிழகத்தில் மிகப்பரவலாக பீகார், ஒரிசா போன்ற வடகிழக்கு மாகாண கூலிகள் மிகப்பெருமளவு வரவழைக்கப் பட்டு கொண்டிருக்கிறார்கள். சிறிது சிறிதாக அவர்களது குடும்பங்கள் இங்கு குடியேறத் தொடங்கியுள்ளன. சில குழந்தைகள் தமிழக பள்ளிகளும் சேர்க்கப் பட்டிருக்கலாம். பெரும்பான்மையான மில்களில் வேலைக்கு வரும் இவர்களுக்கு இங்கு கிடைக்கும் உத்தரவாதமான சம்பளம், உணவு இருப்பிடம் மற்ற மாநிங்களில் கிடைப்பதில்லை. தமிழக சிறு முதலாளிகளும் காசை பெற்று குவாட்டர் அடித்துவிட்டு கம்பி நீட்டும் உள்ளூர் கூலிகளை விட இவர்களின் வேலைத்திறன்களில் நம்பிக்கை கொள்கின்றனர். இப்போதைக்கு இது பெரிய விசயம் ஏதுமில்லை என்றாலும் வடகிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ் நாடு ஒரு மிகப்பெரிய குழப்ப நிலைக்கு உள்ளாக நேரிடும் என்பதை புரிந்துகொள்ளலாம். நேபால் பூட்டான் வழியாக ஊடுருவிய மனிதர்களின் கையில் இன்று இந்திய ஓட்டுரிமை. அதன் உச்சபட்ச விளைவு மாவோஸ்ட்டுகள். தமிழ் நாட்டில் பயங்கரவாதத்திற்கு வாய்ப்பில்லை.. ஏனென்றால் தமிழ் இளைஞர்களுக்கு குடிக்கவே நேரம் போதவில்லை.. அல்லது குடிப்பதற்காவே கூலிக்கு செல்லுகின்றனர்.. அதே நேரத்தில் வெளியிலிருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு பயங்கர வாதச்செயல்களில் ஈடுபட்டு விட்டு சட்டென்று தப்பி செல்ல இங்கு வழிமுறை கிடையாது.. ஏனென்றால் இங்கு மொழி ஒரு பாதுகாப்பு சுவராக நிற்கிறது. ஆனால் ஒருவிதத்தில் நமக்கு இதே மொழிதான் வில்லங்கத்தைக் கொண்டுவரும் என நினைக்கிறேன். உதாரணமாக, சென்னைக்காரன் திருநெல்வேலி காரனிடம் பேசினாலே புரியாது.. அவனே ஆங்கிலத்தில் பேசினால் மரியாதையுடன் சற்று தள்ளி நிற்பான்.. வேறு பாசை பேசினாலோ பேசாமல் ஒதுங்கி போய்விடுவான்.. இவர்களுக்கு எப்படித்தெரியும் வருகிறவன் நல்லவனா பயங்கரவாதியா என்று. எனவே தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு வாய்ப்பில்லை என்று நான் சொன்னால் அது கருப்பு நகைச்சுவை நண்பர்களே.


***************


ஆனால் இன்று நான் ஒரு பயங்கரவாதியை தமிழ் நாட்டில் இனங்கண்டுகொண்டேன். அவர் பெயர் பாலா. தமிழ் திரைப்பட இயக்குனர். அவர் உபயோகிக்கும் ஆயுதம் சினிமா. கருப்பு நகைச்சுவை என்கிற அடிப்படையில் பார்த்தால் அவன் இவன் ஒருவகையில் மிக நல்ல சினிமாதான். படத்தில் இருப்பதை விட யதார்த்தம் படு கேவலமாக இருக்கிறது!


**************