02 September, 2011

இரண்டு வியாபார அறிமுகங்கள்



தேனும் இளநீரும் குடித்து இனிய உண்ணாநோன்பை முடித்துக்கொண்ட முதியவர்  தனது வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டு ஊர் போய் சேர்ந்திருக்கிறார் இன்று. தொடர்ந்து பல ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் இனி அவர் முதலீடு செய்வார். லாபம் கொழிக்கும் சிறந்த வியாபாரமாக அதை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.  ஹசாரே தலைமையிலான (அப்படித்தான் நினைக்கிறேன்) இயக்கம் ஒரு முதலீடற்ற தொழில்முறையை நமது தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி ஜெயம் அடைந்திருக்கிறது. அவரது தொப்பியை நமது மக்கள் பயன்படுத்தும் விதத்தை பார்க்க எனக்கு நமக்கு மிகவும் தெரிந்த குரங்கு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மரத்தின் மீது மன்னிக்கவும் மேடையின் மீது நின்று கொண்டு அவர் தனது தொப்பியை அசைக்கிறார்.. நமது மக்கள்.. அசைகிறார்கள். ஆனாலும் இவ்வளவு பெரிய மக்கள் ஒருங்கிணைப்பை நாம் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் ஒட்டு மொத்த உளவியலை புரிந்து கொள்ள கடுமையான விவாதங்களை கிளப்பிவிட வேண்டும். ஏற்கனவே பல விவாதங்கள் பல சிந்தனையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது... அதன் அழுத்தமான பதிவாக அவுட் லுக்கில் வந்த சந்தீப் அட்வார்யு வரைந்த இந்த கார்டூனை பார்கிறேன்.


*********************
ஒரு சீன நாட்டு matrimonial  விளம்பரம் பற்றிய செய்தியொன்றை படித்தேன். சீன ஆண்கள் 40000 வரை பணம் கொடுத்தால் வியட்நாமிய பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் உத்திரவாதம்: பெண்ணின் கன்னித்தன்மை, அனைத்து அரசு செலவினங்கள் மற்றும் ஒருவருட உத்திரவாதம். அதென்ன ஒருவருட உத்திரவாதம் என்றால் ஒருவேளை ஒருவருடத்திற்குள் அந்த பெண் ஓடிப்போய்விட்டால் வேறு ஒரு பெண் இலவசமாக  தரப்படும் என்பதுதான் அது. திருமணம் செய்து கொண்டு வரப்படும் பெண்கள்  ஓடிபோயவிடுவது அதிகமாகி உள்ளது என்று சீன அரசு கூறியுள்ளது. உண்மையில் இவர்கள் காணாமல் ஆக்கபடுகிரார்கள். அதாவது அவர்கள் வாங்கிய விலையை விட அதிக அளவுக்கு உள்ளூர் ஆண்களிடம் விற்று விடுகிறார்கள்.
பெண் குழந்தைகைக் கூட விற்கும் நமது நாட்டு மக்களுக்கு இது ஒன்றும் அதிர்வு தரக்கூடிய விசயமில்லைதான்.

அது சரி ஊழலை ஒழிக்க என்னதான் வழி. என்னை பொறுத்த வரையில் அதற்கு ஒரு வழியும் இல்லை. கடைசி மனிதனும் வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வான். ஒழிக்க முடியாது. அறங்களை போதித்து குறைக்க வேண்டுமானால் செய்யலாம்..

 நண்பர்களே நாம் எத்தனை பேர் நமது கணினிகளில் ஒரிஜினல் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் ?

*********************

07 August, 2011

வெம்பும் பாழ்


நிரூபிக்க ஏலாமல் போகிறபோது என்னை 
அன்பரே உங்கள் முன் தாழ் பணிகிறேன் 
நீங்கள் உங்கள் துர்காரணிகளை நம்பினீர் 
செவிகளில் களிமண் பூச்சொன்று பூதகாலம் 
அறைந்துவிடதாக நிலையாக கூறினீர் 
எனக்குள் வீசுகிறதோ வண்டலின் வாசனை 
சொல்லுதற்குக் கூசும் சொற்களென 
மறுத்தளித்தீர். ஆயினும் உயிரைத்தின்னும் 
உடல் நானென்பதை அடிக்குறிப்பு செய்து 
வைக்கிறேன் உங்கள் முன் அதனுள் 
கசிகிறது நானான வன்குறிப்புகள்: 
வன்மம் குடித்து உணர்வாகிடு முடல்
நான் கற்றாழை மணக்கும் பெண்சதை 
நுகரும் விரிநாசி யுடல் நான் 
திகைப்படையும் மரணத்தின் தொழு 
பய நிழ லுடல் நான் சுகிக்க முகங் 
கோணாது உம்மை காட்டிக்கொடுக்கும் 
காட்டேறியின் மூலபொரு ளுடல் நான் 
வெளி காணும் கனவில் நுழையமுடியாத 
கனவில் முரண்பட்டு நீரில் குதிக்கும் 
பச்சைத் திரு தவளை உடல் நான். புலனற்ற 
பார்வையில் புறம் தள்ளினீர் நிகழ் வெப்பம் 
உள்நுழைய தொலைகிறேன் கேளீர் 


நிரூபிக்கபடாதவனின் 
வெதும்பிய சுக்கிலமென்பது
அரூப சர்ப்பமூறும் 
பாழ் பிரதி .

***************************

05 August, 2011

தனிமம்


சிற்றிதழ் தொடங்குகிறேன். அக்டோபர் நான்காம் வாரம் வெளியிட எண்ணம். விரும்புகிறவர்கள் கட்டுரைகள் மட்டும் அனுப்பலாம். விளம்பரம் கிடையாது. சந்தா கிடையாது. வருடத்திற்கு மூன்று இதழ்கள். 'கிரந்த'  போன்று தரமான புத்தகமாக வெளியிட எண்ணம். பேராசைதான். என்ன செய்வது. உயர்வுள்ளல்!  ஆதரவு கோருகிறேன். நன்றி. 

**************

கடந்த மூன்று வாரங்களாக கழுத்து - முதுகெலும்பில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலி உணர்வை சமாளித்து வருகிறேன். உடம்பில் கூடவே இருக்கும் வலி என்பது வினோதமான ஒரு ஆன்மீக பயணமாக இருக்கிறது. சில நேரங்களில் அது ஒருவித போதை நிலையை அளிக்கிறது.மேலும் வாழ்நாளில் இல்லாத அளவிற்கு தூக்கத்தில் கனவுகள். நேற்று மதியம் தூக்கத்தில்  ஒரு முழு திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். பழங்குடி கிராமம் ஒன்றில் பேசும் காட்டெருதுகள் நுழைந்து துவசம் செய்கிறது. அதன் தலைவனை மர ஈட்டியால் குத்தி கொல்கிறான் கிராமத்தின் தலைவன். என்னாமா எடுத்திருக்காங்க படத்த ! மருத்துவர்கள் என்னை நான்கு விசயங்களுக்கு தடை செய்திருக்கிறார்கள். 1. இரு சக்கர வாகனம் ஓட்ட கூடாது. 2. பயணம் செய்ய கூடாது 3. கணினி பக்கம் போகக்கூடாது 4. படிக்கக்கூடாது. என்ன வாழ்க்க சார் இது ?!


இன்றுடன் 19 நாட்கள் ஆகிவிட்டது. கூடவே இருந்த ஒரு இனிய காவலாளி இன்று பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். மேட்டரை தட்டி விட்டேன் ! 

**********