31 October, 2009

எலிகாலம்

1

அவனுடையது ஒழுங்கான வீடு

அவன் ஒழுங்கானவன் அல்ல

தன் சகோதரர்களின் நண்பர்களின்

தெருவாசிகளுடைய குழந்தைகளின்

பெற்றோரின் மற்றும் நகரத்தின்

மற்றவர்களின் பழக்கத்தில் இல்லாததான

பாதாள சாக்கடையிலிருந்து தினமும்

பின்னிரவில் வீடு நுழையும் ஒரு

எலியுடன் பழகத்தொடங்கினான் . பளுத்த

எலி வால் நீண்டது

கரும் இருளின் சொட்டுக்களாய்

இரண்டு கண்கள் இரண்டு

வெளிச்ச புள்ளிகளை பிரதியெடுக்க

அலைபாயும். தேவகணத்தில் இருவரும் நெருக்கமானார்கள்

நகரின் அனைத்து வீடுகளுக்கும்

பாதாள சாக்கடையில் ஒரு வாசலிருப்பதை

அவனுக்கு பகிங்கிரப்படுத்தியது எலி

பின்பாக அவ்வெலி புத்தகங்களை

மட்டும் தின்று செழித்த காலத்தில்

அனைத்தையும் அறிந்த அவன்

நகரின் ஒழுக்க சீலன் என அறிவிக்கப்பட்டான்

எச்சில் ஒழுக உறங்கிக்கொண்டிருந்த

எலி வருவதற்கான முன்னான பொழுதில்

அவன் கனவின்கல்லில் பதித்த வாசகத்தை

உறக்கப்படித்தேன்

'புத்தகத்தை தின்பதும் மற்றவர்களின்

அந்தரங்கத்தை அறிந்து கொள்வதும்

ஒழுக்கத்தின் முதல் பாடமென...

2

அவனுடைய குப்பைத்தொட்டியை

தனது வீடாக்கிக்கொள்ள சம்மதங்கேட்ட

எலியை பரிதாபத்துடன் பார்த்து சம்மதிக்கிறான்

எலி தன் துணைஎலியுடன்

நிறைந்த அம்மாவாசையில் பால்காய்ச்சியது

பத்து மாதத்தில் ஒரு அழகான யானையை

ஈன்றது துணைஎலி. யானை போய்வர ஏதுவாய்

சாகடைத்துளையை அகலமாக்கினான்

வேறு வழியின்றி அவன்.

3

எலியுடனான பழக்கத்தில்

அவனுக்கான சிறு வால் முளைத்ததுகண்டு

தன் தாயிடம் பெருமை கொண்டான்

முன்பற்களும் பெரிதடைவதாய் தாய்

கண்டு சொன்னாள்தகப்பனுக்கு கொள்ளை

சந்தோசம். எலிப்பொறி சாதனங்களின்

கடையொன்றை நகரின் நடுவில் திறந்தான்

அரசன் வைத்த முதல் பொறியில்

தன் வாலை இழந்த அவனுக்கு

தாய் மருந்து வைத்து கொன்றுபோட்டாள்.

No comments: