17 November, 2009
மணமும் மழையும்
ஐந்தாறு நாட்கள் பதிவு வேலை செய்யவில்லை. இடையில் பணி நிமித்தமாக தஞ்சாவூர் சென்றிருந்தேன். பிரகதீஸ்வரர் கோவில் (கோவிலா கோயிலா ?) கட்டமைப்புகளை மீண்டும் பார்த்து பரவசம் அடைந்தேன். ஆனாலும் எனக்கு பிடித்த கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம். நெல்லையப்பர் கோவில் உள்ளே சுற்றுப்பிரகாரத்தில் நுழையும்போது மூச்சில் ஒரு வாசனை தெரியும். மல்லிகை, வவ்வால் கழிவு, விபூதி ஆகியவை கலந்த ஒரு அபூர்வ மணம். மிகுந்த மன சிலாகிப்பை அந்த வாசம் எனக்கு கொடுக்கும். அது போல பெரும் மன சிலாகிப்பையும் ஒரு பூதகணத்தையும் தஞ்சாவூர் மியூசியத்தில் பார்த்த ஒரு சிலை எனக்கு அளித்தது. ஆயிரம் வருட பழமை கொண்ட கற்சிலை.! அம்மன் சிலை. அதன் முகத்தில் ஒரு புன்னகை. ஆயிரம் வருட புன்னகை. அற்புதமாக உறைந்திருந்தது. நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன் சட்டென்று தோன்றிய பயத்தில் திரும்ப அதை பார்க்கவேயில்லை. இனிவரும் நாட்களில் இது பற்றி ஏதாவது கவிதை எழுதினால் கண்டுகொள்ளாதீர்கள். அப்புறம் மழை.! தஞ்சாவூரில் நண்பருடன் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்தேன். எழும்போதே நல்ல மழை. கருப்பில் குவாட்டர் நூறுரூபாய்க்கு வாங்கி குடிக்கும் போது காலை எட்டரை! துண்டை மட்டும் எடுத்துகொண்டு வெளியில் கிளம்பி விட்டோம். ரயில்நிலையத்திலிருந்து பெரிய கோவில் வரை நனைத்து கொண்டே நடந்தோம்! நாங்கள் நனைவதை வேடிக்கை பார்த்தவர்கள் கண்ணில் தெரிந்த பொறாமையை பார்க்க வேண்டுமே! அப்படியே போய் ஆற்றில் விழுந்ததுதான் ஒரு ஒன்றரை மணி நேரம் ஊறல். பின்பு கிடைத்த உணவுதான் அற்புதம். மலர் சுயவுதவி குழு நத்தும் சின்ன உணவகம். ரயில்நிலையத்தின் எதிரிலேயே இருக்கிறது. அளவில்லா சாப்பாடு முப்பது ரூபாய். மீன் குழம்பு இருபது ரூபாய். சாப்பிட்டவுடன் எனக்கு தண்ணீர் குடிக்க வயிற்றில் இடமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment