ஒரு போதும் எழுதுவதில்லை
தெரிந்ததை பற்றி எழுதாதவை போலவே
ஆயிரங்களின் வருடங்களில்
சிதைவுகளால் உருவாக்கப்பட்ட
நமதான சமூகத்தை யாருக்கு சொல்ல
ஏனென்றால் நான் ஒரு முழுச்சோம்பேறி
அற்புதமான சுகவாசி. கவலை கொண்டு
என் மணித்துளிகளை கொல்ல
உரிமையில்லை எனக்கு. இந்த
சமூகம் அடைந்து விட்ட மலட்டுத்தன்மை
என்னை என்ன செய்துவிடும். இதை
நான் யாரிடம் சொல்ல வேண்டும்
அல்லது யாரிடம் சொல்லாமல் இருக்க
வேண்டும். மலட்டுத்தன்மையை யார் உணர
முடியும் எல்லா ஆண்களிடமும் விந்து
பெருகும் போதும் எல்லா பெண்களும்
அண்டத்தை பொழியும்
போதும். மொழிகளும் நிறங்களும்
மனிதர்களை தீர்மானிக்கிற
ஆதிப்பழக்கத்தின் மீதான எனது
உமிழ்வு என்ன செய்து விட
போகிறது. நான் பாசாங்கு செய்கிறேன்
சந்தோசமான மனிதனாக
சமூகத்தின் வரையறைக்குள் என்னை
பொருத்திககொண்டதற்காக
பெருமைபடுபவனாக. ஆணென
சொல்லிக்கொள்பவனாக. என்
பாசாங்கு எவ்வளவு தூய்மையானது
வன்முறையை அது வெறுக்கிறது ஒரு
நடனப்பெண்ணை வெறுக்குமளவிற்கு
அடிநாதமாய் அதனுள் இருக்கும்
குரூரதன்மையை
எளிதாய் உதறி தள்ளுகிறது. ஒரு நடன
மாது
அவள் புகைப்பதையும் மதுவுண்பதையும்
நான் எவ்வாறு வெறுக்க முடியும். எனது
விழிகள் அவற்றை எவ்வளவு தாகத்துடன்
உறிஞ்சி விழுங்குகிறது பல்வழி
நீர்கசிய. எனது விருப்ப மஜ்ஜைகள் உற்பத்தி
செய்கிற குருதி கேளிக்கைகளுக்கானது
எல்லோரிடத்திலும் ஒரே நிறத்திலிருக்கும்
அக்குருதியை அரசியலுக்கு குடிக்க தருவது
எவ்விதத்தில் பொருத்தமானது. எனது
குருதி எனக்குமட்டுமேயானது
முடிவு
ஆரம்பம்
அல்லது இவையிரண்டுமேயான
உங்கள் சுயத்தில் அதன் ஒரு துளியை
உருளவிடுகிறேன். அது நிற்குமிடத்தில்
இவ்வுலகம் நின்று போக கடவது
சுகவாசி சொன்ன சொல்
பலிக்கும்.
******* உரையாடல் - கவிதை போட்டிக்காக.
1 comment:
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Post a Comment