மரணத்தை பற்றி பேசிய பின் நேற்று மீண்டும் ஒரு உடல் பார்த்தேன். காலம் விரும்பியோ விரும்பாமலோ என்னை ஒரு வெட்டியானாக்கி இருக்கிறது. கடந்த மாதத்தில் மூன்று உடல்கள். நேற்று பார்த்ததுதான் கொஞ்சம் முழுசாக இருந்தது. தலையும் உடலும் தனித்தனியாக. இன்னொன்று சிதைந்த சிறுபெண். பதினேழு வயது. அந்த கிராமத்தில் அழகான பெண் என்று சொன்னார்கள். அவளுடன்இருந்தது அவள் தாய். அவளுடன் இறந்ததும் அவள் தாய். தாயும் மகளும் வாழ்க்கை பிடிக்காமல் ரயிலுக்கு முன் பாய்ந்து விட்டார்கள். தாய் அறைந்துபோனாள். சிறுபெண் உடல் துண்டுகளுக்கும் தண்டவாள கற்களுக்கும் வித்யாசம் தெரியவில்லை. அப்புறம் இன்னொரு நாளில் ஒரு ஆண் கொத்துகறி கிடைத்தது. அநாதியாய். ரயில்வே நிர்வாகம் அடையாளம் தெரியாத உடல்களுக்கு புதைக்கும் கூலியாக எண்ணூறு ரூபாயும் காவல் நிர்வாகம் நானூறு ரூபாயும் கொடுக்கிறது. ராஜா என்கிற அழகான இளைஞன் ஒற்றை ஆளாய் போஸ்ட் மாடம் செய்த உடலை சைக்கிளில் வைத்து இடுகாட்டுக்கு அழுத்துகிறான். நானும் சில வேளைகளில் மண் அள்ளி போடுகிறேன் யாரென்று தெரியாத முகங்களில். புண்ணியங்களின் மேல் நம்பிக்கையில்லை. ஆனாலும் இது புண்ணியம் என்று உடனிருப்புவர்கள் சொல்லும் போது மனசு நிறைகிறது. ரயிலுக்கு முன் பாய தைரியமளிக்கும் வாழ்க்கைக்குள் பாய சமுதாய அமைப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இது பற்றி மீண்டும் எழுதுவேன்.
No comments:
Post a Comment