என்னை பொறுத்தவரையில் ஒரியேன்ட்டலிசம் என்பதன் ஆணிவேர் காலனியாக்கத்திலிருந்து தொடங்குறது. ஒரு நிலப்பரப்பு அதன் மொத்த வளங்களுடன் சேர்த்து அதன் பூர்வ குடிமக்களையும் வேறொரு நிலப்பகுதியின் அரசியல் குழு பல்வேறு வழிமுறைகளின் மூலம் அதிகாரம் செலுத்துவது என்பதை காலனி படுத்துவது என்று நாம் அறிவோம். அதற்கான உலகின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா. இவ்வாறாக பல்வேறு காலனி நாடுகள் அரசியல் ரீதியாக அடிமைப்பட்டு அதன் பூர்வ மக்களின் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்களின் மூலமாக சுய அரசியல் ஆட்சி அமைப்புகளை உருவாகிய பின்பான காலத்தினை நாம் பின் காலனீய சூழல் எனலாம். காலனியம் மற்றும் பின்னைய காலனியம் ஆகியவைகள் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் ஓரியென்டலிசம் அந்த நாணயத்தின் மறுபக்கம் எனக்கொள்ளலாம். இந்த நிகழ்வுப்போக்கில் பின்னைய காலனி நாடுகளின் மக்களும் அவர்களின் கலாசார அடையாளங்களும்தான் பலியாடுகள். உதாரணமாக அகதியாக்கம் என்பது இரு நிலைகளில் உணரலாம், ஒன்று சொந்த மண்ணை விட்டு வெளி நிலப்பரப்பில் அகதியாக்கப்படுவது, இரண்டு சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படுவது. ( இதில் மூன்றாம் வகை ஒன்று உண்டு - ஒரு மனிதன் தனக்குத்தானே அகதி ஆகிப்போவது - இதை அந்நியமாதல் என்கிறோம். அந்நியமாதல் மிகப்பெரிய தனி கதை). ஒரு நிலப்பரப்பும் அதன் மக்களும் சொத்துக்களும் அரசியல் ரீதியாக அகதிகள் ஆக்கப்படுவது என்பது காலனிய நிலைமை. ஒரு மனிதன் உலகின் ஆகச்சிறந்த மோசமான நிலையை அவன் அகதியாக்கப்ப்படும்போது வந்தடைகிறான். அந்த வகையான மோசமான சூழலை ஒரு நாடு காலனிச்சூழலில் வந்தடைகிறது. அத்தகைய சூழலில் அந்நாடு தாய்மைநாட்டின் (இந்தியாவுக்கு பிரிட்டன் தாய்மைநாடு - சுதந்திரத்துக்கு முன் ) கலாச்சாரம் மற்றும் அரசியல் விவகாரங்களை திணிக்கப்படபட்டும் தனதான சுய அரசியல் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்பட்டும் சிதைவுக்குள்ளாகிறது. இந்த இரண்டு வகையான செயல்பாடுகள் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த படுகிறது. புதிதாக திருமணமான பதினைந்து வயதுப்பெண்ணின் புகுந்த வீட்டு சூழலில் ஏற்படும் மனசிதைவுகளுக்கு நிகராக அத்தகைய ஒரு நாட்டின் மொத்த இயங்கியலும் ஒரு குழப்பமான சூழலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். இச்சூழலில் ஆராய்கிறேன் என்று பெருமைகொள்ளும் பேர்வழிகள் தாய்மை நாட்டிலிருந்து புறப்பட்டு காலனி நாடுகளுக்குள் நுழைந்து காலனி நாடுகளின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளின் அமைப்பை அவதானித்து பதிவு செய்கிறார்கள். இந்த புள்ளிதான் ஓரியென்டலிசம் மற்றும் பின்னைய காலனிய பிரசச்சனைப்பாடுகளின் ஆரம்பம். இந்த கட்டுரைக்காக இவ்வகையான ஆராய்ச்சியாளர்களை குசும்பினிகள் என்று வைத்துக்கொள்ளலாம். இனி இக்குசும்பினிகள் எவ்வாறு தனது வேலைகளை செய்தார்கள் என்று சுருக்கமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
*****
தொடரும்.
2 comments:
ஓரியென்டலிசம் அருமையான பதிவு. தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.
//" ( இதில் மூன்றாம் வகை ஒன்று உண்டு - ஒரு மனிதன் தனக்குத்தானே அகதி ஆகிப்போவது - இதை அந்நியமாதல் என்கிறோம். அந்நியமாதல் மிகப்பெரிய தனி கதை)"//
உண்மை. இதைப் பட்டிரியும் நிறைய எழுதலாம்...சிந்திக்கலாம்.
Post a Comment