காமா..
நிதானம் இழக்கும் முன் ஒரு
புன்னகையை யாசிக்கும் தோள்நிமிர்
தகப்பன் நான். ஒருபோதும் அடங்காத குழழால்
காற்றை கலங்கடிக்கும் சிறுமியின்
குரூரம் நீ. கானகத்தீயில் வெந்துகருகும்
மூங்கில்களின் கவுச்சிவாசம் அது.
காமா..
என்பாதமறியா கானகம் நுழைகிறது
என்னுள் பிளவுண்ட கண்கள் வழியாக
நெருக்கிய காற்றை காணவில்லை என
கதறிவீழும் அருவியை உன்மத்தம்
ததும்ப குடித்து தீர்க்கிறேன். நீரின்
திசையில் நீளும் நாணலின் வேரை
பிடுங்க ஏலாத பேரச்சம் ஒன்றின்
இருள்மறைவில் காட்டுப் பூனையின்
கங்குவிழிகளாய் ஒளிர்கிறது அது..
காமா..
ஒற்றைப்புள்ளி நீ
அதன் இருள் நான்
காமா..
யார்கையிலும் கிட்டிவிடும் அந்தர அம்பு அது.
**************
1 comment:
மீண்டும் மீண்டும் படிக்கிறேன் .படிக்கும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உணர்வுகள் .கவிதை தேடி வருகிறது உங்களிடம்
Post a Comment