23 December, 2009

மழையின் டிசம்பரில்..



பைத்தியக்கார மனநிலையிலிருந்தேன். வானம் தூவிக்கொண்டிருந்தது. புது ஊர். இதற்கு முன் சென்றதில்லை திருவாரூருக்கு. பேருந்து நிலையத்திற்கும் புகைவண்டி நிலையத்திற்கும் எத்தனைமுறை நடப்பது? மழையில் நனையும் மனநிலையை குளிர் போக்கிவிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை பகடி செய்தவிதமான திருவாரூர் பெரியகோவிலில் மனம் லயிக்கவில்லை. ஒழுங்காக யோசிக்க முடியவில்லை. மனம் விட்டேத்தியாக சோழநாட்டின் ஒருபகுதியில் திரியும் சம்சாரியெனகற்பனை செய்துகொண்டு கோவிலைவிட்டு வெளியேறி வரும்போது ஒருவர் ஏன் சாயரச்சை பாக்காமல் போறேள் என்றார். பதிலேதும் கூறாமல் சிரித்தவாறு வெளியேறினேன். அவருக்கு இரண்டு காரணங்களால் பதில் சொல்ல ஏலவில்லை. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை மற்றும் சாயரட்ச்சை என்றால் என்னவென்று தெரியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கு தொடங்கி இதே மனநிலை. திருவாரூர் பேருந்துநிலையம் முன்பாக வந்து நின்ற பொழுது விதி என்னைப்பார்த்து சிரித்தது. தைலம்மை திரையரங்கத்தில் வேட்டைக்காரன் போஸ்டர்!

நம்புங்கள் நண்பர்களே ஒரு பைத்தியக்கார மனநிலையை சரி செய்ய அந்தப்படம் பத்து நிமிட நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது!

***************

அடுத்தவூரும் நான் முதன்முதலில் சென்றதுதான்: நாகப்பட்டினம். இந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணி பதினாலு நிமிடம். நாகூர் பத்தொன்பது நிமிடம். காரைக்கால் முப்பது நிமிடம். திருநள்ளாறு நாற்பத்துமூன்று நிமிடம். (ஆம்னி வேனில்). சுவாரஸ்யம் நாகப்பட்டினத்துக்கும் நாகூருக்கும் நடுவிலிருக்கும் மாநில எல்லை சோதனைச்சாவடி அருகில் நடந்தேறியது! சோதனைச்சாவடி தாண்டியதும் நான்கு புதுச்சேரி அரசு மதுக்கடைகள். பெரிது பெரிதாக... அடியேன் கண்களுக்கு பட்டது சற்று தூரம் தள்ளி தனித்து கைவிடப்பட்ட நிலையில் இயங்கி கொண்டிருந்த கள்ளுக்கடை! நடந்த சுவாரஸ்யங்கள் நண்பர்கள் யூகிக்கக்கூடியதுதான்!

******

சற்றும் எதிர்பாராத சமயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. "சார் எம்பேரு ஆர். பி. ராஜநாயஹம்.. உங்க பிளாக்ல என்னப்பத்தி எழுதியிருக்கிங்க.. எப்படி சார் கண்டுபிடிச்சிங்க.." என்னால் அவர்தான் பேசுகிறார் என்று நம்பமுடியவில்லை. அவரது மிருதுவான குரலால் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல மனிதர். அவருடனான எனது நட்பு எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் அன்பு.

*******





1 comment:

Vasu said...

பைத்தியக்கார மனநிலையை சரி செய்ய 'வேட்டைக்காரன் ' பத்து நிமிட நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது போல,
பைத்தியக்கார மனநிலையை உருவாக்கவும் பத்து நிமிட நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும்!