இருசக்கர வாகனங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வாசகம் சிலநேரங்களில் பல்வேறு அர்த்த தளத்தில் இயக்கம் கொள்ளும். இங்கு நான் தமிழக ஊடகங்களின் மூலம் நுகர்வுமக்களுக்காக ஒலி/ ஒளி பரப்பப்படும் விளம்பரங்களின் பின் இருக்கும் ஏமாற்று உத்தியை எவ்வாறு உள்வாங்கி கொள்கிறேன் என்கிறவிதமாய் ஒரு பதிவை முயற்சிக்கிறேன். எனக்கு தோன்றும் எண்ணங்களை சொல்வதால் என்னைப் பற்றிய கேவலமான ஒரு முடிவுக்கு நீங்கள் வரக்கூடும். மீறி பதிகிறேன் என்றால் இது எனக்கு மட்டுமே ஏற்பட்டதா அல்லது என்னைப்போலவே பலருமா என்று தெரிந்துகொள்ளவே.
அடிப்படையில் அனைத்து விளம்பரங்களும் பெண்களை கீழ்த்தரமாக உபயோகபடுத்துவதும், ஆழமாக பாலுணர்வுகளை நிரடிகொடுக்கும் தன்மையுமகவே உள்ளதென அறிகிறோம். மற்றொன்று விளம்பரங்களால் நாம் எமாற்றப்படுக்றோம்.(தெரிந்தே ஏமாறுகிறோம் அது நமது தவறுதான்..அவர்களை சொல்லி குற்றமில்லை என ஒரு பின்னூட்டம் எனக்கு கிடைத்தது.) அதுபோல அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை ஏன் பிரதானப்படுதுகிறார்கள் என்பதும் நமக்கு புரிந்துகொள்ள முடியும்.
முகபாவங்களில் புணர்வுச்சத்தின் தன்மைகளை கொண்டதாய்ப்படும் காண்பிக்கப்படும் விளம்பரங்களில் இருந்து தொடங்குவோம். நீங்கள் சென்னை நகரத்தில் சாலைகளின் நடுவே தொங்கவிடப்படும் பண்பலை வானொலிகளின் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஒரு Orgasm or Ejaculation பாவத்தை முகத்தில் காண்பிக்கும் படம் ஒவ்வொரு மின்சாரக்கம்பத்திலும் இருக்கும். வானொலி கேட்பதன் மூலமாக அவர்கள் நமக்கு பாலியல் உச்சத்தை அடையமுடியும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இது போல லிரில் சோப் விளம்பரம். சோப்பை முகர்ந்து பார்த்து சிலிர்ப்படையும் ஈரம் சொட்டும் பெண். எலுமிச்சை வாசம் ஆண்மையின் படிமம்.
ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த டென்னிஸ் போட்டிகளின் விளம்பரத்தை யாருக்கேனும் நினைவிருக்குமாவென தெரியவில்லை, ஒரு ஆணின் ஒற்றைக்குரல். பந்தை அடிக்கும் போது வெளியேற்றப்படும் சத்தமென நாம் அதை எடுத்துக்கொள்ளவேண்டுமாம். மட்டையால் பந்தை அடிக்கும் ஒலி மறைக்கப்பட்டிருக்கும் . அவ்வொலி எதனைக்குறிக்கிறது ? பாலுணர்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டும் விதமான விளம்பரங்களை வரிசைப்படுத்திப்பார்த்தால் அறுபது சதவிளம்பரங்கள் சுலபமாக தேறுகிறது. மற்ற விளம்பரங்களில் அவற்றின் சொல்திரன் எனக்கு புரியாமல் இருக்கலாம்.! ஒரு சேட் தனது உயிலை வாசிக்கிறார். வாரிசுகள் மூச்சைப்பிடித்துக்கொண்டு கேட்டு கொண்ருக்கிறார்கள். சேட் தன் சுயபுத்தியுடன் சொத்தை தன் அழகான வேலைக்காரி சாந்தாபாய்க்கு எழுதிவைப்பதாக சொல்கிறார். வாரிசுகள் மூர்ச்சை அடைய மூத்த வாரிசு டேபிளில் இருக்கும் சோடாவை எடுத்துக் குடிக்கிறார். சில நொடிகளில் நாணிகொண்டு ஓரமாய் நின்றிருக்கும் வேலைக்காரிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பஞ்ச் டயலாக்: எங்கள் சோடாவை குடித்தால் அனைத்தும் மிருதுவாக உள்ளிறங்கும். ! கொஞ்ச நாளாக கோப்ரா சோடாவின் இவ்விளம்பரத்தை காணமுடியவில்லை.
விளம்பரங்களில் நம்பகத்தன்மை என்கிற ஒருவிசயமே அபத்தம் என்று நம்புகிற ஒரு தலைமுறை தொடங்கியாயிற்று. சமூக நாணயம் அற்ற இவ்விளம்பர உலகில் பொருளாதார நாணயம் மட்டும் சிலர் பைகளில் குவிகிறது. விளம்பரம் செய்ய விளம்பர உற்பத்தியாளர்களின் கற்பனை உச்சம் என்னைப் போன்றோரினை பெரும் அச்சத்திற்குள் தள்ளுகிறது. யாரைப்பற்றியும் அக்கரைப் படாமல் இருபது வினாடிக்குள் வீடுமனிதர்களை உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்க செய்வதிலும் கண்கலங்கவைப்பதிலும் நூறு சதம் வெற்றி காண்கிறார்கள். அமெரிக்காவுக்கு செல்ல ஸ்காலர்ஷிப் கிடைத்தும் மீதி பணத்திற்கான எண்ணக்கவலையுடன் வரும் மகளை தேற்றும் அப்பாஅழுதுகொண்டே புகுவீடு செல்லும் மகளை காதி விரல்கள் நுழைத்து விளையாட்டு காட்டும் அப்பா.. எத்தனைவகையான நெகிழ்வுக்காட்சிகள்! வார்த்தைகளின் அர்த்தங்களை படிமப்படுத்த எத்தனைவிதமான காட்சியமைப்புகள்! உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு குழந்தையை வளர்க்க பெற்றோருக்கு ஏற்படும் வளர்ப்புச்சுமையை ஒரே காட்சியில் எப்படி சொல்வது? ஈன்றெடுத்த பிள்ளையை தகப்பன் கையில் கொடுக்கிறாள் செவுளி.. குழந்தயை கையில் வாங்கியவுடன் குழந்தை வளர்ப்பு சுமையை தாங்கமாட்டாமல் மருத்துவ மனையின் தரையை பிளந்து மூட்டுவரை கீழிறங்கி விடுகிறார் தகப்பன்.. இந்த விளம்பரத்தை மறந்தவர்கள் இது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் என்பதை நினைவுகூர்க. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் வளர்ப்புசுமை இல்லாமல் போய்விடுமாம்.. கேட்பவன் கேனையனாக இருந்தால்.. என்கிற சொலவடை தமிழர்களுக்கு நன்கு தெரிந்ததுதான். அரசவிளம்பரங்களிளிருந்து பண்டிகைக்காலங்களில் கிராமங்களில் குழாய் கட்டி கத்தும் அனைத்து விளம்பரங்களிலும் கேப்பையில் வடிகிறது நெய்.
அருவருக்கத்தக்க விளம்பரங்களாக நான் என்னும் சிலவற்றை பட்டியலிட்டு முடிக்க எண்ணம். குளிர்பான விளம்பரங்கள், காப்பசினோ விளம்பரம், AXE and FASTTRACK விளம்பரங்கள். ஆக்சை தலையில் கவுத்திக்கொண்டு பாஸ்ட்ட்ராக்கை கையில் கட்டிகொண்டும் நடந்ததில் ஒரு பெண்ணும் என்னை சீண்டவில்லை. இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா? அரசியல், பொருளாதாரம், இலக்கியம், மற்றும் அனைத்து வாழ்வுவகைமைகளையும் ஏதாவது ஒரு ஆடிபிம்பத்தின் மூலமாகவே அவதானிக்க வேண்டுமென்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றையும் போலவே உலகளாவிய எமாற்றுதல்களையும் ஆடியில் பார்த்தே அவதானிக்கிறோம். ஆடியில் தெரியும் அனைத்தும் தெரிவதை விட மிக அருகில் உள்ளதை நாம் அறிவோம் நண்பர்களே. அல்லது அவைகள் நம்மைக் கடந்துபோய் ஒரு பிம்பங்களின் உலகத்தை ஏற்கனவே ஏற்படுத்தி நம்மை கபளீகரம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.
********
1 comment:
விளம்பரங்கள் இந்தக் காலத்தின் தவிர்க்க முடியாத ஒரு...என்ன சொல்ல...தண்டனை என்று சொல்லலாமா...? அது அவர்களுக்கு வியாபார உத்தி. நான் பெரும்பாலும் பொறுமையாக விளம்பரங்களைப் பார்ப்பதில்லை. பார்த்ததில் கவர்ந்தது ஒன்றிரண்டு உண்டு...சைக்கிள் சிறுவன், வோடஃபோன் விளம்பரங்கள், (அந்த அழகான உதவும் நாய்..) கண்டிக்கும் அம்மாவைப் பற்றி வெளியூரில் உள்ள அப்பாவிடம் பொம்மை அலைபேசியில் கம்ப்ளைன்ட் செய்யும் பையன், முன்பு வந்த எம் சீல் (மரணப் படுக்கையில் உள்ள பெரியவரிடம் மிரட்டி வாங்கும் செக் மேலிருந்து சொட்டும் தண்ணீரில் வீணாவது..) போன்றவைகளை ரசித்ததுண்டு...
Post a Comment