15 January, 2010
சொல்லுவதெல்லாம் பொய் 5
***************
21.09.2000 வியாழக்கிழமை
00.07
தவிரவும் இன்று முதல் நான் நாட்குறிப்பை எழுதப்போவதில்லை அங்கயற்கண்ணி. எங்கிருக்கிறாய் நீ. மூன்று நாளாயிற்று நீ தொலைந்து போய். ஒரு வருடத்தில் எனக்கு மூன்று மரணம் அதிகம்தானே. மரணம் கண்டு மிரளும் என்னை மரணத்தாலேயே அடிக்கிறது வாழ்வு. இதோ பார் ராமனை, உன் காதல் கணவன் பேயறைந்ததுபோல் சுருண்டுகிடக்கிறான். அவனையும் இழந்துவிடுவேனோ. முதல் முறையாக நான் இறந்துபோனால் நல்லது என்று படுகிறது. மரணம் எவ்வளவு நிம்மதி. விடுதலை. ஆம். ஆனால் எதோ பயம். கற்பனை செய்யமுடியாத மிரட்சி. ஆழ்துளைக்கினற்றுக்குள் விழுந்துவிட்ட நடுக்கம். அப்பாவின் இறப்பு எதிர்பார்த்தது. அம்மா எதிர்பார்க்கவில்லை என்றாலும் அப்பா இல்லாத அம்மா இல்லாத அம்மாதான். அவளுக்கு அது தெரிந்தே இருந்திருக்கின்றது. இல்லையென்றால் அப்பா போன நாற்பது நாட்களில் புன்னகைத்த முகத்துடன் தூக்கத்திலேயே எப்படி இறக்க முடியும். உறங்கப்போகும்போது அம்மா. விடிந்ததும் உடல். புன்னகைக்கும் முகம் கொண்ட உடல். நிச்சயமாக அவள் சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். தெரியுமா, உறங்கப்போகும் முன் அவள் என்னிடம் சொன்னாள்: அவளத்தேடிப்போகாத.. அவளா வருவா.. நீ கவனமா இரு..எங்கப்போனாலும் ராமனக்கூட்டிகிட்டு போ..' நான் குமுதவல்லியை சொல்லுகிறாள் என்று நினைத்தேன் ஆனால் அம்மா உன்னைப்பற்றிதான் சொல்லியிருக்கிறாள். ஆனால் நான் இப்போது என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. தேடிப்போகாத என்றும் சொன்னாள். போனால் ராமனைக்கூட்டிகிட்டு போ என்றும் சொன்னாள். எதை செய்வது. ஒரு வாய் உணவு உண்ணும் தெம்பு கூட இப்போது ராமனிடம் இல்லை. எவ்வளவு உல்லாசமாக திரிந்த திருடன் இவன். மூன்று நாட்களாய் எதையோ முனுமுனுத்துக்கொண்டிருக்கிறான் விடாமல். கண்களில் நீர் வழிவது குறையவில்லை. என்னடா சொல்கிறாய் என்று கேட்டால், உதட்டை கோணிகொள்கிறான். உன்னிப்பாக கேட்டால் 'அதை தொட்டிருக்கக்கூடாது.. அது ஊழிப்பேய்.. சிலையில்லை.. கோரதாண்டவம்.. பாவம் செஞ்சுட்டேன்.. அதான் கண்ணனை கொன்னுட்டா.. அவளையும் தூக்கிக்கிட்டு போய்ட்டா.. அது சிலையில்ல .. கோரதாண்டவம்..' இவற்றை தவிர அவன் வாயில் ஒரு வார்த்தையில்லை. கண்களில் ஒளி மங்கிக்கொண்டிருக்கிறது. உதடுகளில் எச்சில் வழிந்தவண்ணம் சுருண்டுகிடக்கிர்றான். உனக்கு கண்ணனின் மரணம் தெரிந்திருக்கிறது அங்கயற்கண்ணி. என்ன பாவம் செய்தாய் அப்படி உன் மகனை காவு கொடுக்குமளவுக்கு. இவன் என்னவென்றால் எல்லாவற்றிற்கும் அவன்தான் காரணம் என்று புலம்புகிறான். குழந்தை இறந்த போது நான் வாங்கி கொடுத்த உடையை போட்டிருந்தான். நன் திருடியதுதான் பாவமாகிவிட்டதோ. மூன்று மரணம், உன்னைக்காணவில்லை, ராமனை தேற்றவேண்டும் ஒரு எளிமையான மனிதனுக்கு இவ்வளவும் நேர்ந்தால் என்னதான் செய்வது. குமுதவல்லி போனதுகூட நான் எனது வன்மமான செய்கைகளில் பிரதிபலன் என தேற்றிக்கொள்ள முடிந்தது. இந்த நாளில் நான் இற்றுப்போகும்படியான நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது. குழந்தை கண்ணனின் ஆசன வாயிலிருந்து தொடர்ந்து வெளியேறிய வாயுவையும் திரவத்தையும் ஏன் யாராலும் நிறுத்த முடியவில்லை. அவன் அழும் தெம்பிழந்து அரற்றி அமைதியாகி சலனமில்லாமல் அடங்கிப்போனது நாடகமில்லாமல் வேறென்ன. அது எப்படி உண்மையாக முடியும். வெள்ளைத்துணியில் அவனை பொட்டலமாய் கட்டியபோது நீ எப்படி பார்த்துக்கொண்டிருந்தாய் கண்ணில் ஒரு துளி நீர் இல்லாமல். ராமன் செய்த ஓலம் ஊர் இதுவரை பார்த்தறியாதது . நீர்தெளித்து மண்ணைத்தோண்டி ஒரு விதையைப்போல அவனை புதைத்ததை ஒரு நடுக்கமும் இல்லாமல் என்னால் எப்படிச்செய்ய முடிந்தது. எனக்கு ஏன் அப்போது மரணம் நிகழவில்லை. அழுகை வரவில்லை. அங்கயற்கண்ணி நீ எங்கு போய்விட்டாய். உன்னைத்தேடித்தான் இனி என் பயணம் என்பதை நீ முடிவுசெய்துவிட்டாயா. டிசோசா வரச்சொல்லியிருக்கிறாள். அவளும் வரும் போது ராமனை கூட அழைத்து வரச்சொல்லியிருப்பது இவையெல்லாம் எதோ ஏற்கனவே செயல் படுத்தப்பட்ட நடைமுறைகள் போன்றதொரு தோற்றத்தை எனக்கு ஏற்படுத்துகிறது. புதிதாக வெத்திலைப்பாக்கு போடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஜாதகக்காரர் கொடுத்த சுவடியை வேறு கொண்டுவரவேண்டுமாம். என்ன நடக்கிறது அங்கயற்கண்ணி, எங்கிருக்கிறாய் நீ.. ஜாதகக்காரர் சொன்னது போல உன்னை காண சுவடிக்காலத்துக்குள் நுழயவேண்டுமா.
***************
தொடரும்...
**************
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment