30 July, 2010

ரசமிழக்கும் கண்ணாடி 1

ஒரு அலுப்பான பணி நிமித்த பயணத்தில் இருக்கிறேன். இவ்வகையான பயணத்தை அனுபவிக்கும் போது மிகுந்த உடல் வலியும் மனச்சோர்வும் ஏற்படுவதை தவிர்க்க புத்தகத்தையும் பாடல்களையும் தவிர்த்து இம்முறை உணவு விசயத்தை எடுத்துக்கொண்டேன் இருப்பை சுவாரஷ்யப் படுத்துவதற்கு. திருவாரூரும் கும்பகோணமும் சென்றுவந்த ஊர்கள். இன்று மயிலாடுதுறைக்கு. உணவு பற்றி சொல்வதற்கு முன் திருவாரூர் ரயிலடிக்கருகில் இருக்கும் தாசன் சிகை அலங்காரக்கடை பற்றி சொல்கிறேன். ஆருக்கு ஏழு அடி அறையில் ஏறக்குறைய எண்பத்து ஐந்து வருடங்களாக இயங்கி மூன்றாவது தலைமுறை சிகை அலங்காரத்தொளிலாளியாக இருக்கும் பாலன் என்பவர் எனக்கு சிகை அலங்காரம் செய்யும் (!) போது அவரது தாத்தா சோமசுந்தரம் பர்மாவிலிருந்து பெல்ஜியம் ஆடிகளுடன் வந்து அந்த இடத்தில் கடை விரித்தபோது தாசன் என்கிற பெயரை சுதந்திர போராட்ட தியாகி எம் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் அபிமானத்தில் தெரிவுசெய்த பெயர் என்றார். எண்பத்து ஐந்து வருடங்களாக அந்த இடத்திற்கு வாடகை கொடுத்து இன்று அந்த வாடகை 250 ரூபாயாக உயந்திருக்கிறது. பாலனின் ஒரு மகளும் மகனும் வேறுவேறு தொழிலை பார்க்கப்போய்விட்டார்கள். இவரின் வாழ்நாளுக்கு இன்னமும் தினமும் முன்னூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறார். ஒருகாலத்தில் அந்த தெருவில் அடிக்கடி நடந்த நமது முதல்வரின் இளமையான முகத்தை அந்த அடிகள் பிரதிபலித்ததை நினைவுகூர்ந்தார். அந்த பெல்ஜியம் கண்ணாடிகள் ரசமிழக்கத்தொடங்கியிருக்கின்றன.
திருவாரூரில் இறங்கியபோது மதிய உணவு வேளை. அதே ரயிலடியில் சுதந்திரத்துக்கு முன்னதாக திறக்கப்பட்ட மனோன்மணியம் மெஸ்-ஐ அறிமுகம் செய்தார்கள். உருப்படியான அசைவ சாப்பாடு. (பிரமாதமான சைவ உணவுக்கடையின் பெயரை பத்மா மறந்துவிட்டதால் அங்கு செல்ல இயலவில்லை). இரவு எப்பொழுதும் போல தெருவோரக்கடையை தேடாமல் தைலம்மை உயர்தர உணவுவிடுதியில் ஒரு ரவா தோசை. எனக்குத்தெரிந்து தமிழ் நாட்டில் முழுவதுக்கும் ஒரேமாதிரியான taste தான் இருக்கிறது இந்த ரவா தோசைக்கு. ராத்திரியோடு ராத்திரியாக கும்பகோணம் ரயில்நிலையம் சென்று விட்டேன். தமிழகத்தின் அமைதியான மற்றும் அழகான ரயில் நிலையங்களில் ஒன்று. மதிய நேரத்தில் மாடுகள் ஓடும் நிலையம். கும்பகோணம் ரயில்நிலைய நடைமேடைக் கடையில் கிடைக்கும் காபி பிரமாதமானது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் சென்ற ஊரிது. காலையில் நிலையத்திற்கு முன் இருந்த ஒரு உணவு விடுதியில் பொங்கலும் வடையும். கும்பகோணத்திற்கு உகந்த உணவு. உணவுக்கான பணத்தை வரவேற்பாளர் கல்பனாவிடம் கொடுத்து விட்டு உடன் பணிபுரிபவரின் வற்புறுத்தலின் பேரில் மினி பஸ் ஏறி திருநாகேஸ்வரம் சென்றேன். காலை பதினொன்றரை - பன்னிரண்டு சிறப்பு பாலாபிசேகமாம். அவர் இந்த ஜென்மத்தின் நற்பலன்களை பெற அதை பார்த்தே ஆக வேண்டுமாம். துணைக்கு நான். விதி. என்னசெய்வது. அவர் சொன்ன சுய கதையை. கொடுமை. இன்னொருநாள் பகிர்கிறேன்.
நாகேஸ்வரருக்கும் இரண்டு பொண்டாட்டிகள். நாகவல்லி. நாக கன்னியோ மங்கையோ.. எதோ ஒன்று. மூன்று கற்சிலைகள். பத்தடிக்கு ஒரு கயிறு. சினிமா டிக்கெட் போல முதல் பத்தடியில் அமர 500 ரூபாய்கள், இரண்டாம் பத்தில் 100 ரூபாய்கள் மூன்றாம் பத்திலிருந்து இலவசம். இலவசமாக அமர்ந்தோம். திரையை திறந்து பலவண்ண திரவங்களில் அந்த சிலைகளை கழுவினார்கள். திரையை மூடினார்கள். மீண்டும் திறந்து தீபாராதனை காட்டினார்கள். திரும்பவும் மூடி சிலைகளுக்கு ஆடைகளை உடுத்தி மீண்டும் திறந்தார்கள். பிறகு show முடிந்துவிட்டது என்றார்கள். மதிய உணவுக்காக கும்பகோணம் வந்து விட்டோம்.
திரு நாகேஷின் அருளால் எனக்கு அந்த உணவு விடுதிக்கு வழி காண்பிக்கப்பட்டது. "ஒரு வழி ஏசு (one way jesus)உணவகம்". தயிரைத் தவிர்த்து மிக அற்புதமான அசைவ உணவு, வகைவகையான மீன்கள். காசு கொஞ்சம் அதிகம். ஆனாலும் கும்பகோணத்தில் இது அருமையானது.
தொடர்ந்து சாதாரண உணவகங்களைத்தவிர்த்து இப்படி ஏதேனும் ஒரு கடையை தேடித் போய் உண்ணும் இப்பழக்கம் என்னை சட்டென்று ஒட்டிக்கொண்டுள்ளது. ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக நான் அதிகம் உணவகங்களில்தான் உண்கிறேன். எனது கடுமையான உணவுக்காலம் ராமநாதபுரத்தில் கிடைத்தது.
இன்று மயிலாடுதுறை செல்கிறேன். இதற்க்கு முன் அங்கு சென்றதில்லை.
**************
தொடர்கிறேன்.

24 July, 2010

காமா.......

எறும்புகளுக்கும் ஈக்களுக்கும் முன்னதாய் உடம்பைத்துய்கிறாய். துவக்குடன் துவக்கும் உனதான செயல்கள் ரவையை விட வேகமானவைகள். உன்னைச்சுற்றி சிதறும் உடல்கள் மட்டும் உயிரற்றவைகள் அல்ல என்பதை நடத்திக்காட்டும் உனது வீரதீர சாகசங்களில் மயங்குகிறது குருதிமணம் கொண்டதுன் பொன்தலைமை. தீர்த்துவிடு தாகமனைத்தையும் உனதான கடைசி விருப்பம் அதுவென்றால். பின் உன்னை ஆசுவாசப்படுத்திக்கொள் என் முன் மண்டியிட்டு. என்னை ஏறிட்டுப் பார்க்காதே ஏனென்றால் அங்கு நான் என்று எவருமில்லை அல்லது எதுவுமில்லை . இருப்பது என்னவோ வெப்பம் காந்தும் பழுப்பு வண்ண பீடபூமி. யாவர்க்கும் நீ அளித்தது போல வன்மைரணம் அல்ல நான் தரப்போவது. நீ வலிஎதுமின்றி கரைந்துபோவாய் எப்போதைக்கும் மீளாதபடிக்கு. அதற்கான ஆயுதத்தை நீ உன் அழிப்புத்தொழில் மூலம் என்னிடம் விட்டிருக்கிறாய். நீ அறியாமல் செய்த செயலது. அது ஒற்றை சொல்லாய் என்னிடம் இருக்கிறது.. ஆம் வெறும் ஒற்றைச் சொல்லாய். உன் மொத்த இருப்புக்கும் ஒற்றை ஆயுதமாய்.

22 July, 2010

பூமி விருட்சம்

தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். ஒரு வெளிச்சப் புள்ளியை விட்டு. நிரந்தரமாக வானேகும் ஒரு இருட்டுகுமிழ் விட்டு. தூரத்திலடங்கும் ரயிலோசை விட்டு. துயரநிழலின் மஞ்சள் வண்ணம் விட்டு. உயிர்த்துடிப்பின் மெல்லியதுன் அன்பு விட்டு. மணல் புதைய விட்டு சென்ற காலடி தடம் விட்டு. கனவுகள் ஏந்திய பாலையின் வெப்பம் விட்டு. கடல் விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை துரோகம்.

தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். மேகம் விட்டு. மேகத்துக்குள் நமதான மென்னிணக்கம் விட்டு. மழைக்குமுன் மண் கசியும் வாசம் விட்டு. குழலுதிர்த்த ஒற்றைப்பூவின் துயரம் விட்டு. பாதம் பட்டு ரோமக்கால்கள் விரைத்த தருணமொன்றின் மோகம் விட்டு. உனதான பாடல் விட்டு. மரணம் விட்டு. அடர்பழுப்பு பூவொன்றின் சாயலொத்த மென்சருமம் திரட்டி வைத்த பரிவு விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை காதல்.

தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். மதுவுண்டு உன் வாயுமிழும் அமுதம் விட்டு. இரவெல்லாம் ரீங்கரிக்கும் சில்வண்டின் கொடுந்தனிமை விட்டு. இசை பிழிந்து தெருவெல்லாம் குமட்டித்துப்பும் ஸ்வரக்ரந்தம் விட்டு. மோனம் விட்டு. வேசைமீதாசை கொண்டலையும் பசுங்காடு விட்டு. வழியற்ற கூடடைய பனையேறும் கொம்பேரியின் கூர்பார்வை விட்டு. சுடுகாட்டின் மணம் விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை நட்பு.

என்மீதேரும் குரோதத்திற்கு முழந்தாளிடுகிறேன். மண்மீதொரு முத்தம் பதிக்கிறேன். விதையாகிறதென் முத்தம். பூமிவிருட்சம் முளைக்கிறது கரிய விசும்பில் நீலவொளி உமிழ.

16 July, 2010

உனக்கே உனக்கு

****************
பார்த்தபோது தெரிந்தது விழிமூடியதொரு புத்தன்
மீண்டும் பார்த்தேன்
பார்த்தபோது தெரிந்தது குருதிவழியும் கழுதைப்புலி


பார்த்தபோது தெரிந்தது உஷை கக்கும் தணல் விளக்கு
மீண்டும் பார்த்தேன்
பார்த்தபோது தெரிந்தது கருநாகம் உரித்துப்போட்ட வெண்சட்டை


பார்த்தபோது தெரிந்தது முன்பனியின் பொன்விடியல்
மீண்டும் பார்த்தேன்
பார்த்தபோது தெரிந்தது நரக்கழிவின் தீய்ந்த வாசம்


பார்த்தபோது தெரிந்தது வானவில்லின் நான்காம் வண்ணம்
மீண்டும் பார்த்தேன்
பார்த்தபோது தெரிந்தது குரைப்பொலியின் வன்னதிர்வு


பார்த்தபோது தெரிந்தது பால்வடிந்த ஜீவமுகம்
மீண்டும் பார்த்தேன்
பார்த்தபோது தெரிந்தது வன்மம் வீசும் கொலைப்பார்வை

***********************

விசுவாசத்தை அழித்தவனின் முகம் உனக்கு பரிச்சயமாகும் காலம் எப்பொழுதுமே முன்வசந்தம். மழையும் முன்பனியும் மிளிரச்செயும் நிலம் உனது. கங்கு துப்பும் சீனட்ராகன் நான். விழிமலரும் மொழியமுதம் நீ . ***********************

உலகம் ஒரு வெம்பிய மாம்பழம். அதே நேரத்தில் ஒரு உதக்கொட்டை.

***********************

நெதர்லாந்து ஜெயிக்கவில்லை என்கிற வருத்தம். ஆக்டோபஸ் ஜெயித்த வருத்தம். மறுபடியும் அடுத்த போட்டிகள் பிரேசிலில் நடப்பது வருத்தம். ஸ்பெயினின் உலகக்கோப்பை வருத்தம். விளையாட்டில் ரபேல் நாடல் மட்டுமே மகிழ்ச்சி. ஏனென்றால் நாடல் ஒரு கால்பந்து வீரன்.

************************

ஆடி

தள்ளுபடி அம்மனின் துணையில் செட்டிகளும் தேவாங்குகளும் கொள்ளை லாபம் கொள்ள இது உகந்த மாதம். ஆடி, நடு ஆடி, கடைசி ஆடி மற்றும் ஆடி பதினெட்டு போன்ற திருவிழாக்களை மொத்தமாக கொண்ட மாதம். தவிரவும் இது பூணூல் காரர்களுக்கு பலவித விசேசங்களைக் கொண்ட மாதமும். வாழ்க.

************************

பத்து நாட்களாக கடுமையான வேலைப் பளு. தலை பாரம் போக்க இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று ஹர்ட் லாக்கர் மற்றொன்று ஐ ஹேட் லவ் ஸ்டோரி . அற்புதமான படங்கள். முதலாவது டிபிகல் அமெரிக்கன். எப்பொழுதும் போல. அதற்கான ஆஸ்கர்கள் வியப்புக்குரியவைகள் அல்ல. தே டன்.

லவ் ஸ்டோரி யூசுவல் சினிமா. ஐ ஹேட்.

************************************

என் சோம்பேறித்தனத்தை மன்னிக்கவேண்டும்,. என்னைப்பற்றி எழுதிய கௌசல்யாவுக்கு நன்றி. நன்றி.

நன்றி.

**********************

08 July, 2010

சொல்முறை


ஒரு விசயத்தை (matter) அல்லது பிரச்சனைப்பாடை (fact) பேசுபொருளாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றி ஏதாவது ஒரு வகைமையில் பதிவது என்பதை சொல்முறையின் (presentation) ஒரு அலகாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு நபர் தனக்குண்டான அனுபவத்தை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது மொழியின் துணை தேவைப்படுகிறது. அவர் தனது மொழியறிவின் மூலம் தனது அனுபவத்தை ஒரு எழுத்து வடிவமாக கட்டமைக்கிறார்.

எனவே எந்த ஒரு எழுத்து வடிவுக்கும் ஒரு கட்டமைப்பு (structure) இருக்கிறது. அவ்வெழுத்து வகைமையை எப்படி மாற்றியும் முன்னுக்குப்பின் முரணாக (nonlenior) நேரடியாகவும் (lenior) எழுதினாலும் அது ஏதாவது ஒரு கட்டமைப்புக்குள் அடங்கி விடும் என்பது அடிப்படை. சொல்முறையில் கட்டமைப்பு என்பது தவிர்க்கமுடியாத அலகு.


அதே சமயத்தில் எழுத முனைபவர்களின் அனுபவம், மொழியறிவு, எழுதும்போதைய மனநிலை, எழுது பொருள்கள் (tools), அனுபவத்தை மீள்ஞாபகப் படுத்தும் திறன், அனுபவத்தை எழுதுவதற்குத் தேவையான உந்தம் (urge) போன்ற பல்வேறுபட்ட காரணிகள் கட்டமைப்பின் மீது ஆதிக்கம் செய்கிறது. இதன் மூலம் ஒரு கட்டமைப்பு என்பது நுணுக்கமாக நபருக்கு நபர் வேறுபடும். தொடர்ந்து வாசிப்பனுபவம் பெறுவோர் 'இது இவரின் எழுத்து' என படிக்கும்போதே கண்டைவது இந்த வேறுவைகைப்பட்ட கட்டமைப்பால்தான்.


கட்டமைப்பு என்பது ஒரு வெளிச்சுற்றாகவும் துலக்கமாகவும் (transperant) ஒரே நேரத்தில் இயங்குகிறது. கட்டமைப்பு என்பது ஒரு இயங்குநிலை. அது எழுதுகிற ஒவ்வொரு முறையும் மற்றும் படிக்கிற ஒவ்வொரு முறையும் தன்னளவில் மாறுபட்டுக் கொண்டிருக்கும். அனைத்து விசயங்களையும் கட்டமைப்புக்குள் கொண்டுவந்து விடமுடியும். இது ஒரு மொழியை பேசவும் எழுதவும் தெரியும் ஒரு மனிதனுக்கு இயற்கை (default). ஆனால் ஒரு விசயத்தை கட்டமைப்புக்குள் இருந்து வெளியேற்றுவது என்பதில் இருக்கிறது ஒரு மனிதனுடைய பாண்டித்தனம்.


கட்டமைப்பிலிருந்து ஒரு விசயத்தை வெளியேற்றுவதற்கான உபகரணங்களாக சட்டம் (frame) மற்றும் பார்வைக் கோணம் (point of view ) செயல்படுகிறது. இங்கு கட்டமைப்பு என்பது தருவிக்கப்பட்ட அல்லது செயலாக்கப்பட்ட இயற்கை. சட்டம் மற்றும் பார்வைக்கோணம் என்பது நுட்ப உபகரணங்கள் (tools). கட்டமைப்பு, சட்டம் மற்றும் பார்வைக்கோணம் ஆகியவைகள் வல்லூருப்பார்வையில் ஒரேமாதிரி தோன்றினாலும் ஒவ்வொன்றும் தன்னளவில் வெவ்வேறானவை.


உதாரணத்திற்கு வருகிறேன்:


(1) நகரத்தில் அன்று மழை பெய்யாமல் இருந்திருக்கலாம். மிதிவண்டியின் பின்புறத்தில் கூடை நிறைய மல்லிகைப்பூக்களை கொண்டுசென்றவன் என்னைக்கடக்காமல் இருந்திருக்கலாம். அப்பூவின் வாசம் எனக்கு உடல் சூட்டை ஏற்படுத்தியது.


(2) மழைப்பெயதலில் நனைந்துவிட்டேன். அதே நேரத்தில் பூக்காரன் மிதிவண்டியில் கடக்கும்போது கடந்த மல்லிகை வாசம் எனக்கு இச்சையை தூண்டியது.


(3) மாலை ஏழு மணிக்கு மதுரை ஒப்பன்னகார வீதி மாரியம்மன் கோவிலிலிருந்து வடக்கில் நாலாவது கட்டிடம் தாண்டி ராசப்பனாயக்கர் பழகமிசன் மண்டியை கடையை கடந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்தபோது பெய்யத்தொடங்கிய மழையில் நனைந்த நேரத்தில் எதிரில் மிதிவண்டி பூக்காரன் கடந்தபோது ஏற்பட்ட பூவாசத்தில் எனக்கு உடம்புக்குள் எதோ செய்தது.


(4) மாலை. மாரியம்மன் கோவில் சுவரில் முளைத்த ஒரு சிறு ஆலம். மிளிரும் இளம்பச்சை இலை. சட்டென்ற தூறல். நனைதலின் சுகம். காற்றில் மல்லிகை வாசம். தொப்புளில் குண்டூசியை யாரோ நுழைத்தது போல உடல் முறுக்கியது.


(5) மழையில் நனையும்போது மல்லிகைவாசம் வந்தது. கட்டுக்கடங்காத காமம்.


என இவ்வகையில் ஒரு விசயத்தை பலபேர்கள் பலவாறாக எழுதக்கூடும். இந்த ஐந்து உதாரணமும் காமம் என்கிற ஒன்றைப் பற்றிய வர்ணனை. எனவே இங்கு காமம் என்பது சட்டமாக (frame) முன்னிறுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான அனுபவக்கோணம் (point of view ). இதன் துலக்கமாக இருப்பது மொழிவகைமையால் ஏற்படும் கட்டமைப்பு (structure).


கட்டமைப்பு, சட்டம், பார்வைக்கோணம் ஆகிய மூன்றையும் எழுதுபவரின் அனுபவமும் மொழிவளமும் ஆளுமைசெய்யும். ஒரு விசயத்தையோ அல்லது பிரச்சனைப்பாடையோ மொழி அடிப்படையிலான கட்டமைப்பில் ஒரு சட்டமாக மனதளவில் உருவாக்குவதும், அனுபவரீதியிலான பார்வைக்கோணத்தில் அந்த சட்டத்தை விவரிப்பதிலும் ஏற்படும் அமைப்பை எழுதுபவரின் அனுபவ மனநிலையே தீர்மானிக்கிறது. அந்த உருவாக்கப்பட்ட பிரதி பிறகு எழுதுபவனின் அனுபவத்தை இழந்து விடுகிறது. படிப்பவர்கள் அந்த பிரதியை தனதான அனுபவமாக மட்டுமே ஒரு பிரதியை வாசிக்க முடியும். அப்படி வாசிக்கும் போது தனக்கான உகந்த அனுபவ நிலையை உணர முடியவில்லை என்றால் அந்த அனுபவத்தை தேடிய பயணத்தை படிப்பவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதை எழுதுபவரின் அனுபவத்தில் தேடினால் அநேக சமயங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.

*******************


01 July, 2010

ரமேஷின் வருகையும் பார்த்திபனின் கவிதையும் என்னை புளங்காகிதப் படுத்தியது. நன்றிகள். பார்த்திபன் தொடர்ந்து எழுத என் தளத்தை உபயோகப்படுத்தினால் பெருமகிழ்ச்சி.

********************

போரடித்த களிர் பாத தடமது நான்

பாரழித்த பெருவூழிச் சுழலது நான்

தேரழித்த கருங்காலன் சைதன்யம் நான்

காரழித்து வீழ்ந்தோங்கும் புனலது நான்


ஏலாதெனை மறக்க வென்றாள் அச்சிறுமி

கோலாட்ட முனைப் பார்த்தசையும் சர்ப்பம்போல்

நூலாடும் சிலந்திவலை பதுங்குமது விழி

சேலாடும் செருக்கோடு கான் மறைந்தாள் காண்


உருக்குலைவேனினி மதிகெட்டு உடல்விட்டு

கருநுழைவேனினி நுதல் தட்டி விழிமூடி துகள்துகளாய்

துருவாவேனினி வானேறி இருள் தாளின் வெளிச்ச

மருவாவேனினி எந்நாளும் புள் கொத்தும் புழுவாவேன்.
***********