08 July, 2010

சொல்முறை


ஒரு விசயத்தை (matter) அல்லது பிரச்சனைப்பாடை (fact) பேசுபொருளாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றி ஏதாவது ஒரு வகைமையில் பதிவது என்பதை சொல்முறையின் (presentation) ஒரு அலகாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு நபர் தனக்குண்டான அனுபவத்தை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது மொழியின் துணை தேவைப்படுகிறது. அவர் தனது மொழியறிவின் மூலம் தனது அனுபவத்தை ஒரு எழுத்து வடிவமாக கட்டமைக்கிறார்.

எனவே எந்த ஒரு எழுத்து வடிவுக்கும் ஒரு கட்டமைப்பு (structure) இருக்கிறது. அவ்வெழுத்து வகைமையை எப்படி மாற்றியும் முன்னுக்குப்பின் முரணாக (nonlenior) நேரடியாகவும் (lenior) எழுதினாலும் அது ஏதாவது ஒரு கட்டமைப்புக்குள் அடங்கி விடும் என்பது அடிப்படை. சொல்முறையில் கட்டமைப்பு என்பது தவிர்க்கமுடியாத அலகு.


அதே சமயத்தில் எழுத முனைபவர்களின் அனுபவம், மொழியறிவு, எழுதும்போதைய மனநிலை, எழுது பொருள்கள் (tools), அனுபவத்தை மீள்ஞாபகப் படுத்தும் திறன், அனுபவத்தை எழுதுவதற்குத் தேவையான உந்தம் (urge) போன்ற பல்வேறுபட்ட காரணிகள் கட்டமைப்பின் மீது ஆதிக்கம் செய்கிறது. இதன் மூலம் ஒரு கட்டமைப்பு என்பது நுணுக்கமாக நபருக்கு நபர் வேறுபடும். தொடர்ந்து வாசிப்பனுபவம் பெறுவோர் 'இது இவரின் எழுத்து' என படிக்கும்போதே கண்டைவது இந்த வேறுவைகைப்பட்ட கட்டமைப்பால்தான்.


கட்டமைப்பு என்பது ஒரு வெளிச்சுற்றாகவும் துலக்கமாகவும் (transperant) ஒரே நேரத்தில் இயங்குகிறது. கட்டமைப்பு என்பது ஒரு இயங்குநிலை. அது எழுதுகிற ஒவ்வொரு முறையும் மற்றும் படிக்கிற ஒவ்வொரு முறையும் தன்னளவில் மாறுபட்டுக் கொண்டிருக்கும். அனைத்து விசயங்களையும் கட்டமைப்புக்குள் கொண்டுவந்து விடமுடியும். இது ஒரு மொழியை பேசவும் எழுதவும் தெரியும் ஒரு மனிதனுக்கு இயற்கை (default). ஆனால் ஒரு விசயத்தை கட்டமைப்புக்குள் இருந்து வெளியேற்றுவது என்பதில் இருக்கிறது ஒரு மனிதனுடைய பாண்டித்தனம்.


கட்டமைப்பிலிருந்து ஒரு விசயத்தை வெளியேற்றுவதற்கான உபகரணங்களாக சட்டம் (frame) மற்றும் பார்வைக் கோணம் (point of view ) செயல்படுகிறது. இங்கு கட்டமைப்பு என்பது தருவிக்கப்பட்ட அல்லது செயலாக்கப்பட்ட இயற்கை. சட்டம் மற்றும் பார்வைக்கோணம் என்பது நுட்ப உபகரணங்கள் (tools). கட்டமைப்பு, சட்டம் மற்றும் பார்வைக்கோணம் ஆகியவைகள் வல்லூருப்பார்வையில் ஒரேமாதிரி தோன்றினாலும் ஒவ்வொன்றும் தன்னளவில் வெவ்வேறானவை.


உதாரணத்திற்கு வருகிறேன்:


(1) நகரத்தில் அன்று மழை பெய்யாமல் இருந்திருக்கலாம். மிதிவண்டியின் பின்புறத்தில் கூடை நிறைய மல்லிகைப்பூக்களை கொண்டுசென்றவன் என்னைக்கடக்காமல் இருந்திருக்கலாம். அப்பூவின் வாசம் எனக்கு உடல் சூட்டை ஏற்படுத்தியது.


(2) மழைப்பெயதலில் நனைந்துவிட்டேன். அதே நேரத்தில் பூக்காரன் மிதிவண்டியில் கடக்கும்போது கடந்த மல்லிகை வாசம் எனக்கு இச்சையை தூண்டியது.


(3) மாலை ஏழு மணிக்கு மதுரை ஒப்பன்னகார வீதி மாரியம்மன் கோவிலிலிருந்து வடக்கில் நாலாவது கட்டிடம் தாண்டி ராசப்பனாயக்கர் பழகமிசன் மண்டியை கடையை கடந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்தபோது பெய்யத்தொடங்கிய மழையில் நனைந்த நேரத்தில் எதிரில் மிதிவண்டி பூக்காரன் கடந்தபோது ஏற்பட்ட பூவாசத்தில் எனக்கு உடம்புக்குள் எதோ செய்தது.


(4) மாலை. மாரியம்மன் கோவில் சுவரில் முளைத்த ஒரு சிறு ஆலம். மிளிரும் இளம்பச்சை இலை. சட்டென்ற தூறல். நனைதலின் சுகம். காற்றில் மல்லிகை வாசம். தொப்புளில் குண்டூசியை யாரோ நுழைத்தது போல உடல் முறுக்கியது.


(5) மழையில் நனையும்போது மல்லிகைவாசம் வந்தது. கட்டுக்கடங்காத காமம்.


என இவ்வகையில் ஒரு விசயத்தை பலபேர்கள் பலவாறாக எழுதக்கூடும். இந்த ஐந்து உதாரணமும் காமம் என்கிற ஒன்றைப் பற்றிய வர்ணனை. எனவே இங்கு காமம் என்பது சட்டமாக (frame) முன்னிறுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான அனுபவக்கோணம் (point of view ). இதன் துலக்கமாக இருப்பது மொழிவகைமையால் ஏற்படும் கட்டமைப்பு (structure).


கட்டமைப்பு, சட்டம், பார்வைக்கோணம் ஆகிய மூன்றையும் எழுதுபவரின் அனுபவமும் மொழிவளமும் ஆளுமைசெய்யும். ஒரு விசயத்தையோ அல்லது பிரச்சனைப்பாடையோ மொழி அடிப்படையிலான கட்டமைப்பில் ஒரு சட்டமாக மனதளவில் உருவாக்குவதும், அனுபவரீதியிலான பார்வைக்கோணத்தில் அந்த சட்டத்தை விவரிப்பதிலும் ஏற்படும் அமைப்பை எழுதுபவரின் அனுபவ மனநிலையே தீர்மானிக்கிறது. அந்த உருவாக்கப்பட்ட பிரதி பிறகு எழுதுபவனின் அனுபவத்தை இழந்து விடுகிறது. படிப்பவர்கள் அந்த பிரதியை தனதான அனுபவமாக மட்டுமே ஒரு பிரதியை வாசிக்க முடியும். அப்படி வாசிக்கும் போது தனக்கான உகந்த அனுபவ நிலையை உணர முடியவில்லை என்றால் அந்த அனுபவத்தை தேடிய பயணத்தை படிப்பவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதை எழுதுபவரின் அனுபவத்தில் தேடினால் அநேக சமயங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.

*******************


1 comment:

வசுமித்ர said...

\எழுதுபவரின் அனுபவத்தில் தேடினால் அநேக சமயங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.\

................நன்றி அப்படியென்றால் எழுத வேண்டிய தேவை என்ன. அதை விளக்க வேண்டிய காரணம், 5பேர் 5விதமாக எழுதுவதன் மூலம் லட்சம், கோடிப் பேர்கள் எழுதுவதை நீங்கள் இலக்கியம், அல்லது படைப்பு என்று கூறுவீர்களா, சட்டம் அது சுமத்தும் வன்முறை என ஆயிரம் இருக்கிறது, பின் ஏன் சட்டம், ஒழுங்கு நீதி இதை அந்த 5 பேரும் பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் என்ன உங்களுக்கு குளிரை ஏற்படுத்தும் ஒன்று எனக்கும் குளிர வேண்டும். இல்லையேனில் அது பாரபட்சம்.

தனது வாழ்வில் எந்தத்தத்துவத்தையும் எந்த நூலையும் படிக்காத விவாசாயியின் மனதில் இவை பொருள் கொள்ளுமா, அவனின் மனநுட்பங்களை எழுத்து வெளிக்கொண்ர முடியுமா...அல்லது அதை தலைகீழாக்கி பார்த்தால் அவனைப் பற்றி எழுதிய அந்த 5 பேரும் அவனது வாழ்க்கைக்கு எவ்வகையில் உபயோகமாக அதை அவன் வாழ்க்கையில் பதிவு செய்கிறார்கள்.

அன்பு மகி

இதுகாறும் தத்துவவியலாளர்கள் அனைவரும் உலகத்தை வியாக்கியானம் செய்துகொண்டிருந்தார்கள், பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றிய்மைப்பதுதான்..-
கார்ல் மார்க்ஸ்
அப்படியென்றால் எழுத்தின் வேலை...

\அவர் தனது மொழியறிவின் மூலம் தனது அனுபவத்தை ஒரு எழுத்து வடிவமாக கட்டமைக்கிறார்.\


\ஒரு பிரதியை வாசிக்க முடியும். அப்படி வாசிக்கும் போது தனக்கான உகந்த அனுபவ நிலையை உணர முடியவில்லை என்றால் அந்த அனுபவத்தை தேடிய பயணத்தை படிப்பவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதை எழுதுபவரின் அனுபவத்தில் தேடினால் அநேக சமயங்களில் ஏமாற்றமே மிஞ்சும். \

இது என்ன முரண் எழுதுபவனுக்கு எழுத அத்தனை காரணங்கள் உபகரணங்கள் தேவைப்படும்போது வாசிப்பவனுக்கு எந்தக்காரணமும் இல்லையா..அல்லது வாச்கன் வாசிக்க மட்டும் பிறந்தவனா...எழுத மட்டும் தெரிந்தவன் வெறும் வார்த்தைகளைக் கட்டியமைத்து அதில் கோவணத்தை கட்டினால் வாசகன் அதில் வேட்டியைத் தேடினால் கிடைக்காதுதான்..வெறும் வார்த்தைகளில் பௌதீகமாக அல்லது வேட்டி என்று முழங்கினால் அது அனுபவமாகிவிடுமா...முதலில் வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான் உறவு என்ன அமைப்பியல்... வாசகன் இல்லாவிட்டால் பிரதிக்கு எவ்வித பயனுமில்லை எனக் கூறுகிறது. நான் இசங்களைப் பேசி புரிந்துகொள்வதின் மூலம் மொழி வாழலாம் மனிதனின் அன்றாடத்தேவைகள் அவன் பிருஷ்டத்தை குறிவைத்து துளைக்கையில் அவன் எழுந்து ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக கட்டமைப்பு என்பது வேறு எதுவுமில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னாலும் ஒரு வர்க்க முத்திரை குத்தப்படிருக்கிறது என்று எளிதாக விளக்கலாமே அம்பானி பசி என்று சொல்வதற்கும் என் போன்ற பிச்சைக்காரர்கள் பசி என்று சொல்வதற்கும் பின்னால் வரும் அர்த்தம் யாது பசி இதற்கு ஒரே அர்த்தம்தான் வயிறு காலி...இதை எப்படி எவன் சொன்னால் எனக்கென்ன , அது இலக்கியமோ லேகியமோ அது அடிப்படையில் அதற்கான காரணத்தை, அல்லது பசிக்கான மூலத்தை ஆராய வேண்டும். பசியை விவரித்து வளரும் இலக்கியத்தை, அல்லது மொழியை வைத்து நாம்..ஒரு....செய்யமுடியாது.